Advertisement

“நான் பொறாமையில் பேசினேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, அது தப்பு. ஒரு கல்யாணப் பொண்ணு எப்படி நடந்துக்குவாளோ அதைப் போல தான் நான் மத்தவங்க முன்னாடி நடந்துகிட்டேன். இல்லனா சந்தேகம் வரும் இல்லயா? அதனால நீங்க வேற எதும் நினைச்சிக்காதீங்க. எனக்கு கண்டிப்பா பொறாமை எல்லாம் இல்ல.”

“என்ன சித்தி? கண்ணாடியை பார்த்து நீங்களே பேசிக்கிறீங்க?” ருஹானாவின் அறைக்கதவை திறந்து கொண்டு நின்ற இவான் கேட்டான்.

“நான் ஒத்திகை பார்க்கறேன், அன்பே!”

“ஒத்திகைன்னா என்ன சித்தி?”

“முக்கியமான பேச்சுக்களுக்கு முன்னே நாம சரியா பேசுறோமான்னு நாமே பேசிப் பார்த்துக்கறது, மானே!”

“யார்ட்ட பேச போறீங்க நீங்க?”

“என்னை தப்பா புரிந்து கொண்டவங்க கிட்ட கண்ணே!”

“யாரு நஸ்ரியா அக்காவா? நீங்க கவலைப்படாதீங்க, சித்தி! அவங்க எப்பவுமே அப்படித்தான். நான் குடிக்க பால் கேட்டா ஜூஸ் கொடுப்பாங்க” என இவான் சிரித்தான்.

அவனை அணைத்து முத்தமிட்ட ருஹானா “சரி, நீ உன் அறைக்கு போய் விளையாடிட்டு இரு. நான் இப்போ வந்துடுறேன்” என சொல்லி, ஆர்யன் அறைக்கு சென்றாள்.

வேகமாக அவன் அருகே வந்தவள் “நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்!” என்றாள், பதட்டத்தின் மொத்த உருவமாக.

செய்ய வேண்டிய திருமண வேலைகளின் பட்டியலில் டிக் அடித்துக் கொண்டிருந்த ஆர்யன், பேனாவை கீழே வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான். “யெஸ்! சொல்லு!”

“நான்.. இங்க வந்தது.. உங்ககிட்ட..” வார்த்தைகளே வரவில்லை அவளுக்கு.

“நான் கேட்டுட்டு தான் இருக்கேன்!” சிரிப்பை அடக்கிக் கொண்டான், ‘பேசு, பேசு! என்ன பேசுகிறாய் என்று நானும் பார்க்கிறேன்’ என்பது போல.

“நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. சமீராவை பற்றி! உண்மையில நான்…” வெறும் காற்று தான் வந்தது.

“உண்மையில நீ பொறாமையால என்மேலே கோபமா இருக்கறது போல காட்டிக்கணும்னு நினைச்சே!” அவள் சொல்ல வந்ததை இவன் சொல்கிறானே! ஆச்சரியம் ருஹானாவிற்கு. தலையை வேகவேகமாக ஆட்டினாள்.

“ஒரு கல்யாணப் பொண்ணு நார்மலா எப்படி நடந்துக்குவாளோ அதைப் போல மத்தவங்க முன்னாடி நடந்துகிட்டே! இல்லனா அவங்களுக்கு சந்தேகம் வந்துடும். சரியா?”

“சரி தான்!” என்று இறங்கிய குரலில் சொன்ன ருஹானா ‘என்ன இது? அவள் பேசிப் பார்த்த எல்லா வாக்கியங்களும் அப்படியே அவன் வாயிலிருந்து வருகிறதே!’ என அதிசயித்தாள்.

“அப்படினா நீ ரொம்ப நல்லா நடிச்சே! வெரிகுட்!” இவன் உண்மையில் தன்னை பாராட்டுகிறானா, இல்லை கிண்டல் செய்கிறானா என குழம்பி போனாள் ருஹானா.

“சரி, நான் போறேன்!” என ருஹானா திரும்பி நடக்க, “இரு!” என ஆர்யன் அவளை நிறுத்தினான். அவள் பயந்து கொண்டே திரும்ப, ஆர்யன் எழுந்து அவள் அருகே வந்தான்.

அழகாக சிவந்திருந்த அவள் முகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. “நாளைக்கு திருமண ஏற்பாட்டாளர் வராங்க, தயாரா இரு” என அவன் சொல்ல, “ஹுஹும்!” என தலையாட்டிய ருஹானா பாய்ந்து வெளியே சென்றுவிட்டாள்.

——

காலையில் இவானுக்கு உடை மாற்றிவிட்ட ருஹானா “அழகு செல்லம்!” என அவன் கன்னம் தடவி கொஞ்சினாள். “நீ என்மேலே கோபமா இருக்கியா ஆருயிரே? சில நாட்களா நான் உன்னோட விளையாடவே இல்லயே!”

“இல்லயே சித்தி! எனக்கு சந்தோசம் தான். நஸ்ரியா அக்கா சொன்னாங்க, நீங்க நிறைய கல்யாண வேலைகள் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. நான் உங்க கல்யாணத்துல போ வச்ச டை போடுவேன் சித்தப்பாவை போல” என ஆசையாக சொல்ல, அதை கேட்டுக்கொண்டே ஆர்யன் வந்தான்.

“உன் சித்தப்பா அதை போல போடுவாரா?” என ருஹானா சிரித்தாள், பின்னால் நின்ற ஆர்யனை கவனிக்காமல்.

“சித்தப்பா!” என மகிழ்ச்சியாக கூப்பிட்ட இவான் “நீங்களும் நானும் ஒரே மாதிரி கோட் போடலாமா?” என கேட்க, “கண்டிப்பா அக்னிசிறகே! இன்னைக்கே நாம சேர்ந்து டிரஸ் செலக்ட் செய்யலாம்” என ஆர்யன் சொல்ல, இவானுக்கு உற்சாகம் பிடிபடவில்லை.

கைகளை உயர்த்தி “ஹேய்!” என கூவினான். அவன் கன்னம் வருடிய ஆர்யன் ருஹானாவிடம் “திருமண ஏற்பாட்டாளர் வந்துட்டாங்க. நாம போகலாமா?” என கேட்டான். ருஹானா தலையசைக்க, இவான் “சித்தி! நேத்து நைட் மாதிரி இன்னைக்கும் ஒத்திகை பார்ப்பீங்களா?” என பட்டென்று போட்டு உடைத்தான்.

ஆர்யன் கவனித்தானா என்று ருஹானா வேகமாக அவன் முகம் பார்க்க, அவன் இவளை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். “இல்ல, தேனே!” என இவானிடம் அவள் சமாளிக்க, இவான் இன்னும் விளக்கினான்.

“ஆனா, நீங்க சொன்னீங்க தானே சித்தி முக்கியமான பேச்சுக்கு முன்ன ஒத்திகை பார்க்கணும்னு?”

ஆர்யனின் புன்னகை முகமெங்கும் விரிய, மாட்டிக்கொண்ட திருடனைப் போல விழித்த ருஹானா “வா, கண்ணே! சாப்பிட போகலாம்” என இவானை கூட்டி சென்றாள்.

“ஒஹ்! என்கூட பேசறதுக்கு ஒத்திகை கூட பார்த்து இருக்கா!” ஆர்யன் மிகுந்த காதலில் மிதந்தான்.

———

“தோட்டம் பெருசா அழகா இருக்கே! அங்க கூட ஓபனிங் வச்சிக்கலாம்” திருமண ஏற்பாட்டாளர் நூர்ஜஹான் கரீமாவிடம் சொல்ல, அவளுக்கு பொறாமை தாங்காமல் “ஆனா காலநிலை எப்படி இருக்குமோ?” என தடை விதித்தாள்.

“நீங்க சொல்றது சரிதான். வரவேற்பு அறையே பெருசா உயரமா திருமண மண்டபம் போல இருக்கே. இதையே அட்டகாசமா அலங்கரிக்கலாம்.”

“ஆனா இது சின்னதா… குடும்ப விழா மட்டும் தானே? ஏன் ஆடம்பரமா… இதோ அவங்களே வந்துட்டாங்களே!” ஆர்யனை பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டாள்.

கரீமா அவர்களை அறிமுகப்படுத்த, நூர்ஜஹான் “பொண்ணும் மாப்பிள்ளையும் எவ்வளவு அழகா இருக்காங்க. ரொம்ப பொருத்தமாவும் இருக்காங்க” என பிரமிப்பாக கூற, கரீமா கடுப்பாக தள்ளி வந்து நின்று சல்மாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். ‘சீக்கிரம் வேலையை ஆரம்பி, சல்மா. நான் இங்க பார்த்துக்கறேன்.’

“எனக்கு இவங்களை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நல்லவேளை எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது. திருமணப் பெண் பளிச்னு இருக்காங்க. பவித்தரமான அழகு. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே. இந்த அழகுக்காகவே நான் அருமையான ஏற்பாடா செய்யணும்” என நூர்ஜஹான் புகழ்ந்து கொண்டிருக்க, வெறுப்பை மறைத்துக் கொண்ட கரீமா அவர்களை அமர சொன்னாள்.

சல்மா மெல்ல அடியெடுத்து ருஹானாவின் அறையில் நுழைந்தாள்.

“எப்படி உங்க முதல் சந்திப்பு இருந்தது? கண்டிப்பா மாயாஜாலம் நடந்துருக்குமே!” என இருவரோடு சோபாவில் அமர்ந்த நூர்ஜஹான் ஆர்வமாக கேட்க, பக்கத்தில் இருந்த ருஹானா ஆர்யனை திரும்பி பார்த்தாள்.

இவானை தேடி ருஹானாவின் வீட்டுக்கதவை பலவந்தமாக தள்ளி ஆர்யன் உக்கிரமாக உள்ளே நுழைந்ததும், அவனை பார்த்து ருஹானா பயந்து நடுங்கியதும், ஆர்யனின் அம்புப் பாதையில் ருஹானா வந்து நின்று மயங்கியதும் இருவரின் கண்முன்னே ஓடியது.

பயந்து விழித்த அந்த பச்சை கண்ணழகி தனக்குள் ஒரு தாக்கத்தை விதைக்கிறாள் என அன்றே உணர்ந்த ஆர்யன் அது எவ்வகையான தாக்கம் என இனம்காண இயலாமல் அன்று அதற்கும் சேர்த்து அவள் மீதே சினம் கொண்டான்.

உயிர் காத்த தருணங்களை எண்ணி ஒருவருக்குள் மற்றவர் மூழ்கி இருவரும் பதில் சொல்லாமல் இருக்க, எதிர் சோபாவிலிருந்த முந்திரிக்கொட்டை கரீமா “எல்லாமே வன்முறையில் தான் தொடங்கியது” என்று சொல்லிவிட, சீற்றம் கொண்டு திரும்பிய ஆர்யன் அவளை பஸ்பமாக்கி விடுவது போல கண்களை உருட்டி பார்த்தான்.

கரீமா பயந்து போய் நூர்ஜஹான் புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள். “சில சமயம் காதல்பூ கோபநெருப்புல தான் மலரும். வெறுப்பு தீ காதல் தீயா மாறுமே!” என நூர்ஜஹான் நெகிழ்ந்து போய் பேச,

ருஹானாவின் கைமேல் தன் கையை வைத்த ஆர்யன் அவளை ஆறுதலாக பார்த்து “நீங்க சொல்றது சரிதான். அதே போல தான் எங்களுக்கும் நடந்தது” என்றான்.

“நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கறதுலயே எனக்கு அது அப்பட்டமா தெரியுது!” என்று நூர்ஜஹான் கூற, இணைந்த கைகள் கண்டு கரீமாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது. ‘உங்களை பிரிக்காமல் நான் ஓய மாட்டேன்’ என சொல்லிக்கொண்டாள்.

சல்மா “எங்கே சூனியக்காரியோட டப்பா போன்?” என எல்லா இடங்களிலும் தேடியவள், கண்டுபிடிக்க முடியாமல் ருஹானாவின் எண்ணுக்கு தன் அலைபேசியில் இருந்து அழைத்தாள். போர்வைக்கு அடியில் சிக்கியிருந்த போன் ஒலிக்க அதை மகிழ்ச்சியாக எடுத்தவள் “இதோ! இவானோட பிறந்த வருடம் போட்டு பார்க்கறேன். இல்லயே, திறக்கலயே” என குழம்பி நின்றாள்.

Advertisement