Advertisement

 “நஸ்ரியா கொடுத்த பரிசை பார்த்துட்டு இருந்தேன். நீங்க வந்ததை கவனிக்கல.”

“என்ன செய்திருக்கா? நானும் பார்க்கறேனே!” ஆர்யன் கையை நீட்டி கேட்க, ருஹானா மறுக்க முடியாமல் அதை அவனிடம் கொடுத்தாள். ஆல்பத்தை திறந்த ஆர்யன் ஒவ்வொரு படமாக ரசித்து பார்த்துவிட்டு ஒவ்வொரு முறையும் அவளையும் ஏறிட்டு பார்த்துக்கொண்டான், மென்முறுவலுடன்.

ஆர்யன் மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்ப்பதை ருஹானா “அவ ஏதோ ஆர்வத்துல சிறுபிள்ளைத்தனமா செஞ்சிருக்கா” என்று சொல்ல, ஆர்யன் “ஆனா அருமையா செஞ்சிருக்கா” என்றபடி அதை அவளிடம் கொடுத்தான்.

“நீங்க என்கிட்டே எதும் சொல்ல வந்தீங்களா?”

“ஆமா, நூர்ஜஹான் போன் செய்திருக்காங்க. நீ எடுக்கல. எனக்கு கால் செய்தாங்க”

“யா அல்லாஹ்! இது சைலென்ட்ல இருக்கு. அவங்க என்னை பதில் சொல்ல சொன்னாங்க. அவங்க கேட்டதையும் நான் மறந்தே போயிட்டேன். அதிக வேலையால களைப்பாகிட்டேன் போல” என ருஹானா ஆல்பத்தை பார்த்துக்கொண்டு சகலத்தையும் மறந்ததை மறைத்து பேசினாள்.

அவள் ஆல்பத்தை மார்போடு அணைத்திருப்பதை பார்த்து உள்ளூர நகைத்துக் கொண்ட ஆர்யன் “பரவாயில்ல. நாளைக்கு பேசிடு” என்று சொல்லி சென்றான்.

ருஹானா கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டு விடிய விடிய அந்த ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருக்க, ஆர்யன் சோபாவில் அமர்ந்தபடி அவனது கைபேசியின் பேட்டரி தீரும்வரை அதில் இருந்த அவளது புகைப்படங்களில் பார்வையை பதித்து இருந்தான்.

காலை விடியவும் தூங்காமலேயே எழுந்து கிளம்பி வெளியே வந்த ஆர்யன் எதிரே இவான் வரக் கண்டான்.

“உன் கையில என்ன புக் அது, சிங்கப்பையா?”

“சித்தி இதை பிடிச்சிக்கிட்டு தூங்கிட்டு இருந்தாங்க. நான் எடுத்துட்டு வந்தேன், சித்தப்பா!”

“அதே தப்பு தானே, அவங்க அனுமதி இல்லாம எடுக்கறது? போய் உன் சித்திட்ட கொடுத்துடு” என ஆர்யன் சொல்ல, அவனிடம் மன்னிப்பு வேண்டிய இவான், அங்கே ருஹானா வேகமாக வருவதை பார்த்து “சித்தி! என்னை மன்னிச்சிடுங்க. நீங்க தூங்கிட்டு இருக்கும்போது உங்களை கேட்காம உங்க புக்கை நான் எடுத்துட்டேன்” என்று சொன்னான்.

மாட்டிக்கொண்ட உணர்வில் ருஹானா ஆர்யனைப் பார்த்து விழிக்க, புன்னகையை மறைத்துக்கொண்ட ஆர்யன் அவளை காப்பாற்றும் பொருட்டு “காலை உணவு தயாரா இருக்கு. சீக்கிரம் சாப்பிட வாங்க” என சொல்லி கீழே செல்ல, “வா, அன்பே! உனக்கு நான் உடை மாத்தி விடுறேன்” என ருஹானா இவானை அவனது அறைக்குக் கூட்டிச்சென்றாள்.

——–

“ஆர்யன் டியர்! திருமணநாள் நெருங்கிடுச்சி. நாம கல்யாணப்பொண்ணுக்கு தங்க நகை வாங்கி கொடுக்கணுமே! நம்ம சம்பிராதாயப்படி..” என கரீமா சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்யனிடம் சொல்ல, “அப்படியா? நீங்க போய் வாங்கிட்டு வந்துடறீங்களா?” என ஆர்யன் அவளிடம் கேட்டான்.

“சந்தோசமா! அர்ஸ்லான் குடும்பத்தோட பாரம்பரியத்துக்கு தகுந்தபடி வாங்கிடுறேன்.”

“எவ்வளவு விலையானாலும் வாங்கிடுங்க” என ஆர்யன் சொல்ல, ருஹானாவும் இவானும் உணவு மேசைக்கு வந்தனர். “வா, அக்னிசிறகே! உட்கார்ந்து சாப்பிடு” என ஆர்யன் இவானிடம் புன்னகைக்க, கரீமா “ருஹானா டியர்! இப்போ தான் உன்னை பற்றி பேசிட்டு இருந்தோம். உனக்கு நகை வாங்க நாம நகைக்கடைக்கு கிளம்பணும்” என்றாள்.

“அது எதுக்கு? அவசியமில்லையே!” என்று ருஹானா திகைத்தாள்.

“கண்டிப்பா அவசியம் தான். அப்படி இல்லனா உன்னை வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்றோம்னு எல்லாரும் பேசுவாங்க. என்று பயங்காட்டிய கரீமா “என்ன நீ எது கேட்டாலும் வேண்டாம் வேண்டாம்னு சொல்றே?” என அலுத்துக் கொண்டாள்.

“என்னலாம் வாங்கணுமோ எல்லாம் வாங்கிடு. எதும் மறுத்து சொல்லாதே” என்று சொன்ன ஆர்யன் அவனது வங்கி அட்டையை எடுத்து நீட்டினாள்.

“இதை வாங்கிக்கோ! இது வரையறை இல்லாத கார்டு. உனக்கு என்ன தேவையோ எல்லாம் வாங்கிக்கோ. விலையை பற்றி யோசிக்காதே” என்றவன் அதன் கடவு எண்களையும் சொல்லி “இவான் முதல்முறை என்னை ‘சித்தப்பா!’ன்னு கூப்பிட்ட நாள்” என்றான்.

அதைக் கேட்டு ருஹானா மகிழ்வுடன் புன்னகைத்தாலும் அதை வாங்க தயங்கினாள். “நீங்க கரீமா மேம்ட்ட கொடுங்க!”

“இல்ல, ருஹானா டியர்! நீதான் வாங்கணும். அர்ஸ்லான் குடும்பத்தோட பெருமை நீ. அதுக்கேத்தது போல நீ இருக்கணும்” என்று கரீமா குரூர திருப்தியுடன் சொல்ல, ஆர்யனிடமிருந்து வாங்கிக் கொண்ட ருஹானா “சரி, உங்க விருப்பப்படி” என்றாள்.

———

ருஹானாவுடன் கடைவீதிக்கு கிளம்பும்முன் கரீமா சல்மாவிடம் தன் திட்டத்தை விவரித்தாள். “நகை வாங்கின பின்னால எப்படியாவது ருஹானாட்ட இருந்து அந்த கார்ட் நான் எடுத்துட்டு உனக்கு செய்தி அனுப்புறேன். நீ கடை வாசலுக்கு வா. கண்காணிப்பு கேமராக்கு தெரியாம மறைஞ்சி நில். என்கிட்டே இருந்து ஆர்யனோட கார்ட் வாங்கிட்டு போய் வேறவேற கடைகள்ல பத்து லட்சம் மதிப்புக்கு வைர நகைகளை வாங்கு. வேகமா வாங்கி முடிச்சிட்டு எனக்கு மெசேஜ் அனுப்பு. அதுவரைக்கும் நான் ருஹானாவை நகைக்கடையிலயே நிறுத்தி வச்சிக்கறேன்” என சொன்ன கரீமா, தங்கைக்கு வங்கி அட்டையின் கடவு எண்களையும் தெரிவித்தாள்.

ருஹானாவோடு நகைக்கடைக்கு வந்த கரீமா அவளுக்கு பெரிய நெக்லஸ் வகைகளை காட்ட சொன்னாள், கடைக்காரரை. அதை மறுத்த ருஹானா சிறிய காதணிகளையே பார்வையிட்டாள். “கரீமா மேம்! இந்த கம்மல் எனக்கு பிடிச்சிருக்கு” என்று ருஹானா சொல்ல, கரீமா வேடிக்கையாக சிரித்தாள். “பாருங்க, எங்க கல்யாணப் பொண்ணை! எத்தனை எளிமையா இருக்கா!”

இன்னும் வேறு நகைகள் பார்க்க சொல்லி கரீமா வற்புறுத்த, ருஹானா மறுத்துவிட்டாள். “எனக்கு இதுவே போதும்!”

“எனக்கு தெரியாது, ஆர்யன் திட்டினா நீ தான் பதில் சொல்லணும்” என்று சொன்ன கரீமா, ருஹானா தேர்ந்தெடுத்த காதணிக்கு விலை ரசீது தயாரிக்க சொன்னாள்.

——–

“உங்க கோட் கப்ளிங்க்ஸ் வந்துருக்கு” என்று ஜாஃபர் ஆர்யனிடம் கொண்டுவந்து தர, “நகைக்கடைக்கு போனவங்க வந்துட்டாங்களா?” என அவன் கேட்க, ஜாஃபருக்கு சிரிப்பு வந்தது.

“அவங்க போய் ஒருமணி நேரம் கூட ஆகலயே. எல்லாம் வாங்கிட்டு மாளிகை திரும்ப நெடுநேரமாகுமே!”

“இவ்வளவு நேரம் தான் ஆகுதா, அவங்க கிளம்பி? ரொம்ப நேரம் ஆனமாதிரி எனக்கு தோணுது” என சொன்ன ஆர்யன் எதிரே இருந்தவற்றில் எதை எடுக்க என யோசித்திருந்தான்.

——-

ருஹானா காதணிக்கான பணத்தை வங்கி அட்டை வழியாக செலுத்தியதும், காதணியை பெட்டியில் போட்ட கடைக்காரர் “வாழ்த்துக்கள்” என சொல்லி அவள் கையில் கொடுத்தார். நன்றி சொல்லி பெற்றுக்கொண்டவள் அட்டையை பணப்பையில் வைத்து கைப்பையில் அதை வைக்கும்முன் அவள் அலைபேசி அழைத்தது.

அதில் ஆர்யனிடமிருந்து காணொளி அழைப்பு என பார்த்ததும் படபடப்பான ருஹானா கைப்பையையும் பணப்பையையும் அப்படியே வைத்துவிட்டு செல்பேசியை கையில் எடுத்தான். “அவர் போன்ல இருந்து வீடியோ கால் வருதே? ஏதோ தப்பாகிடுச்சா?”

“அப்படி இருக்காது டியர்! ஆர்யன் உன்னை மிஸ் செய்திருப்பான்” என்று சொன்ன கரீமாவின் கண்கள் ருஹானாவின் பணப்பையிலேயே இருந்தது.

ருஹானா ஆர்யனின் அழைப்பை ஏற்க “கப்ளிங்கஸ் வந்திருக்கு.  நீ பாரு! எது நல்லா இருக்கு? இது ரெண்டுல எனக்கு செலக்ட் செய்ய முடியல” என்று அவற்றை காட்டினான்.

“இது உங்க கருப்பு கோட்டுக்கு பொருத்தமா இருக்கும். நீங்க விருப்பப்பட்டா…”

“நானும் அதான் நினைக்கறேன்.”

திறமையாக கண்காணிப்பு கேமிராக்கு மறைத்து ஆர்யனின் வங்கி அட்டையை எடுத்த கரீமா “நான் வெளிக்காற்று வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

“சரி, உங்க ஷாப்பிங் எப்படி போகுது?” என ஆர்யன் கேட்க, “நிறைய மாடல்ஸ் காட்டினாங்க. எனக்கு தேர்ந்தெடுக்க கடினமா இருந்தது” என்றாள் ருஹானா.

“நான் தான் சொன்னேனே, உனக்கு எதெல்லாம் பிடிக்குதோ அதெல்லாமே வாங்கிக்கோ.”

“நன்றி!”

“எனக்கு எதுக்கு நன்றி? நீ ஆசைப்பட்டதை பாரு” என்று அவர்கள் பேசி முடிக்க, “காதல் பறவைகளின் கொஞ்சல் முடிந்ததா?” என்றபடி கரீமா கடையினுள் வந்தாள்.

“சாரி, கரீமா மேம் உங்களை காக்க வச்சதுக்கு.”

“அது பரவாயில்ல. நான் சும்மா உன்னை கிண்டல் செய்தேன். கொஞ்சநேரம் நீ இல்லைனதும் உன்னை தேடுறான் பாரு. உன் மேல வச்சிருக்கற காதலை அவன் வெளிக்காட்டறது கிடையாது. ஆனா உன்னை பிரிய முடியல அவனுக்கு.”

சங்கடமான ருஹானா “நாம போகலாமா?” என கேட்டாள்.

“என்னோட டிரஸ் தையல்கடைக்கு அனுப்பினது இங்க கொடுக்க சொல்லியிருக்கேன். வந்ததும் வாங்கிட்டு போய்டலாம். பக்கத்துல தான் கடை.”

“அப்போ நாமே அங்க போய் வாங்கிடலாமே!”

“அது ஒருவழிப்பாதை. நாம சுத்திட்டு போகணும். வாகன நெரிசல் அதிகமா இருக்கும், ருஹானா டியர்! இப்போ கொண்டு வந்துடுவான். அதுக்குள்ள நானும் எனக்கு எதாவது நகை பார்க்கறேன்” என்று சொல்லி கரீமா கடையை சுற்றி வந்தாள்.

கண்களை தவிர முகம் முழுதும் மறைத்து உடை அணிந்திருந்த சல்மா பரபரப்பாக நகைகளை வாங்கிக் கொண்டிருந்தாள்.

சோபாவில் அமர்ந்திருந்த ருஹானாவை வில் அம்பு பதிக்கப்பட்ட ஒரு வெள்ளி பேனா கவர்ந்து இழுத்தது. அருகே சென்று அதன் விலையை விசாரித்தவள் அதை வாங்க முற்பட்டு பணப்பையை திறக்க, பார்த்துக் கொண்டிருந்த கரீமாவிற்கு மூச்சடைத்தது, வங்கி அட்டையை தான் தேடுகிறாள் என.

தன்னிடம் இருக்கும் பணத்தை கொண்டு சந்தோசமாக ருஹானா அதை வாங்க, கரீமா வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டாள்.

———

ரஷீத்துடன் ஆர்யன் வேலை செய்துக் கொண்டிருக்க, ஆர்யனின் கைபேசி அடிக்கடி ஒலி எழுப்பி கொண்டே இருந்தது.

“நிறைய குறுஞ்செய்தி வருதே, ஆர்யன்!” என ரஷீத் கேட்க, “நகைக்கடைக்கு போயிருக்காங்க. என் கார்ட் கொடுத்துவிட்டேன்” என்ற ஆர்யன் கைபேசியை கையில் எடுத்தான்.

“பெண்களும் ஷாப்பிங்கும்” என ரஷீத் சிரிக்க, பணப்பட்டுவாடா  தகவல்களை படித்த ஆர்யன் பணத்தொகையின் அளவு கண்டு ஆழ்ந்த யோசனைக்கு சென்றான்.

———

Advertisement