Advertisement

“ஆர்யனுக்கு உன் பரிசு ரொம்ப பிடிக்கும்” என்று கரீமா சொல்ல, ருஹானா பதில் பேசும்முன் அவள் அலைபேசி அடித்தது.

“ஹல்லோ மிஷால்!”

“ருஹானா! நீ பிஸியா?”

“ஆமா, நான் கரீமா மேம் கூட கடைக்கு வந்திருக்கேன்.”

“அப்படியா? நான் உன்னை டின்னருக்கு கூப்பிடலாம்னு நினைச்சேன். பர்வீன் ஆன்ட்டி, தன்வீர் எல்லார் கூடவும் சேர்ந்து சாப்பிடலாம், உன் திருமணத்துக்கு முன்ன நாங்க உனக்கு தரும் விருந்து.”

“அப்படியா? நான் நாளைக்கு உனக்கு கால் செய்யவா?”

சல்மா வேலை முடிந்தது என கரீமாவிற்கு செய்தி அனுப்ப, கரீமா வெற்றி புன்னகை புரிந்தாள். ருஹானா மிஷாலுடன் பேசி முடிக்கவும் கரீமாவின் உடையும் வந்து சேர்ந்தது.

———

நேரத்தை பார்த்த ஆர்யன் ருஹானாவிற்கு அழைக்க செல்பேசியை எடுத்தான். ‘இவான் சித்தி’ என இன்னமும் மாற்றாது பதிந்து வைத்திருந்த அவள் பெயரை தொட, கதவு தட்டி ருஹானா உள்ளே வந்தாள். “நீங்க வேலையா இல்லயே?”

அவள் முகம் கண்டு மலர்ந்த ஆர்யன் “இல்ல, நானே உனக்கு கால் செய்ய இருந்தேன்” என்றான். “கரீமா மேம்க்கு வேற வேலை இருந்தது. அது முடிச்சிட்டு வர தாமதமாகிடுச்சி” என்று சொன்னவள் “நான் உங்களுக்காக ஒரு சின்ன பரிசு வாங்கினேன்” என ஒரு பெட்டியைக் கொடுத்தாள்.

அவள் தரும் பரிசு என்றதுமே மகிழ்ந்து போன ஆர்யன், பெட்டியை திறந்து பேனாவை எடுத்து திருப்பி பார்த்தவனின் மகிழ்ச்சி அதிகரித்தது. அதில் வரைந்திருந்த வில்லை அவன் ஆர்வமாக பார்க்க, ருஹானா “உங்களுக்கு பிடிச்சிருக்கா?” எனக் கேட்டாள்.

 அவளை நிமிர்ந்து பார்த்த ஆர்யன் “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என சிரிப்புடன் சொன்னான். “நீங்க எனக்கும் இவானுக்கும் செய்ததுக்கு இது எந்த அளவுக்கும் ஈடு செய்யாது. ஆனா.. இது உங்களுக்கு பிடிக்கும்னு நான் நினைச்சேன்” என ருஹானா சொல்ல,

“இனிமேல் முக்கியமான ஆவணங்கள்ல கையெழுத்து போட இந்த பேனா தான் பயன்படுத்தப் போறேன்” என அவளை மகிழ்வித்தவன் “சரி, உனக்கு என்ன வாங்கினே?” என கேட்டான்.

“இதோ!” என்று காதணியை காட்டிய ருஹானா “எனக்கு பிடிச்சது. நன்றி உங்களுக்கு!” என்றாள்.

“இது ஒன்னு தானா?”

“ஆமா! இதுவே தேவையில்லன்னு தான் நான் சொன்னேன்” என்று அவள் சொன்னதை கேட்டு ஆர்யன் யோசிக்க “என்னாச்சு?” என அவள் கேட்டாள்.

“வேற கடைல எதும் வாங்கினீங்களா?”

“இல்லயே! ஒரே கடைக்கு தான் போனோம். இந்த பேனா மட்டும் தான், அதும் உங்க கார்டு பயன்படுத்தல. நானே உங்களுக்கு வாங்கி கொடுக்க நினைச்சேன். என்கிட்டே இருந்து பணமா தான் கொடுத்தேன்.”

“ஏதோ தப்பு நடந்திருக்கு” என சொன்ன ஆர்யன் போனை எடுத்து படிக்க, ருஹானா “அதெல்லாம்.. பணம் செலுத்திய குறுஞ்செய்தி தானே? இத்தனை வந்திருக்கே! நான் ஒன்னே ஒன்னு தானே வாங்கினேன்” என பதறினாள்.

“என்னன்னு பார்க்கலாம். நீ பயப்படாதே!”

“உங்க கார்ட் கொடுத்துடுறேன்” என சொன்ன ருஹானா “ஒன்னு தானே வாங்கினேன். எப்படி இத்தனை மெசேஜ் வரும்?” என்றபடி கைப்பையிலிருந்து பணப்பையை எடுத்து திறந்தாள். அங்கே அது இல்லாமல் போக பயந்து போன ருஹானா “இங்க தானே வச்சேன். எங்க போச்சி? எப்படி நடக்கும் இது?” என கைப்பையை உருட்டினாள்.

அவள் பதட்டம் பார்த்து எழுந்த ஆர்யன் “இரு, இரு! பொறுமை” என்றவாறு அவளை நெருங்கினான்.

“என் பேக்ல தான் வச்சேன். கீழ விழுந்துடுச்சா?” என அவள் கலங்க, “இட்ஸ் ஓகே! கார்ட் எடுத்தவங்க அதை பயன்படுத்தி நகைகள் வாங்கியிருக்கலாம்” என எளிதாக சொன்னான் ஆர்யன்.

“ஆனா அது அன்லிமிடட் கார்ட் ஆச்சே! என்னை மன்னிச்சிடுங்க. நான் அந்த பணத்தை கொடுத்துடறேன். எவ்வளவுன்னு காட்டுங்க. நான் பார்க்கணும்” என சொன்ன ருஹானாவின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

“அது ஒன்னும் முக்கியமில்ல, விடு” என அவன் போனை பின்னால் மறைக்க, அவன் கையை பிடித்து போனை அவள் பிடுங்கினாள்.

“அது எப்படி? யா அல்லாஹ்! ஐந்து லட்சத்துக்கு வாங்கியிருக்காங்க. அப்படி எப்படி செய்ய முடியும்? இப்போ என்ன செய்றது?”

“நீ கவலைப்படாதே! என்ன செய்யலாம்னு பார்க்கலாம்” என்று அவளை தேற்றிக்கொண்டே அவன் போனை எடுத்துக் கொண்டான்.

“எவ்வளவு பெரிய தொகை! நான் எப்படியும் உங்களுக்கு திருப்பி கொடுத்துடுவேன்.”

‘ம்ப்ச்! இது உன்னோட தப்பு இல்ல. நடந்தது நடந்துடுச்சி. நீ ஒன்னும் யோசிக்காதே.”

“அது எப்படி முடியும்? நான் வேலை செய்து உங்க கடனை அடைப்பேன்.”

“நான் தான் விடுன்னு சொல்றேனே! உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது?”

“வங்கிக்கு போன் செய்ங்களேன்! இல்ல, வாங்க… நாம வங்கிக்கு போகலாம். அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க.”

“நான் பார்த்துக்கறேன். நீ அமைதியா இரு” என்ற ஆர்யன் அவள் கண்ணீரை துடைக்க கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தான்.

“ஸாரி, என்னை மன்னிச்சிடுங்க. இது என்னோட தப்பு. நான் உங்க கார்ட் வாங்கியிருக்கக் கூடாது. யா அல்லாஹ்! நான் ஏன் அதை வாங்கினேன்?” என ருஹானா புலம்பி அழ, ஆர்யன் அவளின் குணத்தை அந்த நேரத்திலும் மெச்சி அவளை கனிவாக பார்த்தான்.

———-

“அக்கா! இன்னும் என்ன? எனக்கு இதெல்லாம் எப்போ தான் முடியும்னு இருக்கு.”

“கடைசியா மிஷால் செய்யப் போறது தான். அதோட நம்ம வேலை முடிந்தது, சல்மா. அதுக்கு அப்புறம் அவளை வெளிய அனுப்புற வேலையை ஆர்யன் பார்த்துக்குவான்.”

சல்மா தலையை ஆட்டி சிரிக்க, கரீமா மிஷாலுக்கு அழைத்தாள். “ஹல்லோ மிஷால்! சீக்கிரமே ருஹானாவை உன்னோட இடத்துக்கு வர வை. அதான் நம்ம திட்டத்துல முக்கியமானது, அது இல்லனா நம்ம திட்டமே இல்ல. ஞாபகம் வச்சிக்கோ!”

———-

ருஹானாவின் அறைக்கதவை தட்டிய சாரா “ருஹானா! நீ இரவு உணவும் சாப்பிடல. ஆர்யன் சார் உனக்கு சூப் கொடுக்க சொன்னார்” என்று சொல்ல, கதவை திறக்காமல் ருஹானா “நீங்க ஏன் சிரமப்படுறீங்க? எனக்கு சாப்பிட முடியாது” என மறுத்தாள்.

அங்கே வந்த ஆர்யன் சாராவை அனுப்பிவிட்டு கதவை தட்டினான். “சாரா அக்கா! உங்க நேரத்தை வீணாக்காதீங்க. எனக்கு வேணாம்” என ருஹானா உள்ளிருந்து சொல்ல, ஆர்யன் திரும்பவும் தட்டினான்.

அழுது கொண்டே எழுந்து வந்த ருஹானா கதவை திறந்தவள் ஆர்யனை பார்க்க, அவள் அழுகை இன்னும் அதிகமானது.

“ஏன் நீ சாப்பிட மாட்றே? உன்னோட தப்பு இதுல எதுவும் இல்லயே! உனக்கு நீயே தண்டனை கொடுக்காதே” என்று அவன் அன்பாக சொல்ல, ருஹானா உள்ளே வந்து அவனுக்கு முகத்தை மறைத்து முதுகு காட்டி நின்று அழுதாள்.

உள்ளே வந்து அவள் பின்பக்கம் நின்ற ஆர்யன் அவள் தோள் தொட்டு ஆறுதல் சொல்ல முற்பட்டவன், பின் ஏதோ யோசித்து கைகளை பின்னே இழுத்துக்கொண்டான். “நீ வருத்தப்பட எதுவும் இல்லன்னு நான் சொன்னேன் தானே? நான் சொல்றதை ஏன் உள்வாங்க மாட்றே?”

“ஏன்னா அது என்னோட குற்றம். நான் கார்டை கவனமா வச்சிருந்திருக்கணும்” என்று திரும்பிய அவளிடம் கேவல் வெளிப்பட “ம்ப்ச்! இங்க வா!” என்று ஆர்யன் அவளை கைப்பற்றி அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்து தானும் அவள் அருகே அமர்ந்தான்.

“என்கிட்டே ஒரு பைசா கூட இல்லாத நாட்களை நான் கடந்து வந்திருக்கேன். அப்புறம் நான் நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் எனக்கு ஒன்னு தெளிவா புரிந்தது. பணத்தால எந்த சந்தோசமும் கிடைக்காது.” அவள் கேவல் நின்று கண்ணீர் மட்டும் வடிந்தது.

“இந்த மாளிகை தங்கத்தால இழைக்கப்பட்டு இருக்கலாம். ஆனா இதுல இவானோட சந்தோஷக் குரல் கேட்கலனா இதுக்கு ஒரு மதிப்பும் இல்ல. என் அண்ணனுக்கு அமைதி கிடைக்கலனா இந்த செல்வத்தால என்ன பயன்?” என்று சொன்ன ஆர்யன் கோட் பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து திறந்தான்.

அதிலிருந்த மிகஅழகிய வளையலை அவள் பக்கம் காட்டிய ஆர்யன் “உனக்காக நான் வாங்கிட்டு வந்தேன்” என்று சொல்ல, அவன் பக்கம் திரும்பி அமர்ந்த ருஹானாவிற்கு கண்ணீரும் பெருக்கெடுக்க, “தயவுசெய்து இப்படி செய்யாதீங்க!” என்று பாவமாக சொன்னாள்.

அவளை விட கெஞ்சுதலாக தலையை சாய்த்த ஆர்யன் “நீ எனக்கு ஏமாற்றம் தராதே” என்றான்.

“எவ்வளவு விலை உயர்ந்த பொருளை தொலைச்சாலும் அதை திரும்ப வாங்கிடலாம். அதுக்கு போய் வருத்தப்படறது தேவையே இல்லாதது.”

“ஆனா அந்த பொருள் அன்பானவங்க கொடுத்ததுன்னா, அது காணாம போனதுக்கு வருத்தப்படலாம்.”

“இதோ, இதை பாரு! இது கடை ஷோகேஸ்ல இருந்ததால இதுக்கு மதிப்பு இல்ல. ஆர்யன் அர்ஸ்லான் மனைவி கையை அலங்கரித்தால் தான் இதுக்கு மதிப்பு.”

“இதை நீ தொலைச்சிட்டீனா இதோட பணமதிப்புக்காக நான் கவலைப்பட மாட்டேன். ஆனா நான் உனக்கு கொடுத்த பரிசை நீ மதிக்கலயேன்னு தான் வருத்தப்படுவேன்.”

“உன் கையை கொடு!” என கையை நீட்டிக் கேட்டான்.

சூழ்ச்சிகள் தொடர்ந்து வர 

சோதனைகளைக் கடக்க

துணை நிற்பது நம்பிக்கையே!

செல்வத்தை பறிகொடுத்த 

நேர்மையின் நெஞ்சமவள்

துடிப்பதையும் தவிப்பதையும்

காணப்பொறுக்காத காதலன்

ஆற்றுகிறான் அவளை தேற்றுகிறான் 

சிந்தாதே உன் முத்துக்கண்ணீரை!

தங்கமும் தகரமே நீ அணிய மறுத்தால்! 

கையை பின்னுக்கு இழுத்துக்கொண்ட ருஹானா “இது வாங்கிக்கற தகுதி எனக்கு கிடையாது. அதும் கண்டிப்பா இப்போ கிடையாது. அதோட இது ரொம்ப விலையானதா தெரியுது” என மறுத்தாள்.

“உன்னோட கை!” பிடிவாதமாக கெஞ்சிய ஆர்யனின் கை இன்னும் அவள் புறம் நீண்டது. தயக்கமாக மெல்ல ருஹானா ஆர்யனின் கைமேல் தன் கையை வைக்க, ஆர்யன் மென்மையாக அவள் கையை பிடித்து வளையலை மாட்டினான்.

 “நீ ஆர்யன் அர்ஸ்லானோட மனைவியாகப் போறே! உனக்கு எல்லாத்துக்கும் உரிமை இருக்கு. இதை மறக்காதே, என்னோடது எல்லாமே உன்னோடதும் தான்! அதோட உன்னோட ஒரு துளி கண்ணீருக்கு ஈடானது எதுவுமே இல்ல!”

(தொடரும்)  

Advertisement