Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                அத்தியாயம் – 112

திருமணத்திற்கான ஒத்திகை என்றாலும் இதழ்களால் அன்பை தெரிவிக்கும் ஒரு வாய்ப்பை ஆர்யன் நழுவவிடவில்லை. ருஹானாவிற்கும் அதை மறுக்கும் எண்ணமில்லையே!

நிறுத்தி நிதானமாக அவளின் நெற்றியில் முத்தமிட்டு கண்களை திறந்த ஆர்யன், நாணத்தின் வசப்பட்டு நின்ற ருஹானாவை பரவசமாக பார்க்க, அவள் அவன் கைப்பிடியிலேயே கையையும் அவன் கண்ணின் வீச்சில் மனதையும் வைத்திருந்தாள்.

கரீமாவைத் தவிர மற்றவர்கள் ஒரு தேவதைக் கதையை நேரில் பார்ப்பதுபோல மெய்மறந்து நிற்க, அதில் வரும் சூனியக்காரி போல சுட்டெரித்துக் கொண்டிருந்தாள் கரீமா.

——-

சல்மாவின் கைகள் வெலவெலக்க, ருஹானாவின் வங்கியிலிருந்து மிஷாலுக்கு பணம் மாற்றும் சதிவேலையை திரும்ப திரும்ப முயன்று கொண்டிருந்தாள்.

——-

“இதுவரை எந்த ஜோடியும் இந்த அளவுக்கு என்னோட மனசை கவர்ந்தது இல்ல. நீங்க ரெண்டு பேரும் இளவரசன் இளவரசி போல இருக்கீங்க. இது ராஜா வீட்டு கல்யாணமே தான்” என நூர்ஜஹான் பிரமித்து பாராட்ட, சங்கடமான ருஹானா “அவ்வளவு தானே? நான் போகலாமா?” என கேட்டவள் “பர்வீன் அம்மாக்கு நான் போன் செய்யணும்” என்று ஆர்யனிடம் சொல்லி எழுந்து சென்றாள்.

அதிர்ந்து போன கரீமா அவள் பின்னால் ஓடினாள். “ருஹானா டியர்! இன்னொரு முறை எல்லாம் சரிபார்த்துடலாமே!”

“தேவையில்ல, எல்லாமே நான் குறிப்பு எடுத்துக்கிட்டேன். தவறு நடக்க வாய்ப்பு இல்ல” என நூர்ஜஹான் இடைபுகுந்து சொல்ல, ருஹானா மேலே சென்றாள்.

“எல்லாம் ருஹானா மேம் விருப்பப்படியே நடக்கும்” என நூர்ஜஹான் ஆர்யனிடம் சொல்லிக்கொண்டிருக்க, கரீமா திகிலுடன் மேலேயே பார்த்துக்கொண்டிருந்தாள்.

——–

“பணத்தை மாத்திட்டியா, சல்மா? நீ எங்க மாட்டிக்குவியோன்னு நான் பயந்தே போயிட்டேன்.”

சோகமாக முகத்தை வைத்திருந்த சல்மா பகபகவென சிரித்தாள். “டன் அக்கா டன். பெரிய தொகை இல்லயா, நடுவுல எர்ரர் வந்துடுச்சி. அப்புறம் வேகமா மாத்திட்டு ஓடிவந்திட்டேன்.”

அவளை செல்லமாக அடித்த கரீமா, சிரித்துக்கொண்டே “அப்பாடா! இப்போ அடுத்தது மிஷாலோட வேலை” என்றபடி அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

“மிஷால்! இப்போ ருஹானாவோட வங்கியில் இருந்து உனக்கு ஐம்பது லட்சம் வந்து இருக்கும். வங்கிக்கு போய் அதை நீ பணமா எடுத்து வச்சிக்கோ. அதோட ரசீது எனக்கு வேணும்.”

“ருஹானா எதுக்கு எனக்கு பணம் அனுப்பினா?”

“அவ ஒன்னும் அனுப்பல. அவளுக்கு தெரியாம நான் தான் அனுப்பி இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் பணத்தோட ஓடிட்டீங்கன்னு ஆர்யன் நினைக்கணும்.”

“இவ்வளவு கீழான செயல்களுக்கு போகணுமா?” மிஷால் முகம் இருண்டுவிட்டது.

“பின்ன ஆர்யனை அத்தனை எளிதா ஏமாத்திட முடியும்னு நினைக்கிறியா? அவன் ஒன்னும் சின்ன பையன் இல்ல. இன்னும் இதைவிடவும் இறங்கி வேலை செய்யணும். இதான் திட்டத்தோட ஆரம்பம். நீ உள்ளே வந்துட்டே. இனி திரும்ப முடியாது” என்று கரீமா மிரட்டிக் கொண்டிருக்கும்போதே அவன் அலைபேசியை அடைத்துவிட்டான்.

பயமாக முகம் மாறிய சகோதரியிடம் “என்ன அக்கா?” என சல்மா கேட்க, “முட்டாள்! ஒன்னும் சொல்லாம போனை வச்சிட்டான்” என்ற கரீமா தலையில் கை வைத்துக்கொண்டாள். “அவன் ருஹானா மேல இரக்கப்பட்டான்னா நாம தொலைஞ்சோம், சல்மா. நம்ம திட்டமும் குப்பைக்கு தான் போகும்.”

இருவரும் பீதியடைந்து நின்றனர்.

——–

இதழ் ஒற்றலையும், கைப்பிடி ஒத்திகையையும் நினைத்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ருஹானா, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அது ஆர்யன் என கணித்து புத்தகங்களை அடுக்குவது போல பாவனை செய்தாள்.

உள்ளே வந்த ஆர்யன் “இதோ நூர்ஜஹான் கொடுத்த ஃபைல்” எனக் கொடுக்க, “உங்களுக்கு ஏன் சிரமம்? நானே வந்து வாங்கியிருப்பேனே! ஒத்திகையால நீங்க ஆபிஸ் வேற போக முடியல” என்று அவன் முகம்பாராமல் பேசினாள்.

அவளை காண சாக்கு வைத்து வந்த ஆர்யனுக்கு ருஹானாவுக்கு அப்படி ஏதும் தோணாமல் தான் வந்ததை குறையாக சொல்ல, லேசான வருத்தம் ஏற்பட்டது. “திருமணத்துக்கு இன்னும் சில நாட்கள் தானே இருக்கு. எதுவும் மாற்றம் இருந்தா உடனே சொல்லணுமே” என சமாளித்தான்.

“நீங்க சொல்றது சரி தான்” என்று ருஹானா அதை வாங்கிக்கொள்ள, “நாம செய்தது சரியா?” என ஆர்யன் கேட்க, ருஹானா விழித்தாள். “ஒத்திகை சரிவருமா? சமாளிச்சிட்டோமா?” என அவன் விளக்க, “எனக்கும் தெரியல. பதட்டத்துல நான் என்ன செஞ்சேன்னே எனக்கு நினைவில்ல” என எல்லாம் மறந்தது போல பேசினாள்.

“ஒத்திகையே இப்படி இருந்தா திருமணத்துக்கு என்ன செய்யப் போறேனோன்னு பயமா இருக்கு. நான் எதும் குழப்பிடாம இருக்கணும்.”

“அன்னைக்கு எதும் தடங்கல் வராது. கவலைப்படாதே!”

“அப்புறம்… திருமண ஏற்பாடுகள்ல எல்லாமே நானே தேர்ந்தெடுத்தேனே! உங்களுக்கு வாய்ப்பே கொடுக்கல. அது நியாயமில்லயே!”

இலேசாக சிரித்த ஆர்யன் “அப்படியெல்லாம் இல்ல. மணமகளோட தினம் தான் திருமண நாள். உன்னோட மகிழ்ச்சி தான் முக்கியம்” என சொல்ல ருஹானாவின் சந்தோசம் இரட்டிப்பானது. “இவானுக்காக இந்த வழியில் நாம வந்தாலும் எதுவும் தவறவிடக் கூடாது. எல்லாமே உன்னதமா இருக்கணும்… உண்மையான திருமணம் போல” என்று சொல்லி அவளை ஆழமாக பார்த்தான்.

——–

“நான் எல்லா பணமும் எடுத்துட்டேன். ரசீதும் வாங்கிட்டு வந்துட்டேன்” என மிஷாலிடமிருந்து தகவல் வர, கரீமா நிம்மதி பெருமூச்சு விட்டாள். சல்மா கை உயர்த்திக் கொண்டாடினாள்.

“வெரிகுட்! இப்போ அடுத்த கட்டமா நீ ருஹானாவை தனியா சந்திக்கணும். அது எப்படின்னு நீ யோசித்து வை, மிஷால். சந்திப்புல நீ என்ன செய்யணும்னு நான் உனக்கு நாளைக்கு போன் செய்து சொல்றேன்” என்று சொல்லி போனை வைத்த கரீமா, சல்மாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.

“சல்மா! மிஷால் இப்போ நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வந்துட்டான். இவன் ருஹானாவை தனியா சந்திக்கறதுக்கு முன்ன நான் அவளுக்கு ஒரு திட்டம் வச்சிருக்கேன், நாளைக்கு. பேராசைக்காரி என்ன செய்யறான்னு பார்க்கலாம்” என ஆழமாக கரீமா குழி தோண்டிக் கொண்டே போனாள்.

——

“மிஸ் ருஹானா! இசைக் கலைஞர்கள் திருமணத்தின் நிறைவு வரை இருக்கணுமா?” என நூர்ஜஹான், ருஹானாவிற்கு போன் செய்து கேட்க, “இது நான் மட்டும் முடிவு செய்ய முடியாதே! என் வருங்கால கணவரை கேட்டு சொல்லவா?” என ருஹானா கேட்டாள். அவள் உதிர்த்த வார்த்தையே அவளுக்கு தேனாக இனித்தது.

“ப்ளீஸ், சீக்கிரம் கேட்டு சொல்லுங்களேன்” என நூர்ஜஹான் சொல்ல, ருஹானா ஆர்யனை தேடிச் சென்றாள்.

——

நிலா முற்றத்தில் மகிழ்வாக அமர்ந்திருந்த ஆர்யனுக்கு காபி கொடுத்த ஜாஃபர் “திருமண நாள் நெருங்க நெருங்க திருமண வேலைகள் உங்களை ரொம்ப களைப்படைய வைக்குது இல்லையா, சார்? முக்கியமா ருஹானா மேம்?” என சிரிப்புடன் கேட்டான்.

“வெளியே இருந்து பார்க்க எப்படி தெரியுது, ஜாஃபர்? நாங்க சரியா செய்றோமா?” ஆர்யன் அவனிடம் சந்தேகம் கேட்டான்.

“ஆமா சார்! நல்லா தான் இருக்கு. கவலைப்படாதீங்க. ருஹானா மேம்க்கு பதற்றம் அதிகமாகுது. ஆனா ஒவ்வொரு நிலையா தாண்ட தாண்ட நீங்க இலகுவாகறிங்க” என ஜாஃபர் சொல்ல, ஆர்யன் ஏற்றுக்கொண்டு தலையாட்டினான். உண்மை தானே! திருமணம் நெருங்க நெருங்க ஆர்யன் சந்தோசமாக எல்லா நிகழ்வுகளும் ரசித்து ஈடுபாட்டோடு செய்கிறானே!

ருஹானா இவர்களை நெருங்கும் நேரம், “எல்லா ஏற்பாடுகளும் வெள்ளிக்கிழமையோட நிறைவாகிடும். கல்யாணத்துக்கு பிறகான வேலைகள் தான் ருஹானா மேம்க்கு அழுத்தம்  கொடுக்கக் கூடும். நீங்க என்ன நினைக்கறீங்க? இல்ல ரெண்டு பேருக்குமேவா?” என ஜாஃபர் கேட்க, ஆர்யன் அளிக்கப்போகும் பதிலைக் கேட்க ஆவலாக ருஹானா அங்கேயே நின்றாள்.

“நான் அப்படி நினைக்கல ஜாஃபர். ஏன்னா அந்த கதவை தாண்டி நாங்க நுழைந்ததுமே எல்லாமே முற்றிலும் மாறிடும்” என ஆர்யன் சொன்னதை கேட்ட ருஹானா, பயமாகவும் பதட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் அப்படியே திரும்பி போய்விட எண்ணி திரும்பினாள்.

அப்போது அவள் அலைபேசி அடிக்க, ஆர்யனும் ஜாஃபரும் அவளை திரும்பி பார்த்தனர். தாங்கள் பேசியதை அவள் கேட்டுவிட்டாள் என புரிந்து கொண்ட ஆர்யன் அவள் பக்கம் வர, ஜாஃபர் நகர்ந்துவிட்டான்.

புன்னகையுடன் ஆர்யன் “போனை எடுக்கலயா?” என கேட்டபின்பே, போனை இயக்கி காதில் வைத்த ருஹானா “ஹல்லோ! ஆமா, இன்னும் நான் அவர்கிட்டே கேட்கல. ஒஹ்! போட்டோ அனுப்பி இருக்கீங்களா? சரி, அதையும் நான் பார்க்கறேன்” என்று பேசி முடித்தாள்.

“நூர்ஜஹான் தீம் பற்றி இன்னும் சில போட்டோஸ் அனுப்பி இருக்காங்க. அப்புறம் இசை கலைஞர்கள் முழுநேரமும் இருக்கணுமான்னு கேட்டாங்க. அது கேட்கத்தான் உங்களை தேடி வந்தேன்” என்று அவள் சொல்ல, அவன் “உன் விருப்பப்படி செய்” என்று சொல்லிவிட்டு அவளது முகத்தை பார்த்துவிட்டு “வேற எதும் விஷயம் இருக்கா?” எனக் கேட்டான்.

“இல்லயே!” என மறுத்தவள் “எனக்கு வேலை இருக்கு” என வேகமாக உள்ளே நடக்க, ஆர்யன் சிரித்தபடி நின்றான்.

——–

ருஹானாவிற்கு நஸ்ரியா ஒரு அழகான புகைப்பட ஆல்பத்தை திருமண பரிசாக அளித்தாள்.

“திருமணத்துக்கு தான் கொடுக்கணும் ருஹானா! ஆனா எனக்கு ஆசையா இருக்கு, இதை நீ இப்பவே பார்க்கணும்னு. உண்மையில் ஆர்யன் ருஹானாவோட காதலுக்கு பெரிய ஃபேன் நான். உங்க ரெண்டு பேருக்கும் உங்க காதல் தொடக்கமே நான் கண்டுபிடிச்சிட்டேன். அதுல இருந்து இந்த புகைப்படங்களை நான் சேகரிக்கறேன்.”

“நன்றி, நஸ்ரியா! நீ மிகவும் அன்பானவ!”

“உனக்கு பிடிக்கும்னு நினைக்கறேன் ருஹானா!”

“உன் கையாலயே செஞ்சிருக்கே! எப்படி எனக்கு பிடிக்காம போகும்?”

“நன்றி!” என சொன்ன நஸ்ரியாவை ருஹானா அணைத்துக் கொண்டாள். சாரா கூப்பிடவும் நஸ்ரியா கீழே செல்ல, கதவைக் கூட மூடாமல் ருஹானா கட்டிலில் சென்று அமர்ந்துக்கொண்டு அந்த ஆல்பத்தை திறந்தாள்.

முகப்பில் வண்ணத்தில் வரையப்பட்ட இணைந்த கைகள் ஓவியத்தோடு துவங்கிய அந்த ஆல்பத்தில் ருஹானா ஆர்யன் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மிக அழகாக காதல் சின்னங்கள் சேர்க்கப்பட்டு காதல் கவிதைகளும் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்தன. இவானோடு இருவரும் இணைந்து நிற்கும் படங்களும் இருந்தன.

முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் ருஹானா ஆல்பத்தில் மூழ்கி இருக்க, ஆர்யன் எப்போதும்போல திறந்திருந்த கதவருகில் நின்று அவளை ரசித்துவிட்டு உள்ளே வந்தான். அவன் உள்ளே வரும் சத்தத்தில் எழுந்து நின்றவள் ஆல்பத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

Advertisement