Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                 அத்தியாயம் – 111

ஆர்யனின் ஆடாத விழிகள் திருமண உடையில் இருந்த தேவதைப்பெண் ருஹானாவின் மேலேயே இருக்க, தௌலத்தும் பர்வீனும் சன்னமாக நகைத்தனர். எதுவும் ஆர்யனை அசைக்கவில்லை.

கையால் உடையின் திருத்தங்களை தைத்து முடித்த வாகிதா “முடிந்தது ருஹானா!” என்று சொல்ல, “நான் உடை மாத்திட்டு வரேன்” என்று சொன்ன ருஹானா, ஆர்யனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே கவுனை தூக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

ஆர்யன் அவளைப்போல செய்யாமல் தன்னை கடந்து செல்லும் அவளை நேரான பார்வையால் தொடர்ந்தான். அவள் உள்ளே மறைந்த பின்னரே சுற்றுப்புறம் நோக்கினான்.

“வாங்க மாப்பிள்ளை! உட்காருங்க! டீ குடிக்கலாம்” என பர்வீன் அழைக்க, தௌலத் அருகே சோபாவில் ஆர்யன் தயக்கமாக அமர, “நான் போய் டீ கொண்டு வரேன்” என வாகிதா சென்றாள்.

ஆர்யனை உற்றுப் பார்த்த தௌலத் “நான் உன்னை இதுவரை சரியா கவனிக்கலயே! மாஷா அல்லாஹ்! கம்பீரமா அழகா இருக்கியே? நல்ல உயரமா இருக்கே! எங்க ஊரை சேர்ந்தவனா நீ?” என கேட்க, இல்லையென தலையாட்டிய ஆர்யன், சங்கடமாக பர்வீனை பார்த்தான்.

ஆர்யனுக்கு தேநீர் கொடுத்த வாகிதா, பர்வீன் அருகே அமர்ந்தாள்.

“உன் வேலைலாம் எப்படி போகுது?” என தௌலத் கேட்க, “நல்லபடியா நடக்குது” என மெதுவாக சொன்னான், ஆர்யன். பெண்களுக்கு இடையே இருப்பது அவனுக்கு கூச்சமாக இருந்தது.

“நீ என்ன செய்றே மாப்பிள்ளை?” தௌலத் கேள்விக்கணைகளை தொடுத்தார்.

“வியாபாரம்!” அடக்கமாக சொல்லிக்கொண்டான்.

“என்ன வியாபாரம்?”

“முக்கியமா ஏற்றுமதி இறக்குமதி.. மின்சார, மின்னணு பொருட்கள், கப்பல் போக்குவரத்து, கட்டுமான தொழில்.. இப்படி.”

“மாஷா அல்லாஹ்! நீ நிறைய லாபம் சம்பாதிக்க அல்லாஹ் அருள் புரியட்டும். எத்தனை பேர் உன்கிட்டே வேலை செய்வாங்க?”

“ஏறக்குறைய ஐம்பது ஆயிரம் தொழிலாளர்கள் இருக்காங்க.”

“யா அல்லாஹ்! என்ன? ஒரு டவுனே உனக்கு கீழ வச்சிருக்கே!” என்ற தௌலத் ஆர்யனின் தோளை வேகமாக தட்ட, சங்கடமாக புன்னகை செய்த ஆர்யனின் நிலைமையை உணர்ந்து கொண்ட பர்வீன், பேச்சை நிறுத்துமாறு கண்ஜாடை செய்தும், தௌலத் அதை புரிந்து கொள்ளவில்லை.

“எவ்வளவு பெரிய தனவந்தன் நீ! இத்தனை பணிவா இருக்கே! மாஷா அல்லாஹ்! நல்ல மாப்பிள்ளை தான்!” என்ற தௌலத் பலமுறை அவனின் தோளில் குத்தினார்.

“அவரை விடுங்க தௌலத்!” பொறுக்கமுடியாமல் பர்வீன் இடையிட்டார்.

“நான் மாப்பிள்ளையை விசாரிச்சிட்டு இருக்கேன். நம்ம பொண்ணை கொடுக்கறோம், இல்லயா? இந்த சின்ன வயசுல பெரிசா நிர்வாகம் செய்றானே!”

“நான் கிளம்பிட்டேன்!” என ருஹானா வரவும், நிம்மதி பெருமூச்சுடன் ஆர்யன் வேகமாக எழுந்து கொள்ள, “உங்களுக்கு மிகுந்த சிரமம் கொடுத்துட்டேன்” என்று ருஹானா தௌலத்திடம் கூறினாள்.

“இதுல என்ன சிரமம்? நீ எப்பவும் இங்க வரலாம். வரும்போது மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வா! மாஷா அல்லாஹ்! அருமையான பையனா இருக்கான்” என்று தௌலத் சொல்ல, இருவரும் விடைபெற்று கிளம்பினர்.

பெட்டியை தூக்கிக்கொண்டு ஆர்யன் ருஹானாவை பார்த்துக்கொண்டே நடக்க, அவள் அங்குமிங்கும் திரும்பி அவன் பார்வையை தவிர்த்தாள்.

அவளது கன்னத்தில் ஒட்டியிருந்த ஜிகினாவை பார்த்த ஆர்யன் நின்று அவள் கன்னத்தை தொட்டு அதை எடுத்தான், “உன் டிரஸ்ல இருந்து விழுந்திருக்கு” என்றபடி.

அவள் அதிசயமாக அவனை பார்க்க, “ரொம்ப அழகு” என சொன்ன ஆர்யன், அவள் விழி விரித்து பார்க்கவும் “அது… திருமண கவுன் உனக்கு மிக பொருத்தமா இருந்தது. அதை வடிவமைத்தவங்க உனக்காகவே செஞ்சிருக்காங்க” என அவன் சொல்ல, அவள் ஆச்சரியம் மேலும் விரிவடைந்தது.

“ஏன் நீங்க சீக்கிரம் வந்தீங்க?” என அவள் கேட்க, “இல்ல, உண்மையில நான் லேட்டா வந்துட்டேன். இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம்” என ஆர்யன் வருத்தமாக சொன்னான்.

——-

“போன வேலை எப்படி முடிந்தது, சல்மா?”

“சான்றிதழ் வாங்கிட்டேன் அக்கா!” என நஸ்ரியா காபி கொடுத்து செல்லும்வரை இருவரும் பேசிக்கொள்ள, அவள் தலை மறைந்ததும் “சீக்கிரம் எனக்கு காட்டு. பார்க்க எனக்கு ஆவலா இருக்கு” என கரீமா பரபரப்பானாள்.

கற்றை கடிதங்களை சல்மா எடுத்து நீட்ட, “என் கண்ணையே என்னால நம்ப முடியல. தஸ்லீம், ருஹானா கையெழுத்தை அப்படியே எழுதி இருக்காங்களே!” என வியந்த கரீமா “நம்ம நேர்மையின் சிகரம் அன்பு அக்காக்கு என்ன எழுதி இருக்கா?” என்று ஒரு கடிதத்தை எடுத்து படித்தாள்.

“நீ விளையாட தெரியாம விளையாடிட்டே அக்கா! நீ செய்த தப்பை நான் செய்ய மாட்டேன். இவானை பயன்படுத்தி எளிதா நம்ம நோக்கத்தை நிறைவேற்றிடுவேன். உடம்பு சரியில்லாத உன்னை பார்த்துக்கற சாக்குல நான் மாளிகைக்குள்ள வந்துடுவேன். யார் யார் எப்படின்னு நீ சொன்னது எனக்கு உபயோகமா இருக்கும். எல்லாம் முடிந்ததும் மிஷால் கூட என் வாழ்க்கை ஆரம்பிக்கும். அர்ஸ்லானோட கணிசமான சொத்தும் நம்ம வசம் வந்துடும். நீயும் இவானும் எங்ககூட வந்துடலாம்” என்று வாசித்து முடித்த கரீமா,

“அடேங்கப்பா! ஒரு கடிதமே இப்படி அட்டகாசமா இருக்கே, மத்தது எல்லாம் அவளுக்கு குழியை பறிச்சிடுமா? நானே ருஹானா எழுதினதுன்னு நம்பிடுவேன் போல. கிரேட் ஒர்க் சல்மா!” என தங்கையை தட்டிக் கொடுத்தாள்.

———

அர்ஸ்லான் மாளிகைக்குள் ஆர்யனின் கருப்பு கார் நுழைய, அதிலிருந்து இறங்கிய ஆர்யன், ருஹானாவை நோக்கி வந்தான். அவளிடம் கை நீட்ட, அவள் தயங்க, அவன் கண்ணால் வற்புறுத்தவும் தன் கையை அவன் கையுடன் இணைத்தாள் மென்சிரிப்புடனேயே.

ருஹானாவின் கையை இறுக பற்றிய ஆர்யன், மெல்ல மாளிகையின் வாசலை நோக்கி நடந்தான். இதற்காகவே தள்ளியே காரை நிறுத்தினான் போலும். ருஹானாவும் இன்பமாகவே அவனை ஒட்டி நடந்தாள்.

கதவை திறந்த ஜாஃபரிடம் “கார்ல ஒரு பெட்டி இருக்கு. கொண்டு வந்துடுங்க” என்ற ஆர்யன், ருஹானாவின் கையை விடாமலேயே மாடிப்படி ஏற துவங்க,

“அப்பாடா! ஒருவழியா வந்திட்டீங்களா? ஆர்யன் டியர்! நான் மணிக்கணக்கா உங்களுக்காக காத்திருக்கேன். நமக்கு வேலை நிறைய இருக்கே!” என்றபடி சிரித்தமுகமாக சமீரா வர, ருஹானாவின் முகம் இறுகியது.

சமீராவிடம் தலையாட்டிய ஆர்யன் “வேலை தொடங்கறதுக்கு முன்னே எங்களோட ஒரு காபி குடிக்கறியா?” என்று ருஹானாவிடம் கேட்டான்.

“இல்ல, வேணாம்” என கோபமாக மறுத்த ருஹானா, ஆர்யனிடமிருந்து தன் கையையும் உருவிக் கொண்டாள். இருவரின் முகமும் சுருங்கியதை பார்த்தவள் “மேல எனக்கு வேலை இருக்கு” என சொல்லி படியேறினாள்.

‘என்ன இது? கண்டிப்பா ஏதோ தப்பு’ என மனதில் சொன்ன ஆர்யன், சமீராவிடம் ஒரு நிமிடம் என கைகாட்டிவிட்டு ருஹானாவின் பின்னால் வேகமாக படியேறினான்.

அவள் அறைப்பக்கம் செல்லப் போனவளை நிறுத்திய ஆர்யன், அவள் முழங்கையை பற்றி தன் அறைக்கு இழுத்து வந்தான். “என்ன செய்றீங்க நீங்க?”

“என்ன விஷயம்னு இப்போ நீ கண்டிப்பா சொல்லப் போறே. மாளிகைக்குள்ள வந்ததும் அப்படியே வேற ஆளா மாறிட்டே! என்ன நடக்குது?”

“ஒன்னும் இல்லயே! எனக்கு வேலை இருக்குன்னு சொன்னேனே!”

“உன் வேலையை பத்தி நான் கேட்கல. உன் முகமே மாறிப் போச்சி. எதுக்கு உனக்கு கோபம்? என்ன உன்னை பாதிக்குதுன்னு நீ இப்போ சொல்லித் தான் ஆகணும். பேசு!”

கோபப்படுத்தியவனே ஏன் கோபமாய் இருக்கிறாய் என்று கேட்கும்போது நீ தான் காரணம் என சொல்ல முடியாத ருஹானா தலையை குனிந்து கொண்டாள். அவள் உதட்டோரம் சுருங்கியது. நாடி அசைந்தது.

சில நாட்களாக நடக்கும் போராட்டத்துக்கு இன்று முடிவு காண விளைந்த ஆர்யன் “ஏன் இப்படி குழந்தைத்தனமா நடந்துக்கறே?” என கடுமையாகவே கேட்டான். அவன் கேள்வியில் பொங்கிவிட்ட ருஹானா “குழந்தைத்தனமாவா? யார் நானா?” என நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

“ஆமா, நீ தான்” என்றான் ஆர்யனும் விடாமல்.

கோப மூச்சை வேகமாக விட்டவள் “ஹம்! எது என்னை பாதிக்குதுன்னு உங்களுக்கு தெரியலயா? சமீரா…!” என்று சொல்ல, ஆர்யனின் மனஅழுத்தம் நீங்கி லேசானது.

“ம்ப்ச்.. கல்யாணம் முடிவானவர் மாதிரியா நீங்க நடந்துக்கறீங்க?” என அவள் முணுமுணுக்க, அவனுக்கு குழப்பம். “அப்படி என்ன செய்தேன் நான்?”

“என்ன செய்றீங்களா? இதோ இப்போ செய்த மாதிரி தான். எப்பவும் சமீரா கூட நெருக்கமா இருக்கீங்க. பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க? ஒத்துக்கறேன், நம்மோடது நிஜக்கல்யாணம் இல்ல தான். அதுக்காக?” என்று அவள் பொரிந்து தள்ளினாள்.

Advertisement