Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                 அத்தியாயம் – 110

அர்ஸ்லான் சொத்துக்களில் அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என பிரகடனப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆர்யனை வலியுறுத்திய ருஹானா, அதுவே தனக்கு நிம்மதியையும் அமைதியையும் பெற்றுத்தரும் என சொல்லிவிடவே ஆர்யனுக்கு மறுத்து சொல்ல முடியவில்லை.

கண்கள் கலங்க பேனாவை நீட்டிக் கொண்டிருந்த அவளை பார்த்தவன் “சரி, நீ கேட்கறதால தான் நான் கையெழுத்து போடுறேன். இல்லனா எனக்கு பிடிக்காத இந்த காரியத்தை நான் செய்யவே மாட்டேன்” என்று பேனாவை வாங்கி கையெழுத்திட்டான்.

முகம் மலர்ந்த ருஹானா “அது எனக்கு தெரியும். இருந்தாலும் நன்றி. எனக்கு இது மதிப்பு வாய்ந்தது” என்று சொல்லி அவளும் அதில் கையெழுத்திட்டு, அதை மேசை மீது வைத்துவிட்டு வெளியே வர, சல்மா அவளுக்காக நின்றுக் கொண்டிருந்தாள்.

“என்ன, என்னைப்பற்றி ஆர்யன் கிட்டே புகார் கொடுத்திட்டியா?”

“நாங்க ரெண்டு பேரும் கையெழுத்து போட்டுட்டோம்.”

“அது எப்படி எனக்கு தெரியும்?”

“நீ அவர் கிட்டயே கேட்டுக்கோ!”

“என்னால நம்ப முடியலயே. நீ வேற ஏதாவது திட்டம் போட்டு இருப்பே. நான் உன்னை கண்காணிச்சிட்டே தான் இருப்பேன்” என சல்மா சொல்ல, ருஹானா தோள்களை குலுக்கி விட்டு அகன்றாள், மனபாரம் நீங்கியவளாக.

தங்கைக்கு காத்திருந்த கரீமா “என்ன, நான் சொன்னது நடந்ததா, அவளோட முட்டாள் சகோதரி போல தான் இவளும் இருப்பாளே?” என கேட்க, எல்லா பற்களையும் காட்டிய சல்மா “ஆமா அக்கா! சைன் போட்டு கொடுத்துட்டா. ஆர்யன் கிட்டேயும் வாங்கிட்டா” என சொல்ல, இருவரும் கைகளைத் தட்டிக் கொண்டனர்.

“ஓகே! அடுத்த வேலையை பார்ப்போம். நான் போய் மிஷாலை பார்த்துட்டு வரேன். அவன் ருஹானாக்கு நம்ம திட்டத்தை சொல்லாததே எனக்கு ஆச்சரியம் தான். அவனுக்குள்ள தயக்கம் இருக்கு. நம்ம வழிக்கு வருவானான்னு இழுத்து பார்ப்போம்” என கரீமா கிளம்பினாள்.

———-

“இங்க எதுக்கு வீணா அலையறீங்க? நான் தான் என்னால முடியாதுன்னு சொல்லிட்டேனே!” என மிஷால் முகத்தை திருப்பினான்.

“ஆனாலும் என்னை பத்தி நீ ருஹானாட்ட சொல்லலயே! எனக்கு தெரியும், உனக்கும் இந்த திட்டத்துல சேர உள்ளுக்குள்ள ஆசை இருக்குன்னு. அதனால தான் நீ என்னை காப்பாத்திட்டே. இதான் உனக்கு கடைசி வாய்ப்பு. இதையும் நீ தவற விட்டா ருஹானாவை நீ நிரந்தரமா இழக்க வேண்டியது தான்.”

“நான் எதையும் கேட்க விரும்பல. நீங்க வெளிய போங்க!”

“சரி, விடு. நீயே உன் கையால ருஹானாவை தூக்கி ஆர்யனுக்கு கொடுக்கறே. இதுக்கு மேல நான் என்ன செய்ய முடியும்?”

———

நஸ்ரியா கிண்டலாக பார்க்க, வெட்கத்துடன் ருஹானா தனக்கும் ஆர்யனுக்கும் காபி தயாரித்துக் கொண்டு மேலே எடுத்து சென்றாள்.

ஆர்யன் அறைக்கதவை திறந்தவள் அதிர்ந்து போய் நின்று விட்டாள். சமீராவும் ஆர்யனும் நெருக்கமாக அமர்ந்து ஒரு அறிக்கையை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னே காலியான காபி கோப்பைகளும் இருந்தன.

நிமிர்ந்து பார்த்த சமீரா “ஹாய் ருஹானா!” என சொல்ல, அவள் பெயர் கேட்டதும் மலர்ந்த முகத்துடன் நிமிர்ந்த ஆர்யன் “நீ எங்களுக்கு காபி கொண்டு வந்தியா?” என கேட்க, அதற்குள் “இதோ இருக்கு பாருங்க” என சமீரா அவன் கவனத்தை அறிக்கையில் திருப்பினாள்.

கோபமான ருஹானா “ஆமா, ஆனா ஏற்கனவே நீங்க குடிச்சிட்டீங்க போல” என உதட்டை இழுத்து பிடித்து வைத்து சொல்ல, சமீரா “ஆமா, நாங்க சீக்கிரமே எங்க வேலையை தொடங்கிட்டோம். நீண்ட தொடர் வேலை இது” என சொல்ல, ஆர்யனின் போன் அடிக்க அவன் எழுந்து சென்று மேசை மேல் இருந்த போனை எடுத்து அங்கேயே நின்று பேசினான்.

“நீங்க ரொம்ப பிசி, இல்லயா?” கதவருகே நின்றுக்கொண்டே ருஹானா வினவினாள்.

“ஆமா ருஹானா! நிறைய ரிப்போர்ட்ஸ். ஆர்யனோட உதவி இல்லன்னா என்னால எதுவுமே செஞ்சிருக்க முடியாது.”

“இன்னைக்கு முடிஞ்சிருமா, உங்க வேலைகள்?”

“இல்ல, இன்னைக்கு நான் இங்க தங்க வேண்டி வரும். அதிக வேலைகள் இருந்தாலும் எனக்கு சந்தோசமாத்தான் இருக்கு. பழைய நாட்களோட நினைவுகளும் வருது” என சமீரா சிரிப்புடன் சொல்ல, ருஹானாவின் உள்ளே கனன்றது.

“புரியது, உங்க நேரத்தை நான் எடுத்துக்க விரும்பல. நான் வரேன்” என சமீராவிடம் சொன்ன ருஹானா, ஆர்யனை பார்க்க அவன் இன்னும் போனில் பேசிக்கொண்டு தான் இருந்தான்.

தன் கையில் இருக்கும் காபியையும், அவனையும் பார்த்த ருஹானா மனம் முழுக்க புகைச்சலோடு அறைக்கு வெளியே வந்து நிற்க, நக்கல் சிரிப்புடன் சல்மா எதிரே வந்தாள்.

“என்ன, உன்னை காவலுக்கு வச்சிட்டு அவங்க தனியா இருக்காங்களா? அடப்பாவமே! உன் காபியும் வேணாம்னு சொல்லிட்டாங்களா? ஆர்யனுக்காக நீ போட்ட காபியை வீணாக்க வேண்டாம், நான் எடுத்துக்கறேன். உன் காபி சுவையா இருக்குமே! அதுல எல்லாம் நீ சிறப்பு தான்” என ஒரு மடக்கு குடித்த சல்மா, ருஹானாவின் கையிலிருந்த ட்ரேயிலேயே கோப்பையை வைத்துவிட்டு கண்ணடித்தாள்.

———

சல்மா சந்தோசமாக அலைபேசியை பார்த்துக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்த கரீமா கைப்பையை தூக்கிப் போட்டாள். “மிஷால் நான் நினைச்சதை விட கடினமா இருக்கான், சல்மா. எதுக்கும் மசியல.”

“இப்போ என்னக்கா செய்றது?”

“இருக்கட்டும். நம்ம பிளான்ல சில தடைகளும் வர தான் செய்யும். விட்டுப் பிடிப்போம். தானா வருவான். அதை விடு. இப்போ ருஹானா எழுதின சில வாக்கியங்கள் நமக்கு தேவை. அப்போ தான் போலிக் கடிதங்களை தவறில்லாம உருவாக்க முடியும். நாளைக்கு காலைல அதை எப்படி எடுக்கறதுன்னு யோசி, சல்மா. அது கிடைச்சதும் நீ லண்டன் போகணும். நாம சொல்றபடி எக்ஸ்பெர்ட்டை எழுதவச்சி வாங்கிட்டு வரணும்.”

——–

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த ருஹானா புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு சாய்ந்து அமர்ந்தாள். அதிலும் மனம் ஈடுபட மறுக்க, எழுந்து வெளியே வந்தாள். ஆர்யன் அறையில் விளக்கு எரிந்துக் கொண்டிருப்பதை பார்த்து “இன்னுமா வேலை செய்றாங்க?” என கழுத்தை நொடித்தாள்.

சமையறைக்கு வந்தவள் அங்கே சமீராவை பார்த்து ஆச்சரியப்பட்டு “உங்க வேலை முடியலயா?” என கேட்க, “அது இன்னும் இழுக்குது. நைட் முழிக்கறதுக்காக காபி போட வந்தேன். உங்களுக்கும் சேர்த்து செய்யவா?” என சமீரா புன்னகையுடன் கேட்டாள்.

“இல்ல, வேணாம். காபி குடிச்சா என்னோட தூக்கம் போய்டும்” என்று எரிச்சலாக சொன்ன ருஹானா பால் எடுத்துக்கொண்டு திரும்பி நடக்க, “ருஹானா! நில்லுங்களேன். உங்க கிட்ட பேச எனக்கு நேரமே கிடைக்கல. எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு. எப்படி நீங்களும் ஆர்யனும் காதல்வசப்பட்டீங்க?” என சமீரா கண்கள் பளபளக்க கேட்டாள்.

ருஹானாவிற்கு நிஜமான புன்னகை மலர்ந்தது. “நாங்க முதல்ல சண்டை தான் போட்டோம். அப்புறம் ஒருத்தரைப் பற்றி மத்தவங்களுக்கு புரிய ஆரம்பிச்சது.”

“அப்புறம் காதல்ல விழுந்திட்டிங்க. அதானே? ஆர்யனோட எந்த குணம் உங்களுக்கு அதிகம் பிடிச்சது? நான் சொல்றேன் முதல்ல. ஆர்யன் அமைதியானவர் ஆனா ஆழமானவர். அப்புறம் அவரை வாழ்க்கை பூரா நம்பலாம்” என சமீரா சொல்ல, ருஹானா மலர்ச்சியுடனே தலையாட்டினாள்.

“இவானுக்கு மிக முக்கியமானவர் அவர். அவனுக்கு இப்படி ஒரு சித்தப்பா அமைந்தது அவனோட அதிர்ஷ்டம் தான். பார்க்க கடினமானவரா இருந்தாலும் உள்ளுக்குள்ள அப்படியே வேற மனிதர். ஒருத்தரோட உள்ளுணர்வுகளை கூட அவரால பார்க்க முடியும். அப்படியே மனது, புத்தியை கூட எளிதா படிச்சிடுவார். அவர் சிலசமயம் புயல் காற்று. பலசமயம் நாம நிம்மதியா இளைப்பாற முடியுற மரத்தோட நிழல்.”

“வாவ்! ஆர்யனை பத்தி பேசும்போது உங்க முகத்துல மின்னல் வெட்டுது. இன்னும் அழகு ஜொலிக்கிது. நீங்க ஆர்யனை அதிகமா நேசிக்கிறீங்க. நீங்க மிக அதிர்ஷ்டசாலி” என சொல்லிக்கொண்டே வர, அதுவரை மலர்ந்த முகத்தோடு கேட்டுக் கொண்டிருந்த ருஹானா “ஆர்யன் எல்லாராலயும் விரும்பப்படக் கூடியவர்” என சமீரா சொல்லவும் நெற்றியை சுருக்கினாள்.

குழப்பமான சமீரா “நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?” என கேட்க, “இல்ல. எனக்கு தூக்கம் வருது. குட்நைட்” என்று ருஹானா சொல்லி திரும்ப, “குட்நைட். ஆனா எங்களுக்கு இன்னைக்கு தூக்கம் கிடையாது” என சமீரா சொன்னதைக் கேட்டு, ருஹானாவின் முகம் அஷ்டகோணலாய் மாறியது.

——–

Advertisement