Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

   அத்தியாயம் – 108

‘எவ்வித இக்கட்டிலும் இணைபிரியாது இருப்போம்’ என சையத்திற்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு அதன் இதத்தில் மூழ்கி இருவரும் பார்த்திருக்க, சையத் ‘கண்ணுல காதல் வழியுது. ஆனா நாக்கு தான் அதை சொல்ல மறுக்குது’ என அவர்களை சிரிப்போடு பார்த்தார்.

ஆர்யனின் அலைபேசி அடித்தும் அவனிடம் இயக்கம் இல்லை. “ம்க்கும்!” என ருஹானா அவனை உசுப்பியவள், “முக்கியமான அழைப்பா இருக்கப் போகுது, போனை எடுங்க” என்றாள். 

செல்பேசியை எடுத்து பேசிய ஆர்யன் “சரி, சமீரா! நான் வரேன்” என சொல்லவும் ருஹானாவின் முகம் இறுகியது. பேசி முடித்த ஆர்யன் “நாம போகலாம்” என அவளிடம் சொல்ல, அவளும் தலையாட்டிவிட்டு எழுந்தாள்.

“நன்றி, பாபா!” என்று ஆர்யன் சொல்ல, “எல்லாத்துக்கும் நன்றி, சையத் பாபா!” என்று ருஹானா சொன்னாள். “உங்க சத்தியத்தை மறக்காதீங்க” என்று அவரும் விடைகொடுத்தார்.

——-

ஆர்யனின் அறைக்கு அருகே வந்த இருவரும் விடைபெற நின்றனர். 

“என்னை கூப்பிட வந்ததற்கு நன்றி” என ருஹானா சொல்ல, ஆர்யன் தலையாட்டி அதை ஏற்றுக்கொள்ள, “நான் காபி போடவா? உங்களுக்கு நேரம் இருந்தா நாம காபி…” என அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ஜாஃபர் “ஆர்யன் சார்! மிஸ் சமீரா உள்ள காத்திருக்காங்க” என சொன்னான். 

“ஒஹ், வந்துட்டாளா? நாங்க போக்குவரத்து நெரிசல்ல மாட்டிகிட்டோம். அதான் தாமதம்” என ஜாஃபரிடம் பேசியபடியே ஆர்யன் அறைக்குள் விரைந்துவிட்டான். ருஹானா முகம் சுருங்கி நிற்க, “சித்தி!” என இவான் கதவைத் திறந்து கொண்டு வந்தான்.

“தேனே! நீ மதியம் சாப்பிட்டியா? இன்னும் தூங்கலயா?”

“இல்ல, உங்களுக்காக தான் முழிச்சிட்டு இருந்தேன்” என்றவனை அவள் அணைத்து முத்தமிட “சித்தப்பா எங்கே? நான் அவரை ரொம்ப மிஸ் செய்றேன்” என இவான் சொன்னான்.

“உன் சித்தப்பாக்கு நிறைய வேலை. இப்போ நாம அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். வா, போலாம்” என்று அவனை உள்ளே அழைத்து சென்று மதிய தூக்கத்திற்கு தயார்ப்படுத்தினாள், நேரம் கடந்து விட்டாலும். 

இவானை தூங்க வைத்தபின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ருஹானா, ஆர்யனின் அறையில் சமீராவின் சிரிப்பொலி கேட்க, கதவருகே சென்று நின்றாள். ‘ஏன் இவ்வளவு சிரிக்கிறாங்க? வேலை செய்றாங்களா இல்லயா?’ என மனதில் புலம்பியபடி அங்கேயே சுற்றி வந்தாள்.

அதை பார்த்துக்கொண்டே சந்தோசமாக வந்த கரீமா “ருஹானா டியர்! சமீரா இன்னும் இருக்காளா?” என கேட்க, ருஹானா ஆமென தலையாட்டினாள். 

“அவங்க எப்பவுமே இப்படித்தான். கதவை மூடிக்கிட்டு ரூம்லயே மணிக்கணக்கா இருப்பாங்க. பழைய நாட்களை பற்றி பேசிட்டு இருப்பாங்களா இருக்கும்” என ருஹானாவின் பயத்தை அதிகரித்தாள்.

“பழைய நண்பர்களைப் போலவா?” என ருஹானா அப்பாவியாக கேட்க, “ஆமா, அவங்களுக்கு பேச நிறைய விஷயங்கள் இருக்கும்” என ஏற்றிவிட்ட கரீமா “சரி, நான் வெளியே கிளம்பறேன்” என்றுவிட்டு செல்ல, ருஹானாவின் சிந்தனைகள் பல திக்கும் சென்றன. 

——–

மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த ஆர்யனின் தோளை தொட்ட சமீரா “நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டு இருக்கேன், ஆர்யன் டியர்?” என்றாள்.

“ஏன் அப்படி சொல்றே?”

“என்னோட அப்பா இறந்தபின்ன நீங்க தான் எனக்கு எல்லாவிதத்திலயும் உதவியா இருந்தீங்க. எங்க கூட்டாளி ஏமாற்ற முயற்சி செய்தபோது நீங்க மட்டும் இல்லனா எனக்கு ஒரு பணம் கூட கிடைச்சிருக்காது. நடுரோட்டுல தான் நின்னு இருப்பேன்.”

“இப்போ கூட இத்தனை உதவி செய்றீங்க, என் கூட பிறந்த அண்ணனைப் போல. உங்களோட பழைய பார்ட்னரோட பெண்ணுக்கு இவ்வளவு செய்யணும்னு உங்களுக்கு என்ன அவசியம் இருக்கு?” 

“மிக்க நன்றி உங்களுக்கு. அதோட உங்க திருமணத்துக்காக என்னோட மகிழ்ச்சியும். ருஹானா உங்களுக்கு ரொம்ப பொருத்தம்” என சமீரா சொல்லவும், இத்தனை நேரம் அவளை வெற்று பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் முகத்தில் புன்சிரிப்பு உதித்தது. 

“முதன்முதலா உங்க கண்ணுல நான் ஒளியை பார்க்கறேன். இப்போ நீங்க வேற மனிதனா தெரியுறீங்க. ருஹானா உங்களை உயிர்ப்போடு வச்சிருக்காங்க. இனிமையானவங்க அவங்க” என்று சமீரா சொல்ல, பெருமிதமாக தலையாட்டிய ஆர்யன் “எங்கே விட்டோம்?” என ஆவணங்களை கையில் எடுத்தான்.

———-

கையில் காபி ட்ரேவுடன் ஆர்யனின் அறைவாசலில் நின்ற ருஹானா தயங்கியபடி கதவை தட்டினாள். “வரலாம்” என்ற ஆர்யனின் குரல் கேட்டு உள்ளே நுழைந்தவளை இருவரும் ஏறிட்டும் பார்க்கவில்லை.

ஆர்யன் நடந்தபடியே சமீராவுடனும், செல்பேசியில் ரஷீத்துடனும் பேசிக் கொண்டிருக்க, அவன் கேட்கும் தகவலை சமீரா கோப்புகளை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் நின்று பார்த்த ருஹானா, ஆர்யனின் கவனம் தன் புறம் திரும்பவில்லையே என ஏமாற்றம் அடைந்தாள். “நான் உங்களுக்கு காபி கொண்டு வந்திருக்கேன்” என அவள் சொல்லவும், அவளை பார்த்த ஆர்யன் மலர்ந்த முகத்துடன் காபியை எடுக்க, அதற்குள் அழைப்பில் இருந்த ரஷீத் பேச, அவனுடன் பேசிக்கொண்டே நகர்ந்தான்.

“நன்றி ருஹானா! எனக்கு இந்த கணக்கு வழக்கெல்லாம் புரியவே மாட்டுது” என சமீரா சொல்ல, ஆர்யன் அவளிடம் ஏதோ கேட்க, இருவரும் வேலையில் ஆழ்ந்தனர்.

“இனிய உணவு!” என சொல்லிவிட்டு ருஹானா திரும்ப, ஆர்யன் அவளை பார்த்தான். அதை அவள் பார்க்கவில்லை. ஆனால் கதவின் அருகே சென்று திரும்பிய ருஹானா அவனை பார்க்க, அவன் குனிந்து எழுதிக் கொண்டிருந்தான். 

அவள் கதவை மூடி வெளியே செல்லவும் அவன் ஏமாற்றமாக கதவை பார்த்தான். ஆனாலும் அவனை வெளியே செல்லவிடாமல் வேலை இழுத்துக் கொண்டது. 

வெளியே வந்த ருஹானா கோப மூச்சுகளை விட, அங்கே வந்த ஜாஃபர் அவள் கையிலிருந்த காலி ட்ரேவை வாங்கிக் கொண்டவன் “இதை நான் எடுத்துட்டு போறேன். நீங்க ஓகே தானே, ருஹானா மேம்?” என கேட்டான்.

“ஆமா!” என அவள் சொல்ல, “அழைப்பிதழ் அச்சாகி வந்துடுச்சி!” என்று ஒரு பெட்டியை கையில் கொடுத்தான். “நன்றி, ஜாஃபர் அண்ணா” என்று சொன்ன அவள் ஆர்யனின் அறையை திரும்பி பார்த்தாள். 

ஆர்யனிடம் அழைப்பிதழ்களைக் காட்டவேண்டும் என்ற ஆவல் அவளுக்கு தோன்றிய வேகத்திலேயே மறைந்தது. மனம் சுணங்க தன் அறைக்கு நடந்தாள். 

அன்பு பாசம் பரிவு நேசம்

அச்சம் ஏக்கம் துடிப்பு தவிப்பு

காதலின் இயல்பு குணங்களானால்

காதலியின் உரிமைப் பொறாமையும்

அதனால் ஏற்படும் கோபமும்

அதீத காதலின் வெளிப்பாடு அல்லவா?

அறைக்குள் வந்து பெட்டியை திறந்து அழைப்பிதழை வெளியே எடுக்க, சுருங்கியிருந்த அவள் முகம் தன்னால் மலர்ந்தது. ருஹானாவின் பெயர் மேலே இருக்க ஆர்யன் பெயர் கீழே இருந்தது. இருவருக்கும் நடுவில் முடிவீலி சின்னம் அழகாக பொறிக்கப்பட்டிருந்தது.

உள்ளே மணற்கடிகார வாசகங்கள் அழகுற எழுதப்பட்டு இருக்க, அதை தடவியவள் இதயம் பூரித்தது. ‘பர்வீன் அம்மா’ என முதல் அழைப்பிதழில் பெயர் எழுதிய ருஹானா, அடுத்ததில் ‘மிஷால்’ என்று எழுதினாள். “மிஷாலை நேர்ல பார்த்து பேசி அவனோட மனத்தாங்கலை நீக்கணும். எனக்கும் கொஞ்சம் வெளிக்காத்து தேவை” என சொன்னவள் அவனின் அழைப்பை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு பெட்டியை மூடி மேசை மேல் வைத்தாள். கைப்பையையும், குளிராடையையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

———

“வாய்ப்பே இல்ல. நீங்க ருஹானாவை மாட்டிவிடப் பார்க்கறீங்க? அதுல என் உதவியை எப்படி நீங்க எதிர்பார்க்கறீங்க? என்னால முடியவே முடியாது” என மிஷால் எதிரே அமர்ந்திருந்த கரீமாவிடம் கோபமாக கத்தினான்.

“அப்போ நீ அவளை காதலிக்கலயா?” எந்த வார்த்தையை சொன்னால் மிஷாலுக்கு பாதிக்கும் என கரீமா தெரிந்தெடுத்து கேட்டாள். 

“நான் அவளை நேசிக்கறதால தான் அவளை கஷ்டப்படுத்த முடியாதுன்னு சொல்றேன். என்னால இதுக்கு உடன்படவே முடியாது.” உண்மை நேசம் கொண்ட மிஷால் அவள் வலையில் விழவில்லை.

“உனக்கு என் இந்த ஆவேசம்?”

“அவளுக்கு பாதகம் ஏற்பட என்னை வேலை செய்ய சொல்றீங்க, அது எப்படி என்னால முடியும்?”

“இல்ல, இதுல அவளுக்கு நன்மை தான். அவளை நீ காப்பாத்த தான் போறே. முரட்டுத்தனமான ஆர்யனை கல்யாணம் செய்தா மென்மை மனம் கொண்ட ருஹானா கஷ்டம் தான் படுவா. அவளுக்கு அவன் பொருத்தமே இல்ல”  என்ன ஒரு நல்ல மனது கரீமாவிற்கு!

“உங்க தங்கச்சிக்கு மட்டும் பொருத்தமா?” நன்றாக திருப்பிக் கொடுத்தான், மிஷால்!

 “ஆமா, அவ அந்த அளவுக்கு ஆர்யனை காதலிக்கிறா. உனக்கு ருஹானா வேணும். எனக்கு என் தங்கை ஆர்யனை கல்யாணம் செஞ்சிக்கனும். நீ என்னோட கோரிக்கையை ஏத்துக்கிட்டா எல்லாருக்கும் நன்மை.”

“ருஹானாவைத் தவிர!”

மிஷால் அவள் பேச்சைத் தட்டி தட்டி பேசவும், வேறு ஆயுதத்தை கரீமா கையில் எடுத்தாள். “எனக்கு ஆச்சரியமாவே இல்ல, உன்னை ஏன் ருஹானா தேர்ந்தெடுக்கலன்னு. ஏன்னா ஆர்யனுக்கு இருக்கற தைரியம் உனக்கு இல்ல.”

“நீங்க என்ன சொல்றீங்க?” மிஷாலின் கோபம் உச்சம் தொட்டது.

“ஆர்யன் எப்பவும் அவன் ஆசைப்பட்டதை அடைந்திடுவான். இப்போ பாரு, உன் கைல இருந்து ருஹானாவை நொடியில பறிச்சிட்டான். ஆனா நீ என்ன செய்றே? அவளை தக்க வச்சிக்க மாட்டியா? எதிர்த்து போராட மாட்டியா?”

ருஹானா மிஷால் உணவகத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

“ஏன் பதில் சொல்ல மாட்டற? நான் சொல்றேன், நீ ஒன்னும் செய்ய மாட்டே! ஏன்னா உன்னால ஒன்னும் செய்ய முடியாது” என மிஷாலை சீண்டிவிட்ட கரீமா, அவள் திட்டத்துக்கு அவனை சம்மதிக்க வைக்க பலவிதங்களில் முயன்றாள்.

“நீ உன்னோட காதல்ல வெற்றியடைய முயற்சி செய்யப்போறீயா இல்ல சோம்பேறியா தலையை தொங்கப்போட்டு நடக்கறது நடக்கட்டும்னு பேசாம இருக்கப் போறீயா?”

“என்கிட்டே இப்படிலாம் பேசாதீங்க. எழுந்து வெளிய போங்க.” மிஷால் கோபமாக வாசலை நோக்கி கையை நீட்டி காட்டினான்.   

Advertisement