Advertisement

“உன் எண்ணமும் இதயமும் இங்க இல்ல, ருஹானா! நேசிப்பவரிடமிருந்தும் அவரது குடும்பத்திலிருந்தும் விலகி இருந்தால், எல்லா இடங்களும் ஒருத்தருக்கு அந்நிய இடமா தான் தெரியும். உனக்கும் அப்படித்தான். அங்கே மிஸ்டர் ஆர்யனுக்கும் அப்படித்தான்!“

“அது உனக்கு எப்படி தெரியும், வாகிதா?“

“அவர் உன்னை இங்க இறக்கிவிடும்போது அவர் கால்கள் முன்னோக்கி போகவே இல்ல, அதை நீ பார்க்கலயா? அவரால உன்னை இங்கு விட்டுட்டு போகவே முடியல.”

“நான் என் பொருட்களை எடுத்து வைக்கிறேன்” என ருஹானா வெட்கத்துடன் எழுந்து கொள்ள, வாகிதா “இல்ல, இன்று நீ சோர்ந்து போகக்கூடாது. நீ நாளை மணமகள் ஆகப் போறே! ருஹானா! நீ என்னை உன் சகோதரியா நினைச்சிக்கோ, சரியா? கல்யாணப்பெண் எப்படி அவளுடைய அம்மா வீட்ல இருந்து செல்வாளோ அது போலவே நாங்க உன்னை அனுப்பி வைப்போம்” என்று சொல்ல, இருவரும் தழுவிக்கொண்டனர்.

——

“மகனே! உனக்கு நாளை ஒரு புதிய வாழ்க்கை தொடங்குது.” தேநீரை கொண்டுவந்து ஆர்யனுக்கு கொடுத்த சையத் மகிழ்வாக சிரித்தார்.

“இது ஒரு சம்பிரதாயம், சையத் பாபா. உங்களுக்கு தெரியும், காகிதத்தில் மட்டும் கல்யாணம்!“

“உன்னோட காதுக்கு மட்டும் தான் அப்படி! இங்க என்ன சொல்லுது?” என அவன் இதயத்தை தொட்டுக்காட்டிய சையத் “அது எனக்கு தெரியும். அது உனக்கும் தெரியும். ஆனால் ருஹானாவுக்கும் தெரியட்டும், மகனே!” என்று சொல்ல, ஆர்யன் சிந்தித்தான்.

“அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்.  அவள் நகம் வலித்தா உன் இதயம் வலிக்கணும். அவளுக்கு கஷ்டம் தராதே, நியாயமா இரு. அவளை பாதுகாப்பா வச்சிக்கோ. என்ன நடந்தாலும் ருஹானாவை கவனமா பார்த்துக்கோ.”

———

திடீரென இருள் சூழ பயந்து போன ருஹானா வாகிதாவை சத்தமாக அழைத்தாள்.

“ருஹானா! என் மகளே! முன் அறைக்கு வா. மெழுகுவர்த்தி ஏற்றலாம்.“

“பர்வீன் அம்மா! நீங்க எப்போ வந்தீங்க?”

“மெஹந்தி போடாம நான் உன்னை மணப்பெண்ணாக்குவேன்னு நீ நினைச்சியா? வாகிதாவுக்கு நன்றி. அவ எங்களுக்கு சிரமமே தரல. மிகக் குறுகிய காலத்தில எல்லா வேலையும் செஞ்சிட்டா” என்று பர்வீன் சொல்ல, கையில் விளக்கு ஏந்தியபடி வந்த சாரா, நஸ்ரியாவை பார்த்து ருஹானா அதிசயித்தாள்.

“நஸ்ரியா! நீ எனக்கு சொல்லவே இல்ல” என கடிந்துகொண்ட ருஹானா, வாகிதாவை செல்லமாக முறைத்தாள். “நீயுமா வாகிதா?”

“கல்யாணப்பெண்ணுக்கு மெஹந்தி இரவு ஒரு இனிய அதிர்ச்சி“ என நஸ்ரியா சிரிக்க, தௌலத் சீக்கிரம் ஆரம்பிக்கும்படி கட்டளை இட்டார். “மெஹந்திக்கு என் மகளை நானே தயார் செய்வேன்“ என்று பர்வீன் ருஹானாவை உள்ளே அழைத்து சென்றார்.

“பர்வீன் அம்மா!  தெரியும் தானே? இந்த திருமணம்…“

“நீ எதும் பேச வேண்டாம்.  இந்த மருதாணியால உன்னோட தாம்பத்தியம் மகிழ்ச்சியாகவும், மங்களகரமாகவும் அமையும், வா!”

———

கைப்பையை கொண்டுவந்து கட்டிலில் போட்ட சல்மா கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தாள். பின் கரீமாவை தேடி அவளது அறைக்கு செல்ல அக்காவை வாசலிலேயே பார்த்துவிட்டாள்.

“ஆஹ்! சல்மா வந்துட்டியா? ஃபைல் எடுத்துட்டு வந்திட்டியா?”

“ஆமா அக்கா! என் ரூம்ல இருக்கு. நான் சிரமப்பட்டு என் ஆவலைக் கட்டுப்படுத்திட்டு இருக்கேன். எப்போ பையில இருந்து எடுத்து ஆர்யனுக்கு காட்டுவோம்னு இருக்கு.”

“நாளைக்கு ஆர்யன் எல்லார் முன்னும் ருஹானாவை உதைத்து வெளியே தள்ளுற நிகழ்வை கற்பனை செய்துட்டே இரு. வா, எனக்கு ஃபைலை காட்டு” என கரீமா சல்மாவுடன் ஆர்வமாக புறப்பட, அம்ஜத் வேகமாக வெளியே வந்தான்.

“கரீமா! நாளைக்கு என் கோட்ல நான் எந்த பூவை குத்திக்கட்டும்?”

சல்மா சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொள்ள, கரீமா “நாளைக்கு எது அழகா பூக்குதோ அந்த பூ, அம்ஜத் டியர்!” என அம்ஜத்தை உள்ளே அனுப்பி வைத்தாள்.

“பாரேன் சல்மா! நடக்காத கல்யாணத்துக்கு இவர் இப்பவே ரெடியாகிறார். நீ போ, நான் அம்ஜத் தூங்கினதும் வரேன்.”

——–

அழகு உடை மாற்றி முகத்தை மெல்லிய பட்டுத்துணியால் மறைத்து ருஹானாவை கூட்டிவந்த பர்வீன் அவளை நடுவில் அமர வைத்தார். தௌலத் “பிஸ்மில்லாஹ் ரஹிம் ரஹ்மான்!” என்று சொல்லி அவள் உள்ளங்கை நடுவே வட்டமாக மருதாணியிட, சாரா அதன் மேல் தங்க நாணயத்தை வைக்க, இருவரும் சேர்ந்து அதை துணியால் மூடி கட்டினர்.

தௌலத் “உன் மருதாணி உன்னை ஆசீர்வதிக்கட்டும்! ருஹானாவின் அம்மா! உங்க மகளுக்கு திருமணம் ஆகப்போகுது. அவளுக்கு ஆசிர்வாதம் தாங்க! உங்க சார்பா நாங்க எல்லாத்தையும் நிறைவா செய்றோம்” என சொல்ல, பர்வீனும் ருஹானாவும் கட்டிக்கொண்டு கண்கலங்கினர்.

“ஒருத்தருக்கு பதிலா மூணு அம்மாக்கள் உனக்கு இருக்கோம், ருஹானா” என்று சாரா சொல்லி ருஹானாவின் கண்ணீரை துடைக்க, தௌலத் பர்வீனை இழுத்து தன் பக்கம் அமர வைத்து அணைத்துக்கொண்டார்.

சாரா, நஸ்ரியா, வாகிதா மூவரும் விளக்குகளை கையில் ஏந்தி ருஹானாவை சுற்றிவர, மருதாணி சடங்கின் விசேச பாடலை அனைவரும் பாடினர்.

இது சொர்க்கத்தில் முடிவானதே!

இங்கு பூவுலகில் நடந்தேறுதே!

சிறகை விரித்து பறந்தோடும் கிளியே!

கூடு விட்டு கூடு தாவி அன்பை பரிமாறு!

காதல் கைகூடிட இணையுடன் கட்டும் 

புதுகூடு பாதுகாப்பாய் அமையட்டுமே!

இன்ப பெருவாழ்வு தித்திக்கட்டுமே!

பாடிமுடித்து அவர்கள் விளக்குகளை அறையை சுற்றி அழகாக வைக்க, ருஹானாவின் அருகே வந்து அமர்ந்த பர்வீன் “உன் வீடு உன் இதயத்தைப் போல விசாலமாகவும் அழகாகவும் இருக்கட்டும். உன் அம்மாவும் அக்காவும் மகிழ்ச்சியா வாழ விதிக்கப்படல, ஆனால் நீ அவர்கள் வாழ்வையையும் சேர்த்து ஆர்யனோட நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவே மகளே!” என்று அவள் தலையை தடவி வாழ்த்தினார்.

“அம்மா! நீங்க இல்லனா நான் என்ன செய்திருப்பேன்? உங்களுக்கு என் நன்றிக்கடனை எப்பவும் செலுத்த முடியாது!”

“நான் உன்னை என் வயிற்றில் சுமக்கல, மகளே! ஆனா பாலூட்டி வளர்த்தேன். அதனால உன் அம்மாவா உனக்கு என் ஆசியை தரேன்.”

ருஹானாவின் முகத்திரையை எடுத்து பின்னால் போட்ட தௌலத் “என்ன இன்னும் கண்ணீர்? போதும் பாட்டை மாத்துங்க. எல்லாம் துள்ளிக் குதித்து ஆடுங்க” என சத்தம் போட, வாகிதா சென்று துள்ளலிசை பாடலை ஒலிக்க விட்டாள். தௌலத் சாராவுடன் ஆட்டத்தை துவங்கி வைக்க, வாகிதாவும் நஸ்ரியாவும் ருஹானாவை ஆட இழுத்தனர். மெல்ல சந்தோஷ மனநிலைக்கு மாறிய ருஹானாவும் ஆட்டத்தில் கலந்து கொள்ள, அங்கே பாட்டும் கும்மாளமும் அமர்க்களப்பட்டது.

——–

ஆர்யன் எப்படி புரண்டு படுத்தாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. எழுந்து ஜன்னல் வழியே துருவநட்சத்திரத்தை பார்த்துக்கொண்டே இருந்தான். ருஹானாவிற்கு மட்டும் தூக்கம் பிடிக்குமா, என்ன? அவளும் கதவு திறந்து வந்து தோட்டத்தில் நின்று வானில் பார்வையை வைத்திருந்தாள்.

காரின் விளக்கு வெளிச்சம் அவள் கண்ணை கூச செய்ய, பார்வையை கேட்டின்புறம் திருப்ப, காரிலிருந்து இறங்குவது ஆர்யன் எனவும் கிட்டத்தட்ட அவனை நோக்கி ஓடினாள். “இவானுக்கு ஏதாவது நடந்ததா?”

“இல்ல, எல்லாம் சரி. உனக்கு ஏதாவது தேவைப்படுமோன்னு…” என்று ஆர்யன் தயங்க, ருஹானா ஒழுங்காக சுவாசித்தாள்.

வீட்டின் புறம் எட்டிப்பார்த்த ஆர்யன் “எல்லோரும் தூங்கிட்டாங்க போல. ஆமா, தாமதமாகிடுச்சி” என்று வருத்தமாக சொன்னான்.

“பரவாயில்ல, என்னால தூங்க முடியல” என்று ருஹானா சொல்ல, “எனக்கும்” என்றான், இரும்புக் கம்பிக்களுக்கு இடையே ருஹானாவை பார்த்து.

“அச்சோ! உங்களை அங்கேயே நிற்க வச்சி பேசுறேனே, ஸாரி! உள்ளே வாங்க!” என்று கேட்டை திறக்க, உள்ளே வந்த ஆர்யன் வீட்டின் முன்னே தொங்கவிட்டிருந்த திருமணக்கொடியை ஏறிட்டு பார்த்தான்.

“பர்வீன் அம்மா தான் இப்படி, திருமண வீட்டில் செய்யணும்னு.. இது ஒரு சம்பிரதாயமான திருமணம்னு நான் அவங்க கிட்டே பலமுறை சொல்லிட்டே இருக்கேன். ஆனால் அவங்க…”

“நீங்க எதை நம்பறீங்களோ அது நிஜமாகிடும்னு சொல்வாங்களே! நீயும் அப்படி நினைக்கிறியா?” என ஆர்யன் கேட்க, படபடப்பான ருஹானா பதில் சொல்ல திணறினாள். “எனக்குத் தெரியாது.”

அவளை நெருங்கிய ஆர்யன் அவள் கன்னத்தில் ஒட்டியிருந்த ஜிகினாவை எடுத்தான். “உன் கண்ணில போயிடப் போகுது!” இவ்வளவு தூரம் இரவில் ஓடி வந்த ஆர்யனுக்கு ருஹானாவின் கன்னம் தடவ ஜிகினா தந்த நன்மை!

“அது பட்டுத்திரையில இருந்து விழுந்திருக்கும்.”

“என்ன பட்டுத்திரையா?” ஆர்யன் புரியாது கேட்டான்.

“ஆமா, என் முகத்திரை தான். நேத்து இரவு பர்வீன் அம்மா மெஹந்தி நிகழ்ச்சி நடத்தினாங்க. என்னால அவங்களை தடுத்த நிறுத்த முடியல” என்று சங்கோஜமாக சொன்ன ருஹானா, அடுத்து ஆர்யன் என்ன செய்வான் என உணர்ந்து இரு உள்ளங்கைகளையும் இறுக மூடிக்கொண்டாள்.

முகம் விகசிக்க அவளை நெருங்கி அவள் கையை பிடித்த ஆர்யன், அதை ஒரு கையால் ஏந்தி மறுகையால் அவள் விரல்களை மெல்ல பிரித்தான். “ஏன்னா நாம் ஒரு காகிதத்தில் மட்டும் கையெழுத்திடல.  நாம ஒன்னா ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கறோம்.”

நன்றாக சிவந்திருந்த அவளின் உள்ளங்கையை மென்மையாக தடவியபடி ஆர்யன் “நாளைக்கு முற்றிலும் புதிதான வேற வாழ்க்கையைத் தொடங்க போறோம். நம்ம ரெண்டு பேருக்கும் புது வாழ்வு” என்று சொல்ல, ருஹானாவிற்கு மெய்சிலிர்த்தது.

கையை அவனிடமிருந்து மெதுவாக உருவிக் கொண்டவள் வானத்தை காட்டி “நாளைக்கு நமக்கு நல்லது தான் நடக்கும்.  துருவநட்சத்திரம் எப்படி ஒளிருது பாருங்க” என அவனுக்கு வானத்தை காட்டினாள்.

ஆர்யன் நிமரவும் இல்லை. வானத்தைப் பார்க்கவும் இல்லை. அவள் வதனத்திலிருந்து பார்வையை திருப்பவும் இல்லை. ஆமென தலையாட்டியவன் “முன்னெப்போதையும் விட பிரகாசமா மின்னுது” என்றான்.

ருஹானா நட்சத்திரத்தை கண்கொட்டாமல் பார்க்க, ஆர்யனும் அப்படியே ருஹானாவை பார்த்தபடி “எதிர்காலத்திற்கான என்னோட வழிகாட்டி வலுவா இருக்கு” என்றான். அதை கேட்டதும் ருஹானா திரும்பி அவன் முகத்தை பார்த்தாள்.

நள்ளிரவில் இருவரும் வழக்கம்போல ஒருவரையொருவர் பார்த்து நிற்க, வழக்கத்துக்கு மாறாக துருவநட்சத்திரம் இவர்களை எட்டிப்பார்த்தது.

(தொடரும்)

Advertisement