Advertisement

“என்ன? எனக்கு புரியல” என ருஹானா கேட்க, உள்ளே கரீமா அசையாது நின்றாள்.

“இந்த கிராமத்து பொண்ணோட அறியா முகத்தை என்கிட்டே காட்டாதே. இதோ, பரிசுத்தமானவளா நடிச்சி கல்யாணம் வரை கொண்டு வந்துட்டீயே! ஆஸ்கார் அவார்ட் உனக்கு தான்” என சல்மா இகழ்ச்சியாக பாராட்ட, ருஹானா “திரும்பவும் தப்பு செய்றே சல்மா! நான் யாரையும் ஏமாத்தல” என்று கதவை திறக்கப் போக, சல்மா அவள் கையைப் பிடித்தாள்.

“அப்போ நான் பொய் சொல்றேனா? திட்டம் போட்டு அழகா காய் நகர்த்தி இவ்வளவு தூரம் வந்திட்டியே! ஆனா என்னை உன்னால முட்டாளாக்க முடியாது” என சல்மா சத்தமாக பேசினாள்.

தங்கை சமாளிப்பாள் என்ற தைரியம் அடைந்த கரீமா, கைப்பையின் உள்துணியை இலேசாக பிரித்து அதில் அந்த சிறிய கருவியை மாட்டி, எல்லா பொருட்களையும் உள்ளே அள்ளிப் போட்டாள்.

“உன்கிட்டே மன்னிப்பு கேட்டு நான் தப்பு செய்திட்டேன். நான் நினைச்சதை விட நீ புத்திசாலியா இருக்கே. நீ நடத்துற நாடகத்தை நானும் கூர்மையா பார்த்துட்டு தான் இருக்கேன்” என சல்மா குற்றம் சாட்ட, அவளிடமிருந்து கையை வேகமாக இழுத்த ருஹானா கதவை திறக்க, சகோதரிகள் திகைத்து நின்றனர்.

“ருஹானா மேம்! உங்க பர்வீன் அம்மா உங்களுக்காக கீழ காத்திருக்காங்க!” என ஜாஃபர் பின்னால் வந்து கூப்பிட, ருஹானா திரும்பி ஜாஃபரோடு கீழே சென்றாள். சதிகாரிகள் இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என இடதுபக்கம் இருந்த அவர்களின் பகுதிக்கு ஓடிவிட்டனர்.

ருஹானா பர்வீனை வரவேற்று அமர வைக்க “மகளே! உன்னை பார்க்க ஆசையா வந்தேன். நீ ஏன் கவலையா தெரியுறே?” என அவர் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பர்வீனம்மா. லேசா சோர்வா இருக்கு. அவ்வளவு தான். நான் உங்களுக்கு காபி கொண்டு வரேன்” என அவள் சொல்ல, “அதெல்லாம் அப்புறம். முதல்ல நான் என்ன கொண்டு வந்துருக்கேன்னு பாரு” என பர்வீன் அவளை இழுத்து அமர வைத்தார்.

“என்ன இது?” என பர்வீன் தந்த பெட்டியை பார்த்து ருஹானா கேட்க, “உன்னோட சீதனம்!” என பர்வீன் பெருமையாக சொன்னார்.

“சீதனமா? பர்வீன் அம்மா! எதுக்கு இது?” என சொன்ன ருஹானா குரலை இறக்கி “இது சம்பிரதாய கல்யாணம்னு உங்களுக்கே தெரியும்” என்றாள்.

“எனக்கு எதும் தெரியாது. நீ புதிய பாதைல அடியெடுத்து வைக்கப் போறே! எல்லாமே முறையோட நடக்கணும்” என்று பர்வீன் சொல்ல, ருஹானா பெட்டியை திறந்து பார்க்க அதில் கையால் நெய்த முக்காடும், துணிகளும் இருந்தன.

“இது உன் அம்மாவோட பொக்கிஷம். உன் அம்மாவே செய்தது. அவங்க அன்பும் ஆசியும் இதுல நிறைந்து இருக்கு” என்ற பர்வீனுக்கும் குரல் கரகரத்தது. அதை எடுத்து முகர்ந்த ருஹானா “அம்மா!” என கண்ணீரோடு அதை அணைத்துக் கொண்டாள்.

கைப்பையில் இருந்து ஒரு காதணியை எடுத்த பர்வீன் “இது பரம்பரையா உனக்கு வந்திருக்கு. உன்னோட பாட்டி போட்டு இருந்தது. அவங்க தஸ்லீம்க்கு அவ கல்யாணத்துக்கு கொடுக்க சொல்லி உன்னோட அப்பாட்ட கொடுத்தாங்க. அவளுக்கு கொடுக்க முடியல. இப்போ உனக்கு நான் கொடுக்கறேன்” என அவள் கையில் வைத்தவர், இன்னொரு தங்க கிளிப்பை எடுத்து “இது உனக்காக உன் பாட்டி கொடுத்தது” என அதையும் அளித்தார்.

அவற்றை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ருஹானாவிற்கு, அவளது தந்தை தஸ்லீமை நினைத்து அழுதது ஞாபகம் வந்தது.

‘அவளை போகாதேன்னு சொன்னேன். ‘உன்னை அவங்க கஷ்டப்படுத்துவாங்க.. நீ கஷ்டப்படுறேன்னு தெரிஞ்சா உன்னை விட நான் அதிகம் கஷ்டப்படுவேன்’னு கெஞ்சினேன். ஆனா அவ கேக்கல. போய்ட்டா… அவ அப்பாக்கு பிடிக்காத கல்யாணம் செய்துக்கிட்டா. அர்ஸ்லான் குடும்ப மருமகளாயிட்டா.’

ருஹானாவின் கண்ணீரை துடைத்த பர்வீன் அவளின் துக்கத்தை குறைக்க எண்ணி “இவான் எங்கே மகளே?” என கேட்டார். “நான் அவனை வர சொல்றேன். நீங்க என்னை மன்னிக்கணும் பர்வீன் அம்மா. இப்போ நான் அவசரமா வெளிய போகணும். நீங்க இவானை பாருங்க, காபி குடிங்க. நான் போறது முக்கியமான வேலைக்காக. என்னை தப்பா நினைக்காதீங்க” என ருஹானா எழுந்து கொண்டாள்.

“எனக்கு உன்னை தெரியும் மகளே! நீ பத்திரமா போயிட்டு வா! நான் இவானைப் பார்த்துட்டு கிளம்பறேன்” என பர்வீன் சொல்ல, ருஹானா அவரை அணைத்து விடைபெற்று மேலே வந்தாள்.

அறையில் குளிராடையையும், கைப்பையையும் வேகமாக எடுத்தவள் வெளியே வர, ஆர்யன் எதிரே வந்தான். “என்ன ஆச்சு? நீ ஏன் அழறே?” என பயந்து போய் அவன் கேட்க “ஒண்ணுமில்ல” என அவள் நகர்ந்தாள்.

“வெளிய போறியா? நான் கொண்டு வந்து விடறேன்” என அவன் சொல்ல, “இல்ல, வேணாம். நான் தனியா போக விரும்பறேன்” என்று சொல்லி அவள் படிக்கட்டில் இறங்க, ஆர்யன் கவலையாகப் பார்த்தான்.

———

தந்தை இவான் கல்லறையில் ருஹானா முக்காடிட்டு கண்ணீருடன் பிரார்த்தனை செய்தாள்.

“அன்பு அப்பா! உங்களையும் அக்காவையும் நான் அதிகமா தேடுறேன். உங்க பிரிவு எனக்கு வேதனையா இருக்கு. எப்பவும் நான் உங்களை நினைச்சிட்டே தான் இருக்கேன். உங்களை விட்டுட்டு நான் இருக்கறது எனக்கு இன்னும் கஷ்டமா தான் இருக்கு, அப்பா!”

“நான் உங்களுக்கு ஒன்னு சொல்லப் போறேன். எனக்கு… திருமணம். நான் யாரை கல்யாணம் செய்துக்க போறேன்னு உங்களுக்கு தெரிஞ்சா நீங்க ஆத்திரப்படுவீங்க. ஆனா என்மேல கோபப்படாதீங்க, அப்பா! உங்க பேரனுக்காக தான் இதை செய்றேன். ஆமா, நான்… ஆர்யன் அர்ஸ்லானை கல்யாணம் செய்துக்க போறேன்.”

“இன்னொரு பொண்ணையும் அர்ஸ்லான் குடும்பத்துக்கு கொடுக்கறது உங்களுக்கு கஷ்டமா இருக்கும். அது எனக்கு தெரியும், அப்பா! நீங்க உயிரோட இருந்திருந்தா இதுக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டீங்க.”

“நான் உங்களை மதிக்கலன்னு நீங்க தப்பா நினைக்காதீங்க, அப்பா. நான் அவரை திருமணம் செய்துக்கலன்னா இவானை என்கிட்டே இருந்து பிரிச்சிடுவாங்க. என்னால அதை தாங்க முடியாது. என்னை மன்னிச்சிடுங்க, அப்பா!”

இவானை மட்டும் திருமணத்திற்கு காரணமாக சொல்கிறாளே, தன் உள்மனக்காதலை ஏன் தந்தையிடம் சொல்லாமல் மறைக்கிறாள்?

“ஆனா அவர் முன்ன மாதிரி இல்ல, அப்பா. நீங்க பார்த்தது போல இல்ல. இப்போ நிறைய மாறிட்டார். இது உங்களுக்கு நிம்மதி கொடுக்கும்னு நம்புறேன், அப்பா!”

கல்லறை மேல் வளர்ந்திருக்கும் செடிகளை தடவிக் கொடுத்தவள் எழுந்து வெளியே வர, கேட்டின் அருகே ஆர்யன் இவளுக்காக காத்திருந்தான். மனதில் ஆசுவாசம் பெருக “நீங்களா?” என கேட்டாள்.

“நேத்து தானே சொன்னேன், உன் வாழ்க்கையில இனி நீ தனியா இல்ல. நான் இருக்கேன் உனக்காக. அதை எப்பவும் மனசுல நிறுத்திக்க பழகிக்கோ” என சொன்ன ஆர்யன், மனதிற்குள் ‘நான் துன்பக்கடலில் தத்தளித்தபோது துடுப்பாக இருந்து என்னை கரை சேர்த்தாய். நான் மறந்துப்போன மகிழ்ச்சியை என்னுள் மறுபடியும் மலர வைத்தாய். உன்னுடைய துக்கத்தை நான் எப்படி பொறுப்பேன்?’ என கேட்டுக் கொண்டான்.

அதை அவன் வாய் திறந்து சொன்னால் அவள் துக்கம் மறைந்துவிடுமே!

“நான் என்னோட அப்பா கிட்டே அனுமதி வாங்க வந்தேன். என்னை பத்தி விளக்கி சொல்ல வந்தேன்” என்று சொன்னவள் கைப்பையை திறந்து தந்தை தந்த நகைகளை அவனுக்கு காட்டினாள். “உங்களுக்கு தெரியுமா, இதை என்னோட கல்யாணத்துல கொடுக்கறதுக்காக என்னோட அப்பா வச்சிருந்தார்.”

அவள் காட்டியதை அவள் கையை பிடித்து தொட்டு பார்த்த ஆர்யன், அவள் உள்ளங்கையை மடக்கி பிடித்துக் கொண்டான். “இதை பெருமையா போட்டுக்கோ. உங்க அப்பா வெட்கப்படுற மாதிரி நீ எதும் செய்யல” என்றவன் “நான் இப்போ ஒருத்தரை பார்த்து பேசப் போறேன். நீயும் என்கூட வரணும்னு நான் ஆசைப்படறேன்” என்று சொல்லி “வா, போகலாம்” என அவளை காருக்கு அழைத்து சென்றான்.

——–

“வாழ்த்துக்கள் மகளே! ஆர்யன் எல்லாம் எனக்கு சொன்னான். எனக்கு கேட்கவே அதிகமான மகிழ்ச்சி!”

“சையத் பாபா! இதெல்லாம் இவானுக்காக..” ருஹானா மெதுவாக சொன்னாள்.

“எனக்கு தெரியும் மகளே! இவானுக்காகவும் எனக்கு மகிழ்ச்சி தான்” என சையத் புன்னகை செய்ய, ஆர்யன் அவரிடம் கேட்டான். “சையத் பாபா! உங்கட்ட ஒரு பெரிய உதவி கேட்க தான் நாங்க இங்க வந்திருக்கோம். எங்க திருமணத்துக்கு நீங்க சாட்சியா இருக்கணும்.”

“நான் மனமார சந்தோசமா செய்வேனே! ஏற்கனவே நான் உங்களுக்கு சாட்சி தான். நீங்க முதன்முதலா சந்தித்ததுல இருந்து இப்போ வரை நான் சாட்சியா தான் இருக்கேன். இவான் மேல நீங்க வச்சிருக்கற அன்புக்கும் அவன் உங்க மேல காட்டுற பாசத்துக்கும் நான் சாட்சி தான்” என சையத் சிரிப்புடன் சொல்ல, இருவரும் கனிவாகப் பார்த்துக் கொண்டனர்.

“எப்படி நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் கேடயமா இருக்கீங்க, உங்க உயிரை விட மேலா உங்க இணையோட உயிரை மதிக்கிறீங்க. அதுக்கும் சாட்சி நான்தான்!”

“எப்படி உங்க வறண்ட நிலத்துக்கு மழையா பொழிஞ்சி நம்பிக்கை என்ற பயிர் வளர வச்சீங்க, அதுக்கும் நானே சாட்சி! மத்தவங்க இருட்டுக்கு எப்படி விளக்காக நீங்க மாறினீங்க, அந்த விளக்கு அணையாம எப்படி காப்பாத்துறீங்க. ஒருத்தரோட தொலைந்து போன பகுதியா மத்தவங்க இருக்கீங்க. காலம் கடந்து நீடிச்சி நிலைக்கக் கூடிய எல்லாதுக்குமே நான் சாட்சியா நிற்கறேன்.”

ஆதரவு தந்த நல்ல பாதுகாவலரே

அனைத்து சஞ்சலங்களையும் களைந்தவர்!

குழம்பிய மனக்குட்டையில் ஆரம்பத்திலேயே

காதல் குமிழிகளின் சுவடுகளை கண்டறிந்தவரே

இணையை இணைத்திடும் பந்தத்திற்கும் சாட்சி!

“இது ஃபார்மாலிட்டி திருமணம், பாபா! உங்களுக்கே தெரியும்” என ஆர்யன் சொல்ல, “எனக்கு தெரியும் மகனே! ஆனா எந்த காரணமா இருந்தாலும் திருமணம் பவித்திரமானது. எல்லா சுக துக்கங்கள்லயும் கை கொடுத்து துணையா நிற்கறது. அது உங்களுக்கும் தெரியும்” என்று சையத் அறிவுரை கூறினார்.

“இப்போ நீங்க ரெண்டு பேரும் எனக்கு சத்தியம் செய்து கொடுங்க. ‘எப்பவும் நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையா இருந்து ஆதரவு கொடுப்பேன்’னு” என அவர் புன்னகை மாறாமல் கேட்டார்.

“சத்தியம்!” என்றான் ஆர்யன், ஆழ்ந்த காதலுடன் ருஹானாவை உற்று நோக்கி.

“சத்தியம்!” என்றாள் ருஹானா, அதே காதலுடன் அவன் கண்களைப் பார்த்து.

(தொடரும்)

Advertisement