Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

   அத்தியாயம் – 109

தோட்டத்தில் நின்று கேட்டை பார்த்துக்கொண்டே சில நிமிடங்கள் நிலைகொள்ளாமல் நடந்த ஆர்யன், அதன்பின் காத்திருக்க பொறுமையின்றி ருஹானாவை தேட காரை எடுக்கப் போக, அவள் தளர்த்து போய் மாளிகை உள்ளே நுழைந்தாள். 

ஆர்யன் விரைந்து அவள் அருகே சென்றவன் பதட்டமாக கேட்டான். “எங்க போனே நீ? ஏன் என் போனை எடுக்கல?”

“எங்க… வீட்டுப்பக்கம் போயிருந்தேன். திரும்பி வந்துட்டு இருந்தேன். மாளிகைக்கு பக்கம் வந்துட்டேன்னு உங்க போனை எடுக்கல” என அவனை பார்க்காமல் அவள் சொன்னாள்.

அவளை தலை முதல் கால் வரை பார்த்தவன் “என்னாச்சு? ஏன் உனக்கு இப்படி வேர்க்குது? முகம் கூட வெளுத்து போய் இருக்கு?” என கேட்டான். “நாம நாளைக்கு பேசலாமா? எனக்கு சோர்வா இருக்கு!” என ருஹானா மாளிகையினுள் சென்றுவிட்டாள்.

“அக்கா! அவ சொல்லலனா என்ன ஆகும்?” மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சல்மா கேட்க, கரீமா “ஆர்யன் தெரிஞ்சிக்காம விட மாட்டான், பார்” என்றாள்.

ருஹானாவை பின் தொடர்ந்த ஆர்யன் படிக்கட்டை ஏறி முடித்த அவளை கைப்பிடித்து நிறுத்தி, “இல்ல, இப்பவே சொல்லு. ஏதோ நடந்திருக்கு. என்னவா இருந்தாலும் பரவால்ல. நான் உன்கூட இருக்கேன். சொல்லு!” எனக் கேட்டான்.

ருஹானா அப்போதும் மறுக்க, ஆர்யன் மேலும் அவளை வற்புறுத்த, அவள் அழுது கொண்டே நடந்ததை சொன்னாள். ஆர்யன் முகம் கோபத்தில் சிவந்தது. “அவன் உன்னை தொட்டானா? துன்புறுத்தினானா?”

“இல்ல, இல்ல.”

“நீ அந்த டாக்ஸி நம்பர் பார்த்தியா?”

“இல்ல, நான் ரொம்ப பயந்திட்டேன். அங்க இருட்டா இருந்தது.”

“அவன் எப்படி இருந்தான்? நீ எங்க இருந்து ஏறினே?” 

“திரும்பி வர்ற வழியில அந்த டாக்ஸி எனக்கு முன்ன வந்து நின்னுச்சி. நான் அவனை சரியா பார்க்கல.”

கதவை இலேசாக திறந்து வைத்து அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கரீமா “இது போதும் நமக்கு. இனி ஆர்யன் பார்த்துக்குவான்” என அவளுடன் நின்ற சல்மாவிடம் சொன்னாள்.

——-

ருஹானா அறையில் விடாது அழுதுகொண்டிருக்க, கதவை திறந்து எட்டிப்பார்த்த ஆர்யன் மிகுந்த துயரையடைந்தான். அவள் கண்ணீரை நிறுத்த வழி தெரியாது தவித்தான். அவளை அணைத்து ஆறுதல்படுத்த அவனது இதயம் துடித்தாலும் அவனுக்கு அவ்விதம் செய்ய தைரியம் வரவில்லை. கை முஷ்டிகளை மடக்கிக்கொண்டான். 

அவள் அருகில் வந்து அமர்ந்தவன் “பயப்படாதே! இங்க உனக்கு ஒரு ஆபத்தும் இல்ல. நீ வீட்டுக்கு வந்துட்டே” என அவளுக்கு தைரியமூட்டி பேசினான். அவள் அழுவதை நிறுத்திவிட்டு அவனை ஏறிட்டு பார்க்க, “இதுபோல இனி உனக்கு நடக்க நான் விடமாட்டேன். சரியா?” என அவன் கேட்க, அவள் தலையாட்டினாள். 

அவள் உடல் ஆடுவதை பார்த்தவன் “நீ பயத்துல நடுங்கற” என்று பக்கத்தில் இருந்த சால்வையை எடுத்து விரித்தான். அவள் கைநீட்டி கேட்க, “ஸ்ஸ்ஸ்!” என்றவன் தானே அவளை நெருங்கி அமர்ந்து அவள் தோள்களை சுற்றிப் போர்த்தினான்.

அவள் முடியை சரிசெய்து போர்வைக்கு வெளியே எடுத்துவிட, அந்நிலையிலும் அவளது வசீகரம் அவனை கொள்ளை கொண்டது. மனம் இளகியவன் வழியும் அவள் கண்ணீரை பார்த்ததும் இறுக்கமானான். அவளது நிலைக்கு காரணமானவன் மேல் ஆத்திரம் பொங்க, வேகமாக எழுந்தான். 

முன்பு உள்ள ஆர்யனாக இருந்திருந்தால் விஷயம் கேள்விப்பட்டதும் அவனை தேடிக் கண்டுபிடித்து துவம்சம் செய்யக் கிளம்பியிருப்பான். இவனோ ருஹானாவிற்கு துன்பத்தில் துணையாக இருப்பதே முக்கியம் என தீர்மானித்து அவளுடன் இருந்தான். 

“உனக்கு எதும் வேணுமா? சாராவை கொண்டுவந்து தர சொல்லவா?”

“இல்ல, வேணாம்.”

“சரி, நீ ஓய்வெடு. நான் இவானை போய் பார்க்கறேன்” என ஆர்யன் சொல்ல, ருஹானாவும் “நானும் வரேன்” என எழுந்தாள்.

“இப்போ தானே சொன்னேன், நீ படுத்து ஓய்வெடு. அப்போ நான் பார்க்கும்போதே அவன் நல்லா தூங்கிட்டான். நீ காலைல அவனை பாரு” என அவளை கண்டித்து, கைபிடித்து நிறுத்திவிட்டு கதவை மூடி சென்றான்.

——–

நடு இரவில் சமையலறைக்கு தண்ணீர் எடுக்க வந்த ருஹானா, பின்னால் கேட்ட காலடி சத்தத்தில் பயந்து கோப்பையை நழுவ விட்டாள்.

சட்டென்று விளக்கை எரியவிட்ட ஆர்யன் “பயப்படாதே. நான் தான்” என்று சொல்லி அவள் பக்கம் வந்தான். “இனிமேல் நீ எதுக்காகவும் பயப்படக்கூடாது. நான் உன்னை பாதுகாப்பேன். அதை எப்பவும் மறக்காதே” என்று அவன் சொல்ல, அவள் தலையாட்டினாள்.

“நாம இப்போ நம்ம ரெண்டு பேருக்கான புது வாழ்க்கையை தொடங்கப் போறோம். எது நடந்தாலும் நம்ம வழி ஒன்னு தான். நீ எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நினைவு வச்சிக்கோ” என்று சொன்னவன் “நான் உன்கிட்டே ஒன்னு கேட்கட்டுமா?” என வினவினான்.

அவள் அவனை என்ன என பார்க்க “இங்க இத்தனை கார் இருக்கே, அதுல ஒன்னை நீ ஏன் எடுத்துட்டு போகல? இல்ல என்னை ஏன் கூப்பிடல?” என வருத்தமாகக் கேட்டான்.

“நான்.. உங்களை தொந்தரவு செய்ய விரும்பல. நீங்க.. வேலையா இருந்தீங்க. என்னோட சொந்த வேலைக்கு எதுக்கு மாளிகையோட காரை எடுக்கணும்னு..” என அவளாகவே நிறுத்த, ஆர்யன் அவளை முறைத்தான்.

“இனிமேல் உனக்கும் எனக்கும் அப்படி தனி வேலைன்னு எதுவும் இல்ல.”

“இல்ல.. இங்க இருக்கற எல்லா வசதிகளையும் நான் எப்படி பயன்படுத்துவேன்?”

“நீ வேற நான் வேற இல்ல. எனக்கு இந்த மாளிகைல என்ன உரிமை இருக்கோ அத்தனையும் உனக்கும் இருக்கு. புரியுதா?” என ஆர்யன் கேட்க, ருஹானா அவன் வார்த்தையில் நெகிழ்ந்து போய் தலையாட்ட, அவன் திரும்பினான்.  

“நான்.. நானும் உங்க கிட்டே ஒன்னு சொல்லணும். நான் எங்க போனேன்னு நீங்க கேட்டீங்க, அப்போ என்னால விளக்கி சொல்ல முடியல. நான் மிஷால்க்கு அழைப்பிதழ் கொடுக்கப் போனேன்” என ருஹானா சொல்ல, அவன் தலையாட்டி நகர்ந்தான்.

——–

“சரி, ரஷீத். இன்னைக்கே முடியணும். ரெடியானதும் எனக்கு போன் செய்” என்று ஆர்யன் பேசி முடிக்க, “குட்மார்னிங்” என்று தயங்கியபடி சல்மா அறைக்குள் வந்தாள். ஆர்யன் மேசை மேல் இருந்த கோப்புகளை எடுத்து “நான் கையெழுத்து போட்டுட்டேன். நீ இதை ஆபிஸ்க்கு எடுத்துட்டு போகலாம்” என்று கொடுத்தான்.

“நான் இதுக்காக வரல. நான் உங்ககிட்டே ஒன்னு சொல்லணும்” என சல்மா சொல்ல, ஆர்யன் முகம் சுருக்கி “என்ன?” என்றான்.

“நான் வரம்பு மீறி பேசறதா கூட இருக்கட்டும். நான் இதை சொல்லியே ஆகணும். நீங்க பெரிய தப்பு செய்றீங்க. இந்த நிக்கா உங்களுக்கு சந்தோசம் தராது” என சொல்ல, நாற்காலியில் சாய்ந்திருந்த ஆர்யன் முன்னே வந்து “நீ சொல்றது சரிதான்” என்று சொல்ல, சல்மாவின் முகத்தில் சிரிப்பு பொங்கியது.

“நீ உன்னோட வரம்பு மீறி தான் போறே. அது ஒன்னு தான் நீ சொன்னதுல சரி” என்று ஆர்யன் கோபமாக சொன்னதும், சல்மாவின் முகம் கூம்பியது.

“நான் சொல்றது உங்களை கோபப்படுத்தலாம்.  ஆனா நான் துணிந்து சொல்றேன். ஏன்னா நீங்க.. இந்த குடும்பம் தான் எனக்கு முக்கியம். எனக்கு சொல்ல வருத்தமா தான் இருக்கு. ருஹானா சொத்துக்காக ஆசைப்பட்டு உங்களை கல்யாணம் செய்துக்க நினைக்கிறா. எனக்கு அவ மேல நம்பிக்கையே இல்ல.” ஆர்யனின் பாறையாய் இறுகிய முகத்தை பார்த்தும் சல்மா தைரியத்தை திரட்டிக்கொண்டு பேசினாள். 

“நேத்து இரவு நான் அவளை எங்க பார்த்தேன் தெரியுமா? மிஷாலோட உணவகத்துல. அவங்க ரெண்டு பேர் மட்டும் பேசிட்டு இருந்தாங்க. இதுக்கு மேல நான் எதும் சொல்ல மாட்டேன். ஆனா அங்க நான் பார்த்தது நல்ல காட்சி இல்ல” என மர்மமாக மூடி வைத்து சல்மா பேச, ஆர்யன் சீறி எழுந்தான்.

“போதும். எனக்கு அவ மேலே நம்பிக்கை இருக்கு. அவ எங்க, யார்கூட இருக்கான்னு எனக்கு தெரியும். இனிமேல் அவளை பத்தி எதுவும் தப்பா சொல்லாதே. எப்பவும்.. அடுத்த முறை நான் உன்னை எச்சரிக்க மாட்டேன்” என அவளை பார்வையாலேயே எரித்துவிடுபவன் போல கத்தினான்.

சல்மா கண்ணீருடன் வெளியேற, “என்ன சொன்னான்?” என்றபடி கரீமா எதிரே வந்தாள்.

“நீ சொன்னது தான் சொன்னான். அப்பாடி! இன்னொரு முறை என்னால முடியாது. கல்யாணத்தைப் பத்தி பேசினா எரிமலை மாதிரி வெடிக்கிறான்.” என சல்மா சொல்ல, “நல்லது. உன்மேல எவ்வளவு கோபப்படறானோ அவ்வளவும் நல்லது. ருஹானாவை பற்றி தெரிய வந்ததும் உன்னை நம்பாமல் உன்மேல கோபப்பட்டதுக்கு அவன் வருத்தப்படணும்” என்று கரீமா சிரித்தபடி சொல்ல, சல்மா இன்னும் பயம் விலகாமலேயே நின்றாள்.

——–

ஆர்யன் தந்த உறுதிமொழியை எண்ணியபடியே புன்னகையுடன் ருஹானா தனது குளிராடையை தைத்துக் கொண்டிருந்தாள். திறந்திருந்த கதவருகே சிறிது நேரம் நின்று அவளை ரசித்துவிட்டு, உள்ளே வந்த ஆர்யன் அவள் நலம் விசாரித்தான்.

கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த ஜாஃபர், ஒரு பெட்டியை ருஹானாவிடம் கொடுத்துவிட்டு செல்ல, ருஹானா புரியாமல் பார்க்க ஆர்யன் அதை திறந்து பார்க்கும்படி சொன்னான்.

உள்ளே புதிய குளிராடை இருக்க, “இது எதுக்கு எனக்கு?” என ருஹானா ஆச்சரியமாக கேட்டாள், தன் குளிராடை கிழிந்தது அவனுக்கு எப்படி தெரிந்தது என்று. 

“ஏன்னா உன்னோட ஓட்டை விழுந்த ஸ்வெட்டரை பத்தி இனி நீ கவலைப்படக்கூடாது. ஏன்னா நீ ஆர்யன் அர்ஸ்லானுக்கு மனைவியாகப் போறே!” என்று ஆர்யன் சொல்ல, அந்த சொல் சொன்னவனுக்கும், கேட்டவளுக்கும் இனித்தது.

“ருஹானா! ருஹானா! திருமண உடைகள் வந்துடுச்சி” என்று கத்திக்கொண்டே ஓடிவந்த நஸ்ரியா, அங்கே ஆர்யனை எதிர்பார்க்கவில்லை. “ஸாரி ஆர்யன் சார்!” என்று அவள் தயங்க, ஆர்யன் கீழே வரும்படி ருஹானாவிடம் சொல்லிவிட்டு சென்றான்.

“ருஹானா! அவ்வளவு ஆடைகள் வந்திருக்கு. நாம செலக்ட் செய்திருந்த மாடல்ல கூட நிறைய டிரஸ் இருக்கு” என நஸ்ரியா உற்சாகமாக பேசிக்கொண்டே போக “நான் இவானை பார்த்துட்டு வந்துடுறேன்” என ருஹானா இவானின் அறைக்கு போனாள்.

——-

“முதல்ல உங்க உடல்வாகுக்கு தகுந்த கவுனைலாம் பார்க்கலாம்” என ஆடை நிபுணர் டேப்லெட்டில் ஒவ்வொன்றாக தனது பக்கத்தில் அமர்ந்திருந்த ருஹானாவிடம் காட்ட, அவளை இடித்தபடி அமர்ந்திருந்த ஆர்யனும் அவற்றை பார்த்தான்.

வரவேற்பறை முழுதும் விதவிதமான திருமண உடைகள் அணிந்திருந்த நிறைய பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நீளமான சட்டங்களும் பல்வேறு ஆடைகள் தாங்கி நின்றிருந்தன. நிபுணரின் உதவியாட்களும் வெளியே இருந்து அடுக்கடுக்காக உடுப்புகளைக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். 

“இது பாருங்க, இது உங்களுக்கு பிரமாதமா இருக்கும். உங்களுக்கு எப்படிப்பட்ட டிசைன் வேணும்?” என ஆடை வடிவமைப்பாளரான அந்த பெண்மணி படங்களை நகர்த்திக்கொண்டே கேட்க, ருஹானா எல்லாவற்றையும் திகைத்து பார்த்திருந்தாள். 

அவர் காட்டிக்கொண்டு வந்த புகைப்படத்தில் கவர்ச்சியாக ஒரு உடை இருக்க, ருஹானா வேகமாக அதை இருகைகள் கொண்டு மூடி “இவ்வளவு கழுத்து இறக்கமானது வேண்டாம்” என சொல்ல, எதிரே அமர்ந்திருந்த கரீமா ஏளனமாக சிரித்தாள்.

மேலும் படங்கள் காட்டப்பட, ருஹானாவால் எதையும் முடிவு செய்ய முடியவில்லை.

“மிஸ்டர் ஆர்யன்! நீங்க சொல்லுங்க” என நிபுணர் கேட்க, ஆர்யன் “அவங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அது எனக்கு ஓகே தான்” என்றவன் ருஹானாவிடம் “அன்னைக்கு மொபைல்ல பார்த்தியே, அது உனக்கு பிடிச்சிருந்தா அது மாதிரி கூட எடுத்துக்கோ” என்றான்.

ருஹானா சந்தோசமாக தலையாட்ட, மேசையில் இருந்த ஆர்யனின் அலைபேசி அழைத்தது.

கரீமாவும் ருஹானாவும் எட்டிப் பார்க்க, அழைத்தது சமீரா எனவும் ருஹானா முகம் சின்னதாக, கரீமா ஆர்வமாக புன்னகைத்தாள். “சரி, உங்களுக்கு வேலை இருக்கும். நீங்க போகலாமே?” என்று ருஹானா, செல்பேசி அழைப்பை ஏற்காத ஆர்யனைப் பார்த்து சொன்னாள்.

போனை கவிழ்த்து போட்ட ஆர்யன் “இல்ல, நான் இங்க தான் இருப்பேன்” என்று சொல்ல, ருஹானாவின் முகத்தில் பூஞ்சிதறல். கரீமா நொடித்துக் கொண்டாள்.

அங்கே ஆர்வமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நஸ்ரியாவை இழுத்து கண்டித்த சாரா, காபி ட்ரேயை கையில் கொடுக்க, இருவரும் அனைவருக்கும் காபி கொடுத்தனர்.

அங்கே நின்ற உதவியாளர் நஸ்ரியாவிடம் “நீங்க இதை பாருங்க” என்று காட்ட, நஸ்ரியா “இல்ல… நாங்க இங்க வேலை செய்றவங்க” என அவள் மறுக்க, சாராவும் ஏதோ சொல்லப் போக, ஆர்யன் “உங்களுக்கும் சேர்த்து தான் உடைகள் வந்திருக்கு. உங்களுக்கு பிடித்தமானதை எடுங்க” என்று ருஹானாவை ஒரு பார்த்துவிட்டு சொல்ல, அவளும் தலையாட்டினாள்.

இருவரும் நெகிழ்ந்து நன்றி சொல்ல, “நிக்கா அன்னைக்கு நீங்க விருந்தாளிகள் தான். நீங்க அன்னைக்கு வேலை செய்யப் போறது இல்ல. அதுக்கெல்லாம் ஆட்கள் ஏற்பாடு செய்தாச்சி” என்று ஆர்யன் சொல்ல, தங்களையும் குடும்பமாக நினைக்கும் முதலாளிக்கு பதில் சொல்லக்கூட மகிழ்ச்சிப் பெருக்கில் அவர்களுக்கு வார்த்தையில்லை.

“ஆர்யன்! எனக்கு இந்த கோட் கொடுத்தாங்க. எப்படி இருக்கு?” என அம்ஜத் புன்னகை முகமாக அங்கே வர, அண்ணனின் மகிழ்ச்சியை பார்த்த ஆர்யன் அவனை தடவி “அழகா இருக்கு, அண்ணா!” என சொல்ல, “உங்களுக்கு பொருத்தமா இருக்கு, அம்ஜத் அண்ணா!” என ருஹானாவும் சொல்ல, “நன்றி ருஹானா!” என்றான்.

Advertisement