Advertisement

கோபமாக நிமிர்ந்து அவனை பார்த்த ருஹானா ”அவங்க உண்மையா திருமணம் செய்றாங்க. நாம அப்படி இல்லயே. நாம ஏற்கனவே நிறைய சேர்ந்து செஞ்சிட்டோம். இப்போ நீங்க கரீமா மேம்ட்ட கேளுங்க.. ஏன் சமீரா கூட இருப்பாங்களே. ஆமா, அவங்க நல்லா செலக்ட் செய்றாங்க. உங்களோட நல்லா ஒத்துப் போவாங்க. உங்க விருப்பங்கள் எல்லாம் அவங்களுக்கு அத்துப்படி. சமீரா கண்டிப்பா உங்களுக்கு உதவுவாங்க” என தொண்டையில் அடைத்ததை விழுங்கிக்கொண்டு கடுமையாக பேசினாள்.

கோபத்திலும் அவள் எழில் கவர்வதாக இருந்தது. குழப்பத்திலும் அவன் வசீகரம் குறையவில்லை.

ஆர்யன் முகம் சுருங்கி பாவமாக பார்த்தான். “இப்போ எனக்கு வேலை இருக்கு” என அவள் சொல்லவும், மௌனமாக வெளியே சென்றுவிட்டான்.

அவன் அப்படி அமைதியாக சென்றதும் அவள் கோபத்தை அதிகப்படுத்தியது. வேலை செய்வதை விட்டுவிட்டு வேகமாக கட்டிலில் போய் அமர்ந்தாள்.

———

“பெரியம்மா! சூப்பரா கல்யாண ட்ரெஸ் தச்சி வந்துடுச்சி. நான் போய் ருஹானாட்ட கொடுத்துட்டு வந்துட்டேன். ஆடைகளும், சீதனமுமே இப்படி இருந்தா இன்னும் கல்யாணம் எப்படி நடக்கும்?”

“சூப் கொதிக்குது. அதை பாரு, நஸ்ரியா! கனவுல அதை கோட்டை விட்டுடாதே!”

“என்னை சமையல் செய்ய சொல்லாதவனை தான் நான் காதலிச்சி கல்யாணம் செய்துக்குவேன். தினமும் வேற வேற அழகான ஹோட்டல்ல தான் நாங்க சாப்பிடுவோம். கீழயே எங்க கால் நிற்காது. அப்படியே காதல்ல மிதந்துகிட்டே இருப்போம்” என கண்களை மூடிக்கொண்டு கைகளை பறக்க விட்ட நஸ்ரியா சூப் பாத்திரத்தை கவிழ்த்துவிட்டாள்.

கொதிக்கும் சூப் சாராவின் கையில் கொட்டிவிட “ஆ!” என சாரா அலற, “ஐயோ பெரியம்மா! ஸாரி! ஸாரி! நான் கவனிக்கல” என நஸ்ரியா பதற, சத்தம் கேட்டு உள்ளே வந்த ஜாஃபர் “கையை தண்ணீல வைங்க! நான் மருந்து கொண்டு வரேன்” என்று சென்றான்.

“ரொம்ப வலிக்குதா, பெரியம்மா?” சாராவின் பக்கம் நின்று நஸ்ரியா ஊத, “இப்படித்தான் காதலும் காயத்தை ஏற்படுத்தும்” என்ற சாரா அவளை கூர்ந்து பார்த்தார்.

———

ருஹானா பெட்டியோடு சமையலறைக்கு வர, “என்ன ருஹானா? கவுன் சரியா இருக்கா?” என சாரா கேட்க, “இல்ல, சாரா அக்கா! கழுத்து அகலமா இருக்கு. எனக்கு அதை பிடிச்சி தைச்சி தாங்களேன்!” என்றாள் ருஹானா.

தன் கட்டுப்போட்ட கையை காட்டிய சாரா “அடடா! என் கையை பாரு, இதோ இவ பார்த்த வேலை” என்று சலிக்க,

“அச்சோ! மருந்து போட்டீங்களா? நீங்க ஓய்வெடுங்க. நான் பர்வீன் அம்மாட்ட கேட்கறேன்” என அவள் சொல்லும்போது ஆர்யனும் அங்கே வந்தான். “அந்த பேஷன் ஹவுஸ்க்கே திருப்பி அனுப்பேன். அவங்களே சரி செய்துடுவாங்க”

அவன் சொல்லும் எதையும் ஒத்துக்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. “இல்ல, இது சின்ன வேலை தான். பர்வீன் அம்மாவே சரி செய்துடுவாங்க” என ருஹானா சொல்ல, சாராவும் நஸ்ரியாவும் வெளியே நகர்ந்தனர்.

“டிரஸ் எப்படி இருக்கு? நீ ஆசைப்பட்டது போல இருக்கா?” என ஆர்யன் ஆசையாக கேட்க, “ம்ம்.. இந்த கவுன்ல என்னை பார்க்கற எல்லாரும் நான் நிஜமான மணப்பெண் தான்னு கண்டிப்பா நினைப்பாங்க” என்று சொல்லிவிட்டு அந்த பெரிய பெட்டியை தூக்கிக்கொண்டு மேலே சென்றுவிட்டாள்.

அவளின் கோபத்தின் காரணம் புரியாமல் அவன் நின்றான்.

அன்பனின் காதல் பரிமாணமே புதிது

அவனுள் காதல் மன்னனோ 

காதல் கள்வனோ குடிபுகவில்லை,

கோபக்காதலியின் பெருங்காதலின் 

பொறாமை மொழிகளும் பிடிபடவில்லை,

சமரசம் செய்யும்விதமும் தெரியவில்லை.

பாவம் காதல் பாலகன்!

———

“இப்போலாம் அந்த அளவு நுணுக்கமா தைக்க என் கண் ஒத்துழைக்காதே மகளே! அதும் இல்லாம வெள்ளத்தால தையல் இயந்திரம் பாழாகி கிடக்கு. நான் ஒன்னு செய்றேன். நம்ம வாகிதா நல்லா தைப்பா. நீ வாசிம் வீட்டுக்கு எடுத்துட்டு வாயேன். நான் வாகிதாக்கு இப்பவே போன் செய்து சொல்லிடுறேன்.”

“சரி, பர்வீன் அம்மா! நான் நாளைக்கு காலைல வரேன்.”

“ருஹானா! நீ வருத்தமா இருக்கியா? உன் குரல் சரியில்லயே?”

“அதெல்லாம் இல்ல, அம்மா. இன்னைக்கு அதிக வேலை, களைப்பாக இருக்கேன். நீங்க கவலைப்படாதீங்க. நாம நாளைக்கு பார்ப்போம்.”

——–

நிலா முற்றத்தில் நின்றுக் கொண்டு விளக்குகளால் ஒளிரும் அகாபா நகரத்தை பார்த்தபடியே ஆர்யன் கவலையாக நிற்க, அவனுக்கு காபி கொண்டுவந்த ஜாஃபர் “ருஹானா மேம் இன்னும் நார்மலுக்கு வரலயா?” எனக் கேட்டான்.

“ஏதோ அவ மனசை வாட்டுது. கோபமா இருக்கா. சொல்லவும் மாட்றா. பெண்களை புரிந்து கொள்றது கடினம் தான். நான் இது வரை அதைப்பற்றி அக்கறைப்படல. ஆனா இப்போ இவளை நினைச்சா… ம்ம்.. இது ஃபார்மாலிட்டி திருமணம்னாலும் இப்படி அவ இருக்கறது..” என ஆர்யன் அவள் மேல் வைத்திருக்கும் உண்மை நேசத்தை ஜாஃபருக்கு மறைத்து சொன்னான்.

ஆனால் ஆர்யனின் மனம் அறிந்த ஜாஃபர், “கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா பெண்களுக்குமே பதட்டம் இருக்கும். இது சம்பிராதய கல்யாணம்னாலும் அவங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு, இல்லயா? அதான் அவங்க மனதளவுல பாதிப்பு ஆகிருக்கும்” என எடுத்து சொன்னான்.

பயந்து போன ஆர்யன், ஜாஃபரின் பக்கம் வந்து மெல்ல “அப்போ அவளை டாக்டர்ட்ட கூட்டிட்டு போகவா?” எனக் கேட்டான்.

அவளின் நோய்க்கு அவனே நிவாரணம் தரும் வைத்தியன் என அவனுக்கு புரியவில்லை. அந்த அளவுக்கு அவன் அவளை நினைத்து வருத்தப்படுகிறான். அவளுடைய சிக்கல் என்ன என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே என தவிக்கிறான். இதைவிட உண்மைக் காதலுக்கு சான்று ஏதும் இருக்க முடியுமா?

சிரித்த ஜாஃபர் “அதெல்லாம் தேவை இல்லை. ருஹானா மேம்க்கு கொஞ்சம் அமைதியும் சிரிப்பும் போதும்” என்று சொல்ல,

“சிரிப்பா?” ஆர்யனுக்கு மிகுந்த வியப்பு.

“ஆமா! சிரிப்பு தான் எல்லாத்துக்கும் சிறந்த மருந்து.”

“புரியுது” என தலையாட்டிய ஆர்யன்  “சிரிப்பு!” என சொல்லிக்கொண்டான். தலையாட்டிய ஜாஃபர் சென்றதும் யோசித்தபடி காபியை எடுத்து அருந்தியவன் திரும்பவும் “சிரிப்பு!” என்றான்.

———

ஆர்யன் காலையில் வேகமாக கிளம்பி நவீனமான கருப்பு கோட்டை மாட்டிக்கொண்டு அழகுற வந்தவன் ருஹானாவை அவள் அறையில் தேடி, பின் கீழே வந்து தேடவும், அங்கே மேசையை துடைத்துக் கொண்டிருந்த நஸ்ரியா அவன் கேளாமலேயே “ருஹானா மேம் கிளம்பிட்டாங்க ஆர்யன் சார். பெரிய பெட்டியை எடுத்துட்டு எப்படி தான் நடந்து போவாங்களோ?” என்றாள்.

“ஏன் காரை எடுத்துட்டு போகல?”

“நான் சொன்னேன், சார். அவங்க கேட்கல” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆர்யன் வெளியே விரைந்துவிட்டான்.

“அப்பா! என்ன மின்னல் வேகம்? என்ன காதல் இது?” என நஸ்ரியா மலைத்து நின்றாள்.

காரை எடுத்து வேகமாக செலுத்தியவன் சாலையோரங்களில் கண்களை வைத்துக் கொண்டே செல்ல, தூரத்தில் ருஹானாவை பார்த்ததும் அவன் இதயம் சாந்தியானது. காரை அவள் முன்னே கொண்டு நிறுத்தியவன், கீழே இறங்கி அவள் பக்கம் வந்தான்.

“என்ன, என்கிட்டே சொல்லாம வந்துட்டே? காரும் எடுக்கல?”

“எனக்கு நடக்கணும் போல இருந்தது.”

“இப்படி சுமையை தூக்கிட்டா? இந்த குளிர்ல?” என கேட்டவன் “வா, நான் உன்னை விடறேன்” என அழைக்க, அவள் மறுத்தாள். அவளிடமிருந்து பெட்டியை பிடுங்கி கார் பின்னிருக்கையில் ஆர்யன் வைக்க, ருஹானா வேறுவழியின்றி முன்னால் ஏறி அமர்ந்தாள்.

———

Advertisement