Advertisement

“நமக்கு பத்து நாட்கள் இருக்கு. இந்த பத்து நாட்களுக்குள்ள இந்த கடிதங்கள் உண்மைன்னு நினைக்க வைக்க ஆதாரங்களை உருவாக்க போறோம். ருஹானா ‘மிஷால் கூட ஓடிப் போக திட்டம் போட்டு இருக்கா’ன்னு எல்லாரையும் நம்ப வைக்கப் போறோம்.”

“அது எப்படி அக்கா சாத்தியம்?”

“உன் அக்காவுக்கு எல்லாமே சாத்தியம் தான். அக்ரம் இறந்த பிறகு ‘தஸ்லீம் பழைய டிரைவரோட தப்பான தொடர்பு வச்சிருந்தா’ன்னு ஆர்யனையே நம்ப வச்சிருக்கேனே! இது என்ன பிரமாதம்?”

சல்மா அக்காவை மெச்சுதலாக பார்த்து உதட்டை பிதுக்கி தலையை ஆட்டினாள்.

தஸ்லீமின் கடிதத்தை பற்றி மட்டுமே பகிர்ந்து கொண்ட கரீமா, தஸ்லீம் எப்படி இறந்தாள் என்பதை தங்கையிடம் சொல்லவில்லை. கார் ஓட்டுனரை ஏற்பாடு செய்து வதந்தியை பரப்பியது கரீமா தான் என்பதை அறிந்துக் கொண்ட தஸ்லீம் அதை ஆர்யனிடம் சொல்லப்போக, அவளை முரட்டுத் தனமாக கரீமா தடுக்க, அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தஸ்லீம் மாடிவளைவிலிருந்து கீழே விழுந்து இறந்த ரகசியம் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டாள்.

இருவருக்கு தெரிந்தால் அது இரகசியம் அல்ல என்பதையும் குயுக்தி புத்தி படைத்த கரீமா நன்கு அறிந்திருந்தாள். ஏற்கனவே அந்த நிகழ்வை அம்ஜத் இலேசாக பார்த்திருந்தாலும் கரீமா அவனிடம் இல்லாத நாடகம் ஆடி அவன் அதை மறக்கும்படி செய்திருந்தாளே!

“சல்மா! கல்யாணத்துக்கு முன்னால நாம ஆர்யனுக்கு கொடுக்கப் போற பெரிய ஃபைலை அவன் படிச்சிட்டு ருஹானாவோட முகத்தை கூட அவன் திரும்பிப் பார்க்கக் கூடாது.”

“ஆர்யன் ‘அவன் அம்மாவைப் போல அவளும் மோசமானவ’ன்னு நினைக்கணும். அவள் மேல் வச்ச நம்பிக்கைக்காக அவன் தன்னையே வெறுக்கணும். அவளோட அருகாமை அவனுக்கு அருவெறுப்பை தரும். சோ, அவனளவில் அவள் இறந்து போனவளா ஆகிடுவா.”

“என்ன, சல்மா? உனக்கு ஏதாவது புரியலயா? இல்ல, இந்த திட்டம் உனக்கு பிடிக்கலயா?”

“இது… பயங்கரமான திட்டம் அக்கா! பயங்கரத்திலயும் அற்புதமான பிளான்! நான் கனவுலயும் நினைச்சி பார்க்க முடியாத திட்டம்!” என கண்கள் விரிய பாராட்டிய சல்மா, “ஆனா இதை எப்படி நாம நிறைவேத்த போறோம்?” என கேட்டாள்.

“பொய்யான ஆதாரங்களை உருவாக்கி தான்.. எல்லா வழிமுறைகளும் நான் யோசித்து வச்சிட்டேன். வங்கிக்கணக்கு, கடிதங்கள், குரல் பதிவுக் கருவி, புகைப்படங்கள்… ஆர்யனுக்கு நாம ஒரு முழுமையான ஃபைலை கொடுக்கப் போறோம். ருஹானா மேல அவன் வச்சிருக்கற நம்பிக்கை சுக்குநூறாக உடையும். அவனால அவன் கண்ணையே நம்ப முடியாது. ஆனா அவன் அந்த ஃபைலை நம்பணும். அந்த அளவுக்கு நம்ம தயாரிப்பு இருக்கணும்.”

“இதுக்கு நடுவுல நீ ஆர்யன் கூடவே இருக்கனும். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் ருஹானாவை பத்தி அவனுக்கு எச்சரிக்கை செய்துட்டே இருக்கணும், சல்மா”

“அக்கா! அவன் நான் சொல்றதை எங்க கேட்பான்? நான் பேசப் போனாலே என் வாயை அடைச்சிடுவான். அதும் அந்த மாயக்காரியை பத்தி எதும் நான் சொல்லத் தொடங்கினாலே கோபம் வந்து கத்துவான்.”

“அதை நீ தான் சமாளிக்கணும். அவன் என்ன சொன்னாலும் நீ பின்வாங்கிடாதே.  முதல்ல அவனுக்கு உன் மேல கோபம் வரும். அப்புறம் ருஹானாவை பத்தி தெரிஞ்சதும் நீ சொன்னது சரின்னு உன்னை மரியாதையா பார்ப்பான். அவன் உடைந்து போய் அன்பு, ஆதரவைத் தேடும்போது நீ தான் அவன் கண்ணு முன்னால தெரிவே!”

சல்மா ஆனந்தப்பட, ஒவ்வொன்றையும் தெளிவாக சொல்லி முடித்த கரீமா கால்சட்டை பையிலிருந்து ஒரு சிறிய கருவியை எடுக்க, சல்மா “அது என்ன அக்கா?” என கேட்டாள்.

“வாய்ஸ் ரிக்கார்டர். இது இனிமே ருஹானா கூடவே இருக்கப் போகுது. அவள் பேசுறதை அழகா பதிவு செய்யப் போகுது. அப்புறம் நமக்கு தேவையானதை மட்டும் நாம கத்தரித்து சேர்த்து ஆர்யன்கிட்டே கொடுத்துடலாம். இந்த நொடியில இருந்து ருஹானா வாய்ல இருந்து வர்ற ஒவ்வொரு வார்த்தையும் அவளோட இறுதி ஊர்வலத்தை அலங்கரிக்கப் போகுது.”

சல்மா சகோதரியை அரண்டு போய் பார்க்க, சல்மா வில்லத்தனமாக சிரித்தாள். அந்த சிரிப்பு சல்மாவையும் தொற்றிக்கொண்டது.

——-

இவானைப் பார்க்க போவதாக சொல்லிய ருஹானா எங்கும் போகாமல் தனது அறைக்கு வந்து சேர்த்தாள். அங்கும் அவளுக்கு நிலை கொள்ளவில்லை. நடந்தாள். உட்கார்ந்தாள். எழுந்தாள். தண்ணீர் குடித்தாள். ஜன்னல் அருகே சென்று வெளியே வேடிக்கை பார்த்தாள்.

பின்னர் அங்கும் அவளுக்கு இருப்பு கொள்ளாமல் கீழே இறங்கி வர, வரவேற்பறையில் ஆர்யனும், சமீராவும் எதிரெதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்து அப்படியே நின்றாள்.

அழகியான சமீரா சிரிக்கும்போது அழகு கூடி தெரிந்தாள், ருஹானாவின் கண்ணுக்கு. சிரித்தபடியும், கூந்தலை சரிசெய்தபடியும் சமீரா பேச, ஆர்யன் தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான்.

ருஹானா தன் கூந்தலையும் தொட்டுப் பார்த்தாள். ‘ஆர்யனின் நெருங்கிய தோழி’ என கரீமா பற்ற வைத்த பொறி அவள் நெஞ்சில் கனலாய் வீச, சமீரா ஆர்யனை தொட்டு, அடித்து பேச, அக்கனல் நெருப்பாய் கொழுந்துவிட்டு எரிந்தது.

ருஹானாவை பார்த்துவிட்ட சமீரா பேச்சை நிறுத்த, ஆர்யன் திரும்பி பார்த்தவன் புன்னகையுடன் அவளை அழைத்தான். “வா! ஏன் அங்கயே நிற்கறே?”

தயங்கியபடி முன்னே வந்தவள் “ம்… நான் என்ன சொல்ல வந்தேன்னா…” என்று திணற, ஆர்யன் “இனிப்புகளோட மாதிரிகள் வந்துடுச்சி. நீ பார்க்கறியா?” என கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. திருமண வேலைகள் அவளின் நினைவிலேயே இல்லை. “மாதிரியா?”

“ஆமா, நிக்கா இனிப்புகளோட சாம்பிள் தான். இங்க வா, உட்கார்!” என ஆர்யன் மீண்டும் அழைக்க, அவளும் வந்து ஆர்யன் அருகே அமர்ந்தாள்.

புரியாமல் விழித்த சமீரா “இருங்க ஆர்யன் டியர்! நான் எதையாவது மிஸ் செய்திட்டேனா? திருமண விழாவில் கொடுக்கற இனிப்புகளா? யார்க்கு நிக்கா?” என்று கேட்டாள்.

“நான் அப்பவே சொல்ல வந்தேன். ஆனா சந்தர்ப்பம் கிடைக்கல. என்னோட வருங்கால மனைவியை நான் அறிமுகப்படுத்தறதுக்கு முன்னமே நீ அவளை சந்திச்சிட்டே. இன்னும் பத்து நாள்ல எங்களுக்கு திருமணம்” என ஆர்யன் ருஹானாவை பார்த்தபடி சொல்ல, சமீராவின் முகம் திகைப்பிலிருந்து நகைப்புக்கு மாறியது.

“என்ன? விளையாடுறீங்களா? நீங்க? கல்யாணமா? நெஜமா தானா?” என கேட்க, ஆர்யன் ஆனந்த புன்னகை செய்தான். ருஹானாவிற்கு கோபம் பொங்கினாலும் சிரமப்பட்டு முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டாள்.

கலகலவென சிரித்த சமீரா “ஆர்யன் டியர்! நீங்க திருமணம் செய்துக்க போறீங்களா? வாவ்! ஆர்யன் அர்ஸ்லானுக்கு நிக்கா! உங்களுக்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தமே இல்லயே? எந்த பெண்ணையும் நீங்க நம்ப மாட்டீங்களே? எங்க போச்சி உங்க அர்ஸ்லான் ரூல்ஸ் எல்லாம்?” என்று ஆச்சரியமாக கேட்க, ஆர்யன் ருஹானாவை பெருமையாக பார்த்தான்.

ருஹானாவிடம் திரும்பிய சமீரா “சாரி ருஹானா டியர்! என்னை வித்தியாசமா எடுத்துக்காதீங்க. எனக்கு ஆர்யனைப் பத்தி ரொம்ப நல்லா தெரியும். வேற யாராவது ஆர்யனுக்கு கல்யாணம்னு சொல்லி இருந்தா நான் சிரிச்சி இருப்பேன். லேசா கூட நம்பியிருக்கவே மாட்டேன்” என்று சொல்லிவிட்டு திரும்பவும் ஆர்யனிடம் கேட்டாள்.

“கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருப்பீங்களே? எப்படி இந்த மாற்றம் வந்தது?”

“மாற்றம் ஒன்றே மாறாது!” என்ற ஆர்யன், உள்ளே கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த ருஹானாவை காதலுடன் பார்த்து சொன்னான்.

“வாழ்த்துக்கள் ருஹானா. உங்க பேர் வரலாற்று பக்கத்தில் பொன்னெழுத்துக்களால் எழுதப்படணும், ஆர்யன் அர்ஸ்லானை திருமணத்திற்கு இசைய வைத்த பெண்….” என்று சமீரா எழுந்து கொள்ள, ருஹானா பல்லைக் கடித்துக்கொண்டு தலையாட்டினாள்.

“எப்படி இதை சாதிச்சீங்க? என்ன செய்தீங்க? ஆர்யன் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வச்சீங்களா? ப்ராவோ!” என கைத்தட்டிய சமீரா, “உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்!” என்று ருஹானாவின் கையை பற்றி குலுக்கினாள்.

——–

ருஹானாவின் அறையில் நுழைந்த கரீமா “அவளோட கைப்பை எங்க?” என்று தேடினாள்.

——–

சமீரா “ஆர்யனோட இதயத்தை திறக்கற சாவியை கண்டுபிடிக்கறது எளிதான செயல் கிடையாது. இப்போ வரைக்கும் நிறைய பேர் முயற்சி செய்தாங்க. ஒருத்தருக்கும் வெற்றி கிடைக்கல” என்று இன்னும் ருஹானாவின் தீயை தூண்டிவிட்டு அமர்ந்து கொண்டாள்.

“அப்படினா உலகத்துல முடியாதுன்னு எதுவுமே கிடையாது போல” என்று வியந்த சமீரா “நீங்களும் ஆர்யனும் அதிர்ஷ்டசாலிகள் தான். ஆனா நீங்க மட்டும் அதிக கவனமா இருக்கணும். என்னதான் ஆர்யன் பாராமுகம் காட்டினாலும் பெண்களை கவர்ந்து இழுக்கிற சக்தி ஆர்யன்ட்ட அதிகமா இருக்கு. ஆர்யனால மனம் உடைந்த பெண்கள் நிறைய பேர் இருக்காங்க. இப்போ அவங்க பார்வை எல்லாம் உங்க மேல தான் திரும்பும்” என ருஹானாவை பயமுறுத்தினாள்.

ருஹானா அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கடுப்பு முகத்தில் பிரதிபலிக்க, அது புரியாத ஆர்யன் “நீ நல்லா தானே இருக்கே? இன்னும் உனக்கு வயிறு வலிக்குதா?” என கவலையாகக் கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல, நான் நல்லா இருக்கேன்” என்று அவள் பட்டென்று சொல்ல, சமீரா “நான் எத்தனை பெரிய முட்டாள். உங்க திருமண ஏற்பாடுகளை பார்க்கவிடாம திடீர்னு குறுக்க வந்துட்டேன். சரி, நாம அப்புறம் பேசலாம்” என எழுந்தவள், மீண்டும் ருஹானாவின் கைகளைப் பிடித்து குலுக்கினாள்.

“நான் வரேன் ருஹானா” என சமீரா விடைபெற, ருஹானா அவளுக்கு சிரித்த முகம் காட்டினாள்.

சமீராவோடு ஆர்யன் நடக்க “வாவ்! ஆர்யன் அர்ஸ்லான் கல்யாணம் செய்துக்கப் போறார். ஆஹா! வாழ்க்கையில இனிமேல் எனக்கு எதுவுமே ஆச்சரியம் தராது” என பேசியபடியே சமீரா செல்ல, ருஹானா கோப மூச்சுகளை பெரிதாக விட்டாள்.

சமீராவை வழியனுப்பி விட்டு வாசற்கதவை மூடிவிட்டு வந்த ஆர்யன் சாவகாசமாக அமர்ந்து பெட்டிகளை கையில் எடுத்தான். “நாம திருமண இனிப்புகளை பார்க்கலாமா?”

“அப்புறமா பார்த்துக்கலாம். நான் இவானை பார்க்கப் போறேன்” என ருஹானா வெட்டிக்கொண்டு செல்ல, ஆர்யன் புரியாது விழித்தான்.

                                        ———

ருஹானாவின் அறையில் எல்லா இடங்களிலும் கரீமா பரபரப்பாக தேட, ருஹானாவின் கைப்பை அவளுக்கு அகப்படவே இல்லை.

மனதில் பொருமியபடி ருஹானா சோகமாக மெல்ல படியேறி வந்தாள்.

கட்டிலுக்கும் டீப்பாய்க்கும் இடையே விழுந்து கிடந்த கைப்பையை கரீமா பார்த்துவிட அவள் முகம் மலர்ந்தது. அதை கையில் எடுத்தவள் மெத்தையின் மேல் தலைகீழாக கவிழ்த்தாள். அதிலுள்ள பொருட்கள் மெத்தை மேல் சிதற, குரல் பதிவு கருவியை ஒளித்து வைக்க தோதான இடம் எது என கரீமா பையில் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, ருஹானா கதவின் பிடியில் கையை வைத்து திருப்பினாள்.

கரீமா கையில் ருஹானாவின் பையோடு அதிர்ந்து நிற்க, வெளியே “ருஹானா!” என சல்மா சத்தமாக அழைத்து அவளை நிறுத்தினாள். ருஹானா நின்று அவளை பார்க்க, சல்மா “வாழ்த்துக்கள்! இந்த வாரம் நீ காட்டின திறமையை நான் பாராட்டுறேன்” என்றாள்.

Advertisement