Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

  அத்தியாயம் – 113

‘எல்லா உரிமையும் உனக்கு உண்டு. உன் கண்ணீர் விலைமதிப்பற்றது. வீணாக்காதே’ என்று ஆர்யன் சொன்னதைக் கேட்ட ருஹானாவின் துக்க கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாற, அவள் மனம் தெளிந்து அழுகையை நிறுத்தினாள்.

“நான் சொல்றது உனக்கு புரியுதா?” என அவன் கேட்க, “நீங்க சொல்றது சரிதான். இனி நான் இப்படித்தான் நடந்துக்கணும், அப்போ தான் எல்லாரும் நம்புவாங்க” என அவள் வேறு திக்கில் சென்றுவிட்டாள்.

ஆர்யன் ஏமாற்றம் அடைந்தாலும் அவள் கண்ணீர் நின்றதுகண்டு நிம்மதியாகி “சரிதான், இதோட இது முடிந்ததா? இப்போ கவலைப்படுறதை நிறுத்திட்டு நிம்மதியா தூங்கு. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் தான் இருக்கு. இன்னும் நமக்கு செய்ய வேலைகளும் நிறைய இருக்கு” என்று இரவு வணக்கம் சொல்லி அகன்றான்.

——–

காலையில் எழுந்து குளித்து கண்ணாடி முன் நின்ற ருஹானாவிற்கு கைவளையை பார்த்ததும் ‘நீ ஆர்யன் அர்ஸ்லானோட மனைவியாகப் போறே!’ என அவன் சொன்னது இன்பமாக நினைவு வர, அவள் முகத்தில் புன்னகை பூத்தது.

“சித்தி!” என்றபடி இவான் வர, அவனை அணைத்து முத்தமிட்டவள் “நானே உன்னை குளிக்க வைக்க வர இருந்தேன், அன்பே!” என்றாள்.

“இப்போ நான் பெரிய பையன், சித்தி! நானே குளிச்சி உடை மாத்திட்டேன்.”

“வெல்டன், கண்ணே! இப்போ இன்னும் பெரிய பையனாக நல்லா சாப்பிடலாம் வா!”

———

உணவு மேசையில் நடுவில் ஆர்யனும், அவனது வலதுபுறம் அம்ஜத், கரீமா, சல்மா என வரிசையாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, ஆர்யனின் வலதுபுறம் இவானும் அவன் அருகே ருஹானாவும் அமரும் இடம் வெற்றிடமாக இருந்தன.

“ஆர்யன்! அடுத்த வாரத்துக்கான டெண்டர் பேப்பர்லாம் நான் ரெடி செய்திட்டேன். நீங்க ஒரு தடவை அதை பார்த்தீங்கனா..” என்ற சல்மாவை மேலே பேசவிடாத ஆர்யன், “ரஷீத் கிட்டே கொடுத்திரு. அவன் பார்த்துப்பான்” என சொல்லவும், சகோதரிகள் இருவரும் முகம் சுருக்கினர்.  

காலை வணக்கம் சொன்னபடி இவானும் இனிய உணவு சொல்லியபடி ருஹானாவும் அப்போது அங்கே வர, ஆர்யன் மகிழ்ச்சியாக தன் பக்கம் அமர்ந்த இவானை பார்த்து புன்னகைத்தான். அவனை தாண்டி செல்லப் போனவளை பார்த்த அம்ஜத் வேகமாக எழுந்தான். “நில்லு! ருஹானா நில்லு!”  

ஆர்யன் முதற்கொண்டு எல்லாரும் அவனை பார்க்க “ருஹானா! நீ ஆர்யனோட இடது பக்கம் உட்கார்” என்று அம்ஜத் சொல்ல, திடுக்கிட்ட கரீமா கணவனை விரோதியைப் போல பார்த்தாள். ருஹானா தயங்கி நிற்க “இப்போ நீ ஆர்யனுக்கு மனைவியாகப் போறே. இங்க வந்து உட்காரு. ஆர்யனோட இதயம் பக்கம் உட்கார்ந்து சாப்பிடு. எல்லாருக்கும் அமைதி கிடைக்கும்” என்று அம்ஜத் வற்புறுத்த, ஆர்யனும் அவளை கண்ணால் அழைத்தான்.

“பரவாயில்ல, அம்ஜத் அண்ணா! நீங்க ஏன் சிரமப்படுறீங்க?” என்று ருஹானா சொல்ல, ருஹானாவின் கையைப் பற்றிய ஆர்யன் “இங்க வந்து உட்கார். உனக்கு பசிக்குமே!” என்று சொல்ல, ருஹானா மெல்ல அவன் இடப்பக்கம் வந்து அமர்ந்தாள்.

ருஹானாவை வெட்டுவதை போல பார்த்த சல்மா விருட்டென்று எழுந்து கொள்ள, “சல்மா! காபி உனக்கு எட்டலயா? நான் எடுத்து தரேன்” என சமாளித்த கரீமா யாருக்கும் தெரியாமல் தங்கையின் கையை பிடித்து இழுத்து அமர வைத்தாள். அம்ஜத் இவானின் பக்கத்தில் சென்று அமர்ந்தான். 

ருஹானா தட்டில் உணவு எடுத்து வைக்க, அவள் கையில் மின்னிய வளையை பார்த்த கரீமா “ருஹானா டியர்! உன்னோட ப்ரேஸ்லெட் கொள்ளை அழகு, ஆர்யன் தந்த மஹர் தானே?” என கேட்க, ருஹானா தலையை ஆட்டினாள்.

கல்யாணப்பெண்ணுக்கு மணமகன் அளிக்கவேண்டிய மணக்கொடையே மஹர் என்பது. என்னதான் கரீமா நினைவூட்டி ருஹானாவுடன் சென்று தங்கக்காதணி வாங்கி வந்திருந்தாலும், தன் கைப்பட ஆர்யனும் வாங்கி ருஹானாவிற்கு அணிவித்தது அவளுக்கு பெருமிதத்தையே தர, அந்த மகிழ்ச்சி அவள் முகத்திலும் பிரதிபலித்தது. 

“ஆரஞ்சு சாறு கொண்டு வா, நஸ்ரியா!” என்று சொன்ன ஆர்யன், “நீ வெளுத்து தெரியுறே! அதை குடி! சரியாகிடும்!” என்று ருஹானாவிடம் சொன்னான்.

அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத சல்மா வேலையைக் காரணம் காட்டி என எழுந்து செல்ல, கரீமாவை தவிர அவளை வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை.

நஸ்ரியா பழச்சாறு கொண்டுவர, அம்ஜத் இவானுக்கு ரொட்டியை சிறியதாக வெட்டி வைக்க, ஜாஃபர் ஆர்யனிடம் வந்து “மிஸ் ருஹானாவோட பொருட்கள் எல்லாம் உங்க அறையில் அடுக்கிடலாமான்னு சாரா கேட்கறாங்க” என்று அனுமதி கேட்டான்.

“சித்தி! உங்க கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க சித்தப்பா அறையில தான் இருப்பீங்களா?” என இவான் ஒரு தர்மசங்கடமான கேள்வியை எல்லோர் முன்னிலையிலும் ருஹானாவிடம் கேட்க, வெளுத்திருந்த அவளின் முகம் சிகப்பை பூசிக்கொள்ள, அந்த அழகை ஆர்யன் அள்ளிப் பருகினான்.

கரீமா “ஆமா, இவான் டியர்! நானும் அம்ஜத் பெரியப்பாவும் ஒரே அறையில தானே இருக்கோம்?” என விளக்கம் அளிக்க, “அப்போ நானும் உங்க கூட வந்து தூங்குவேன்” என இவான் ஆசையாக சொன்னான். அம்ஜத் குறும்புடன் சிரித்தவன் வாயை துடைக்கும் சாக்கில் அதை மறைத்துக்கொண்டான்.

அவன் கட்டளைக்கு காத்திருந்த ஜாஃபருக்கு சரி என்று ஆர்யன் தலையை அசைக்க, ருஹானா சாப்பிடாமல் உணவை அளைந்துகொண்டே இருந்தாள்.

——–

“சூனியக்காரி கார்ட் தொலைத்த பின்னும் ஆர்யன் எவ்வளவு காஸ்ட்லியான பரிசு வாங்கி தந்துருக்கான். அதை உடைக்கணும்னு எனக்கு ஆத்திரமா வந்தது, அக்கா!”   

“கோபப்படாதே, சல்மா! நம்ம பிளான் இப்போதான் புகைய ஆரம்பிக்குது சீக்கிரமே பத்திட்டு எரிய ஆரம்பிக்கும்.”

“அந்த ப்ரேஸ்லெட் போட்டுக்கிட்டு அவ இந்த மாளிகையோட அதிபதி போல இருக்கா. எனக்கு தலையே வெடிச்சிடும்போல போல இருக்கு, அக்கா!”

“சல்மா, நிதானமா இரு! ஆர்யன் ஒரு ஜென்டில்மேன். அதனால கார்ட் திருட்டை தூண்டி துருவல. அவனுக்கு இப்போ நேரமும் இல்ல. அந்த பணம் அவனுக்கு ஒரு பொருட்டும் இல்ல. ஆனா நம்மோட எல்லா வேலைகளும் ருஹானாவுக்கு எதிரா திரும்பும்போது இதும் பெருசா தெரியும். ‘அவ கபடமா அதை திருடிட்டா’ன்னு ஆர்யன் நம்புவான்.”

“ஆமா அக்கா, இன்னைக்கு மிஷால் நீ சொன்னபடி செய்வானா?” 

“நம்ம திட்டத்தோட ஹைலைட், இரவு மிஷால் நடத்துவான்.”

——–

சாராவும் நஸ்ரியாவும் ஆர்யனின் அறையில் ருஹானாவின் உடைமைகளை கொண்டுவந்து அடுக்கிக் கொண்டிருக்க, ருஹானா உள்ளே வந்தாள். 

“ருஹானா! திருமணத்தன்று எந்த இரவு உடை சரியா இருக்கும்? காட்டனா இல்ல சார்டினா?” என சாரா கேட்க, “எதுனாலும் பரவாயில்ல” என்று வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டு சொன்ன ருஹானா அவர்களுக்கு உதவ முயல, சாரா அவளை தடுத்தார்.

ஆர்யனும் ருஹானாவை பின்பற்றி தன் அலுவலக அறைக்கு வந்தவன், படுக்கையறை வாயிலில் நின்றான்.

“நீ எதுவும் செய்ய வேண்டாம், ருஹானா. கல்யாணத்துக்கு அப்புறம் இந்த அறையை உன் அழகு கைகளாலும் அன்பு மனதாலும் அலங்கரி” என்று சொன்ன சாரா “நீ கட்டிலோட எந்த பக்கம் படுப்பே? உன்னோட பொருட்களை உனக்கு வசதியா வைக்கணுமே” என்று ருஹானாவிடம் கேட்க, அவள் விழித்தாள்.

“இடது பக்கம் வைங்க, சாரா! காலைல சூரிய கதிர்கள் அங்கே தான் முதல்ல படும்” என்று சாராவிடம் சொன்ன ஆர்யன் உள்ளே வந்து ருஹானாவிடம் “அது உனக்கும் சந்தோசம் தரும்” என்று சொல்ல, ருஹானா மலர்ந்த முகத்துடன் ஆர்யனை பார்க்க, வழக்கம்போல அவன் அவளைப் பார்த்து மெய்மறந்திருந்தான்.

நஸ்ரியா நெஞ்சில் கைவைத்து தன் ஆதர்ச ஜோடியை பார்த்து பரவசப்பெருமூச்சு விட, அவளை கண்ணால் கண்டித்த சாரா அவளையும் இழுத்துக்கொண்டு வெளியே நகர்ந்தார்.

“இதை வச்சிட்டு வரேன்” என ருஹானா அலமாரி பக்கம் செல்ல, அவளை தடுத்த ஆர்யன் “இங்க வந்து உட்கார். நாம கொஞ்சம் பேசணும்” என்று சோபாவிற்கு அழைத்தான்.

“எல்லாமே நாம சேர்ந்து செய்தாத்தான் மத்தவங்க பார்வைக்கு சந்தேகம் வராது. நீயும் இதெல்லாம் சீக்கிரமே பழகிக்கோ, அதான் நமக்கு நல்லது. நேத்து நான் சொன்னதுபோல என்னோடது எல்லாம் உனக்கும் தான், இந்த அறையைப்போல. இன்னும் உனக்கு எதும் தேவை இருந்தாலும் தயங்காம சொல்லு.”

“நீங்க சொல்றது சரிதான். நான் தயக்கம் காட்டினா இது நிஜக் கல்யாணம் இல்லன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். நான் முகம், கை கழுவிட்டு வரேன்” என்று எழுந்து குளியறைக்கு சென்றாள்.

சாரா இரவு உடை பற்றி பேசியது அவளுக்கு அவஸ்தையை கொடுக்க, முகத்தை இருமுறை நீரால் அடித்து கழுவினாள். அவள் அங்கேயே தயங்கியபடி நிற்க, ஆர்யன் திறந்திருந்த கதவை எட்டிப்பார்த்தவன் முகம் துடைக்க துண்டை கொண்டுவந்து நீட்டினான்.

“நீ சரியாத்தானே இருக்கே?” என அவன் கேட்க, அவளுக்கு வியர்த்தது. ஆமாம் என தலையாட்டியவள் நீரோடு, வேர்வையும் சேர்த்து துடைத்தாள். 

“குளியலறையிலும் உன் வசதிப்படி வச்சிக்கோ. சாரா உனக்கு உதவுவாங்க” என்று ஆர்யன் சொல்ல, “இல்லல்ல.. நான் வெளி அலமாரியில வச்சிக்கறேன்” என அவள் பதற, “நாம ரெண்டுபேரும் சேர்ந்து வசிக்கிற தோற்றம் தெரியணும். சரியா?” என அவளை கூர்மையாக பார்த்து கேட்டான்.

“ஹுஹும்!” என்று அவள் சொல்ல, இருவரும் வெளியே வந்து கட்டிலில் கிடந்த பொருட்களை பார்வையிட்டனர். “என்னோட உடைகளை இந்த பக்கம் வச்சிக்கறேன். நாம ரெண்டு பேரும் பயன்படுத்த நிறைய காலி இடம் இருக்கு. தேவைன்னா இன்னொரு அலமாரி கூட செய்துக்கலாம்.”

“இல்ல, இதுவே போதும்!” என்று சொன்ன ருஹானா அவள் அம்மாவின் புகைப்படத்தோடு சில பொருட்களையும் மேலே எட்டி வைக்க பார்க்க, அது நழுவப் பார்த்தது. பக்கம் நின்ற ஆர்யன் அவள் கையோடு அதை பிடித்துக்கொண்டவன் அவனே அதை அடுக்கி வைத்தான்.

ருஹானாவின் கைபேசியில் மிஷால் அழைக்க, அவன் பெயரை இருவருமே பார்த்தனர். ருஹானா அழைப்பை ஏற்க தயங்க, “போனை எடுத்து பேசலயா?” என ஆர்யன் கேட்டான்.

அலைபேசியை இயக்கி அவள் அதை காதில் வைக்க “ருஹானா! இப்போ வர்றியா? நான் இரவு உணவுக்கு எல்லா ஏற்பாடும் செய்திட்டேன்” என மிஷால் சொல்ல, ருஹானா நேரம் இல்லையென மறுத்தாள். 

“நீ அப்படி சொல்லக்கூடாது, ருஹானா! கொஞ்ச நாளைக்கு நான் சொந்த ஊருக்கு போகலாம்னு இருக்கேன். அதான் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு பிரிவு விருந்து தரேன். நீ இங்க சாப்பிட வந்தினா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்” என்று கெஞ்சி கூப்பிட, ருஹானா “சரி, நான் வரேன்” என்று சொல்லி போனை அடைத்தாள்.

ஆர்யன் கேள்வியாக பார்க்க, “என்னோட அப்பா வீட்டு பகுதியில் ஒரு டின்னர் ஏற்பாடு செய்திருக்காங்க. பர்வீன் அம்மா, தன்வீர் மற்ற எல்லாரும் சேர்ந்து சாப்பிட வராங்க. நானும் வரேன்னு ஒத்துக்கிட்டேன். ஆனா வேலை இருந்தா..” என ருஹானா கட்டிலில் கிடந்த பொருட்களை பார்த்து இழுக்க, “இல்ல, நீ போயிட்டு வா! இங்க பார்த்துக்குவாங்க” என ஆர்யன் சொன்னான்.

“நன்றி! இன்னும் கொஞ்சம் பெட்டிகள் இருக்கு. அதையும் கொண்டுவந்து வச்சிட்டு நான் கிளம்பறேன்.”

——–

ருஹானா தன் பழைய அறையில் காலியாக இருந்த அலமாரியை பார்த்தாள். பொருட்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த அறையையும் சுற்றிப் பார்த்தாள். கைவளையை தடவியபடி கட்டிலில் அமர்ந்தவளுக்கு ஆர்யன் அளித்த உரிமையும் அவன் பேசிய பேச்சும் மனதில் ஓடியது.

கதவை தட்டி உள்ளே வந்த ஜாஃபர் திறந்து கிடந்த வெற்று அலமாரியைப் பார்த்து கேட்டான். “பொருட்கள் புது இடத்துக்கு எளிதா மாறுறது போல மனிதர்களும் புது இடங்களுக்கு பொருந்திப்போனா நல்லா இருக்கும், இல்லயா மிஸ் ருஹானா?”

பெருமூச்சுடன் தலையசைத்த ருஹானா “ஆமா ஜாஃபர் அண்ணா!” என்றாள். மீதி பொருட்களை கொண்டுவருகிறேன் என்று சென்றவளை இன்னும் காணோமே என்று தேடி வந்த ஆர்யன் இருவரும் பேசுவதை கேட்டபடியே வெளியே நின்றான்.

“மனிதர்களுக்கு மாற்றமும், புது வாழ்வு துவங்கறதும் கடினமான காரியம்தான்.”

“இது எப்படி நடக்கும் ஜாஃபர் அண்ணா? திருமணம், சேர்ந்து செல்லப்போற இந்த வாழ்க்கை? இன்னும் நிறைய விஷயங்கள் எங்களுக்குள்ள புரியாம தானே இருக்கு?”

“நம்பிக்கை. உடையாத திடமான அஸ்திவாரத்துல தான் இந்த வாழ்வு அமைகிறது என்கிற நம்பிக்கை. நீங்க அவரை நம்பறீங்க தானே?”

ஆர்யன் ருஹானாவின் பதிலை தெரிந்துக் கொள்ள இன்னும் கதவுப்பக்கம் வர, அவள் “ஆமா!” என்று தலையாட்டி அவனை சந்தோசப்படுத்தினாள்.

“அந்த உறுதி உங்களுக்கு இருந்தா இலகுவா சாய்ந்திருங்க. உங்க பின்னாடி இருக்கும் மலை உங்களை தாங்கிப் பிடிக்கும். காலப்போக்கில் கவலைகளும், அச்சங்களும் ஒவ்வொன்னா விலகி ஓடிடும். பயப்படாதீங்க!”

“நன்றி, ஜாஃபர் அண்ணா!” என்று ருஹானா சொல்ல, ஆர்யன் அங்கிருந்து மகிழ்வான மனதுடன் சென்றான்.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பில்

அச்சம் முன்னிற்கும் நேரம்

கன்னிமகளுக்கு விடை கொடுத்து

அகம் நிறைந்த காதல் மன்னவனுடன்

கைகோர்க்கும் நாள் நெருங்க

மகிழ்வை மீறிய படபடப்பு

புதுவாழ்வு புதுபந்தம் எதிர்கொள்ள

நம்பிக்கை ஒன்றே ஆதாரமாய்! 

——-

Advertisement