Advertisement

“அழகா இருக்கீங்க அம்ஜத் டியர்!” என்ற கரீமா “இவானை நீங்க தானே பார்த்துக்கறீங்க?” என கேட்க, “ஆமா, நான் மேலே போறேன். நானும் இவானும் புதிர் படங்கள் சேர்த்துட்டு இருக்கோம்” என அம்ஜத் சொல்ல, ருஹானா நன்றி தெரிவித்தாள்.

——-

“உங்களை அவர் பார்க்கறதுல இருந்தே தெரியுது, அவர் உங்களை எவ்வளவு காதலிக்கிறார்ன்னு. நீங்க அதிக அதிர்ஷ்டசாலி. உங்க மேலே இருந்து அவரால கண்ணை எடுக்கவே முடியல” என நிபுணர் பாராட்டியபடி ருஹானாவின் அளவுகளை எடுக்க, “நாம பேசுறதை நிறுத்திட்டு வேலையை பார்ப்போமா?” என்றாள் கடுப்பாக கரீமா.

சந்தோசமான ருஹானா திரும்பி தன்னை ஆர்வமாக பார்க்கும் ஆர்யனைப் பார்க்க, அவன் பார்வையை மாற்றிக்கொள்ளவே இல்லை. அவளைத் தான் ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சாராவும் நஸ்ரியாவும் தேர்ந்தெடுத்த தங்களது ஆடைகளை கொண்டுவந்து காட்டி நன்றி கூறினர்.

ஆர்யன் செல்பேசி அடிக்க “சொல்லு, ரஷீத்! எங்க இருக்கே?” என கேட்டபடி எழுந்து சென்றான். 

“ஆடை வேலை முடிந்தது. தலை அலங்காரமும் முக அலங்காரமும் கூட பார்த்துடலாமா?” என ஒப்பனைக் கலைஞர் கேட்க, “இன்னைக்கேவா?” என ருஹானா மலைத்தாள். 

“ஆமா, எல்லாமே ஒரு ஒத்திகை பார்த்துட்டா நல்லது, ருஹானா டியர். அப்போ தான் திருமணத்தன்று பதற்றம் இருக்காது” என்று சொன்ன கரீமா ‘இன்னைக்கே எல்லாம் அனுபவித்துக் கொள். இதெல்லாம் போட உனக்கு என்ன திருமணமா நடக்கப் போகிறது?’ என மனதில் கிண்டல் செய்தாள்.

——–

கூந்தலைத் தூக்கி அழகான கொண்டையாய் முடிந்து, அதில் கற்களையும் பதித்த ஒப்பனைக் கலைஞர் ருஹானாவின் முகத்திலும் அவரது திறமையை காட்டினார். “எப்படி இருக்கு ருஹானா மேம்?” என அவர் கண்ணாடி முனனால் அமர்ந்திருந்த ருஹானாவை கேட்க, “ரொம்ப அழகா என்னை மாத்தி இருக்கீங்க. நீங்க மிகுந்த திறமைசாலி” என அவள் புகழ்ந்தாள்.

“உங்க அழகுக்கு நான் எது செய்தாலும் அற்புதமா இருக்கும்” என அவரும் உண்மையை சொல்ல, ருஹானாவின் கன்னம் சிவந்து அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது.  

எழுந்து வந்த ருஹானா “கரீமா மேம்! என் மேக்கப் அதிகமா இருக்கா?” என சந்தேகமாக கேட்க “ஆஹா! என்ன சொல்லிட்டே நீ? இல்ல, ருஹானா டியர்! சரியா இருக்கு” என்றாள் வயிற்றெரிச்சலை மறைத்துக் கொண்டு.

“நீங்க செயற்கையா தெரியக்கூடாதுன்னு சொன்னீங்க. அதான் நானும் லேசா மேக்கப் போட்டேன். தேவதையை போல இருக்கீங்க. எல்லாருக்கும் பிடிக்கும்” என்று ஒப்பனை செய்தவர் சொல்லும்போதே அங்கே ஆர்யன் வந்தான்.

நடந்து வந்து கொண்டிருந்தவன் ருஹானாவை பார்த்ததும் பல வினாடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான். ருஹானா அவனை வெட்கமாக பார்க்க, மந்திரத்தில் சிக்குண்டவனாக அவளை நோக்கி மெல்ல அடியெடுத்து வந்தான்.  

“இதோ! மாப்பிள்ளை! அவரே முடிவு எடுக்கட்டும். நீங்க சொல்லுங்க மிஸ்டர் ஆர்யன்!”

பந்தயக் குதிரையின் இதயம் போல ருஹானாவிற்கு அடித்துக்கொள்ள, அவள் அழகில் தொலைந்து போன ஆர்யன் ஹிப்னாடிசம் செய்யப்பட்டவனைப் போல “அழகு… ரொம்ப அழகா இருக்கா!” என்றான்

ஒத்திப்போட மனமின்றி

மிக அருகில் திருமணம்.

ஒத்துக்கொண்ட பெண்ணவளின்

ஒத்துழைப்புடன் மணப்பெண்ணின்

ஒத்திகை அலங்காரம் கண்டவனுக்கு

மயங்கி எழ முடியா மயக்கம்

பேரழகியின் ஒய்யார எழிலில்! 

பந்தயத்தில் வெற்றி பெற்றவளாய் ருஹானாவின் இதயம் பூரிக்க, கரீமாவின் முகத்தில் தோன்றிய துவேஷத்தை அவள் கணநேரத்தில் மறைத்துக்கொண்டாள். 

ஆர்யன் இன்னும் எத்தனை நேரம் ருஹானாவின் அழகை பருகியபடி சுயநினைவின்றி நின்றிருப்பானோ தெரியாது, ரஷீத் அவனிடம் வந்து அவனது மோனநிலையைக் கலைத்தான். “ஆர்யன்! ரெடி!”

“என்கூட வெளிய வர்றியா?” என ஆர்யன் ருஹானாவை கேட்க, எதற்கு என புரியாவிட்டாலும் ருஹானா அவனோடு நடந்தாள். கரீமாவும் குழப்பமாக அவர்களை ஒரு அடி விட்டு பின் தொடர்ந்தாள்.

வெளியே ஒரு புத்தம்புது வெள்ளைநிற ஆடம்பர கார் நிற்க, அதன் அருகே நின்ற வெள்ளையுடை அணிந்த ஓட்டுனர் ருஹானாவை பார்த்து வணங்கினான். ரஷீத்திடம் இருந்து வாங்கிய கார் சாவியை ஆர்யன் ருஹானாவிடம் நீட்டினான். “இந்தா இந்த சாவியை வாங்கிக்கோ!”

ருஹானா பிரமிப்புடன் பார்க்க, கரீமாவிற்கும் ருஹானாவிற்கு தனிக் கார் அதுவும் விலையுயர்ந்த கார் என்பது பேரதிர்ச்சியை தந்தாலும் ‘முட்டாளே! வாங்கு! வாங்கு!’ என மனதில் இரைந்தாள், தங்களது திட்டத்திற்கு அது உதவும் என்று.

“இது எனக்கா? எனக்கு வேணாம். இது தேவை இல்லாதது” என ருஹானா மறுக்க, “இல்ல, அதிக அவசியமானது. நீ காரில் போயிருந்தா நேற்று நடந்த அசம்பாவிதம் நடந்திருக்காது” என வற்புறுத்திய ஆர்யன் “இவர் கார் ஓட்டுறதுல அனுபவசாலி. இனிமேல் நீங்க எங்க போகணும்னாலும் இவரே கூட்டிட்டு போயிட்டு கொண்டு வந்து விடுவார்” என்று சிரித்த முகமாய் சொன்னவன் அவள் கையை இடக்கையால் ஏந்தி அவள் உள்ளங்கையில் சாவியை வைத்து தன் வலக்கையால் மூடி பிடித்துக் கொண்டான்.

மேலே சென்று ஜன்னல் வழியாக தங்கைக்கு கீழே நடப்பதை காட்டிய கரீமா “பார்த்தியா, நான் சொன்னது நடந்ததா?” என தற்பெருமை அடித்தாள்.

ஆச்சரியமாக கீழே பார்த்த சல்மா “ஆமா அக்கா! நாம அரண்மனைல வசிச்சோம்னா நீ தான் அக்கா அதுக்கு சுல்தான்.. வரலாற்றில் கரீமா சுல்தான் என்று நீ பயத்தோடு அழைக்கப்படுவாய்” என்று சகோதரியைப் புகழ்ந்து தள்ளினாள்.

“சரி, சல்மா! நம்ம திட்டம் சரியா போயிட்டு இருக்கு. அலங்கார நிபுணர் போனதும் நம்ம அடுத்த வேலையை நீ தான் ஆரம்பிக்கணும்.”

“அக்கா! அந்த பாம்பு ஆர்யன் கிட்டே சொல்லிட மாட்டாளே?”

“வீண் பெருமை பிடிச்சவ அவ. அதெல்லாம் சொல்ல மாட்டா!”

——–

அலங்காரத்தை நீக்கி முகத்தை கழுவிவிட்டு வந்த ருஹானா தன் அறையில் சல்மாவை பார்த்து திகைத்தாள்.

“ஒவ்வொரு படியா உன்னோட லட்சியத்தை நெருங்குற போல? இன்னைக்கு கார் வாங்கிட்டே! நாளைக்கு என்ன? எது மேல உன் கண் இருக்கு?”

“உனக்கு விளக்கி சொல்ல எனக்கு விருப்பம் இல்ல. ஆனாலும் இது நான் கேட்கல. அவர் தான் வற்புறுத்தினார்.”

“நீ இப்படி சொல்வேன்னு எனக்கு தெரியுமே! நீ சொல்றதை நான் எப்பவும் நம்ப மாட்டேனே! நீ செய்றதை தான் நம்புவேன். நான் உன்னை நம்பணும்னா இதுல கையெழுத்து போடு” என சல்மா கையிலிருந்த ஆவணத்தை நீட்டினாள்.

“என்ன இது?”

“திருமண ஒப்பந்தம்! இந்த சொத்து மேலே உனக்கு ஆசை இல்ல, இது எதுவுமே உனக்கு வேணாம்னு இதுல எழுதி இருக்கு” என்று சல்மா சொல்ல, ருஹானா அவளை யோசனையாகப் பார்த்தாள். 

“என்ன பார்க்கறே? நிஜமாவே ஆர்யன் சொத்து மேல நீ அக்கறைப்படலனா யோசிக்காம இதுல சைன் போடுவே. ஆனா நீ கையெழுத்து போடாம இருக்க ஒரு வழி இருக்கு. என்னை பத்தி ஆர்யன் கிட்டே புகார் செய், நான் தான் இதை கொடுத்தேன்னு” அலட்சியமாக சொன்ன சல்மா “ஆர்யன் கோபத்தை பத்தி எனக்கு கவலை இல்ல. இந்த குடும்பத்தோட நல்லதுக்காக அதையும் நான் தாங்கிக்குவேன். புரியுதா?” என மறைமுகமாக தற்காப்பு செய்து கொண்டாள்.

ருஹானா அதை வாங்கிக் கொள்ள, “இதுல நீ கையெழுத்து போடலனா நீ பணத்தாசை பிடிச்சவ இல்லன்னு யாரையும் நம்ப வைக்க முடியாது” என சல்மா அவள் சந்தேகப்பட்டு சொல்ல, ருஹானா அதை எடுத்துக்கொண்டு கோபத்துடன் ஆர்யன் அறைக்கு வேகமாக சென்றாள். 

சல்மா வெற்றி சிரிப்புடன் கரீமாவிடம் செல்ல, “வாங்கிட்டு போய்ட்டாளா?” என கரீமா ஆவலாக கேட்டாள்.

“ஆமா அக்கா! ஆனா இது படிச்சா ஆர்யன் இன்னும் அவளை உயர்வா நினைக்க மாட்டானா? அவளோட நோக்கம் சொத்து மேல இல்லன்னு இது நிருபிக்குமே?” திட்டம் என்ன என்பதே முழுதாக தெரியாத முட்டாள் சல்மா சகோதரி சொன்னதை கண்மூடி செய்துவிட்டு வந்து சந்தேகம் கேட்கிறாள்.

“இல்ல, அதுல கீழ ஒரு விதி இருக்கு, சின்னதா! இந்த ஒப்பந்தம் ஆறு மாசம் தான் செல்லுபடியாகும்னு.. அது சட்டுனு யார் கண்ணுக்கும் தெரியாது” 

“வெரிகுட் அக்கா! ஆனா அதை அவ படிச்சி பார்த்துட்டா என்ன செய்றது?”

“அதெல்லாம் மாட்டா! நீ அவளோட தன்மானத்துல அடிச்சிட்டே இல்லயா?”

“ஆனா ஆர்யன் படிச்சிட்டானா? வியாபாரத்துல அவன் எத்தனை ஒப்பந்தம் பார்க்கறான்?”

“அவனும் படிக்க மாட்டான். அவன் அவ மேல மயக்கத்துல இருக்கான். அவனுக்கும் கண்ணு தெரியாது.”

“அப்புறம், அக்கா?” 

“அடுத்த வாரம் நாம அவனுக்கு அதை தெளிவா காட்டுவோம்! அப்போ அவன் ருஹானாவை பத்தி தெளிவா தெரிஞ்சிக்குவான்.”

“வாவ்! சரி, அக்கா! ஆனா என்னை பத்தி ஆர்யன் கிட்ட அவ போட்டுக் கொடுத்துட்டா, நான் தொலைஞ்சேன்.”

“எனக்கு அவளை பத்தி தெரியும். அதெல்லாம் செய்ய மாட்டா. கீழ்நிலைல இருக்கற அவளைப் போல ஆளுங்க சத்தியம், நேர்மை, நாணயம்னு ஒன்னுக்கும் உதவாத சிலதை பிடிச்சிக்கிட்டு தொங்குவாங்க. இவளும் இவ அக்காவைப் போல தான். அதான் நமக்கும் வசதி.”

——–

ருஹானாவை பார்த்ததும் ஆவலாக “வா!” என எழுந்த ஆர்யன், அவள் முகத்தில் கொப்புளித்த கோபத்தில் “இப்போ என்ன?” எனக் கேட்டான்.

எதும் விளக்கம் சொல்லாமல் “இதுல கையெழுத்து போடுங்க!” என அவள் அவனிடம் நீட்ட, அதை மேலோட்டமாக படித்துப் பார்த்த ஆர்யன் “இது யார் கொடுத்தா?” எனக் கேட்டான்.

“அதெல்லாம் தேவையில்லாதது. நீங்க இதுல கையெழுத்து போடலனா…. நான் என் முடிவை மாத்திக்க வேண்டி வரும்” என்றாள் ஸ்திரமாக.

“இதை உன்கிட்டே இருந்து நான் எதிர்பார்க்கல. நான் உன்னை நம்பலனா உன்னை திருமணத்துக்கு கேட்டு இருக்க மாட்டேனே?” என ஆர்யனும் உறுதியாக சொல்ல, ருஹானாவின் வேகம் தணிந்தது. அவளின் புண்பட்ட இதயத்தை அவனது நம்பிக்கை இறகாய் தடவிக் கொடுத்தது.

மெல்ல “இது உங்களை பற்றி இல்ல. என்னை பற்றி. நான் சொத்துக்காக உங்களை திருமணம் செய்யலன்னு எல்லாருக்கும் நிருபிக்க..” என குரல் தழுதழுக்க சொன்னாள். 

“யார் உன்னை அப்படி நினைப்பாங்க? யாருக்கு அந்த தைரியம் இருக்கு?” ஆர்யனின் கோபத்தில் அவள் தலைகுனிந்து கொண்டாள். 

“இப்போ திடீர்னு என்ன அவசியம் இதுக்கு? ஏதோ நடந்திருக்கு. யாரோ கண்டிப்பா ஏதோ சொல்லியிருக்காங்க” என ஆர்யன் அவளிடம் விவரம் அறிய வினவ, “என்னோட மன அமைதிக்கும் நிம்மதிக்கும் தான் கேட்கறேன்” என அவள் கண்கலங்க, அவன் யோசித்தான். 

“சல்மா தானே? அவ தான் முன்னே கூட உன்னை இதே மாதிரி பேசினா! அவ சொன்னதுக்காக நீ இதை கேட்கறீயா?”

தலையாட்டி மறுத்த ருஹானா “நீங்க.. எனக்காக எவ்வளவோ செய்திருக்கீங்க. ஆனா இது மட்டும் தான் என்னால செய்ய முடியும். நீங்க கையெழுத்து போட்டீங்கன்னா நான் நிம்மதியா தூங்குவேன். மத்தவங்க என்னைப் பற்றி தப்பா நினைப்பாங்களோன்னு கவலைப்படாம இருப்பேன்” என்று சொல்ல, ஆர்யன் தயங்கினான்.

மேசையிலிருந்து பேனாவை எடுத்து நீட்டியவள், “ப்ளீஸ்! கையெழுத்து போடுங்க!” என்றாள்.

உலகமே பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க, பொருளின் மீது ஆசையின்றி இருக்கும் ருஹானாவை ஆர்யனுக்கு இன்னும் ஆழமாக பிடித்தது. அவன் ஆவணத்தையும், ருஹானாவையும் மாற்றி மாற்றி பார்த்தபடி நின்றான்.


(தொடரும்)

Advertisement