Advertisement

ஆர்யன் கொண்ட கவலைகள் எல்லாம் நொடியில் நீங்கி அதற்கு அப்படியே எதிர்மறையாக அவனுள் உற்சாக பந்து உருண்டது. முகமும் புன்னகையை பூசிக் கொண்டது. புருவங்கள் சாய்ந்து அவளது ஊடலை ரசித்தது.

“நாம கல்யாணம் செய்துக்கப் போறோம் தானே? உண்மைக் கல்யாணம்னு எல்லாரையும் நம்ப வைக்கணும் தானே? அப்படியா நீங்க நடந்துக்கறீங்க? எப்பவும் நெருக்கமா உட்காந்து பேசுறது, கையைப் பிடிக்கறது.. அதுவும் உங்க பழைய தோழி கூட!” மடமடவென கொட்டிவிட்டு கைகளை கட்டிக்கொண்டு கோபம் கொண்ட சிறுபிள்ளையாய் முகத்தை தூக்கிக் கொண்டு விறைப்பாக நின்றாள்.

“என்ன! பழைய தோழியா? அவ என்னோட தோழியே கிடையாது. இறந்து போன என்னோட பார்ட்னரோட பொண்ணு அவ. அவளுக்கு உதவி செய்ய வேண்டியது என்னோட கடமை. அவ என்னை அண்ணனா நினைக்கிறா” என ஆர்யன் விளக்க, ருஹானாவின் கட்டிய கை மெல்ல கீழிறங்கியது.

தப்பாக புரிந்து கொண்டோமே என வருந்திய ருஹானா “வந்து.. நான்.. நான் நினைச்சேன்..” என முழித்தபடி பேச்சு வராமல் தடுமாற, ஒரு அடி முன்னே வந்து அவள் அருகே குனிந்த ஆர்யன் “இப்போ நீ பேசுறதை யாராவது பார்த்தா நீ பொறாமைப்படறேன்னு சொல்வாங்க” என சிரித்தபடி சொன்னான்.

கண்கள் அகல விரிய தலையை வேகமாக ஆட்டிய ருஹானா “இல்லவே இல்ல! நாம எல்லாரையும் நம்ப வைக்கணும் தானே? உங்களுக்கே தெரியும்ல!  மத்தவங்க தப்பா நினைப்பாங்க. நமக்கு நிச்சயமாகிடுச்சே.. அதனால தான்.. வேற எதுக்கும் இல்ல.. பொறாமையா? எனக்கா? அபத்தம்!” என மறுத்தவள், கடகடவென அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.

கதவை மூடி நின்றவள் “யா அல்லாஹ்! என்ன செய்திட்டேன் நான்? நான் பொறாமைப்படறேன்னு அவரை நினைக்க வச்சிட்டேனே! வெட்கம்!” என பலவாறு புலம்ப ஆரம்பித்தாள்.

அவள் முகத்தை மூடிக்கொண்டு கட்டிலில் அமர, ஆர்யன் ஆனந்தவசப்பட்டு அப்படியே நின்றான். “அவ பொறாமைப்படறா! அப்போ என்னை நேசிக்கிறாளா?”

அவள் அவன் மேல் வைத்திருக்கும் காதல் அனைவருக்கும் புரிந்திருக்க, அதை கடைசியாக கண்டுபிடித்தது அவன் தான் என அவனுக்கு தெரியவில்லை.

விழிகள் பேசும் காலங்கள் கடந்து

இதயங்கள் இடம்மாறும் பொழுதில்

அவளின் அதீத காதல்மொழி புரியாமல்

தடுமாறியவன் காரணம் கண்டுகொண்டபோது

அவளது பொறாமை காதலின் வெளிப்பாடேயென

சரியாக விளங்கிக்கொண்டான் காதல் மாணவன்!

                                        ——–

“ஹல்லோ மிஷால்! சொல்லு, எதுக்கு போன் செய்தே?”

“நான் ருஹானாவை இழக்க விரும்பல, கரீமா மேம்! நான் என்ன செய்யணும்? சொல்லுங்க!”

“இப்பவே சொல்லிட்டேன். இதால சில கெட்ட பேரும் உனக்கு கிடைக்கும்.”

“ருஹானா கிடைக்க நான் எதுவும் செய்வேன்.”

“குட்! நல்ல முடிவுக்கு தான் நீ வந்துருக்கே! நீ என்ன செய்யணும்னு நான் சீக்கிரமே சொல்றேன்.”

——-

சிலநாட்களாக ருஹானா சமீராவைப் பற்றி பேசியதை எல்லாம் ஒவ்வொன்றாக நினைத்து பார்த்த ஆர்யன், பேசிய எல்லா சமயமும் அவள் கோபத்துடனேயே பேசியதை இப்போது உணர்ந்து கொண்டான். ‘எப்படி இதை கவனிக்காமல் போனோம்?’ என சிரிப்புடன் யோசித்தவன் உள்ளார்ந்த உவகையோடு நின்று கொண்டிருந்தான்.

இத்தனை நாளாக அவனுக்கு வருத்தத்தையும் குழப்பத்தையும் தந்த அவளின் அதே செயல், இப்போது அவனை ஆனந்த கடலில் தள்ளிவிட்டது.

அப்போது கதவு தட்டும் ஓசை கேட்க, ருஹானாவுடன் பேசிய இடத்திலேயே தான் இன்னும் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து, ‘அவள் தான் வருகிறாள்’ என நினைத்து வேகமாக மேசை அருகே அவன் நகர்வதற்கு முன் கதவு திறந்து சமீரா உள்ளே வந்தாள்.

‘நீ விட்டுச் சென்ற இடத்திலேயே நிலைத்துவிட்டேன், உன் நினைவுகளிலிருந்து விடுபடமுடியாமல்’ என மனதில் நினைத்தவன் முகம் சுணங்க, சமீரா “என்ன ஆர்யன்? என்னை பார்த்ததும் டல்லாகறீங்க? உங்க காதலியை எதிர்பார்த்துட்டு இருந்தீங்களா?” என குறும்பாக கேட்டாள்.

“ஃபைல்லாம் எடுத்துட்டு வந்திட்டேன்னா நாம வேலையை ஆரம்பிக்கலாமா?” என ஆர்யன் அவளை முறைத்தவாறு கேட்க, “இதோ எல்லாம் இருக்கு. நீங்களும் ருஹானாவும் வேகமா வந்தீங்களே? எதும் சிக்கல் இல்லயே?” என கவலையாகக் கேட்டாள்.

“எல்லாம் சரிதான்” என பிரகாசத்துடன் ஆர்யன் சொல்ல, “அதானே, உங்க கண்ணு மின்னுதே! மாஷா அல்லாஹ்! இதைப் போல உங்களை நான் பார்த்ததே இல்லயே! உங்களை இப்படி மகிழ்ச்சியா பார்க்க எனக்கு எத்தனை சந்தோசமா இருக்கு!” என சமீரா கள்ளமில்லாமல் சிரித்தாள்

“நாம வேலையை பார்ப்போமா?” என ஆர்யன் பேச்சை மாற்றி சோபாவில் அமர, ஆவணங்களை எடுத்துக்கொண்டு சமீராவும் அவன் பக்கத்தில் அமர்ந்து அவற்றை பிரித்தாள்.

பயத்துடன் வாசலை எட்டிப்பார்த்த ஆர்யன், சமீராவை விட்டு பாதுகாப்பான தூரம் தள்ளி அமர்ந்து கொண்டான். ‘எனக்கு பிடித்தமானவளாக நீ இருப்பதால் உனக்கு பிடிக்காததையெல்லாம் நான் தவிர்க்கிறேன்!’

——–

“நான் பொறாமைலாம் படலையே! அது எப்படி நடக்கும்? வாய்ப்பே இல்ல” என ருஹானா ஆர்யன் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் அறையில் நடந்து கொண்டிருக்க, கதவு தட்டும் ஓசை கேட்கவும் ஆர்யன் தான் என நினைத்து “நான் பிசி!” என்றவள் கண்ணாடி முன்னே ஓடி சென்று முகத்தை சீர்படுத்தினாள்.

“ருஹானா! நான் நஸ்ரியா” என குரல் கொடுக்க, ருஹானா சென்று கதவை திறந்தாள். உள்ளே வந்த நஸ்ரியா, ருஹானாவிற்கு திருமணமேடை அலங்கார பொருட்களை தன் போனில் காட்ட, அதில் அவள் கவனம் செல்லவில்லை. ஆர்யன் சொன்ன பொறாமையில் தான் அவள் மனம் நின்றது.

அவள் முகத்தை கவனிக்காமல் எல்லாவற்றையும் காட்டி முடித்த நஸ்ரியா “உன் போனுக்கு எல்லா லிங்க்கும் அனுப்பறேன், ருஹானா! நீ பொறுமையா பாரு” என்று வெளியே செல்ல, அறை வாசலில் நின்று ஆர்யனின் அறையை பார்த்திருந்த ருஹானா கதவு திறக்கப்படும் ஓசை கேட்கவும் தன் அறைக்கு திரும்ப, ஆர்யன் அதற்குள் அவளை பார்த்துவிட்டான்.

“சமீரா ஊருக்கு கிளம்புறா!” என அவன் சத்தமாக சொல்ல “அப்படியா?” என சமீராவின் அருகே வந்த ருஹானா “நீங்க தீவிரமா வேலை செய்துட்டு இருந்தீங்க. நாம பழக வாய்ப்பே கிடைக்கல. சீக்கிரமே நாம அடிக்கடி சந்திப்போம்னு நான் ஆசைப்படறேன்” என மனதார சொன்னாள்.

“உங்களை மனைவியா அடைய ஆர்யன் கொடுத்து வச்சிருக்கணும். உங்க பேரை கேட்டாலே அவர் குஷியாகிடுறார், ருஹானா. அவர் மேல நீங்க வச்சிருக்கற காதல் உங்க கண்ணுல வெளிப்படையா தெரியுதே! எனக்கு ரொம்ப சந்தோசம். நீங்க ரெண்டு பேரும் மகிழ்ச்சியா இருக்கணும்” என சமீரா சொல்ல, ஆர்யன் ருஹானாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்து கொண்ட ருஹானா, அவனை பாராமல் சமீராவுடன் பேசிக்கொண்டே வாசலுக்கு நடந்தாள்.

“உங்க கல்யாணத்துக்கு என்னால இருக்க முடியாது, ருஹானா! நான் சுவிஸ்க்கு அவசரமா போகணும். ஆர்யன் எல்லா வேலையும் முடிச்சி கொடுத்துட்டார். அங்க கம்பெனி தொடங்கினதும் நான் கட்டாயம் திரும்பி வருவேன். அப்போ நிறைய பேசலாம், ருஹானா! எதிர்காலத்தில் நாம நல்ல நண்பர்களா இருப்போம்.”

“கட்டாயமா! உங்களுக்கு எப்பவும் நல்வரவு. உங்களை மீண்டும் சந்திக்க நானும் ஆவலா இருக்கேன்” என ருஹானா அவளை கட்டியணைத்து விடை கொடுத்தாள்.

வாசற்கதவை மூடிய ருஹானா பின்னால் நின்ற ஆர்யன் முகத்தை பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு அப்படியே நின்றாள். பின் குனிந்து கொண்டே திரும்பி நடக்க, ஆர்யன் “நிஜமா தானா?” என கேட்க, ருஹானா நிமிர்ந்து கேள்வியாய் அவனை பார்த்தாள்.

“சமீரா மறுபடியும் வரணும்னு நீ நினைக்கறியா?”

“ஆமா! ஏன் அப்படி நினைக்கக் கூடாது? இனிமையானவங்க! அழகானவங்க! அவங்க கூட பழக எனக்கும் பிடிக்குது” என்ற ருஹானாவை, ஆர்யன் ‘ஓ! அப்படியா? அவ மேல இருந்த கோபம்லாம் போயிடுச்சா?’ என்பது போல பார்க்க, “நான் இவானை போய் பார்க்கறேன்” என்று படிக்கட்டில் ஓடிவிட்டாள்.

———

“அக்கா! மிஷால் நம்ம பக்கம் வந்துட்டான். அடுத்து என்ன செய்யப் போறே நீ?”

“நான் இல்ல. நீ தான் நாளைக்கு காலைல செய்யப் போறே! இது அதிமுக்கியமான வேலை. அதிக கவனமா செய்யணும். இவான் கஸ்டடி சமயம் ருஹானா வங்கிக்கணக்கில ஆர்யன் பல லட்சங்கள் போட்டுருக்கான். அவ அதுல இருந்து ஒரு பைசா கூட எடுக்கல. இப்போ அந்த பணத்தை அப்படியே மிஷால் கணக்குக்கு நீ மாத்தப் போறே, ருஹானா போன்ல இருந்து.”

“நானா? எப்படி அக்கா? அந்த பாம்போட போன் பாஸ்வோர்ட் எனக்கு எப்படி தெரியும்?”

“அவளுக்கு இவானைத் தவிர வேற உலகம் இல்ல. அவன் சம்பந்தப்பட்டது தான் வச்சிருப்பா. நீ தான் கண்டுபிடிக்கணும். நான் அவளை ரூம்க்கு வரவிடாம பார்த்துக்கறேன்.”

——–

Advertisement