Advertisement

இரண்டு பெரிய பெட்டிகளோடு மேலே சில புத்தகங்களை வைத்து தூக்கி வந்த ருஹானா கட்டிலின் மேல் அவற்றை வைக்க, கட்டில் சுத்தமாக இருந்தது. அதில் இறைந்து கிடந்தவைகள் அலமாரியில் அடுக்கப்பட்டிருக்க, ருஹானாவின் அம்மாவின் புகைப்படம் இடது பக்க மேசையில் இடம் பிடித்திருந்தது.

அதைப் பார்த்து நெகிழ்ந்து போன ருஹானா அதை எடுத்து மார்போடு தழுவிக் கொண்டாள். “நீங்க இப்போ என்கூட இருந்திருக்கலாம், என் அன்பு அம்மா!”

ஆர்யன் நிலா முற்றத்தில் மாடிச்சுவரை பிடித்தபடி வெளியே பார்த்துக்கொண்டு நிற்பதை கண்ட ருஹானா அவனை நாடி சென்றாள்.

அவளது கலங்கிய கண்களை கண்டு கலக்கம் கொண்டவன் “நீ அழுதியா, என்ன?” என கேட்டான். “என்னோட அம்மாவோட புகைப்படம் நீங்க இங்க வைத்தது என்னை உணர்ச்சிவசப்பட வைச்சிடுச்சி. நன்றி” என்று அவள் சொன்னாள்.

“உன் மகிழ்ச்சி தான் முக்கியம். சரி, இப்போ நீ உள்ளே போ! சளி பிடிச்சிக்கும். இந்த பால்கனி வழியா எப்படி குளிர் காத்து அடிக்கும்ன்றதை நீ இங்க வந்ததும் தெரிஞ்சிக்குவே” என்று சொன்னவன் அந்த நிகழ்ச்சியை கற்பனையில் கண்டு மகிழ்ந்தான்.

அப்போது ரஷீத் செல்பேசியில் அழைக்க, ருஹானா உள்ளே வந்தாள். பெட்டிகளை தூக்கிய ருஹானா புத்தகங்களை கீழே நழுவ விட்டாள். பதறிப் போய் பெட்டிகளை கட்டிலில் வைத்துவிட்டு குனிந்து புத்தகங்களை எடுக்க முயற்சி செய்ய “என் உதவி தேவையா?” என்றபடி ஆர்யன் உள்ளே வந்துவிட்டான்.

புத்தகத்தில் இருந்து வெளியே வந்து விழுந்த ஆர்யனது புகைப்படத்தை ருஹானா அவனுக்கு தெரியாமல் காலால் கட்டிலின் அடியில் தள்ளினாள். “இல்ல, நான் பார்த்துக்கறேன்” என தடுமாறி அவள் சொல்ல, கீழே கிடந்த புத்தகத்தை எடுத்த ஆர்யன் அதை பெட்டியின் மேல் வைத்தான்.

“உன் அம்மாவோட படம் இங்க இருக்கறது நல்லா இருக்கு. நீ விரும்பினா, இன்னும் பெருசா கூட சட்டத்தை மாற்றலாம்” என்றபடி அவன் அவளை நெருங்க, அவள் இருந்த இடம்விட்டு அசையாமல் “இல்ல, இதுவே அழகா இருக்கு!” என்றாள்.

“அன்புக்குரியவங்க நெருக்கமா இருந்தா மனதுக்கு இதமா இருக்கும், அது புகைப்படமா இருந்தாலும்” என அவன் அவள் பக்கம் வந்து சொல்ல, அவள் முழிமுழியென முழித்தாள். ஆர்யன் நகர்ந்து சென்று கைபேசியை மேசையில் வைக்க, ருஹானா நிமிடத்தில் குனிந்து கட்டிலுக்கு அடியில் இருந்த அவன் புகைப்படத்தை எடுத்து அதை அவளின் நீளமான சட்டையின் கையில் உள்ளே தள்ளிவிட்டாள்.

“நான் இவானை போய் பார்க்கறேன்” என்று சொல்லி வெளியே வந்தவள் கதவை அடைத்து நின்றபின்னே மூச்சை இழுத்து விட்டாள். “இன்ஷா அல்லாஹ்! அவர் இதை பார்த்திருக்கக் கூடாது!”

சமையலறைக்கு சென்று அவள் வேகமாக தண்ணீரை ஊற்றிக் குடிக்க, கைபேசியை பார்த்துக்கொண்டிருந்த நஸ்ரியா “ஏன் உன் முகம் இப்படி சிவப்பா இருக்கு ருஹானா? உன் கையும் இப்படி நடுங்குது?” என ஆச்சரியமானாள்.

ருஹானா எதுவும் இல்லையென மறுக்க, நஸ்ரியா “கல்யாண பதட்டம் அப்படித்தான் இருக்கும்” என்றவள் தன் கைபேசியை ருஹானாவிற்கு காட்டினாள். “இங்க பாரேன்! இணையத்துல உங்க திருமண செய்திகள் ஜெட் வேகத்துல பரவுது. உன்னோட திருமண கவுன் எப்படி இருக்கும்னு பார்க்க எல்லாரும் ஆவலா இருக்காங்க!”

“என்ன?”

“பின்னே? ஆர்யன் சார் திருமணம் செய்யப் போறார்னா சும்மாவா?” என நஸ்ரியா ருஹானாவின் பதட்டத்தை அதிகரித்தாள். அப்போது மிஷால் அவளின் அலைபேசியில் அழைத்தான்.

“ருஹானா! நீ எங்க வந்துட்டு இருக்கே?”

“யா அல்லாஹ்! நான் மறந்தே போயிட்டேன். இங்க நிறைய வேலை இருந்தது, மிஷால்! நான் போய் என் கைப்பையை எடுத்துட்டு இப்பவே கிளம்பறேன்!”

“சரி, சீக்கிரம் வா! எல்லாரும் வந்துடுவாங்க. நான் உனக்காக காத்திருக்கேன்” என்று போனை அடைத்த மிஷால், முன்னால் சிகப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த மேசையைப் பார்த்தான். ‘நம்ம ரெண்டு பேருக்காக தான் இதை செய்றேன், ருஹானா!’

  ———

கைப்பையை எடுக்க, பழக்கம்போல தனது அறைக்கு வந்த ருஹானா அங்கே எதுவும் இல்லாமல் இருப்பதை பார்த்து “அச்சோ! நான் பழகிக்கணும் தான்” என்றவள் வேகமாக ஆர்யனின் அறைக்கு சென்றாள்.

அவள் படுக்கையறை கதவை திறக்க, ஆர்யன் தன் மேல் சட்டையை கழட்டிக் கொண்டிருப்பதை பார்த்தவள் கையால் கண்ணை மறைத்துக் கொண்டு “ம்ஹூம்! ஸாரி! ரொம்ப ஸாரி! ஆனாலும் இன்னும் நான்….” என பதறினாள்.

சட்டையின் மேலே போட்டிருந்த குளிராடையை மட்டுமே கழட்டிய ஆர்யன், குறும்பு சிரிப்புடன் “இட்ஸ் ஓகே! நீ திரும்பலாம்” என்று சொன்னாலும், கண்ணை மூடிக்கொண்டே ருஹானா “இல்ல, நான் என் கைப்பையை எடுத்துக்கறேன்” என சோபாவிற்கு நகர்ந்தாள்.

“கவனம்! இடிச்சிக்காதே!” என ஆர்யன் எச்சரிக்க, சோபாவை தடவியபடியே கைப்பையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டவள் “நான் போறேன்!” என வாசலுக்கு வேகமாக நகர்ந்தாள்.

“இரு!” என்று ஆர்யன் சொல்ல, திகைத்தபடி அவள் நிற்க, அவளை நெருங்கியவன் “உன் கையில ஏதோ இருக்கு!” என்றான். அவளுக்கு இருந்த படப்படப்பில் கையில் ஒளித்து வைத்திருந்த ஆர்யனின் புகைப்படத்தை வேறு இடத்தில் எடுத்து வைக்கத் தவறியிருந்தாள்.

உயர்த்தி இருந்த அவள் கையை பின்னால் இருந்து ஆர்யன் பிடிக்கவும், பயந்து போனவள் புகைப்படத்தை நன்றாக உள்ளே தள்ளினாள்.

“காய்ந்த சருகு” என அவள் முழங்கையிலிருந்து ஆர்யன் எடுத்துக் காட்ட, செயற்கையாக அவனை பார்த்து சிரித்த ருஹானா “நன்றி!” என சொல்லி வெளியே பாய்ந்துவிட்டாள். 

“சருகு மட்டும் தானா? ரகசிய புகைப்படமுமா?” என்று ஆர்யன் சிரித்தபடி நின்றான்.

——–

“ஹலோ மிஷால்! எல்லாம் நான் சொன்னபடி செய்திட்டே தானே? வெற்றிகரமா முடிந்ததும் எனக்கு போன் செய்!”

“அக்கா! மிஷால் குழப்பிட மாட்டானே?”

“மாட்டான், சல்மா! மாறப் போறது அவன் வாழ்க்கையும் தானே? கவனமா இருப்பான். சரி, ருஹானா டின்னருக்கு கிளம்பி போய்ட்டா. நீ ஆர்யன் கிட்டே கடைசியா ஒரு எச்சரிக்கையை போட்டுட்டு வா, அப்போ தான் நீ ஆர்யன்ட்ட ரெண்டு நாள்ல சொல்ல முடியும், ‘நான் சொன்னேன் நீங்க என்னை நம்பலயே’ன்னு”

அக்காவிடம் தலையாட்டிய சல்மா, “இதுல உங்க சைன் வேணும்” என்றபடி ஆர்யன் முன்னே நிற்க, போனில் பேசிக்கொண்டிருந்தவன் “புது கார்ட்டை மாளிகை முகவரிக்கு அனுப்ப சொல்லு, ரஷீத்” என சொல்லி வைத்தான்.

“நான் சொன்னா உங்களுக்கு கோபம் வரும். இந்த கார்ட் ருஹானா தான் திருடி வச்சிருக்கா. என்னை நம்புங்க, ஆர்யன்! அவ பணத்துக்காக எதும் செய்யக்கூடியவ!”

மூர்க்கமான ஆர்யன் வேகமாக எழுந்தான். “என்ன தைரியம் உனக்கு? அண்ணியோட முகத்துக்காக நான் உன்னை எதும் செய்ய முடியாம இருக்கேன்.”

“நீங்க அவளை விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சா எல்லா உண்மையும் தெரிஞ்சிடும்.”

“என் அறையை விட்டு போய்டு. இல்ல, ஏதாவது விபரீதமா நடந்துடும்.”

“நீங்க என்னை எப்படி கத்தினாலும் நான் உங்க நல்லதை தான் யோசிக்கறேன்” என்ற சல்மா வெளியே செல்ல, ஆர்யன் முகம் கோபத்தால் இறுகி இருந்தது.

——–

“நல்வரவு ருஹானா!” ருஹானாவை எதிர்பார்த்து காத்திருந்த மிஷால் அவளை பார்த்ததும் முகம் மலர்ந்தாலும், அவன் முழு மகிழ்ச்சியோடு இல்லை.

“நீ தாமதமாகிடுச்சின்னு சொன்னதும் நான் வேகமா வந்தேன். எல்லாரும் வந்துட்டாங்களா?” என்றபடி குளிராடையை கழட்டி அங்கே மாட்டிய ருஹானா உணவகத்தை சுற்றி பார்த்தவள் திகைத்தாள்.

“உள்ளே வா!” என்று அழைத்து சென்ற மிஷால் வெளிச்சமாக இருந்த ஒரே மேசையை காட்டி “இங்க உட்காரு!” என்று சொல்ல, ருஹானா அவனை விழித்து பார்த்தாள். இருவரும் நெருங்கி நிற்பதை உள்ளே மறைந்திருந்த ஒருவன் புகைப்படம் எடுத்தான்.

மெழுகுவர்த்திகளாலும் பூக்களாலும் நிறைந்திருந்த மேசையை வித்தியாசமாக ருஹானா பார்க்க, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு கொண்டே இருந்தன. “எங்க மத்தவங்கலாம்? நான் பர்வீன் அம்மாக்கு போன் செய்றேன்” என ருஹானா கைப்பையை திறக்க, மிஷால் அவள் கையைப் பற்றி இழுத்தான்.

“இல்ல, அவங்களுக்கு போன் செய்யாதே” என்று அவன் சொல்ல, கையை உருவிக்கொண்டவள் “ஏன், தன்வீர் வேலையை முடிச்சிட்டு வந்திருக்க மாட்டானா?” என்று அவன் மீது சந்தேகப்படாமல் அவள் கேட்டாள்.

“அப்படியில்ல, நான் அவங்களை கூப்பிடவே இல்ல” என மிஷால் சொல்லவும், ஏதோ  சரியில்லை என அவளுக்கு தோன்ற “அப்போ ஏன் என்கிட்டே பொய் சொன்னே?” என அதிர்ந்து போய் கேட்டாள்.

“நான் உன்கிட்டே தனியா பேச விரும்பினேன். உட்காரு ருஹானா ப்ளீஸ்!” என மிஷால் கெஞ்சி கேட்க, அப்போதும் அவனை நம்பி, அவள் கால்கள் துவள நாற்காலியில் அமர்ந்தவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள தண்ணீரை எடுத்து குடித்தாள்.

அது காதலர்கள் இனிமையாக பேசிக்கொண்டே சாப்பிடுவதைப் போன்ற தோற்றம் தந்தது. மறைந்திருந்த கேமிரா வெளிச்சத்தை வெளிப்படுத்தாமல் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டது. 

“நான் கெட்டவன் இல்ல, ருஹானா. உன் முகத்தை பார்த்து என் மனந்திறந்து சொல்ல ஆசைப்பட்டேன். நான் உன்னை காதலிக்கிறேன். வருஷக்கணக்கா உள்ளேயே வச்சிருந்தேன். இதுக்கு மேலயும் என்னால மூடி மறைக்க முடியல. லேட்டானாலும் அதை நீ தெரிஞ்சிக்க விரும்பறேன்” என அவன் மீண்டும் அவள் கையை பிடிக்க, ருஹானா தன் கையை இழுத்துக் கொண்டாள்.

“விளையாடாதே மிஷால்!” அவன் பேசியதை கேட்டு மனம் வலிக்க, அவள் கண்கள் கலங்கின.

“இல்ல, எப்பவும் விட தெளிவா நான் இருக்கேன். நீ இவானுக்காக தானே அந்த மாளிகைல இருக்கே? இங்க பார் என்கிட்டே தேவைக்கு அதிகமாவே பணம் இருக்கு” என்று மிஷால் பணக்கற்றைகளை கேமிராவின் கோணத்தில் தெரியும்வண்ணம் மேசையில் பரப்பினான்.

ருஹானா வாயடைத்து அமர்ந்திருக்க “நான் உன்னையும் இவானையும் சந்தோசமா வச்சிருப்பேன். நல்ல வாழ்க்கை தருவேன். அவனை திருமணம் செய்யாதே. பெரிய தப்பு செய்யாதே” என்று மிஷால் ஆசை காட்டினான்.

“இதெல்லாம் கெட்ட கனவு தானே? இது நீ இல்ல” என்று நடப்பதை நம்பமுடியாமல் சொன்ன ருஹானா, அவனை அருவெறுப்பாக பார்த்து “இல்ல, நீ இதுதானா?” என கேட்க, அவன் வெட்கி தலையை குனிந்து கொண்டான்.

குரலை உயர்த்திய ருஹானா “நீ என்ன பேசுறேன்னு புரிந்து தான் பேசுறீயா? எனக்கு கல்யாணம் ஆகப் போகுது. என்னை பொய் சொல்லி இங்க வரவழைத்து என்னலாம் பேசுறே நீ?” என இரைந்தாள்.

“ருஹானா, இங்க பாரு!”

“என்னை நீ மதிக்கலயா? என்னோட நட்பு உனக்கு பெருசா தெரியலயா? என் கொஞ்சநஞ்ச மரியாதையும் கெட்டுப் போகறதுக்கு முன்னே நான் போறேன்” என அவள் வேகமாக எழுந்து கொண்டாள்.

தன் மனசாட்சியை கரீமாவிடம் அடகு வைத்த மிஷால் “ருஹானா, நில்லு! போகாதே!” என்று ருஹானாவை எட்டிப்பிடித்தவன், அவளை இழுத்து தன்னோடு சேர்த்து கட்டி அணைத்துக்கொண்டான். சதிகார கும்பலோடு இணைந்த புகைப்படக் கருவியும் நன்றாக தன் தீனியை விழுங்கிக் கொண்டது.

(தொடரும்)

Advertisement