Advertisement

“கமிஷனர்! நீங்க கல்யாணத்துக்கு அர்ஸ்லான் மாளிகைக்கு வர்றீங்களா?” என தன்வீர் வாசிமிடம் கேட்க, “இல்ல, தன்வீர்! ருஹானா அழைப்பு வரை இங்க நான் இருப்பேன். அப்புறம் நான் ஆபிஸ் போறேன். எனக்கு வேலை இருக்கு” என வாசிம் நாசுக்காக மறுக்க, தன்வீர் அவனை புரிந்துக் கொண்டு தலையாட்டினான்.

என்ன தான் கமிஷனர் வாசிம் ஆர்யனை பற்றி புரிந்து கொண்டாலும், ஏற்கனவே இருவருக்கும் நடந்த வாக்குவாதங்களால் அவனுடைய திருமணத்திற்கு செல்ல வாசிமுக்கு மனம் ஒப்பவில்லை. சொந்த அண்ணனின் திருமணத்திற்கு தம்பி கலந்து கொள்ள விதியும் சம்மதிக்கவில்லை.

அப்போது ருஹானா முழு அலங்காரத்துடன் வெளியே வர, அவளை பார்த்த தன்வீருக்கு கண்கலங்கியது. வாசிம் அவனை கிண்டலாக பார்க்க “நான் அழுதேன்னு ஆபிஸ்ல யாருக்கும் சொல்லிடாதீங்க, கமிஷனர்!” என தன்வீர் அவனிடம் வேண்டிக்கொண்டவன் ருஹானாவின் அருகே சென்றான்.

“நேத்து தானே நாம ஒளிந்து விளையாட்டிட்டு இருந்தோம்? அதுக்குள்ள நீ பெரியவளாகி இன்னைக்கு நீ மிக அழகான மணமகள்!” என தன்வீர் ருஹானாவின் கையைப் பிடிக்க, “தன்வீர்! என்னை அழ வைக்காதே!” என அவளும் உருகினாள்.

தௌலத் “மாஷா அல்லாஹ்! அர்ஸ்லானும் அழகுப் பையன். நீயும் அவனுக்கு பொருத்தமா இருக்கே! உங்க அழகைப்போலவே உங்க வாழ்க்கையும் அழகாகட்டும்” என வாழ்த்த, வாகிதா, தன்வீர், பர்வீன் என அனைவரும் “ஆமீன்! ஆமீன்!” என்று தெய்வத்தை வணங்கினர்.

வாசிம் நேர்த்தியாக உடையணிந்திருந்த வாகிதாவை காதலாக பார்க்க, அவன் பார்வையில் வெட்கப்பட்டு தலைகுனிந்த வாகிதா “நான் போய் மாப்பிள்ளை வீட்டுல வந்துட்டாங்களான்னு பார்க்கறேன்” என்று நழுவினாள்.

ஆர்யனின் அலங்கரிக்கப்பட்ட காரும் வாசலில் வந்து நிற்க, “அவங்க வந்துட்டாங்க!” என்று வாகிதா குரல் கொடுக்கவும், படபடக்கும் நெஞ்சை தடவிவிட்ட ருஹானாவை பர்வீன் உள்ளே அழைத்துச் செல்ல, மற்றவர்கள் மணமகன் வீட்டாரை வரவேற்க வெளியே விரைந்தனர்.

“உன்னை இப்படி அழகு கோலத்துல பார்த்துட்டேன். இனி நான் இறந்தாலும் கவலைப்பட மாட்டேன்” என பர்வீன் கண்ணை துடைக்க, “அம்மா! அழாதீங்க!” என ருஹானா அவரை அணைத்தார்.

“மகளே! வாழ்க்கை ஒரு பறவை. அதுல நீங்க இருபக்க சிறகுகள். பறவை ஒரு பக்கம் சாய்ந்ததுனா மறுபக்கம் இருக்கறவங்க உயர பறக்க உதவி செய்யணும்” என பர்வீன் சொல்ல, இடையிட்ட ருஹானாவை தடுத்த அவர் “நீ என்ன சொன்னாலும் உங்களுக்கு நடுவுல காதல் இருக்கு” என்றார் உறுதியாக.

“அம்மா!”

“ஆமா, அம்மாக்கு மகளை பற்றி தெரியும். உன் கண்ணுல தெரியுற காதலை தவிர சிறந்தது எதுவும் இல்ல அதே காதல் நான் ஆர்யன் கண்ணுலயும் பார்க்கறேன். வாழ்க்கையில் சிரமங்கள், வலிகள் வந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையா வாழணும்.”

———

ஆர்யன் காரிலிருந்து இறங்கி கம்பீரமாக நடந்து வர அவன் பின்னால் ரஷீத், அம்ஜத், கரீமா மெதுவாக வர, உள்ளே வந்தவர்களை மணமகள் வீட்டினர் சிரிப்போடு வரவேற்றனர். வாசிமும் ஆர்யனும் இலேசாக தலையாட்டிக் கொண்டனர்.

வாசிம் அம்ஜத்தை பார்த்து பாசமாக புன்முறுவல் செய்ய, அந்த பாசத்தை உணர்ந்த அம்ஜத்தும் வாசிமை பார்த்து சிநேகமாக தலையாட்டினான். சின்ன அண்ணன் மேல் உரசல் இருந்தாலும் பெரிய அண்ணன் மீது இனம் தெரியாத உள்ளார்ந்த அன்பு வாசிமிற்கு இருந்தது.

வெளியே நின்று மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க, ருஹானாவை அழைத்து வருவதற்காக ஆர்யன் மிகுந்த ஆவலாக அதே சமயம் நிதானமாக வாசற்கதவின் அருகே சென்றான்.

மூடிய கதவின் வாசலில் ஆர்யன் நிற்கவும் கதவு லேசாக திறக்க, ஆர்யன் கண்களை மூடிக்கொண்டான். முன்னால் கண்ட காட்சிகளை நீக்கி எதிரே பார்க்கப்போகும் தன் அழகுப்பதுமையை கண்களில் முழுதுமாய் நிரப்பிக்கொள்ள விழிமூடி நின்றான்.

கையில் லில்லி மலர்க்கொத்துடன் கதவை திறந்த ருஹானா, வாசலில் இலேசாக தலை தாழ்த்தி இமைகள் அழுத்தமாய் ஒட்டிக்கிடந்த கண்களுடன் நின்ற ஆர்யனை பார்த்து திகைத்தாள். அவள் திகைப்பாக அவனை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே கண்களை திறந்த ஆர்யன் அவள் பாதங்களில் தொடங்கி சிகை அலங்காரம் வரை அங்குலம் அங்குலமாக மெல்ல பார்வையிட்டான்.

மின்னும் கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளை உடை இடுப்பு வரை உடலோடு சிக்கென்று படிந்து அதன்பின் பாதம்வரை பரந்து விரிந்து, கொண்டையில் இருந்து தொங்கிய வெண்பட்டுச்சீலை பின்னால் அசைய, பிரபஞ்சத்தின் பேரழகியென நின்ற மனதிற்கினியவளின் வனப்பில் மயங்கி ஆர்யன் அசையாது நின்றான்.

கரீமா கடுப்பாக பார்க்க, பெண்கள் பெருமையாக பார்க்க, ஆண்கள் குறும்புடன் பார்க்க, ஆர்யன் பார்வையின் முழுவீச்சும் ருஹானாவின் மீதே இருந்தது. மணப்பெண்ணின் அலங்கார கோலத்தின்மீது அவள் மனதிலுள்ள காதலும் எழில் பூசி ஒப்பனை செய்திருந்தது.

ருஹானாவின் கைகள் நடுங்கின. அவள் பூங்கொத்தை இருகைகளிலும் மாற்றி மாற்றி பிடித்தாள். வாசல் தாண்டி அவள் மெதுவாக வெளியே வர, அவள் கண்களை பார்த்தவண்ணம் அவளை நெருங்கிய ஆர்யனின் அனைத்து அலைப்புறுதல்களும் நீங்கி அவன் மனமெங்கும் அமைதி பரவியது.

அவன் அவளின் தோள்களை மென்மையாக பற்றி குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

இருந்தது இரும்பிலான இதயம் ஒன்று!

இரும்பையும் உருக்கும் நெருப்பும் உண்டு

இழுக்கும் காந்த கண்ணழகியும் உண்டு

இணைந்தன இன்று இரும்பும் காந்தமும்!

இதழ் பதித்தவனும், பெற்றவளும் கண்மூடி நிற்க, கணப்பொழுதும் சடுதியில் மறைய, இதமாக நிமிர்ந்த ஆர்யன் படபடக்கும் அவள் கண் பார்த்தே நின்றான்.

“மருமகனே! என் மகளை கவனமா பார்த்துக்கங்க. ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க!” என்று அருகில் வந்து பர்வீன் ஆனந்த கண்ணீருடன் சொல்ல, ஆர்யன் கண்மூடி திறந்து தலையாட்டி உறுதி அளித்தான்.

ருஹானாவின் கையை பற்றி தன் கையுடன் கோர்த்துக் கொண்ட ஆர்யன் அவளோடு வெளியே நடந்தான். வாகிதா ருஹானாவின் கவுனை பின்னால் தூக்கிக்கொண்டு வர, ஆர்யன் அவளுக்கு கார் கதவை திறந்துவிட்டான்.

ருஹானா வீட்டின் வெளிவாசலை திரும்பிப் பார்க்க, அங்கே பர்வீனும், தன்வீரும் கண்களை துடைத்தபடி மற்றவர்களுடன் சேர்ந்து கையசைத்து விடை கொடுத்தனர். ருஹானாவை வசதியாக பின்னால் அமரவைத்த ஆர்யன் அவள் அருகே அமர, ஓட்டுனர் காரை செலுத்தினான்.

மற்ற கார்களும் மணமக்களின் காரை பின்தொடர, இவற்றையெல்லாம் ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருந்து பார்த்த மிஷால் குழப்பமும், கோபமும், கவலையும் அதிர்ச்சியுமாக நின்றான்.

———

காரில் மணமக்களிடையே மௌனமே நிலவியது. ஆர்யன் புளகாங்கிதத்துடன் அமைதியாக அமர்ந்திருக்க, ருஹானா அவனை திரும்பி பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்த ஆர்யனும் அவளை பார்க்க, பர்வீன் சொன்னது போல ஆர்யனின் கண்களில் காதல் தெரிகிறதா என ருஹானா அவன் கண்களை உற்று நோக்கினாள்.

“உன் அம்மா அழுததால வருத்தமா இருக்கியா?” என ஆர்யன் கேட்க, “ஆமா, அப்பவும் ரொம்ப அழுதாங்க” என கவலையாக சொன்னவள், “அம்ஜத் அண்ணா, தன்வீர்… எல்லாரும் உணர்ச்சிவசப்படுறாங்க” என்று பாவமாக பேசினாள்.

ஆர்யன் பதில் சொல்லாமல் பார்க்க, “நாம எதாவது தப்பு செய்றோமா?” என அவள் கேட்க, அவன் “எனக்கு புரியல!” என்றான்.

முன்னால் இருந்த டிரைவரை பார்த்து குரலை தழைத்தவள் “இது எல்லாமே ஃபார்மாலிட்டி தானே? நாம அவங்கள ஏமாத்துறோமா, பொய் சொல்லி?” என ருஹானா கேட்க, ஆர்யன் வேகமாக மறுத்தான்.

“இல்ல, அப்படி சொல்லாதே! நாம எதுவும் ஏமாத்தல. யாரும் ஒரு பொய்யை நம்ப மாட்டாங்க”

“ஆனா..”

“இது முற்றிலும் நிஜம். நீ சுவாசிக்கற காற்றை சந்தேகப்படுவியா? நீ தொடுற பொருளை இல்லன்னு சொல்வியா? உன் கண்ணால பார்க்கறதை சந்தேகப்படுவியா?” என அவன் விளக்க, அவள் அவனை அதிசயமாக பார்த்தாள்.

“அவங்க நாம எடுத்த முடிவுக்காக உணர்ச்சிவசப்படல. அவங்க நம்மளை பார்க்கும்போது நம்மிடம் ஏதோ உணர்றாங்க. நான் உன்னை பார்க்கும்போதும் ஏதோ உணர்றேன். என்னை கண்ணாடியில பார்க்கும்போதும் அதையே உணர்றேன்” என ஆர்யன் சொல்ல, அவன் பேச்சு தந்த தாக்கம் தாளாமல் ருஹானா தலையை குனிந்து கொண்டாள்.

“என்னை பார்!” என்று அழைத்த ஆர்யன், “என் அண்ணன், தன்வீர், வாகிதா.. இவங்களுக்கு வேணும்னா உண்மை தெரியாம இருக்கலாம். ஆனா உன் பர்வீன் அம்மா….? அவங்களுக்கு எல்லாம் தெரியும் தானே? அவங்க ஏன் அழறாங்க?” என்று கேட்டான்.

சில வினாடிகள் யோசனைக்குப்பின் அவள் “எனக்கு தெரியல!” என சொல்ல, “ஆனா அவங்களுக்கு தெரியும்” என்றான் ஆர்யன்.

ருஹானாவின் மனம் ஆனந்தத்தால் பூரிக்க, அவர்கள் வழக்கம் போல ஒருவரையொருவர் ஆழ்ந்து பார்க்க, கார் பயணம் தொடர்ந்தது.

——–

Advertisement