Advertisement

அலுவலகத்தில் அமர்ந்தபடி சல்மா பிரதி எடுத்து வந்திருந்த புகைப்படங்களை ஆர்வமாக பார்த்தாள். பின் வங்கியிலிருந்து பணம் எடுத்த ரசீது, தஸ்லீம், ருஹானாவின் கடிதங்கள் என எல்லாவற்றையும் அதோடு சேர்த்து ஒரு நீலநிற ஃபைலில் அடுக்கினாள். “நல்லது!“ என தன்னைப் பாராட்டிக் கொண்டவள் குரல் பதியும் கருவியை எடுத்து இயக்கினாள்.

“நான் உன்னை விரும்புகிறேன், மிஷால்!”

“நானும், ருஹானா!  நம் வேலை கிட்டத்தட்ட முடிந்தது. நாம விரும்பின எல்லாம் கிடைத்து விட்டது. இன்னும் ஒரு படி தான் மீதம்.”

“அதையும் எப்படி சமாளிப்பது? நீ இல்லாம நான் என்ன செய்வேன்? உன்னை ஒரு நிமிடம் பார்க்கலனாலும் நான் உன்னை மிஸ் செய்றேன்!“

“நாம ஒருத்தருக்கொருத்தர் வாக்குறுதி அளித்தோமே, ருஹானா? நம் எதிர்காலத்திற்கு இந்த பணம் தேவை.”

கருவியை நிறுத்தியவள் “அருமை! வார்த்தைகளை ஒவ்வொன்னா அழகா தேர்ந்தெடுத்திருக்காங்க. பிரமிப்பா இருக்கு” என்று சொல்லிக் கொண்டவள், தமக்கையை செல்பேசியில் அழைத்தாள்.

“அக்கா! நான் இப்போ என் கையில என்ன வைச்சிட்டுருக்கேன் தெரியுமா? அந்த சூனியக்காரியோட மரண உத்தரவு!“

“எல்லாம் முடிந்ததா, சல்மா? எதும் விடுபடலயே?”

“ஆமா அக்கா! வங்கி ரசீது, கடிதங்கள், குரல்பதிவுகள், படங்கள்… எல்லாமே என்கிட்டே இருக்கு. குரல்பதிவு மிக கச்சிதமாக வந்திருக்கு. கேட்கற யாருக்கும் ருஹானா ஒரு பணம்பிடுங்கின்னு உறுதியாகிடும்.“

“நல்லது.  இப்போ நீ அந்த ஃபைலை தயாரித்தவனுக்கு கால் செய்து அவன் கையில இருக்கற ஒவ்வொரு பிரதியையும் அழிக்கச் சொல்லு. நம்மட்ட மட்டுமே ஒரு பிரதி இருக்கணும்.  ஆர்யன் ஏதாவது கண்டுபிடிக்க நினைச்சா, அது ஒரு சதின்னு அவனுக்கு தெரியக்கூடாது. நானும் என் போன்ல இருக்கற போட்டோஸ் அழிச்சிடுறேன்.”

“சரி அக்கா!”

“நாளை ருஹானாவோட கதை முடிவடையும், நம்ம பொற்காலம் தொடங்கும்.”

“ஏன் அக்கா நாம இன்றிரவே கொடுத்தா என்ன? நாளை வரை ஏன் காத்திருக்கணும்?”

“ஏன்னா ஒருத்தருக்கு நரகத்தைக் காட்டணும்னா முதல்ல அவங்களை சொர்க்கத்தில உட்கார வைக்கணும். எவ்வளவு உயரத்துல இருந்து தள்ளி விடுறோமோ அவ்வளவு பலமா அடி விழும். ருஹானா அந்த திருமண உடையை அணியட்டும். ஆர்யனை தன்னோட அழகால மயக்கட்டும். விருந்தினர்கள் அவங்களை தேவர்களா பார்க்கும்போது… ப்ப்பாம் வெடிக்கும்!  ஆர்யனும் ருஹானாவும் எல்லார் முன்னிலையிலும் மோசமாக விழுவாங்க! அவங்க தேவதைக் கதை சிதைந்துவிடும்! அப்போ தான் ஆர்யனோட கோபம் கட்டுக்கு அடங்காது. என்னென்னைக்கும் ருஹானாவை மன்னிக்கவே மாட்டான்.”

———

உலகிற்கே தெரிந்த காதலை தங்களுக்குள் அறிவிக்காத காதலர்கள்  இருவரும் காலை உணவிற்காக ஒன்றாக கீழே இறங்கினார்கள். இருவரும் இன்ப மயக்கத்தில் ஒருவரையொருவர் கண்களால் விழுங்கிக்கொண்டு ஒரு ஏகாந்த மனநிலையில் நடந்து வர, அவர்களுக்காக பர்வீன் காத்திருந்தார்.

“நாளை உங்களுக்கு திருமணம். எல்லாம் முறையா நடக்கணும். என் மருமகனே! உங்களுக்குத் தெரியும், ருஹானா என் வாரிசு. ருஹானா வயிற்றில் இருந்தபோது அவள அம்மா என்னிடம் நீண்டநேரம் பேசினா.  அவளுக்கு தெரிந்திருந்தது, அவள் இறக்கப் போறா என.”

ருஹானாவின் முகத்தில் சோகம் கவிழ, அது ஆர்யனையும் தாக்கியது.

“அவளோட விருப்பத்தை என்கிட்டே சொன்னா.  ருஹானாவின் ஒவ்வொரு அடியிலும் நான் அவளோட இருப்பேன்னு அவ அம்மாவுக்கு உறுதியளித்தேன். அதனாலதான் எல்லாம் ஒழுங்காக இருக்கணும்னு நான் விரும்பறேன்”

“பர்வீன் அம்மா! இந்த கல்யாணம்…”

“தெரியும், மகளே! எதுவானாலும் இருக்கட்டும். நான் உன்னை என் வீட்டிலிருந்து தான் திருமண உடையோட அனுப்புவேன், மாப்பிள்ளை அங்க வந்து உன்னை கூட்டிட்டு போகட்டும். சரியா மருமகனே?“

“நீங்க மூத்தவங்க.  நீங்க என்ன சொன்னாலும் அதன்படியே நாங்க செய்வோம். உங்களுக்கு வேறு எதாவது தேவைப்பட்டாலும் என்கிட்டே சொல்லுங்க.“

“எனக்கு வேற எதுவும் வேண்டாம், மாப்பிள்ளை! இப்போ என்வீடு சரியா இல்லாத காரணத்தால தௌலத் வீட்டுல இருந்து பெண் அழைப்பு வச்சிக்கலாம். என் மகள் என் சிறகுகளின் கீழ் இருந்து உங்க வீட்டுக்கு வரட்டும்.”

ஆர்யன் அதற்கும் தலையாட்ட, பர்வீன் சொல்லும் அனைத்தையும் ஆர்யன் ஏற்பதைக் கண்ட ருஹானாவின் இதயம் கனிந்தது. அவள் அவனை அன்பாக பார்க்க, அவள் கடைக்கண் பார்வைக்கே உலகை அவள் காலடியில் வைக்க விரும்பும் ஆர்யன் இப்போது எது தான் செய்ய மாட்டான்?

——-

ருஹானா அம்மாவீட்டுக்கு செல்ல தேவையானதை எடுத்து வைத்தவள் தனது பழைய அறையில் வந்து எதையோ தேட, அங்கே வந்த நஸ்ரியா “எல்லாமே ஆர்யன் சாரின் அறையில தான் இருக்கு.  நாளையிலிருந்து நீ இங்கே இருக்க மாட்டே! அதனால நாளைக்கு நீ வரும்போது இந்த மாளிகையில் எல்லாமே முற்றிலும் வேறாக இருக்கும்” என சொல்ல, ருஹானாவிற்கு படபடப்பானது.

அவளை அணைத்துக்கொண்ட நஸ்ரியா “நீ ஆர்யன் சாரை திருமணம் செய்றதுல எனக்கு மிக மகிழ்ச்சி. இந்த மாளிகையே உன்னால மலர்ந்தது, ருஹானா!” என்று சொன்னாள்.

நஸ்ரியா சென்றதும் அந்த அறையில் தனது நினைவுகளை ருஹானா நினைவு கூர்ந்தாள். அர்ஸ்லான் மாளிகையின் இரும்பு கேட்டுக்கு பின்னே தான் தவித்ததும், நிலவறையில் அடைபட்டுக் கிடந்ததும், ஆர்யன் இவானை கவனித்துக் கொள்ள அவளை அனுமதித்ததும் கண் முன்னே ஓடி வந்தன.

எதிர்அறையை தயார் செய்ங்க அண்ணி!” கடினமுக ஆர்யன் கண்கள் இடுங்க ருஹானாவை பார்த்தபடி.   

ஆமா ஆர்யன் டியர்! லண்டன்ல இருந்து சல்மா நாளைக்கு வருவா!” உவகை பொங்க கரீமா. 

இல்ல, இவான் சித்தி இனி அந்த அறையில் தங்கட்டும்!” உத்தரவு அழுத்தமாக வர, பயந்திருந்த ருஹானா அதிசயமாக ஆர்யனின் இறுகிய முகத்தை ஏறிட்டாள். 

அன்று மாளிகையின் இரும்பு கேட், நிலவறை, விருந்தினர் அறை, இன்று மாளிகையின் பிரதான படுக்கையறை…. பழைய சிந்தனைகளில் மூழ்கி ருஹானா கட்டிலில் அமர்ந்திருக்க, அவளை தேடி வந்த ஆர்யன் திறந்திருந்த கதவை தட்டி உள்ளே வந்தான்.

“என்ன ஆச்சு? நீ கீழே போயிருப்பேன்னு நினைச்சேன்.”

“ஒன்னுமில்ல, ஒரு நிமிஷம் இப்படி இந்த அறையை பார்த்ததும்… இந்த குறுகிய காலத்தில எத்தனை விஷயங்கள் நடந்திருக்குன்னு நினைச்சி பார்த்தேன்.”

அறையை சுற்றி பார்வையை ஓட்டிய ஆர்யனும் “ஆமா, பல விஷயங்கள் நடந்திருக்கு”  என்றவன், சில நிமிடங்களுக்குப்பின் “போகலாமா?” என்று கேட்க, ருஹானா தலையாட்ட, அவள் பெட்டியை ஆர்யன் எடுத்துக்கொண்டு ருஹானாவோடு வெளியே நடந்தான்.

ஓடிவந்த இவான் “சித்தி! என்னையும் கூட்டிட்டு போங்க” என அவள் கழுத்தைக் கட்ட, “அன்பே!  இந்த முறை நான் தனியாக தான் போகணும், அன்பே!  உன் சித்தப்பா உன்னோட இருக்கறார்” என ருஹானா சமாதானப்படுத்தினாள்.

“ஆனால் சித்தி நீங்க சீக்கிரம் திரும்பி வந்திடுவீங்க தானே?”

“நிச்சயமாக, கண்ணே!” என் அவள் சொல்ல, ஆர்யன் “கவலைப்படாதே, அக்னி சிறகே! நாளைக்கே உன் சித்தியை நான் கூட்டிட்டு வந்துடுவேன்.  அதுக்கு பிறகு நீ உன் சித்தியை பிரியவேண்டிய தேவையே இருக்காது” என சொல்ல, ருஹானாவின் மனம் பூரித்தது.

இவானை கட்டியணைத்து முத்தமிட்டு விடைபெற்றவள், நஸ்ரியாவை அவனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, இவான் சிரித்தபடி கையாட்டி விடைகொடுக்க, திரும்பி அவனை பார்த்தபடியே நடந்தாள்.

———

கமிஷனர் வாசிம் வீட்டு வாசலில் ஆர்யன் காரை நிறுத்த, ருஹானாவிற்கு இறங்கி செல்ல மனமில்லை. ஆர்யனுக்கும் அவளை பிரிய முடியவில்லை. இருவருக்கும் இடையே சில நிமிடங்கள் மௌனம் நிலவியது. ‘உனக்காக இப்படி தவிப்பதுதான் காதலென்றால் சுகமாக ஏற்றுக்கொள்வேன், காலமெல்லாம்’ என ஆர்யனின் உள்ளே இருந்து ஒரு குரல் சொல்ல, அது வெளியே கேட்கவில்லை.

“உனக்கு ஏதாவது தேவைப்பட்டால்…” என அவனும் “இவான் பயந்து போனால்…” என அவளும் ஒரே நேரத்தில் பேசத் தொடங்கினர்.

ஆர்யன் தலையாட்ட “உடனே எனக்கு போன் செய்ங்க. நான் போனை பக்கத்துல தான் வச்சிருப்பேன்” என்று ருஹானா சொன்னாள்.

“கவலைப்படாதே. இவானை நான் தூங்க வைக்கறேன்.“

“நீங்க சொன்ன கதை அவனுக்கு ரொம்ப பிடிக்குது. நேற்று எவ்வளவு உற்சாகமாக இருந்தான்” என அவள் சிரிப்புடன் சொல்ல ஆர்யன் முகமும் மலர்ந்தது. அதன்பின்னே அவன் சொன்ன இளவரசி பற்றிய பயம் அவளுக்கு நினைவு வர பேச்சை மாற்றினாள்.

“நீங்களும் ஏதாவது சொல்ல வந்தீங்களா?”

“உனக்கு ஏதாவது தேவைப்பட்டா தயங்காம எனக்கு கால் செய். எந்த நேரமானாலும் பரவாயில்லை.”

அவள் தலையாட்ட, அவன் விட்டுச்செல்ல விரும்பாதவனாக தெரிய, அவளே “நான் இப்போ போகணும்” என்றபடி பெட்டியை எடுக்க பின்னால் திரும்ப, அவனும் அதே செய்ய இருவரும் முட்டிக்கொண்டனர். சுகமான அதிர்வில் சில தருணங்கள் கழிய “நான் எடுத்து தரேன். நீ இறங்கு“ என்று ஆர்யன் பெட்டியை எடுத்தான்.

இருவரும் இறங்கி நடக்க, வானத்தை பார்த்த ருஹானா “துருவநட்சத்திரம்” என்று சந்தோசமாக ஆர்யனுக்கு காட்டினாள். அவனும் மேலே பார்க்க, “அவசரமா திசைகாட்டி தேவைப்படும்போது, மிக முக்கியமான சமயத்துல பகல்கூட இந்த நட்சத்திரம் தெரியும்னு சொல்றாங்க“ என்று அவள் அவனுக்கு விவரித்தாள்.

“நாளைக்கு நமக்கு வழிகாட்ட அதுவே தோன்றியிருக்கலாம்“ என அவனும் முகம் மலர சொன்னான்.

இருவரும் கேட்டை திறந்து உள்ளே நடக்க, அவன் மனதில் ‘சலிக்காத ரசனைகள் தூரத்து துருவநட்சத்திரமும் அருகில் நீயும்!’ என எண்ணம் ஓடியது.

ருஹானா “உங்களுக்கு சிரமம் கொடுத்துட்டேன். பர்வீன் அம்மா மனசுல என்ன இருக்குன்னே தெரியல.  உண்மையான திருமணத்திலிருந்து கிட்டத்தட்ட எந்த வித்தியாசமும் இல்லாம நடத்துறாங்க“ என்றாள்.

“ஆமா” என்று ஏற்றுக்கொண்ட ஆர்யன், அவளிடம் பெட்டியை தந்துவிட்டு “சந்திப்போம்!” என விடை பெற்றவன் திரும்பி வந்தான். “பாரு… உண்மையில் நமக்குத்தான் உண்மை…” என சொல்ல தொடங்க, அதற்குள் வாகிதா வந்து அவர்களை வரவேற்றாள்.

——-

ருஹானா தாங்கியில் தொங்கிக் கொண்டிருந்த தனது திருமண ஆடையை ஆர்வமாக பார்க்க, ஆர்யன் தன் கருப்பு நிற திருமண கோட்டை தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை கட்டிலின் பக்கவாட்டு மேசைக்கு போக அங்கே ருஹானா கழட்டி வைத்திருந்த காதணி தென்பட்டது. முகம் மலர சென்று கட்டிலில் அமர்ந்தவன் அதை மெல்ல தடவி பார்க்க, அவனையறியாமல் சிரிப்பு வந்தது.

“கடைசியா நான் உன்னை இப்படிப் பார்த்தது நீ சின்ன பையனா இருந்தபோது. அப்போ தான்  உன் உதடு இப்படி மேல உயர்த்தி இருந்தது, ஆர்யன்!” என ஆர்யனின் கன்னம் தடவி சொன்ன அம்ஜத் அவன் அருகே அமர்ந்தான்.

ஆர்யன் புன்னகை மாறாமல் இருக்க, “நீ மறைத்து வைத்திருந்த உன் இனிய குணங்கள் இப்போ தான் நாங்க பார்க்க கிடைக்குது. ருஹானா… ருஹானா உன்னுடைய முக்கியமான பகுதியாகிட்டா. அவ உன்னை சந்தோசமா மாத்தினா. எங்களால் செய்ய முடியாததை, என்னால் செய்ய முடியாததை ருஹானா செய்திட்டா” என அம்ஜத் சொல்ல, ஆர்யன் அண்ணன் தோள் மேல் கை போட்டுக்கொண்டான்.

“அண்ணா! உங்களை குறைத்து சொல்லாதீங்க.“

“நான் உன்னோட பெரிய சகோதரன்! உன்னுடைய சிறுவயது காயத்திற்கு நான் மருந்தாக முடியாது. ஆனால் அப்புறம் ருஹானா வந்தா!” என அம்ஜத் உள்ளார்ந்து பேச, ருஹானாவை நினைத்ததும் ஆர்யன் முகம் மலர்ந்து அண்ணன் பேசுவதை மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தான்.

“ஓ பார்! உன் உதடு மேல போகுது! ஆர்யன்! உன்னைப் பார்த்தாலே சொல்லலாம், நீ எத்தனை சந்துஷ்டியா இருக்கே! ருஹானா தான் இதைச் சாதித்தாள். ஆர்யன் அர்ஸ்லான் இப்போ புத்தம் புதிய மனிதன். ருஹானா இதைச் செய்தா. அவள் உனக்கு அமைதியைக் கொண்டு வந்தா. அமைதி!”

——–

Advertisement