Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                அத்தியாயம் – 115

துருவநட்சத்திரத்தை பார்த்துக்கொண்டே திருமணத்திற்கு முன்தின இரவு காதலர்களுக்கு உறக்கமின்றி கழிய, சதிகாரர்களும் உச்சகட்ட நடவடிக்கையில் இறங்க சரியான நேரம் பார்த்து விழித்திருந்தனர்.

அம்ஜத்தை சமாளித்துவிட்டு சல்மாவின் அறைக்கு வந்த கரீமா தங்கையை அங்கே காணாமல் தேடினாள். “எங்க போய்ட்டா இவ?”

கையில் கோப்பையுடன் உள்ளே வந்த சல்மா “எப்போ அக்கா வந்தே? நான் போய் எனக்கு ஒரு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வந்தேன். உனக்கும் வேணுமா? புத்துணர்ச்சியா இருக்கும். நம்ம வாழ்க்கையோட கழிவும் இன்னைக்கோட நீங்கி நம்ம வாழ்க்கையும் புதுசாக போகுது” என்றாள் ஆனந்தமாக.

“எனக்கு எதும் வேணாம். அம்ஜத்தை ஏமாத்தி விட்டுட்டு இப்போ தான் வரேன். சீக்கிரம் ஃபைலை காட்டு, சல்மா. நாம கடைசியா ஒருமுறை சரிபார்த்துடலாம்.”

“பாவம் அக்கா நீ! நாளைக்கு அடிக்கப் போற புயலுக்கு பின்னாடி நீ மச்சானோட அதிர்ச்சியையும் சமாளிக்கணும்.”

“அதான் வருஷக்கணக்கா செய்திட்டு இருக்கேனே. எனக்கு பழகிப் போச்சி. நிக்கா ரத்து ஆகிட்டா போதும். நான் எதையும் சமாளிப்பேன். சரி சல்மா, குரல் பதிவு நல்லா வந்திருக்கு, தானே?”

சல்மா கோப்பையை மேசையில் வைத்துவிட்டு சிரித்துக்கொண்டே கைப்பையை கையில் எடுத்தாள்.

“அக்காவும் தங்கையும் பேசிக்கற மாதிரி தானே கடிதங்கள் இருக்கு? தேதிவாரியா அதை அடுக்கிட்டியா, சல்மா?”

கைப்பையை திறந்த சல்மா மற்ற கோப்புகளுடன் இருந்த அந்த நீலநிற கோப்பை தேட அவள் முகம் வெளுத்தது. “அக்கா! இல்லக்கா.. ஃபைல் இங்க இல்ல” என்று சல்மா பதற, கரீமாவும் அந்த குவியலில் தேடினாள். “என்ன சொல்றே, சல்மா? இங்க தானே வச்சிருந்தே?”

“ஆமா, ஆனா இப்போ ஃபைல் கைப்பையில இல்ல, அக்கா!”

“எப்படி சல்மா? ரூம்க்கு வந்ததும் கைப்பையில இருந்து வெளிய எடுத்தியா?”

“இல்லயே! நான் எடுக்கலயே!”

“அப்போ இங்க தான் இருக்கும். நல்லா பாரு!”

குழம்பிப்போன சல்மா “ஒருவேளை வெளியே எடுத்தேனா? எனக்கு நினைவு இல்லயே!” என தலையில் கைவைத்தாள்.

“எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்காதே, சல்மா! பையில இல்ல. அப்போ கண்டிப்பா நீ அதை வெளிய எடுத்திருக்கணும்.”

“தெரியலயே! எனக்கு ஞாபகம் வரமாட்டேங்குதே!” சல்மா கட்டிலில் அமர்ந்து கண்ணீர் வடித்தாள்.

“ஹால்ல வந்து உட்கார்ந்தியா? சோபால விட்டுட்டியா?”

“எனக்கு தெரியல, எனக்கு தெரியலயே! என் தலை சுத்துது.”

கரீமா பல்லைக் கடித்துக்கொண்டு சல்மாவை பிடித்து ஆட்டினாள். “நல்லா யோசி, சல்மா! வீட்டுக்குள்ள வந்ததும் என்னலாம் செய்தே?”

“மேல வந்தேன். பேக் கட்டில்ல போட்டேன். உன்னை தேடி வந்தேன்.”

“அதுக்கு அப்புறம்?”

“எனக்கு ஞாபகம் வரலயே, அக்கா!”

 “அது எப்படி மறக்கும்?”

“எனக்கு தெரியல! தெரியல! தெரியல!” என சல்மா கத்த, கரீமா பளாரென சல்மாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். சல்மா நிலைதடுமாறி கீழே விழ, அவளை தூக்கி நிறுத்திய கரீமா “சல்மா! என்னை பார்! ஃபைல் எங்கே?” என்று கேட்டாள்.

“எனக்கு தெரியல! எனக்கு நினைவு இல்ல!”

“அமைதியா யோசி, சல்மா. அதான் நம்ம உயிர்! அதான் நம்ம எதிர்காலம்! எங்க அது?”

“இல்ல! இல்ல! எல்லாம் முடிந்தது! போய்டுச்சி! அழிஞ்சது! நம்மோட முடிவு வரப்போகுது! எனக்கு தெரியல! இல்ல!” பெரிதாக மூச்சிரைத்த சல்மா மயங்கி விழுந்தாள்.

தங்கைக்கு தண்ணீர் தெளித்து மாத்திரை கொடுத்து படுக்க வைத்த கரீமா தானும் வரவேற்பறைக்கு சென்று ஒரு சுற்று தேடினாள். பின் சந்தேகம் வராதவண்ணம் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டாள்.

———-

சல்மாவின் அறைக்குள் நுழைந்த கரீமா அவள் அங்குமிங்கும் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்து “இன்னும் என்ன செய்றே? ஃபைல் கிடைச்சதா? அது கிடைச்சே ஆகணும்” என்றாள்.

“அக்கா! நான் சாரா கிட்டே கூட கேட்டுட்டேன். அது எங்கயுமே இல்ல. பூமி பிளந்து அதை உள்ள இழுத்துகிட்டது போல இருக்கு” என்று சல்மா புலம்ப, “என்கிட்டே எதையும் சொல்லாதே! எனக்கு அந்த ஃபைல் வேணும்” என கரீமா கண்ணை உருட்டினாள்.

“அக்கா! அந்த துப்பறிவாளன்ட்ட திரும்ப எல்லாம் செட் செய்ய சொல்லி கேட்கவா? ஒருவேளை அவங்க அழிக்காம வச்சிருந்தா?”

“அவ்வளவு முட்டாளா நீ? நேத்து தானே அத்தனை முறை கேட்டு உறுதிப்படுத்தினோம்? எல்லாம் அழிக்க சொன்னோமே! நம்ம கிட்ட இருக்கறது தான் ஒரே பிரதி” என்று கரீமா பல்லைக் கடிக்க, “இப்போ என்ன அக்கா செய்ய போறோம் நாம?” என சல்மா பரிதாபமாக கேட்டாள்.

“நாம இல்ல! நீ..! ஃபைல் உன் பொறுப்புல தான் இருந்தது. எங்க இருந்தாலும் அதை நீ தேடிக் கண்டுபிடிச்சி என்கிட்டே ஒப்படைத்தே ஆகணும். அந்த பாம்பு திருமண கவுன்ல இங்க வர்றதுக்குள்ள அந்த ஃபைலும் இங்க வந்தே ஆகணும், சல்மா உன்னோட தப்பால இந்த நிக்கா மட்டும் நடந்திருச்சினா நான் உன்னை கொன்னுடுவேன், புரியுதா? கொன்னுடுவேன்!”

                                                  ———

அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் வாகிதாவின் துணையுடன் ருஹானாவின் திருமண அலங்காரம் முடிய, பர்வீன் “என் அழகு மகளே! நீ ரொம்ப அழகா இருக்கே! யாரும் உன்மேல இருந்து கண்ணை எடுக்க முடியாது” என நெட்டி முறித்து திருஷ்டி எடுத்தார்.

——–

ஜாஃபர் உதவியுடன் ஆர்யன் வெள்ளை சட்டை கருப்புகோட் மாட்டி அழகு மணமகனாய் நிற்க “நீங்க ஸ்மார்ட்டா இருக்கீங்க, ஆர்யன் சார்!” என்ற ஜாஃபரின் பாராட்டுக்கு தலையை மட்டும் ஆட்டிய ஆர்யன் “கஃப்ளிங்க்ஸ் எங்கே?” என தேட ஆரம்பித்தான்.

அதை எடுத்து மாட்டிய ஜாஃபர் “நீங்க இவ்வளவு பரபரப்பா இருந்து இப்போ தான் நான் பார்க்கறேன், சார்” என புன்னகை செய்ய, ஆர்யன் “இதுவரை நான் வெளிமேட்ச் விளையாடிட்டு இருந்தேன், ஜாபர்! இப்போதான் என் சொந்தமண்ல எனக்கான ஆட்டத்தை ஆடப்போறேன், அதும் முற்றிலும் புதுகளத்துல” என்றான்.

“எல்லா விஷயங்களுக்கும் ஒத்திகை பார்க்க முடியாது, ஆர்யன் சார்! அந்தந்த தருணம் வரும்போது அது தன்னைப் போல இயல்பா நடக்கும். கவலைப்படாதீங்க!”

“எனக்காக இல்ல, இன்றைய மாலைவேளை எல்லாமே அவளோட விருப்பப்படி நடக்கணும். சின்னதா எதாவது சரியில்லன்னு கூட வருங்காலத்துல அவ மனசுல நினைக்கக்கூடாதுன்னு நான் விரும்பறேன்” என்ற ஆர்யன் மேசையில் தேடியவன் “பேனா.. பேனா எங்க? வெள்ளி பேனா.. வில்சின்னம் வரைந்திருக்கும். அதுலதான் இன்னைக்கு கையெழுத்து போடணும்” என்று பதட்டமானான்.

“பயப்படாதீங்க! நான் அதை திருமணமேடையில கொண்டு வச்சிட்டேன்” என ஜாபர் சொல்ல, பதட்டம் தணிந்து புன்னகை செய்த ஆர்யன் மீண்டும் குழப்பமானான். “நான் இப்போ அவளுக்கு போன் செய்யலாமா? இல்ல பேசக்கூடாதா? இது பேசறதுக்கு சரியான சமயமா?” எனக் கேட்டான்.

“உங்களுக்கு பேசணும்னு இருந்தா பேசுங்க சார்!”

——-

“என்ன செய்றேன் நான்? நிஜமான மணப்பெண் போல எதுக்கு எனக்கு இந்த பதட்டம்? அமைதியா இரு! அமைதி! இன்னைக்கோட எல்லாம் முடிஞ்சிடும். அப்புறம் எல்லாம் வழக்கம்போல முன்னாடி இருந்தது போல ஆகிடும்” ருஹானா தன்னைத்தானே நிதானத்துக்கு கொண்டுவர முயற்சி செய்யும்வேளையில் ஆர்யனின் அழைப்பு அந்த முயற்சியைத் தடுத்தது.

போனை எடுத்து காதில் வைத்தவளுக்கு பேச்சு வரவில்லை. தொண்டையை செருமி அவள் ஹலோ சொல்லியும் அந்த பக்கம் அவனிடமிருந்து பதில் வரவில்லை.

குரல்வழி சந்திப்பில் செவி மகிழ்ச்சியடைய

கண்கள் அக்கணம் காண

வாய்க்கவில்லையே என வருந்தின!

அவளது இரண்டாவது ஹலோவுக்குள் சுதாரித்தவன் “அங்க எல்லாம் சரியான்னு தெரிஞ்சிக்க கூப்பிட்டேன். நீ ஓகே தானே?” எனக் கேட்டான்.

“எல்லாம் சரி”

“நான் தயாராகிட்டேன். நீ?”

“நானும்!”

“அப்போ நாங்க கிளம்பி வரட்டுமா?”

“சரி!” என்று சொல்லி அவளும் போனை வைக்கவில்லை. அவனும் வைக்கவில்லை. சில வினாடி மௌனத்திற்கு பின் ருஹானா “ஹல்லோ! லைன்ல இருக்கீங்களா?” என கேட்க, ஆர்யன் வேகமாக “ஆமா, இங்கதான் இருக்கேன்” என்றான்.

“நான்…”

“நீ..?”

“நன்றி! போன் செய்ததுக்கு!”

“இதுக்கு எதுக்கு நன்றி? ஒரு மணிநேரத்துல வந்துடுவேன். நான் வைக்கறேன்” என்று சொல்லிவிட்டே அலைபேசியை வைத்தான்.

ஆர்யன் பெரிதாய் புன்னகைக்க, ருஹானாவின் மனமும் துள்ளியது இரண்டே வினாடிகள் தான். அவள் முகம் சோகமாக மாற “எல்லாம் வெறும் ஃபார்மாலிட்டி. நான் உணர்றது நிஜம் இல்ல. இது ஃபார்மாலிட்டி! ஃபார்மாலிட்டி!” என அவளுக்கு அவளே நினைவுப்படுத்தி மனப்பாடம் செய்து கொண்டாள்.

——–

ருஹானாவை அழைக்க அனைவரும் கிளம்பி கார் அருகே நிற்க, கரீமா மட்டும் இன்னும் வராததால் வாசலில் காத்திருந்தனர். அம்ஜத் சிரிப்புடன் அங்கே நடந்துக் கொண்டிருந்தான். கூட்டத்தை பார்த்து மிரளும் குணமுள்ள அண்ணனை கவலையுடன் பார்த்த ஆர்யன் “நீங்க ஓகேவா அண்ணா?” எனக் கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன், ஆர்யன்! நீ சந்தோசமா இருந்தா நான் இன்னும் நல்லா இருப்பேன்!” என்று தம்பியின் தோளை சிரிப்புடன் தட்டினான், அம்ஜத். நிம்மதியான ஆர்யனின் புன்னகையால் அவன் முகம் அழகானது.

“எதும் செய்யணுமா ஆர்யன் சார்?” என கேட்டபடி ஜாஃபர் வர, “நீங்க வேலை எதும் பார்க்க வேண்டியது இல்ல, ஜாஃபர்! இன்னைக்கு நீங்க விருந்தாளி!” என்று ஆர்யன் சொல்ல, ஜாஃபர் சந்தோசமாக சிரித்தான். மன்னிப்பு கேட்டுக்கொண்டே கரீமா வேகமாக வந்தாள்.

கார்கள் கிளம்பி செல்ல, திருமண ஏற்பாட்டாளர் நூர்ஜஹான் கடைசிநேர அலங்கரிப்பில் தன் உதவியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

இவானுடன் அங்கே வந்த நஸ்ரியா பிரமாண்டமான அலங்கார அமைப்புகளை பார்த்து பிரமித்தவள் செல்ஃபி எடுக்க, சாரா அவள் பின்னால் வந்து நின்றார். “பெரியம்மா! விருந்தாளிகள்லாம் வர்றதுக்குள்ள நான் கொஞ்சம் போட்டோஸ் எடுத்துக்கறேனே!” என கெஞ்ச, அவர் பதில் சொல்வதற்கு முன் சல்மா அங்கே வேகமாக வந்தாள்.

“நஸ்ரியா! திரும்பவும் கேட்கறேன். நல்லா யோசனை செய்து சொல்லு. நீ இங்க நீலநிற ஃபைல் எதும் பார்த்தியா?” என கேட்டாள். சாராவும் நஸ்ரியாவும் இல்லை என உறுதியாக சொல்ல, அவள் படிக்கட்டில் தடதடவென ஏறிச் சென்றாள்.

“இப்போ நிக்கா நடக்கப் போகுது. இவங்க ஏன் ஃபைலை தேடுறாங்க, பெரியம்மா? அது என்ன ஃபைல்னு தெரிஞ்சிக்க எனக்கு ஆர்வமா இருக்கே!”

“உன் வேலையை மட்டும் பாருன்னு நான் சொன்னா?” என சாரா முறைக்க, நஸ்ரியா வேகமாக நகர்ந்து சென்று, சித்தப்பாவை போலவே உடை அணிந்திருந்த இவானோடு புகைப்படம் எடுக்க ஆரம்பித்தாள்.

———

Advertisement