Advertisement

“அப்பாடா! ஒருவழியா கிடைச்சது” என்று சல்மா சந்தோசமாக ருஹானாவின் நோட்டில் இருந்து ஒரு தாளை கிழித்து எடுத்தாள்.

“சல்மா ஆன்ட்டி! என் சித்தி நோட்டை நீங்க ஏன் எடுக்கறீங்க?” இவானின் குரல் பின்னால் கேட்க, சல்மா விழித்தாள்.

“இவான் டார்லிங்! சமையல் குறிப்பு பார்க்கறதுக்காக எடுத்தேன்.”

“ஆனா சித்தி சொல்லியிருக்காங்க, அடுத்தவங்க பொருளை அவங்க அனுமதி இல்லாம தொடக்கூடாது.”

“ஆமா, நான் உன் சித்திட்ட கேட்டுட்டு தான் எடுக்கறேன்.”

“என்னோட சித்தி மாதிரி உங்களால லெமன் குக்கிஸ் செய்ய முடியுமா?”

“கண்டிப்பா! அது கத்துக்க தான் எடுக்கறேன். இது ரகசியம். நீ யார்க்கும் சொல்லிடாதே. நான் சர்ப்ரைஸா செஞ்சி எல்லாருக்கும் காட்டப் போறேன்.”

“சரி ஆன்ட்டி! நான் சொல்ல மாட்டேன்.”

“குட்பாய்!” என சல்மா அவன் கன்னம் தட்டி சொல்ல, இவான் வெளியே சென்றான். எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைத்த சல்மாவும் வேகமாக வெளியேறினாள்.

கீழே இறங்கி வந்த சல்மா அக்காவிற்கு கண்ஜாடை செய்ய, கரீமா “நீ வேணா போய் ஓய்வெடு, ருஹானா டியர்! சோர்வாகிட்டே. நான் சமீரா கூட சேர்ந்து மத்தது செலக்ட் செய்றேன். அவளுக்கு ஆர்யனோட விருப்பங்கள் தெரியுமே!” என அவளை எரிச்சல்படுத்தினாள்.

“இல்ல, நானே பார்க்கறேன்! அவங்களுக்கு எதுக்கு சிரமம் தரனும்?” என்றவள் ஒவ்வொன்றாக எடுத்து நிராகரித்தாள். “இது ஓபனா இருக்கு.”

“கழுத்து மூடி இருக்கறது போல எப்படி நைட்கவுன் வரும்?” என கரீமா சிரித்தாள்.

“இது வேணாம். ரொம்ப மெல்லிசா இருக்கு.”

“பின்னே! நைட்கவுன் திக்காவா போடுவாங்க?”

ஆர்யன் மேலே நின்று ருஹானா படும் அவஸ்தைகளை பார்த்தான். ஏற்கனவே ஆர்யன் ருஹானாவிற்கு பரிசளித்த சீதனங்களில் வெதும்பி நின்ற சல்மா, ஆர்யன் ருஹானாவை சிரிப்புடன் பார்ப்பது கண்டு கடுகடுத்தாள்.

——–

“சமீரா டியர்! உன்னோட உதவியால வேகமாக வேலையை முடிச்சிட்டோம்” என கரீமா நன்றி சொல்ல, “எனக்கும் சந்தோசம் தான். ஆர்யன் திருமணத்தில நானும் இந்த சின்ன வேலையாவது செய்தேனே” என சமீரா சந்தோஷமாக கூறினாள்.

பேச்சுவாக்கில் சமீரா ஒரு குளிர்மலையில் பனிப்பொழிவில் அவளுடைய கார் மாட்டிக்கொண்டபோது ஆர்யன் காப்பாற்றியதை கள்ளமில்லாமல் பகிர்ந்து கொள்ள, ருஹானாவிற்கு வெறுப்பு ஏற்படும் வகையில் கரீமா அதை எடுத்துக்கூட்டி பேசினாள்.

“ருஹானா மேம்! ஆர்யன் சார் உங்களை கூப்பிடுறார்” என ஜாஃபர் வந்து அழைக்க, எள்ளும் கொள்ளும் வெடிக்க ருஹானா ஆர்யனின் அறைக்கு சென்றாள்.

அவளை பார்க்கும் ஆசையை அடக்க முடியாமல் படபடப்பாக நடந்து கொண்டிருந்த ஆர்யன், கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும் வேகமாக நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

உள்ளே வந்த ருஹானா அவன் முகத்தை பார்க்காமல் “என்ன?” எனக் கேட்டாள்.

“அங்க நீ தவிச்சிட்டு இருந்தது தெரிஞ்சது. உன்னை அங்கிருந்து காப்பாத்த தான் கூப்பிட்டேன்!”

“சரிதான்! நன்றி ரொம்பவும்! நீங்க தான் ஹீரோவாச்சே! ஆபத்துல இருக்கறவங்களை எல்லாம் காப்பாத்த போயிடுவீங்களே!”

“என்ன? எனக்கு புரியல?”

“ம்.. ஒன்னும் இல்ல. களைப்பால எதையோ பேசுறேன் நான்!”

“அழகா இருந்தது தானே?”

“எது?”

“எல்லாமே! அழகு சாதனப் பொருட்கள். இங்க இருந்தே சிலது பார்த்தேன்.”

“ஆமா! க்ரீம், பெர்ஃபியூம்..“ என அவள் சொல்லிக்கொண்டே போக “மத்ததும் நல்லா இருந்ததே!” என சொன்ன அந்த குறும்புக்காரன் அவளை ஆழ பார்த்தான்.

இரவு உடையை சொல்கிறான் என தாமதமாக புரிந்து கொண்ட ருஹானா பேச்சிழந்து நிற்க, ஆர்யன் அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.

மறுபேச்சில்லாமல் அதை வாங்கி குடித்தவள், “ஆமா, ஆமா! நானும் ஆர்வம் காட்டி தேர்ந்தெடுத்தேன். மத்தவங்களை நம்ப வைக்கணும் இல்லயா?” என்றாள்.

“ஆமா, சில நேரம் சிரமப்பட்டாலும் நீ சரியா செய்து முடிச்சிட்டே!” என ஆர்யன் பாராட்டும்போது கதவை தட்டி சமீரா உள்ளே வந்தாள்.

“ஆர்யன் டியர்! என்னோட சக்தி எல்லாம் போய்டுச்சி. ஆனா அழகழகான பொருட்கள்.. அருமையா இருந்தது” என்று சொன்னவள், “ருஹானா! நாம எடுத்ததுலாம் ஆர்யனுக்கு காட்டலாமா?” என ருஹானாவிடம் கேட்டாள்.

ஆர்யன் ருஹானாவை ஆர்வமாக பார்க்க, அதிர்ந்து போன ருஹானா “இவான் ரொம்ப நேரமா தனியா இருக்கான். நான் போகணும்” என ஓடியே விட்டாள்.

———

“ஏன் சோகமாக இருக்கே சல்மா? இந்த சீதனங்களைப் பற்றி யோசிக்கறீயா? அதெல்லாம் நடக்காத திருமணத்துக்கு கொடுக்கப்படாத  பொருட்கள்” என கரீமா சொல்லவும், சல்மாவின் முகம் விகசித்தது.

“சரி, விமானத்துக்கு நேரமாச்சே! நீ கிளம்பிட்டியா? மறக்காம எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டியா?”

“ஆமா அக்கா! எல்லாம் எடுத்துகிட்டேன். அக்கா தங்கை ரெண்டு பேர் எழுதினதும் எடுத்துக்கிட்டேன். லண்டன்ல கையெழுத்து பிரதி எடுக்கும் நிபுணரை பார்த்து போலி கடிதங்களை உருவாக்கிட்டு ஒரே நாள்ல வந்துடுறேன்.”

“சரி, உன்னோட பட்டப்படிப்பு சான்றிதழ் வாங்க போயிருக்கேன்னு இங்க நான் சொல்லிக்கறேன்.”

“நான் ஏற்கனவே அந்த எக்ஸ்பெர்ட் கிட்டே எல்லா விவரமும் பேசிட்டேன், அக்கா! அவன் தயாரா தான் இருப்பான். பணம் தான் எக்கச்சக்கமா கேட்கறான்.”

“அதுக்கெல்லாம் யோசிக்காதே. கேட்கறதை கொடுத்துடு. நமக்கு இங்க தங்கசுரங்கமே காத்திருக்கு.”

———

மாடித்தோட்டத்தில் காபி குடித்தபடி ஆர்யனும் சமீராவும் நின்றிருந்தனர்.

“ஹப்பா! காபி குடிச்சதும் தான் உயிர் வந்தது.”

“நீயும் சோர்வாகிட்டே!”

“ஆனா எனக்கு பிடிச்சது. யாரும் இல்லாத எனக்கு ஒரு குடும்பத்தோட இருக்கற உணர்வு கிடைச்சது. எனக்கு ருஹானாவை ரொம்ப பிடிக்குது. அவங்களுக்காக இந்த வேலையைக் கூட செய்ய மாட்டேனா? அழகா இருக்காங்க. கள்ளம் கபடம் இல்ல. எளிமையானவங்க. அவங்களோட உங்க வாழ்க்கை இணையப் போறது எனக்கு அதிக சந்தோசம்.”

ஆர்யனும் தலையாட்டி மகிழ்ச்சியை தெரிவிக்க, ருஹானா அவர்களை பார்த்தவள் தூரத்திலேயே நின்றுவிட்டாள்.

“அவங்களை மகிழ்ச்சியா வச்சிருங்க. உங்களை ரொம்ப நேசிக்கிறாங்க. உங்களுக்கு இன்பமான வாழ்க்கை அமையறது எனக்கும் மகிழ்ச்சியை தருது. நீங்க செய்த உதவிக்கு எப்பவும் என்னோட நன்றிக்கடன் இருக்கும். என்னோட அப்பா இருந்த இந்த அகாபா நகரம் எனக்கு எப்பவும் ஒரு தாய்வீடு. இப்போ சகோதரன் வீடு” என்று சொன்ன சமீரா, ஆர்யனின் இருகைகளையும் பற்றிக்கொண்டு கண்கலங்கினாள்.

ருஹானாவை தவிர மற்ற பெண்களிடம் ஒதுங்கி நிற்கும் ஆர்யன் சமீராவிடமிருந்து கைகளை விடுவித்துக் கொள்ளாமல் மென்மையாக தலையாட்ட, பார்த்துக் கொண்டிருந்த ருஹானாவின் மனம் வெகுவாக காயப்பட்டது.

——-

அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்த ருஹானாவின் சிந்தனை அவர்களின் நெருக்கத்திலேயே நின்றது. அவளை சுற்றி சீதனப் பொருட்கள் இருக்க, அவள் எண்ணங்கள் அவர்களையே சுற்றி வந்தது.

“கல்யாணம் செய்துக்கப் போறவர் செய்ற வேலையா இது?” என கோபத்தில் பொரிந்தவள் “ஆமா, ஆமா! இது என்ன நிஜ கல்யாணமா?” என சோகத்தில் கண்கலங்கினாள். “எல்லாம் இவானுக்காக. இவானுக்காக தான்” என மனப்பாடமாக சொல்லிக் கொண்டாள்.

——-

“சார், சமீரா மேம்க்கு கார் ஏற்பாடு செய்து அனுப்பிட்டேன். அப்புறம் நீங்க கூப்பிட்டீங்கன்னு ருஹானா மேம்ட்ட சொன்னேன். அவங்க பிசியா இருக்கேன்னு சொல்லிட்டாங்க” என ஜாஃபர் சொல்ல, ஆர்யன் மேசையில் இருந்த சில காகிதங்களை எடுத்துக் கொண்டு ருஹானாவை நாடி சென்றான்.

கதவை தட்டிவிட்டு அவன் உள்ளே நுழையவும், அமர்ந்திருந்த ருஹானா சடாரென எழுந்து பெட்டியை திறந்தாள்.

“நீ வேலையா இருக்கேன்னு சொன்னியாமே?”

“ஆமா, இதெல்லாம் எடுத்து வைக்க வேண்டி இருக்கு” என்று சொன்னவள் அவன் முகத்தை பார்க்காமல் பெட்டிகளை அங்கே இங்கே நகர்த்தினாள்.

“நாம திருமண ஏற்பாட்டாளரை முடிவு செய்யணுமே!” அப்போதும் ருஹானாவின் கோபம் புரியாமல் ஆர்யன் கேட்டான்.

“எனக்கு அதை பற்றி ஒன்னும் தெரியாது. அதுல நான் என்ன பார்க்க?”

“உனக்கு பார்க்க எதும் இல்லனா எனக்கும் இல்ல. இருந்தாலும் நாம திருமணத்தோட எல்லா வேலைகளையும் ஒன்னா செய்யணும். அக்கறை காட்டணும் மத்த திருமண ஜோடிகளை போல.” பெருங்குழப்பம் அவனுக்கு அவளது நடவடிக்கைகளில்.

Advertisement