Advertisement

அறையை விட்டு வெளியே வந்த ஆர்யன் ருஹானாவின் அறையில் விளக்கெரிவதை பார்த்து அங்கே செல்லப் போனவன், கடிகாரத்தை திருப்பி நேரத்தை பார்த்தான். ஏதாவது பயத்தால் விளக்கை போட்டுக் கொண்டே தூங்கியிருப்பாள் என அனுமானித்து படிக்கட்டின் அருகே வந்தான்.

படிக்கட்டில் ருஹானா வருவதை பார்த்ததும் உள்ளம் நொடியில் பூரிக்க, அவள் சலிப்பாக விரல்களை நொடித்தபடி வருவதைப் பார்த்து கவலை கொண்டான். “என்ன நடந்தது? நீ சரியா இல்லயே!”

அவனை அங்கே எதிர்பாராத ருஹானா சமாளித்துக்கொண்டு “ஒன்னுமில்லையே! நான் நல்லா தான் இருக்கேன்” என சுருங்கிய முகத்துடனே சொன்னாள்.

“நீ எதுவும் சொல்லலனாலும் எனக்கு தெரியும். ஏதோ இருக்கு!”

“இல்லயே! எனக்கு தூக்கம் வருது. சோர்வா இருக்கேன். அவ்வளவு தான்!”

“உனக்கு தூக்கம் வந்தா உன் உதடு ஓரம் இதோ இப்படி துடிக்காது. உனக்கு எரிச்சலா இருந்தாத்தான் இப்படி துடிக்கும். நான் சரியா சொல்றேனா?” எனக் கேட்டான். என்ன இப்படி துல்லியமாக தன்னை தெரிந்து வைத்திருக்கிறான் என வியப்பு அவளுக்கு.

“நீ இப்போ கோபமா இருக்கே! அதனால உன் நாடி இப்படி அசையுது. சரி தானே?” என அவன் மேலும் தன் கண்டுபிடிப்பை சொல்ல, தன்னை அறியாமல் அவள் நாடியை பிடித்துக்கொண்டாள்.

அவனுக்கு பதில் சொல்லாமல் ருஹானா திரும்பி நடக்க, அவள் முழங்கையை பற்றினான். “நீ என்னன்னு சொல்லாம நான் உன்னை போகவிடுவேன்னு நீ நினைக்கறியா?”

“யாராவது எதையாவது சொன்னாங்களா?”

வெடுக்கென்று கையை பிடுங்கிக் கொண்டவள் “எதுவும் இல்ல. கிச்சன்ல சமீரா கூட பேசிட்டு இருந்தேன். நாங்க ரொம்ப நீளமா, ஆழமா பேசினோம். இப்போ நான் தூங்கப் போகணும்” என விருட்டென்று அறைக்கு நடந்து விட்டாள்.

குழப்பமும் கவலையும் அதிகரிக்க, ஆர்யன் அவளின் மூடிய கதவையை பார்த்து “புரிதல்கள் ஆயிரம் இருந்தாலும், சறுக்கல்களும் சில வரவே செய்கின்றன, நமது அளவுகடந்த அன்பிற்கு சவாலாக’ என யோசித்து நின்றான்.

அந்தப் பக்கம் ஜாஃபர் வர அவனிடம் கேட்டான். “ஜாஃபர்! எனக்கு தெரிய வேண்டியது எதும் இருக்கா?”

“ருஹானா மேம் பற்றியா?” புத்திசாலியான ஜாஃபருக்கு முதலாளி பற்றி நன்கு புரிந்திருந்தது.

“ஆமா, அவளால என்கிட்டே சொல்ல முடியாத சிக்கல் ஏதாவது?”

“ருஹானா மேடமோட அம்மா பர்வீன் சில சீதனப் பொருட்கள் கொண்டு வந்ததா சாரா சொன்னாங்க. அப்போ ருஹானா மேம் கவலையா இருந்தாங்களாம்.”

சற்று யோசித்த ஆர்யன் “சரி, நான் சொல்றபடி செய்ங்க” என்று சொல்லி அவனுக்கு நிறைய உத்தரவுகள் தந்தான்.

———-

காலையில் “ருஹானா!” என ஓடிவந்த நஸ்ரியா, உள்ளே ஆர்யன் இருக்கிறானா என பார்த்துக்கொண்டாள். “எழுந்திட்டியா ருஹானா? கீழ வந்து பாரேன். நேத்து இரவு ஆர்யன் சார் ஆர்டர் செய்து அவ்வளவு பொருட்கள் வந்திருக்கு. அத்தனையும் உனக்கு! வாயேன்! எல்லாமே கண்ணைப் பறிக்குது” என பரபரத்தாள்.

மாடி வளைவில் இருந்து ருஹானா எட்டிப் பார்க்க வரவேற்பறை முழுதும் பொருட்களும் பெட்டிகளும் நிரம்பி வழிந்தது. சாரா, கரீமா, சமீரா பெட்டிகளை பிரித்து எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

நஸ்ரியாவின் பரபரப்பு ருஹானாவிற்கும் தொற்றிக் கொள்ள, நஸ்ரியா கீழே ஓடிப் போய்விட,  ருஹானா புன்னகையுடன் நகர ஆர்யனும் எதிரே வந்தான். “திரும்பவும் என்ன பதட்டமா இருக்கே?”

“ஆமா, இதெல்லாம் தேவையா? இப்போ எதுக்கு இத்தனை செலவு? இத்தனைக்கும் நம்ம கல்யாணம் பொய்யான…” ஆர்யன் அவள் கூந்தலை கோதி பின்னால் தள்ள, ருஹானாவின் பேச்சு தானாக நின்றது.

“உன் அழகுக்கு நிகரானது எதுவும் இல்ல. ஆனா இதெல்லாம் பாரம்பரியம்” என சொன்ன ஆர்யன் அவள் கண்களுக்குள் உற்று நோக்க, ‘என்ன சொல்றார் இவர்?’ என புரியாது மனதில் கேட்டுக்கொண்டாள்.

இருவரும் பிரமையில் ஆழ்ந்திருக்க, அதை எரிச்சலாக பார்த்த கரீமா “ருஹானா டியர்! இங்க என்ன செய்றே? வா கீழே!” என மேல்படிக்கட்டில் நின்று கூப்பிட,  ‘ஓ! இவங்களுக்காகத் தானா?’ என ருஹானா தவறாக புரிந்து கொண்டாள்.

அந்தோ பரிதாபம்! ஆர்யன் கரீமா வந்ததை கவனிக்கவே இல்லை. அவன் இதயம் சொன்னதை இம்முறை தடுக்காமல் அவன் இதழ்கள் உதிர்த்துவிட்டன. ஆனால் அதுவும் வீணாகத் தான் போயிற்று.

“எல்லாம் கல்யாணப் பொண்ணு உனக்காகத்தான் வந்திருக்கு!” என கரீமா ருஹானாவின் கையைப் பிடித்து இழுக்க, ஆர்யனும் ஆமென கண்களை மூடி திறந்தான். ருஹானா கீழே செல்ல, ஆர்யன் அவள் வருத்தத்தை போக்கிய மகிழ்வுடன் மாடிவளைவில் நின்று கீழே பார்த்தான்.

——-

நஸ்ரியா “பத்து பெரிய பெட்டிகள்ல வந்து இறங்குச்சி. ருஹானாவோட காலடியில அத்தனை சீதனப் பொருட்களையும் ஆர்யன் சார் கொண்டு வந்து குவிச்சிட்டார்” என பெருமை பேச, சமீரா சந்தோசமாக வேலை செய்ய, சல்மா நகப்பூச்சுகளை எடுத்து பார்த்தபடி பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருந்தாள்.

ருஹானா மிரண்டு போய் வர, கரீமா “பாரு ருஹானா! சிறந்த பிராண்டட் ஐட்டம் தான் எல்லாமே. புதுமணத்தம்பதிகளுக்கு தேவையான எல்லாமே இங்க இருக்கு. இங்க பார்!” என்று சொல்லி ருஹானாவை விட்டுவிட்டு, சல்மாவிடம் வந்தாள்.

பலவித செருப்புகளை தடவிப் பார்த்துக்கொண்டிருந்தவளை “சல்மா! நீ அவ ரூம்க்கு போய் அவளோட கையெழுத்து பிரதி எதையாவது தேடிக் கொண்டு வா. போ சீக்கிரம்!” என கரீமா தங்கையை தள்ளிவிட்டாள்.

“ருஹானா டியர்! நீ இன்னும் ஆரம்பிக்கலயா? இதெல்லாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை செய்ய வேண்டிய மரபு. வாழ்க்கையில ஒருமுறை தானே திருமணம் நடக்கும்? ஒரு முறை தான் சீதனங்களும் கிடைக்கும். சமீரா! நீ சொல்லேன், இவளுக்கு!”

“ஆமா ருஹானா! ஆர்யன் எப்போதும் போல எல்லாமே யோசித்து வாங்கி இருக்கார். நீ உனக்கு மட்டும் இல்ல, ஆர்யனுக்கும் சேர்த்து தேர்ந்தெடு” என சமீரா சொல்ல, ருஹானா முகம் சுருக்கினாள்.

“நீங்க இதெல்லாம் பாருங்களேன். நான் என் அறையில் அலமாரியை அடுக்கிட்டு இருந்தேன். அதை போய் பார்க்கறேன்” என ருஹானா நகர, கரீமாவிற்கு வேர்த்தது.

சல்மா ருஹானாவின் அறையில் எல்லாவற்றையும் உருட்டுகிறாள்.

“அது அப்புறம் பார்த்துக்கோ. இப்போ இதெல்லாம் எடுத்து வச்சிடலாம். முதல்ல மேக்கப் பொருட்கள் இருந்து ஆரம்பிக்கலாம்” என்று கரீமா ருஹானாவை திசை திருப்பினாள்.

“எனக்கு இதெல்லாம் அவசியமேயில்ல. எனக்கு தேவையானது நானே வச்சிருக்கேன்.”

“என்ன இப்படி சொல்றே? புது பொண்ணு நீ மணக்க வேணாமா? உன்னை கல்யாண பொண்ணா நாங்க தயார்படுத்தணுமே! அப்படிதானே சமீரா? உன்னோட தோல் பளபளக்கணும். தொட்டா வழுக்கிட்டு போக வேணாமா? நீ ஆர்யனை பற்றியும் யோசி. உன்னோட எளிமையை மட்டும் பார்க்காதே. அவனுக்கு எப்படி தேவை, அவன் எப்படி விரும்புவான், அதையும் யோசித்து எடு!”

“எனக்கு இந்த முகம் கழுவும் திரவம் மட்டும் போதும்!”

“என்ன சொல்றே நீ? வெட்கப்படாதே! எப்பவுமே நீ அழகுதான். ஆனா இன்னும் பளிச்னு இருக்கணும்ல? முக்கியமா அன்னைக்கு இரவு!”

தேடி வந்த எதுவும் கிடைக்காமல் சல்மாவிற்கு ஆத்திரம் அதிகரித்தது. “எதுவுமே இல்லயே! முட்டாளே! நீ எதுமே எழுத மாட்டியா?”

“இந்த சென்ட் பாரு. இது எல்லாரையும் கவர்ந்து இழுக்கும், முக்கியமா ஒருத்தரை” என கரீமா, ருஹானாவை எதையும் சரியாக பார்க்கவிடாமல் சங்கடத்தில் ஆழ்த்தினாள்.

“நான் இனிமையா மணம் பரப்புறது தான் உபயோகிப்பேன். இது அதிக காட்டமா இருக்கு. ஏற்கனவே என்கிட்டே புதுசா ஒன்னு இருக்கு. நான் வேணா என் ரூம்ல இருந்து உங்களுக்கு எடுத்து காட்டவா?” என ருஹானா கரீமாவுக்கு பீதியை ஏற்படுத்தினாள்.

அவளை கைப்பற்றி “இரவு உடைகள் பார்க்கலாம். உங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியானது கூட இருக்கே!” என கரீமா, ருஹானாவை பிடித்து வைத்துக் கொண்டாள்.

“பருத்தி நைட்டி போதும் எனக்கு!”

“அது அடுத்த நாள் போட்டுக்கோ. முதலிரவுக்கு இந்த சாட்டின் நைட்டி எடுத்துக்கோ!”

“இல்ல, இது போதும்!” என ருஹானா எடுத்து வைக்க, “நீங்க வேகமா செலக்ட் செய்றீங்க, ருஹானா?” என சமீரா ஆச்சரியப்பட “சீக்கிரம் வரவேற்பு அறையை ஒழுங்குப்படுத்தணும்” என ருஹானா அவசரப்பட, சல்மா இன்னும் வரவில்லையே என கரீமா தவித்தாள்.

Advertisement