Advertisement

கடற்கரையோரம் கடல் காற்று இதமாக வீச, சீகல் பறவைகள் இனிமையான சத்தம் எழுப்பியபடி தாழ்வாக அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்க, தனிமையான அந்த இடம் காதலர் சந்திப்புக்கு ஏற்றதாய் இருந்தது.

திறந்த வெளியில் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்க, நடைவண்டி கடைக்காரர் இரண்டு சிமிட்களை காகிதத்தில் சுற்றி எடுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு நடுவே இருந்த மேசையில் வைத்தார்.

“ஏன் இங்க வந்திருக்கோம்? எனக்கு பசிக்கவும் இல்ல” என்று ருஹானா கேட்க, பெரிதாக புன்னகை செய்த ஆர்யன் “நீ சாப்பிடலனா உனக்கு என்ன ஆகும்னு நம்ம ரெண்டுபேருக்குமே தெரியும்” என்றபோதும் அவனுக்கு பதில் சொல்லாமல் ருஹானா இறுக்கமாகவே இருந்தாள்.

 பூஜ்யத்தின் வடிவில் இருந்த அந்த சிமிட்களை கையில் எடுத்த ஆர்யன் அதை அக்கம் பக்கம் சேர்த்து வைத்து “இது பாரேன். இது நம்ம திருமணமடலைப் போல இருக்கு தானே?” என்று சொல்லி ஒரு ஓட்டையின் வழியே ருஹானாவை பார்த்து சிரித்தான்.

சிரிப்பை அடக்கி கொண்ட ருஹானா கடல்புறம் பார்வையை திருப்பினாள். அவளுக்கு நேற்று மாலை சமீராவுடன் ஆர்யன் நெருக்கமாக நின்றது நினைவு வர முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். “எட்டுன்னு கூட வச்சிக்கலாம். அது பார்க்கறவங்க கண்ணோட்டத்துல இருக்கு” என்று சொன்னபடி, அவனிடமிருந்து ஒரு சிமிட்டை எடுத்துக் கொண்டாள்.

பாவமாக தலையாட்டிய ஆர்யன் “சரி, அப்படியே இருக்கட்டும். எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சிக்கணும்னு ரஜினியானந்தா சொல்லி இருக்கார். உனக்கு தெரியுமா அது?” என கேட்க, அவள் குனிந்து கொண்டு சிரித்துவிட்டாள்.

அவனுக்கு வராத சிரிப்பை அவளுக்கு வரவழைக்க முயற்சி செய்தவன் அதில் வெற்றியும் கண்டுவிட்டான். புது கப்பலை வாங்கும்போது ஏற்படும் சந்தோசத்தை விட பல நூறு மடங்கு ஆனந்தம் அடைந்தான் ஆர்யன்.

“நான் உன்னை சிரிக்க வைக்கனும்னு நினச்சேன். இப்போலாம் நீ சிரிக்கவே மாட்டற” என ஆர்யன் வருத்தமாக சொல்ல, அவளின் முகத்தில் புன்னகை வாடவில்லை.

இருவரும் இயற்கை எழிலை ரசித்தப்படி சிமிட்டை சாப்பிட, இருவருக்கும் கடைக்காரர் தேநீர் கொண்டுவந்து வைத்தார்.

“அப்புறம், ஒருமுறை ரஷீத் மோட்டார் சைக்கிளுக்கு டிரைவிங் லைசென்ஸ் வாங்க, எட்டு போட்டு பழகறேன்னு ஒத்தை கையால வண்டியை ஓட்டி விளையாட்டு காட்டினான் பாரு, அப்படியே கீழ விழுந்தான். கால்ல அடிப்பட்டு டாக்டர் அவனுக்கு எட்டு தையல் போட்டார்.”

கலகலவென ருஹானா சிரிக்க, அவன் மனமும் லேசாகி எட்டு வடிவத்தில் சுற்றி வந்தது.

அவளும் சிறுவயதில் முதுகில் எண்களை வரைந்து கண்டுபிடிக்கும் விளையாட்டை பற்றி பேச, எதிரே இருந்த தேநீர் ஆறிக்கொண்டிருந்தது.

சுகமான சூழலை அலைபேசி அடித்து கெடுக்க, “சமீரா!… சரி.. நீ மாளிகைக்கு எடுத்துட்டு வந்துடு“ என்று சொல்லி போனை வைத்த ஆர்யன் “வேற டீ சொல்லவா?” எனக் கேட்டான்.

“இல்ல, வேணாம். உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கும். எனக்கும் பர்வீன் அம்மா காத்திருப்பாங்க” என எழுந்து காருக்கு சென்றாள். இத்தனை நேரம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தவள், இப்போது முகம் திருப்பி செல்ல ஆர்யன் புரியாது விழித்தான்.

ஆர்யன் மேல் வைத்துள்ள காதலால் ஏற்பட்ட பொறாமையால் தான் கோபம் என அவளுக்கே புரியாதபோது, அவனுக்கு மட்டும் எப்படி புரியும்?

ஆர்யன் அவளை கமிஷனர் வாசிம் வீட்டில் இறக்கிவிட்டுட்டு, மீண்டும் கடற்கரைக்கே திரும்பி வந்தவன் ருஹானாவின் அழகு பிம்பங்களில் மூழ்கிவிட்டான். காரில் சாய்ந்து கொண்டு கடலை பார்த்தபடி இன்பக் கனவுகளில் திளைத்துவிட்டான்.

———

இணையத்தில் இருந்த ஆர்யன் ருஹானா திருமண செய்தியையும் புகைப்படத்தையும் பார்த்தபடி மிஷால் அமர்ந்திருக்க, கடைப்பையன் சதாம் “மிஷால் அண்ணா!” என்று அழைத்தபடி அருகே வர, மிஷால் தனது அலைபேசியை மேசையில் கவிழ்த்தான்.

“நேத்து வாகிதா அக்கா வேகமா போனாங்க, அவங்க கைப்பையை மறந்து வச்சிட்டு போய்ட்டாங்க. இன்னைக்கு அவங்க விடுமுறை எடுத்துருக்காங்களே!” என கைப்பையை தர, “சரி, நான் கொடுத்துக்கறேன்” என மிஷால் வாங்கி மேசைக்குள் வைத்தான்.

——–

தையல் தைத்துக்கொண்டே வாகிதா “எப்போ காதல் வரும்னே சொல்ல முடியாது தானே, ருஹானா! நீங்க ஆரம்பத்துல எவ்வளவு சண்டை போட்டீங்க. இப்போ திருமணம் செய்துக்க போறீங்க. அதிசயமா இருக்கு தானே? இதோ முடிச்சிட்டேன் போட்டு பாரு, ருஹானா!” எனக் கொடுத்தாள்.

ருஹானா உடையை அணித்து பார்க்க, அவளால் பின்பட்டனை போட முடியவில்லை. அவள் வாகிதாவை உதவிக்கு அழைக்க, உள்ளே வந்த வாகிதா அசந்து நின்றாள். “உன்னைப் போல அழகான மணப்பெண்ணை நான் பார்த்ததே இல்ல.”

அழகு கற்களால் மின்னிய அந்த வெண்ணிற உடை ருஹானாவின் உடலோடு ஒட்டி அவளை தேவதையாக்கி இருந்தது.

வாகிதா அவளை வெளியே அழைத்து வர, வாசிமின் அத்தை தௌலத் “மாஷா அல்லாஹ்!” என பிரமித்தார். பர்வீன் கண்களில் ஆனந்த கண்ணீர்.

“என் மகள் எத்தனை அழகு. அல்லாஹ்! தீய கண்கள்ல இருந்து இவளை நீங்க தான் காப்பாற்றணும். உன்னோட அம்மாவும் அப்பாவும் இதை பார்க்க கொடுத்து வைக்கலயே?”

“பர்வீன் அம்மா! இது நிஜ திருமணம் இல்ல” என ருஹானா அவர் காதில் இரகசியம் பேசினாள். அவரும் அவளைப் போலவே “உன் வாய் இந்த வார்த்தையை சொல்லி சொல்லி பழகிடுச்சி. ஆனா உன் கண்ணு வேற சொல்லுதே!” என்றார்.

“நீ அந்த பணக்கார பையனை தானே கல்யாணம் செய்துக்க போறே? இங்க வந்து வாசிம் கூட சண்டை போட்டானே, அவன் தானே? அவன் பேர் என்ன? ஏதோ அர்ஸ்லான்?” என தௌலத் கேட்க, ருஹானா பதில் சொல்லும்முன் அழைப்பு மணி சத்தம் திசை திருப்பியது.

வாகிதா யார் என பார்க்க போக, ருஹானா வரவேற்பறையிலிருந்து சமையலறைக்கு தண்ணீர் குடிக்க சென்றாள்.

“வாகிதா! உன் கைப்பையை உணவகத்துல வச்சிட்டு வந்துட்டே!” என மிஷால் வாகிதாவிடம் தந்தவன் ருஹானாவை பார்த்துவிட்டான். “நன்றி மிஷால் அண்ணா” என வாகிதா சொல்ல, அவளுக்கு பதில் சொல்லாமல் மிஷால் உறைந்து நின்றான்.

தனக்கு பின்னால் சமையலறையில் ருஹானா நிற்பது தெரியாத வாகிதா “அண்ணா! என்ன ஆச்சு உங்களுக்கு?” என சத்தமாக கேட்டாள்.

ருஹானா அவனைப் கவனிக்காமல் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் குறுக்கே சென்றாள். சுயநினைவுக்கு வந்த மிஷால் “ஒன்னும் இல்ல. நான் வரேன்” என்று கிளம்ப, வாகிதா குழப்பத்துடன் கதவடைத்து உள்ளே சென்றாள். உடையில் இன்னும் என்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என ருஹானாவிடம் கேட்டு சரி செய்யலானாள்.

சாலையில் நடந்து சென்ற மிஷாலில் கண்களில் ஈரம் கசிந்தது. விளக்கு கம்பத்தில் கையை ஓங்கி குத்தினான்.

——-

அழைப்பு மணி அடிக்க, வாகிதா கவுனில் வேலையாக இருக்க, பர்வீன் எழுந்து சென்று கதவை திறந்தார். ஆர்யனை பார்த்து உவகை கொண்டவர் அவனை கமிஷனர் வீட்டிற்குள் அழைத்தார்.

“நல்வரவு ஆர்யன்! ருஹானாவை கூட்டிட்டு போக வந்தீங்களா?”

“ஆமா, வேலை முடிஞ்சதுன்னா…” என ஆர்யன் தயங்கினான். “உங்களுக்கு எதுக்கு சிரமம்?”

“இதோ முடியப் போகுது. நீங்க உள்ள வாங்க. டீ குடிச்சிட்டு போகலாம்” என பர்வீன் மீண்டும் அழைக்க, அதை மறுக்க முடியாத ஆர்யன் உள்ளே வந்தான்.

“பாருங்க, யார் வந்திருக்காங்கன்னு?” என பர்வீன் உற்சாகமாக சொல்ல, அனைவரும் திரும்பி ஆர்யனைப் பார்க்க, அவன் சங்கோஜமாக வரவேற்பறைக்குள் நுழைந்தான்.

“உள்ளே வா மகனே!” என தௌலத் எழுந்து நின்று வரவேற்க, மரியாதையுடன் தலையசைத்த ஆர்யன், ருஹானாவின் புறம் திரும்பினான்.

ஆர்யனைப் பார்த்ததும் ருஹானாவின் மூச்சுக்கள் வேகமாக வர, தேவதையைப் போன்ற அவளின் அழகு அவனை ஆட்கொள்ள, அவன் சிலையென நின்றான்.

ருஹானாவிற்கு வெட்கமும் பதட்டமும் பிடுங்கித் தின்றாலும், ஆர்யன் தன்னை திருமண உடையில் பார்ப்பது, இப்படி இமைக்காமல் பார்ப்பது அவளுக்கு அளவிலா ஆனந்ததையே அளிக்க, புன்முறுவலுடன் பெருமிதமாக அவனை பார்த்தாள்.

ஆர்யன் அங்கிருக்கும் பெண்களை மறந்தான். அது வாசிம் வீடு என்பதை மறந்தான். தான் ஆர்யன் அர்ஸ்லான் என்பதையும் மறந்தான். அவள் அழகில் மெய்மறந்து சுவாசிக்கவும் மறந்தான்.

(தொடரும்)  

Advertisement