Advertisement

“புறா அலங்காரம் எப்படி? உங்க தூய்மையான அழகை பிரதிபலிக்கறதா இருக்கும். நீங்க யெஸ் சொல்லும்போது நிறைய புறாக்கள் பறக்கற மாதிரி செய்யலாம்” என பரவசமாக நூர்ஜஹான் சொல்ல, மிரண்டு போன ருஹானா “எளிமையா இருந்தா நல்லா இருக்குமே!” என்றாள்.

“இதயம் போல அலங்கரிக்கலாமா? நீங்க ரெண்டு பேரும் ஒரு பெரிய இதய வடிவுக்குள்ள கை கோர்த்து நடந்து போறது போல. நீங்க என்ன சொல்றீங்க ஆர்யன் சார்?”

ருஹானாவின் முகத்தில் பிடித்தமின்மையை உணர்ந்த ஆர்யன் “என்னோட வருங்கால மனைவி தான் முடிவு செய்யணும். நான் இல்ல” என்றான்.

ருஹானா குழப்பமாக “எனக்கு தெரியலயே! ஏதாவது ஒன்னு இருக்கட்டுமே!” என்றாள்.

“ஏதாவது ஒன்னு இல்ல. நீ எப்படி ஆசைப்படறியோ அப்படி தான் நம்ம கல்யாணம் நடக்கப் போகுது. உனக்கு பிடிக்காத எதுக்கும் நீ சம்மதிக்க வேண்டாம்” என ஆர்யன் அழுத்தமாக சொல்ல, கரீமாவின் எரிச்சல் உச்சநிலையை கடந்தது.

“அருமை மிஸ்டர் ஆர்யன்! நீங்க ரொம்ப லக்கி ருஹானா மேம்!”

“ஆமா, எனக்கு தெரியும்” என ருஹானா சொல்ல, ஆர்யன் குனிந்த அவள் முகத்தை ஆசையாக பார்த்தான்.

சல்மா “அப்போ இவானோட பிறந்தநாள் மாதம் மட்டும் போடுறேன். இல்ல.. இதும் தப்பு. இன்னும் ஒரே வாய்ப்பு தான். என்னவா இருக்கும்?” என யோசித்துக்கொண்டே நடந்தாள்.

“ஓகே, நான் சொல்றது எதுவும் உங்களுக்கு பிடிக்கல. சரி, இப்போ நான் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்று சொன்ன நூர்ஜஹான் சற்று தயங்கி  “நீங்க ஒருத்தரை பற்றி ஒருத்தர் நினைக்கும்போது எப்படி நினைப்பீங்க? தனிப்பட்ட விஷயம் தான். உங்களுக்கு சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க. உங்க கண்கள் சந்திக்கும்போது உங்களுக்கு என்ன தோணும்?” என கேட்க, கரீமாவிற்கு சலிப்பாக வந்தது.

மறுபடியும் நான்கு விழிகளும் காதலாக சந்திக்க, இருவரும் புன்னகையுடன் “துருவ நட்சத்திரம்!” என ஒரே குரலில் கூற, நூர்ஜஹான் அசந்துவிட்டார்.

“ஆஹா! அழகு! அற்புதம்! அப்போ உங்க காதல் துருவநட்சத்திரமா உங்களை வழிநடத்துதா? இப்படி ஒரு கவிதைத்தனமா தீம் நான் எதிர்பார்க்கவே இல்ல. இதைப் போல நான் செய்ததும் இல்ல. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. துருவ நட்சத்திரம்! நான் எப்படி செய்றேன், பாருங்க” என நூர்ஜஹான் மகிழ, காதலர் இருவரும் அந்த துருவநட்சத்திரம் அருகே பறந்து கொண்டிருந்தனர்.

ருஹானாவின் புத்தகங்களை எல்லாம் உருட்டிய சல்மா, எங்கும் அவள் தேடியது கிடைக்காமல் ருஹானாவும் இவானும் இருக்கும் புகைப்படத்தை எடுத்தவள் அதை எரிச்சலாக தூக்கி போடப் போனாள். அதன் பின்னே ருஹானா “இவானை சந்தித்த தினம்” என எழுதி  வைத்திருந்த அந்தநாளை பார்த்தவள், உடனே அதை ருஹானாவின் அலைபேசியில் இட, “ஆஹா! இது வேலை செய்யுதே!” என குதித்தாள்.

“இப்போ மலர்களை முடிவு செய்வோம்!”

“ஆர்க்கிட் நல்லா இருக்குமே! ரிச்சா தெரியுமே!” என்ற கரீமாவை கண்டு கொள்ளாத நூர்ஜஹான் “ருஹானா மேம்! உங்களுக்கு பிடித்த பூ எது?” என கேட்க, பதில் ஆர்யனிடமிருந்து வந்தது. “டெய்சி!”

கரீமா திகைக்க, “உங்களுக்கு நினைவு இருக்கா?” என ருஹானாவும் ஆனந்த புன்னகையோடு கேட்க, ஆர்யன் அவளை பார்த்த பார்வையில் காதல் சொட்டியது.

“சிறப்பு! உங்க காதலியோட எல்லா விருப்பங்களும் மனப்பாடமா வச்சிருக்கீங்களே!” என நூர்ஜஹான் பாராட்ட, ருஹானாவும் அம்ஜத்தும் பேசியதை தான் கேட்டதால் தெரிந்து கொண்ட தகவல் அது என்பதை சொல்ல முடியாத ஆர்யன் “அடுத்தது என்ன?” எனக் கேட்டான்.

“இசை! அது கூட கடைசியா பார்த்துக்கலாம். இப்போ மேசை அலங்காரம் பற்றி பார்க்கலாம்.”

“என்கிட்டே சில மாடல்ஸ் இருக்கு. நஸ்ரியா என் அலைபேசிக்கு அனுப்பினா. நான் போய் என் போனை எடுத்துட்டு வரேன்.”

ருஹானா பாய்ந்து பாய்ந்து ஓடப் பார்க்க, அவளை பிடித்து வைப்பதே கரீமாவிற்கு பெரும்பாடாகப் போனது.

“ருஹானா டியர்! நீ ஏன் சிரமப்படுறே? இதோ நஸ்ரியாவே வந்துட்டாளே! அவ போன்லயே பார்த்துடலாம்” என கரீமா, தேநீர் கொண்டுவந்த நஸ்ரியாவை காட்ட, அவளும் சந்தோசமாக தனது செல்பேசியை எடுத்து கொடுத்தாள்.

“இதுல நிறைய எனக்கு பிடிச்சிருக்கு. பிரமாண்டமா இல்லாம எளிமையா அழகா இருக்கு, பாருங்க” என ருஹானா காட்ட, கரீமா சீக்கிரம் வேலையை முடிக்குமாறு தங்கைக்கு செய்தி அனுப்பினாள்.

“இதுல சார்ஜ் போய்டுச்சே! நான் போய் என் போனை எடுத்துட்டு வரேன்” என ருஹானா மறுபடியும் எழுந்து நடக்க, கரீமா ஒன்றும் செய்யமுடியாமல் விழித்தாள்.

“தேவையில்ல மிஸ் ருஹானா! எனக்கு உங்க விருப்பம் புரிஞ்சிடுச்சு. இதோ நான் காட்டுறேன் பாருங்க” என நூர்ஜஹான் தன் டேப்லெட்டில் காட்ட, ருஹானா திரும்பி வந்து அமர்ந்தாள். கரீமாவிற்கும் போன உயிர் திரும்பி வந்தது.

“ஏன் நிற்கறீங்க மிஸ்டர் ஆர்யன்? உட்காருங்க!” என நூர்ஜஹான் அழைக்க, போன் பேசிவிட்டு வந்த ஆர்யன் ருஹானாவின் அருகே ஒட்டி அமர்ந்தான். அந்த நெருக்கத்தில் ருஹானா நெளிய, ஆர்யன் இயல்பாக தள்ளி அமர்ந்தான். ருஹானா அவனை நன்றியோடு பார்க்க, ‘எனக்கு உன்னை புரியும்’ என்பது போல அவன் கண்களை மூடித் திறந்தான்.

“இப்போ மேசை செட் செய்தாச்சி. விருந்தாளிகள் எல்லாம் இப்படி உட்கார்ந்து இருப்பாங்க. இசை ஒலிக்க ஆரம்பித்ததும் நீங்க படிக்கட்டில் இருந்து மெல்ல இறங்கி வந்து இங்க நின்னு உங்க முதல் டான்ஸை ஆடுவீங்க” என எழுந்து நின்று பாவத்துடன் நூர்ஜஹான் விளக்க, “டான்ஸ்லாம் வேண்டாம்!” என முதல் எதிர்ப்பு ஆர்யனிடமிருந்து வந்தது.

“நானும் அப்படித்தான் நினைக்கறேன்” என ருஹானாவும் சொல்ல, ஏமாற்றமான நூர்ஜஹான் “சரி, உங்க விருப்பம். அது நீங்களே முடிவு செய்துக்குங்க. இப்போ திருமணஹாலுக்கு  நீங்க நுழையறதை நாம ஒத்திகை பார்த்திடலாம்” என சொல்ல, கரீமா “அது அவசியமா? அவங்க நேரா உள்ள வரட்டுமே!” என மனது பொசுங்க கூறினாள்.

“அவசியம் தான்.. டான்ஸ் கூட இல்லயே! அதனால அவங்க கிராண்டா உள்ள வருவாங்க. அகாபா நகர திருமணவிழாக்கள்ல இவங்க நுழைவு தான் மிக சிறந்ததா இருக்கப் போகுது” என நூர்ஜஹான் சொல்ல, ருஹானா “சரிதான்” என ஆர்யனிடம் கிசுகிசுக்க, அவனும் சம்மதித்தான்.

“ஐயோ! சரியான நேரத்துல பேங்க் நெட்வொர்க் மக்கர் செய்யுதே!” என சல்மா அங்கே பரிதவித்துக் கொண்டிருந்தாள்.

“தயாரா நீங்க?” என்று நூர்ஜஹான் மேல் படிக்கட்டில் நின்ற இருவரையும் கேட்க, ஆர்யன் முன்னே ருஹானா பின்னே என இருவரும் நான்கு படிக்கட்டில் இறங்க “இல்ல, இப்படி இல்ல, ஒட்டி வாங்க! ஒரே நேரத்துல படியில காலை எடுத்து வைங்க!” என கீழே இருந்து நூர்ஜஹான் சொல்ல, இருவரும் திரும்பவும் மேலே ஏறினர்.

“ஆஹா! இவங்க பதட்டப்படுறது கூட அழகா இருக்கே!” என நூர்ஜஹான் பக்கத்தில் நின்ற கரீமாவிடம் சொல்ல, அவளுக்கு உடம்பெல்லாம் எரிய ஆரம்பித்தது.

சாரா, நஸ்ரியா, கரீமா, நூர்ஜஹான் என எல்லாரும் இவர்களையே கவனிக்க, இம்முறை சரியாக செய்துவிடவேண்டும் என பதட்டத்தில் ருஹானா, ஆர்யனின் முழங்கையை பற்ற, அவன் மேல்  தேன் மழை பொழிந்தது.

ஆனந்த திகைப்பில் அவள் பிடித்த இடத்தை பார்த்தபடி ஆர்யன் அசையாது நிற்க, ருஹானா கையை எடுக்கப் பார்க்க, தன் இடது கையால் அவள் கையை சேர்த்துப் பிடித்த ஆர்யன் ‘இருக்கட்டும்’ என கண்ணால் சொன்னான்.

“நீ ரெடியா?” என கேட்டவன் அவள் தலையசைக்கவும் மீண்டும் இறங்க, இப்போதும் நூர்ஜஹான் மறுத்து “இதும் திருப்தியா இல்லயே! கை கோர்த்து இறங்கி வந்தா அழகா இருக்குமே!” என்று சொல்ல, ஆர்யன் மறுத்து ஏதோ சொல்லப் போனான்.

ருஹானா “நாம செய்துடலாம்!” என அவனை தடுக்க, ஆர்யனும் அவள் சொல்லுக்கு இணங்க, மீண்டும் முதல் படியில் போய் நின்றவர்கள் கைகளை பற்றிக்கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி மெல்ல இறங்கி வந்தனர்.

இருவரின் காதல் பரிமாற்றத்தை பார்த்து நஸ்ரியா உருகி நிற்க, சாரா ஆனந்த கண்ணீர் உகுத்தார். வரவேற்பறையின் நடுவே வந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, நெகிழ்ந்திருந்த நூர்ஜஹான் “இப்போ நீங்க மணமகளை முத்தமிடலாம்” என்று சொல்ல, கரீமாவின் முகத்தில் கடுகு வெடிக்க அவள் பற்களை கடித்தாள்.

ருஹானாவின் மற்ற கையையும் பற்றிய ஆர்யன் அவளை நெருங்க, ஆர்யனின் கையை உரிமையாக பிடித்துக்கொண்ட அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஆர்யனும் கண்களை மூடிக்கொண்டு அவள் நெற்றியில் மிக அழுத்தமாக முத்தமிட்டான்.

(தொடரும்)  

Advertisement