Advertisement

உணவகத்தின் வாசலில் ருஹானாவிற்கு எதிரே நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒருவர் அவள் மேலே தெரியாமல் மோதி விட்டார். அவர் கையில் வைத்திருந்த பொருட்களும், ருஹானாவின் கைப்பையும் கீழே விழுந்தன.

“சாரி! சாரி!” என அவர் சத்தமாக மன்னிப்பு கேட்க, இருவரும் கீழே குனிந்து சிதறிய பொருட்களை எடுத்தனர். அந்த சத்தம் கேட்டு வெளியே பார்த்த கரீமா, ருஹானாவை கண்டு அதிர்ந்து விட்டாள்.

——– 

“என்ன ருஹானா? இங்க வந்துருக்கே, அதும் இந்த இருட்டற நேரத்துல?”

“உன்னை பார்க்கத் தான் வந்தேன், மிஷால். உன்கிட்டே நான் பேசணும். உனக்கு நேரம் இருக்கா?” என ருஹானா கேட்க, மிஷால் பதில் சொல்லாமல் நின்றான். “ஆனா மிஷால் நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே? உடம்பு சரியில்லயா?” என ருஹானா கேட்க, அவன் உள்ளே பார்த்தான்.

அங்கே ஒளிந்து நின்றிருந்த கரீமா “சொல்லிடாதே! நான் இங்க இருக்கேன்னு சொல்லிடாதே!” என விதிர்த்தாள்.

“இல்லயே! நான் நல்லாத் தான் இருக்கேன். நீ ஏன் நிற்கறே? வா, வந்து உட்கார்” என யாருமில்லாத உணவகத்தின் மத்தியில் அவளை கூட்டிசென்று அமர வைத்தான். கைப்பையை மேசையில் வைத்த ருஹானா அவன் எதிரில் அமர்ந்தாள். 

சிறிது நேரம் நலம் விசாரித்தபின், அவன் தந்த பானத்தை அருந்திய பின்னர், கரீமா அதே இடத்தில் சிக்குண்டு நிற்க, ருஹானா அவனிடம் மனம் விட்டு பேசினாள். கரீமாவும் கேட்டுக்கொண்டிருக்க, ஒலிப்பதிவு கருவியும் தன் வேலையை செவ்வனே செய்தது.

“சின்ன வயசுல இருந்தே நீ என்னோட நெருங்கிய தோழன், மிஷால்! நான் உன்னை நேசிக்கிறேன், தன்வீரை போல நினைக்கறேன், பாசம் வச்சிருக்கேன். என்னோட எல்லா விஷயங்களும் உன்கூட பகிர்ந்துக்கணும்னு நான் ஆசைப்படறேன். ஆனா இப்போலாம் உன்னை அதிகமா மிஸ் செய்றேன். உன்கூட பேச முடியல. என் வாழ்க்கையிலயும் எல்லாம் வேகமா நடக்குது.”

“உனக்கு திருமணம்னு தான் எனக்கு தெரியுமே, ருஹானா!”

“ஆமா, நான் தான் உனக்கு சொல்லணும்னு இருந்தேன். ஆனா நீ அதை வேற விதத்துல தெரிஞ்சிக்கிட்டே. இப்போ இங்க நான் வந்த காரணமே நமக்குள்ள விலகிப் போன நட்பை மீண்டும் தொடரத்தான்….”

அவளை இடைமறித்த மிஷால் உள்ளே பார்த்தபடி “ருஹானா! நீ ஒரு முக்கியமான விஷயம் தெரிஞ்சிக்கணும். நீ எப்பவும் கவனமா இருக்கணும். அர்ஸ்லான் குடும்பம் ஆபத்தான குடும்பம்” என அவள் நலம் நாடும் தோழனாய் அவளை எச்சரிக்க, கரீமா “இந்த முட்டாள் என்ன செய்றான்? என் திட்டத்தை அவளிடம் சொல்லிடுவானா?” என்று பயந்தாள்.

“உஃப்! இதைப் பற்றி நாம நிறைய பேசிட்டோம், மிஷால்” என ருஹானா சலிப்பாக சொல்ல, “நான் ஆர்யனை பத்தி மட்டும் சொல்லல. முழு குடும்பத்தையும் பத்தி சொல்றேன்” என மிஷால் ஆரம்பிக்க, கரீமாவின் முகம் குளிரிலும் வியர்த்தது.

“நீ என்ன தான் சொல்றே?” என ருஹானா கேட்க, சிறிது நிமிடங்கள் எடுத்துக்கொண்டு மிஷால் யோசித்தான்.

“இங்க பாரு ருஹானா. அவங்க வேற உலகத்தை சேர்ந்தவங்க. நம்மளை போல அவங்க யோசிக்க மாட்டாங்க. உன்னை போல எளிமையான பொண்ணை அவங்க அப்படியே ஏத்துக்குவாங்கன்னு நீ நினைக்கிறீயா? உன் அக்கா அங்க சந்தோசமா இல்ல. உனக்கு நினைவு இருக்கா, இவான் அங்கிள் தஸ்லீம் பத்தி எவ்வளவு கவலைப்பட்டார்? அந்த கல்யாணத்துக்கு எதிரா நின்னாரே. நீ அதெல்லாம் யோசித்து பார்த்தியா?”

தந்தையைப் பற்றி மிஷால் சொன்னதும் குற்ற உணர்வுக்கு ஆளான ருஹானா ஆர்யனை ஆதரித்தே பேசினாள். “மிஷால், அவர் முழுமையா மாறிட்டார். நான் சொன்னா உனக்கு புரியாது. என்னோட அப்பா இப்போ இருந்தா நான் அவருக்கு விளக்கி சொல்லியிருப்பேன்.”

“நீ அவ்வளவு உறுதியா இருந்தா நான் எதும் சொல்லப் போறது இல்ல. ஆனா ஏதாவது கெடுதலா நடந்திடுச்சின்னா உன்னோட நலம் விரும்பற நான் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன். அதை நீ மறந்திடாதே!”

“நன்றி, மிஷால்! எனக்கு தெரியும். நீ எப்போதும் எனக்கு நல்ல தோழன் தான்” என்று சொன்ன ருஹானா கைப்பையில் இருந்து அழைப்பிதழை எடுத்து நீட்டினாள். மேலே மணமக்கள் இருவர் பெயரையும் பார்த்து சோகமான மிஷால் அதை தயக்கமாக வாங்கிக் கொள்ள, உள்ளே கரீமா கபடமாக சிரித்தாள். 

“லேட்டாகிடுச்சி. நான் வரேன், மிஷால்” என்று ருஹானா சொல்ல, “ஜாக்கிரதையா இரு!” என்று மிஷால் அவளை வழியனுப்பினாள். வாசலுக்கு வந்த ருஹானா அவள் அருகே வந்த வாடகை வண்டியை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.

“நீங்க வெளியே வரலாம். ருஹானா போய்ட்டா” என மிஷால் உரத்த குரலில் சொல்ல, வெளியே வந்த கரீமா “என்னை காப்பாத்தினதுக்கு நன்றி” என்றாள்.

“தயவு செய்து நீங்க போகலாம்!”

“நான் சொன்னதை யோசித்து பார், மிஷால். இந்த அழைப்பிதழ்ல ஆர்யன் பேருக்கு பதிலா உன் பேரை எழுதலாம். உனக்கு இன்னும் நேரமும், வாய்ப்பும் இருக்கு” என அவன் கையில் இருந்ததை காட்டி சொன்னாள்.

“நீங்க போறீங்களா?” என மிஷால் கடுமையாக கேட்க, கரீமா வெளியே செல்ல, அவன் அழைப்பிதழை மேசையில் வீசினான்.

———

ஆர்யனும் சமீராவும் பேசிக்கொண்டே அறையிலிருந்து நடந்து வந்து படிக்கட்டின் அருகே நின்றனர்.

“ஓரளவுக்கு சுவிஸ் வேலை ஒரு வடிவத்துக்கு வந்துடுச்சி. உங்க உதவியை நான் மறக்க மாட்டேன். இதுக்கு மேல மாப்பிள்ளையை மணமகள் கிட்டே இருந்து பிரிக்க நான் விரும்பல. நீங்களும் ருஹானாவை பார்க்க துடிச்சிட்டு இருக்கீங்க!”

“நீ என்ன என் மனதை படிக்க முயற்சி செய்றீயா?” ஆர்யன் முகத்தில் வெட்கம்.

“அதெல்லாம் எதுக்கு? உங்க கண்ணை பார்த்தாலே தெரியுதே!”

“நீ சொன்னா சரிதான்” என்றவன் புன்னகைத்தான்.

“இங்க பாருங்களேன், காதல் படுத்தும் பாட்டை! என் முன்னாடி நிற்கிறது ஆர்யன் அர்ஸ்லானா இல்ல ருஹானாவோட காதலனா?” என்று கேட்க, ஆர்யனின் முகம் கனிந்தது.

“உங்களை இப்படி பார்த்த பின்னால எனக்கும் இந்த சக்தி வாய்ந்த காதல்ல விழணும்னு ஆசையா இருக்கு.”

“சமீரா! போதும் இந்த பேச்சு.”

“சரி, சரி, நான் வாயை மூடிட்டு கிளம்புறேன். சுவிஸ்ல இருந்து ரிப்போர்ட்ஸ் வந்ததும் உங்களுக்கு போன் செய்றேன்” என சமீரா விடைபெற்று படிக்கட்டில் இறங்கி சென்றாள்.

ஆர்யன் நேராக ருஹானாவின் அறைக்கு விரைந்தவன் கதவை தட்டிவிட்டு காத்திருந்தான். பதில் வராமல் போகவே கதவை திறந்து உள்ளே பார்க்க, ருஹானாவை அங்கே காணாததால் ஏமாற்றம் அடைந்தான்.

——- 

வாடகை வண்டியில் வந்து கொண்டிருந்த ருஹானா வண்டி தடம் மாறி போகவும் திடுக்கிட்டாள்.

“ஏன் இந்த பக்கம் போறீங்க? இது தப்பான வழி! தயவுசெய்து வண்டியை திருப்புங்க!”

“எதுக்கு திருப்பணும்? நாம கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாமே. இந்த பக்கம் யாரும் வர மாட்டாங்க. நமக்கும் தொந்தரவு இருக்காது.”

ருஹானா மிரண்டு போனாள். “என்ன சொல்றே? வண்டியை நிறுத்து! நான் இறங்கிக்கறேன்.” 

அவள் மிரட்டவும் சிறிது தூரம் காரை செலுத்தி நிறுத்தியவன் அவளை திரும்பி பார்த்து வக்கிரமாக சிரித்தான். ருஹானா கதவை திறந்து இறங்க முற்பட, திறக்க முடியவில்லை. “லாக் எடுத்துவிடு. நான் போகணும்” என அவள் கத்த, அவன் சத்தமாக சிரித்தான். 

“பேபி! அமைதியா இரு! நான் தான் சொன்னேனே, நாம இன்பமா இருக்கலாம்” என சொல்லி அவன் காரை விட்டு இறங்கி சுற்றுமுற்றும் பார்க்க, ருஹானா அவசரமாக கைப்பையை திறந்து அலைபேசியை வெளியே எடுத்தாள்.

———

ருஹானாவை தேடிக்கொண்டே ஆர்யன் கீழே வர, ஜாஃபர் “ருஹானா மேடமை தேடுறீங்களா, சார்?” என கேட்க, ஆர்யன் தலையாட்ட “அவங்க ரெண்டு மணி நேரத்துக்கு முன்ன வெளிய போனாங்க” என்றான். “எங்க போறேன்னு சொன்னாளா?” என ஆர்யன் கேட்க, “இல்ல சார், அவங்க கேட் பக்கம் போகும்போது தான் நான் பார்த்தேன்” என்றான் ஜாஃபர்.

கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்த ஆர்யன் பதட்டமாக செல்பேசியை எடுத்து ருஹானாவிற்கு அழைத்தான்.

——-

காரின் பின்கதவை திறந்த அந்த போக்கிரி “நீ யாருக்கும் போன் செய்ய முடியாது” என அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கப் பார்க்க, ருஹானா அதை இறுக்கமாக பற்றிக்கொண்டு அவனை தடுத்தாள். அந்த நேரம் ஆர்யனின் அழைப்பு வர, ருஹானா அவனை உதறி தள்ளிவிட்டு காரிலிருந்து குதித்தாள்.

கீழே கிடந்த அவன் எழுந்து அவளை எட்டிப் பிடிக்கும்முன் ஒரே ஓட்டமாக அந்த இருட்டான சாலையில் வெகு வேகமாக ஓடி மறந்தாள். “அட சைத்தான்!” என திட்டியவன் நக்கலாக சிரித்தான்.

கண்மண் தெரியாமல் வெகு தூரம் ஓடிவந்த ருஹானா, திரும்பவும் ஆர்யன் போனில் அழைக்கவும் ஒரு மரத்தை பிடித்துக்கொண்டு நின்றாள்.

  ——–

ஆர்யனின் அழைப்புக்கள் ஏற்கப்படாமல் போக, பயந்து போன அவன் என்ன செய்வது என விழித்துக்கொண்டு நிற்கும்போது, வாசற்கதவு திறக்கப்பட, ருஹானா வந்துவிட்டாள் என நிம்மதியாக பார்க்க, அங்கே கரீமாவை பார்த்து அவனுக்கு எரிச்சலாகவும் திகைப்பாகவும் ஆனது.

“ஆர்யன் டியர்!” என கரீமா அழைக்க, அவளுக்கு பதில் சொல்லாமல் அவன் வேகமாக கதவை திறந்து வெளியேறினான்.

கரீமா சிரிப்புடன் மேலே தன் அறைக்கு செல்ல சல்மா தவிப்புடன் அவளுக்கு காத்திருந்தாள்.

“அக்கா! நல்ல செய்தியா சொல்லு. மிஷால் ஒத்துக்கிட்டானா?”

“இல்ல, கோழைப்பய மறுத்திட்டான்!”

“ஆனா நீ சந்தோசமா இருக்கே?”

“ஆமா, நான் மிஷால்ட்ட பேசிட்டு இருக்கும்போது நடக்காத கல்யாணத்துக்கு அழைக்க ருஹானா அங்க வந்துட்டா. நான் மறைந்து நின்னுக்கிட்டேன். அவனும் ருஹானாவும் பேசிக்கிட்டது வாய்ஸ் ரெக்கார்டர்ல பதிவாகிடுச்சி. நமக்கு தேவையானது கிடைச்சிடுச்சி. மிஷால் சம்மதிக்கலனாலும் நம்ம விளையாட்டுக்குள்ள அவன் குரலும் வந்துடுச்சி. அதை நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி எடிட் செய்துக்கலாம்.” 

“இது ரொம்ப மகிழ்ச்சியான செய்தி அக்கா!”

அப்போது கரீமாவின் அலைபேசியில் குறுஞ்செய்தி வர, அதை எடுத்து படித்தவள் மிகுந்த உவகை அடைந்தாள்.

“என்ன அக்கா?”

“இன்னொரு அதி ஆனந்தமான தகவல். என் ஆளும் நான் சொன்னபடி செய்திட்டான். டிரைவர் வேஷத்துல போய் ருஹானாவை நல்லா பயங்காட்டிட்டான். நடுவாந்திரத்துல அவளை தவிக்க விட்டுட்டான்.”

“இதுனால நமக்கு என்ன பயன்?”

“ஆர்யன் இதை கேட்டதும் இனிமேல் அவளை மாளிகைல இருக்கற கார்ல வெளியே போக சொல்வான்.”

“என்ன?” சல்மாவிற்கு அது முற்றிலும் பிடிக்கவில்லை.

“ஆமா, முழுசா கேளு. தஸ்லீம் ருஹானாவுக்கு எழுதுற லெட்டர்ல ‘உடம்பு சரியில்லாத என்னையும், இவானையும் கவனிக்கிற சாக்குல எப்படியாவது அர்ஸ்லான் மாளிகைக்குள்ள வந்துடு, ருஹானா’ன்னு முதல் கடிதத்துல எழுத நாம திட்டம் போட்டோம், இல்லயா?”

“ஆமா அக்கா!” 

“அடுத்தடுத்த கடிதங்கள்ல ஆர்யனை எப்படி மயக்கறதுன்னு தஸ்லீம் தன்னோட தங்கைக்கு சொல்லித் தரப் போறா. அதுல ஒரு கடிதத்துல இந்த கார் நிகழ்ச்சியை சேர்க்கப் போறோம்.”

“எப்படி அக்கா?”

“தஸ்லீம் ‘ருஹானா! உனக்கு கார்ல போகணும்னா நீ ஆர்யன் கிட்ட வெளிப்படையா கேட்காதே. ஒரு டாக்ஸி டிரைவர் என்கிட்டே தப்பா நடந்துக்க பார்த்தான்னு அழு. நீ கேட்டது கிடைக்கும். இதே மாதிரி வேணாம் வேணாம்னு சொல்லியே ஆர்யனோட இரக்கத்தை சம்பாதிச்சி நீ ஆசைப்பட்டது எல்லாம் நிறைவேற்றிக்கோ!’ இப்படி எழுதினதா ஒரு வாரம் கழிச்சி நாம கொடுக்கப் போற ஃபைல்ல ஆர்யன் படிச்சா என்ன ஆகும், சல்மா?”     

“ஐயோ அக்கா! இப்போ எனக்கே உன்னை பார்த்தா பயமா இருக்கு. எந்த காலத்துலயும் நான் உன்னை எதிரியா வச்சிக்கவே மாட்டேன்.”

“இது ஆரம்பம் தான், சல்மா! இந்த வாரத்துல அவளுக்கு எத்தனை பயங்கரங்கள் வச்சிருக்கேன்னு நீ பார்க்கத்தானே போறே!”

மாடி ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு இருவரும் ருஹானாவிற்காக ஆவலோடு காத்திருந்தனர். 

(தொடரும்)

Advertisement