Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

  அத்தியாயம் – 114

பிரிவுபசார விருந்து என்று மிஷால் ருஹானாவிடம் தெரிவித்து பர்வீனும், தன்வீரும் வருவார்கள் என ஏமாற்றி அவளை வரவழைத்து, அவனை நம்பி வந்தவளை காதலிக்கிறேன் என சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாது அவளை கட்டியணைத்து அதை புகைப்படங்களாக பதிவும் செய்துக்கொண்டான்.

அவனது இறுக்கமான அணைப்பிலிருந்து விடுபடமுடியாமல் திணறிய ருஹானா “விடு என்னை!… பைத்தியமா உனக்கு?.. என்ன செய்றே நீ?…” என திமிற, “என்னை விட்டு போகாதே!” என மிஷாலும் பலங்கொண்ட மட்டும் அவளை பிடித்துக்கொண்டான். தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவன் பிடியிலிருந்து வெளிவந்த ருஹானா அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

பொறி கலங்கியது அவனுக்கு. “ருஹானா! இங்க பார்! நான்..” என அவன் சொல்லவர “பேசாதே!” என ருஹானா இரைந்தாள். “ப்ளீஸ் ருஹானா!” என அவன் மீண்டும் பேச, அவள் “என் பேரை சொல்லாதே! இன்னொருமுறை நீ சொன்னா நடக்கறதே வேற” என அழுகையுடன் மிரட்டினாள்.

“நில்.. நில்..” என அவன் கூப்பிட, ருஹானா தனது கைப்பையையும், குளிராடையையும் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறிவிட்டாள். மிஷால் தலையில் கைவைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.

——-

வேகமாக படிக்கட்டில் ஏறிவந்த ருஹானா, ஆர்யன் பார்க்கும்முன் தன் அறையில் தஞ்சம் புகுந்துவிட நினைத்தாள். ஆனால் அவள் எண்ணம் பலிக்கவில்லை. அவனது அறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன், ”இரவு உணவு எப்படி இருந்தது? சீக்கிரம் திரும்பிட்டியே?” எனக் கேட்டுக்கொண்டே அவள் அருகில் வர, அவள் நின்று பதில் சொல்லவேண்டியதாகிற்று.

“நல்லா இருந்ததே! நீங்கள் அனுமதித்தால் நான் என் அறைக்கு போறேன்” என அவனுக்கு முகத்தை காட்டாமல் அவள் பேசிக்கொண்டே நகர, அவன் அவள் கையைப் பிடித்து தடுத்தான். “நீ நல்லா இல்லயே? ஏதாவது நடந்ததா?“

“இல்ல… அது ஒன்னுமில்ல. எனக்கு தலைவலி. நான் சோர்வாக இருக்கேன். அதனால் தான்… நான் ஓய்வெடுத்தால் சரியாகிடும்” என அவள் நகர, அவன் கையை விடவில்லை. “உறுதியாவா? உன் கண் சிவந்திருக்கே?  நீ எதுக்காவது அழுதியா?” அந்த எண்ணமே அவனையும் வருத்தப்பட வைத்தது

அதற்குள் “சித்தி! சித்தப்பா!“ என இவான் தன் அறைக்கதவை திறந்துக்கொண்டு வந்தான். “செல்லம்! உனக்கு இன்னும் தூக்கம் வரலயா?“ என ருஹானா அவனிடம் மண்டியிட்டு கேட்க, “நான் கண்ணை மூடி தூங்கப் பார்த்தேன், சித்தி! ஆனால் என்னால தூங்க முடியல“ என அழகாக இவான் சொல்லவும் ருஹானா லேசாக புன்னகை செய்ய, ஆர்யனுக்கு அப்போது தான் நிம்மதியானது.

“நான் உன்னை தூங்க வைக்கவா?“ என்று ருஹானா கேட்க, ஆமாமென இவான் வேகமாக தலையசைத்தான். “வா, போகலாம்” என்று ருஹானா அவன் கையைப் பிடிக்க “சித்தப்பா! நீங்களும் வாங்க“ என இவான் ஆர்யனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.

——-

கரீமா அலைபேசியில் தனக்கு வந்த புகைப்படங்களை சல்மாவிடம் காட்டி வெற்றிச்சிரிப்பு சிரித்தாள். ”ஆர்யனோட கோபத்தை என் கண்ணால பார்க்க ஆசையா இருக்கு, சல்மா! இந்த புகைப்படங்களையும் மற்ற ஆதாரங்களுடன் பார்த்ததும் எனக்கு ருஹானா மேல பரிதாபம் கூட வருது.”

“அக்கா! அவ நரகத்துக்கு போகட்டும். அவ அழிஞ்சி போறத பார்க்க என்னால காத்திருக்க முடியல.”

மிஷால் போனில் அழைக்க, கரீமா “மிக நன்றாக செய்திருக்கே, குட்!” என்று பாராட்ட, “நீங்க விரும்பியது எல்லாம் செய்தேன்“ என்றான் அவன் விரக்தியாக.

“புகைப்படங்களைப் பார்த்தேன்.  நீ உன்னோட பங்கை நல்லா நடிச்சிருக்கே! நீங்க உண்மையில ஒரு ஜோடி போல இருக்கீங்க.“

“ஏன்னா நான் நடிக்கல. ஆனால் ருஹானா… அவ என் மேல ரொம்ப கோபமாக இருக்கா. நான் அவளை என்றென்றைக்கும் இழந்துட்டேன்.“

“கவலைப்படாதே, மிஷால்! அவ ஆர்யனின் கோபத்துக்கு ஆளாகும்போது முதலில் தேடப் போறது உன்னை தான். அவ உன்னிடம் தான் ஓடி வருவா. ஆனால் இப்போ கொஞ்சம் பொறுமையா இரு. உன் வேலையை செய்திட்டே! என்ட்ட இருந்து அடுத்த செய்திக்காக காத்திரு!”

——-

இவானை படுக்க வைத்து அவனின் இருபுறமும் அவனது இனிய பெற்றோர்கள் அமர்ந்திருக்க, ருஹானா அவனை தட்டிக்கொடுக்க, அவன் ஆர்யனிடம் அசுரனின் கதையைக் கேட்டான். “ஆனா புதுகதையா சொல்லுங்க, சித்தப்பா! அசுரன் இப்போ தனியா இல்ல, தானே? அவனுக்குப் பக்கத்தில் இளவரசியும், சிறுவனும் இருக்காங்களே!”

இவான் சொன்னதைக் கேட்ட ஆர்யன் ருஹானாவை பார்த்துக்கொண்டே “ஆமா, நீ சொல்றது சரி, சிங்கப்பையா!  அவன் இனி தனியா இல்லை” என்று சொல்ல, ருஹானா அவனை கனிவாக பார்த்தாள்.

இருவர் கைகளையும் எடுத்து சேர்த்து தன் மேல் வைத்துக்கொண்ட இவான், சேர்ந்த கைகள் மேல் தன் கைகளால் பிடித்துக்கொண்டு “அவன் இதயத்தால சண்டை போட்டானே சித்தப்பா?  அடுத்து என்ன நடந்தது?” என்று கேட்டான்.

“பிறகு… அந்த அசுரன் தன் வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருந்ததால, இளவரசி வந்ததும் அவனுக்கு என்ன செய்ய, எப்படி நடக்க, எப்படி பேச.. அப்படின்னு  எதுவும் தெரியல.“

“ஆனா ஏன் சித்தப்பா? அவனுக்கு இளவரசியை பார்த்து பயமா?”

“இருக்கலாம்… ஆனா இது சாதாரண பயம் இல்ல. ஒருவரை காயப்படுத்தாம வாழத் தெரியணுமே, அந்த பயம்!”

ஆர்யன் சொல்லும் கதையை கேட்டுக் கொண்டிருந்த ருஹானாவிற்கு உள்ளம் நெகிழ்ந்தது.

“அவங்க குடும்பமா சேர்ந்துட்டாங்களா, சித்தப்பா?”

“ஆமா, அக்னி சிறகே! ஒரு நல்ல குடும்பமாகிட்டாங்க.”

“அவங்க எப்பவும் மகிழ்ச்சியா இருப்பாங்க தானே? அவங்களை யாரும் பிரிக்க மாட்டாங்க, இல்லயா?”

“யாராலும் அவங்களை பிரிக்க முடியாது. அவங்க மிக மகிழ்ச்சியோடு இருப்பாங்க.”

“மகிழ்ச்சி!” என்றபடியே இவான் தூங்கிவிட, இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

——-

காலையில் கண்ணாடிமுன் நின்று தலைசீவிக் கொண்டிருந்த ருஹானாவிற்கு ஆர்யனே காதில் பேசிக்கொண்டிருந்தான். ‘அந்த அசுரன் தன் வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருந்ததால, இளவரசி வந்ததும் அவனுக்கு என்ன செய்ய, எப்படி நடக்க, எப்படி பேச.. அப்படின்னு  எதுவும் தெரியல.’

நஸ்ரியா உற்சாகமாக உள்ளே வந்து “காபி கொண்டு வந்தேன், ருஹானா! கருப்பு காபி தான் உனக்கும் இப்போ பிடிக்குது போல?” என்று கண்ணடித்து சிரிக்க, ருஹானா நன்றி சொல்லி வாங்கிக் கொண்டாள்.

“நாளை பெரிய நாள். நான் தூங்கவே இல்ல, தெரியுமா? ருஹானா!  நீ நல்லா தூங்கினியா? உன்னோட திருமண உடையில் எந்த பிரச்சனையும் இல்ல தானே? இருந்தா இப்பவே பார்த்துடலாம்! உன் தலைமுடியை எப்படி சீவப் போறே? முகஒப்பனை எப்படி இருக்கும்? ஒத்திகையில இருந்தது போல இருக்குமா? இல்ல, ஏதாவது மாத்திட்டியா?“ என நஸ்ரியா ருஹானாவிற்கு பதில் சொல்ல வாய்ப்பளிக்காமல் பேசிக்கொண்டே போனாள்.

“நான்…” என ருஹானா வாய் திறக்க, மேசை மேல் இருந்த அட்டவணையை எடுத்த நஸ்ரியா “என்ன? நீ எதையாவது மறந்துட்டியா? அல்லாஹ்! இன்னொரு ஒத்திகை பார்க்கலாமா?  இன்னைக்கு தான் கடைசி நாள்!” என்றவள் ருஹானாவின் பின்னால் அமர்ந்து அவள் கூந்தலை சுருட்டி விட ஆரம்பித்தாள்.

“நீ காபி குடி. நாளை உன் தலைமுடி அலைஅலையா அழகாக இருக்கணும், ஒரு தேவதையைப் போல. நான் ரொம்ப ஜாலியா இருக்கேன்! உன்னால கற்பனை செய்ய முடியுதா? நாளைக்குப் பிறகு எல்லாம் வித்தியாசமாக இருக்கும்! நீ ஆர்யன் அர்ஸ்லானை மணந்து கொள்வாய்! தேவதைக் கதையைப் போல அப்படி ஒரு விசித்திரக் கதை!  ஒப்புக்கொள்… நீயும் பதட்டமா இருக்கே தானே?“

“நீ வர்றவரை நான் அப்படி இல்லை, நஸ்ரியா! ஆனா இப்போ தான் நடுக்கமா இருக்கு, பார்!” என ருஹானா தன் கையை காட்ட, சங்கடமாக சிரித்த நஸ்ரியா எழுந்துக் கொண்டாள். “சரி, இப்போ நீ உன் விஷயங்களில் கவனம் செலுத்து. அமைதியாக இரு!  இன்று இவானை நான் பார்த்துக்கறேன், உன் லிஸ்டைப் பார்க்க உனக்கு நேரம் கிடைக்கும். நான் இப்போ போறேன். உனக்கு ஏதாவது தேவைன்னா என்னை கூப்பிடு.”

படபடவென பொரிந்துவிட்டு நஸ்ரியா கிளம்ப ருஹானா ஆழ்ந்து மூச்சு விட்டாள். “நஸ்ரியா! நீ என்னை திகிலாக்கிட்டே!” என்றபடி எழ, காபி முழுவதும் அவள் உடையில் கொட்டியது. “யா அல்லாஹ்!” என அலமாரியின் புறம் வந்தவளுக்கு காலி அலமாரியும் பயமுறுத்தியது.

மெல்ல ஆர்யன் அறைக்கு வந்தவள் அவன் நடமாட்டம் தெரிகிறதா என கதவில் காதை வைத்து கேட்டான். “நீங்க இங்க இருக்கீங்களா?“ என குரல் கொடுத்தும் பார்த்தாள். பதில் எதும் கிடைக்காததால் படுக்கையறை கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தவள் எதிரே பார்த்தது கட்டிலில் எடுத்து வைக்கப்பட்டிருந்த ஆர்யனின் மாற்றுடையைத் தான்.

குளியல் அறையிலும் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, அவன் வெளியே வருவதற்குள் தனக்கு ஒரு உடையை எடுத்துக்கொண்டு ஓடிவிட எண்ணி, குளியலறை கதவின் மீது கண்ணை வைத்துக்கொண்டே ஒரு உடையை எடுக்கவும் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. “நீயா?”

அவன் குரல் கேட்டதும், தாங்கியில் மாட்டியிருந்த உடையை உயர்த்தி தன்னை மறைத்துக்கொண்டவள் தன் கண்களையும் மூடிக்கொண்டாள். “மன்னிச்சிடுங்க… சட்டை எடுக்க வந்தேன்… நீங்க குளிப்பது எனக்குத் தெரியாது…”

“நீ கண்ணை மூட வேண்டியதில்லை.“

“இல்ல… எனக்கு சட்டை கிடைத்தது… நான் கிளம்பறேன்“ என்று கண்ணை மூடிக்கொண்டே நகர்ந்தவள் திறந்திருந்த கதவில் மோதிக்கொண்டாள்.

“அடிபட்டுடுச்சா?“ ஆர்யனின் கவலையான குரல் அருகே கேட்க, “ஒன்னுல்ல. நான் வரேன்” என அவள் சொல்ல, “கண்ணைத் திற!“ என அவன் மீண்டும் சொல்ல, “இல்ல… நான் இங்கிருந்து போய்ட்டேன்” என மீண்டும் நகர்ந்தாள்.

“ஆனா நீ என் சட்டையை எடுத்திருக்கே! நிச்சயமா நீ அதை அணியலாம். ஆனா அது உனக்கு பெருசா இருக்குமே?” என லேசான நகையொலியோடு ஆர்யன் குரல் கேட்க, இலேசாக கண் திறந்து பார்த்தாள். “ஓ… நான் கவனிக்கல… அதே நிறம்…” என்று சொல்லிவிட்டு திரும்பவும் கண்களை மூடிக்கொண்டாள்.

காலணி சத்தம் எழுப்ப ஆர்யன் அருகே வர, குனிந்திருந்த அவள் அவன் காலணியை பார்த்து குழப்பமாக, ஆர்யன் அவள் உயர்த்தி பிடித்திருந்த சட்டையை கீழே இறக்கினான்.

“வந்து.. நான் தண்ணீ சத்தம் கேட்டேன். நான் நினைத்தேன்…”

“நான் முகம் கழுவினேன்” என்று சொன்னபடி ஆர்யன் கையிலிருந்த துண்டால் முகத்தின் நீரை ஒற்றி எடுத்தான். அருகில் வந்ததும் ருஹானாவின் மேல் காபியின் வாசனை அடிக்க “காபியை மேல கொட்டிட்டீயா? எரியுதா?” என வேகமாக கேட்டான்.

அதைவிட வேகமாக “இல்ல, குவளை தான் நழுவி விழுந்தது“ என்று அவள் சொல்ல, “அமைதியாக இரு. எல்லாம் சரியாகிடும். பட்டியல் சரிபார்த்துட்டியா?“ என்று அவன் கேட்டான்.

“ஆமா, நான் அதை பலமுறை பார்த்துட்டேன்! ஆனா… நான் இன்னும் பதட்டமாக இருக்கேன்” என்றவள் “நான் போறேன்” என்று செல்ல, “இப்பவும் என் சட்டையை தான் போட ஆசைப்படுறியா?“ என்று அவன் சிரிக்காமல் கேட்க, “ஸாரி! நான் பதட்டமா இருக்கேன், தெரியுமா?” என்றபடி சட்டையை மாற்றி எடுத்துக்கொண்டு அவள் வேகமாக வெளியே சென்றாள்.

ஆர்யன் முகம் சிரிப்பால் மிக அழகாக மலர்ந்தது. அவன் இதுவரை அனுபவித்திராத ஆனந்த வெள்ளத்தில் விருப்பமாகவே மூழ்கினான்.

——–

Advertisement