Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                  அத்தியாயம் – 107

தன்னுடைய புத்தகத்தின் வரிகளை நகலெடுத்து சொல்லும் ஆர்யனை ருஹானா இமைக்கவும் மறந்து அதிசயப் புன்னகையோடு பார்த்துக் கொண்டே இருந்தாள். அவனுக்கு குத்துப்பட்டு ஓய்வெடுக்கும்வேளையில் தான் வாசித்துக் காட்டிய ஒரு பெண்ணின் சுயசரிதை புத்தகத்தில் இருந்து திருமண அழைப்புக்கு அவன் வாசகத்தை தேர்ந்தெடுத்தது அவளுக்கு அதிர்ச்சியை தந்தது என்றால் அதை அவன் மனதிலிருந்து வாசித்துக் காட்டியது அவளை திகைப்பில் ஆழ்த்தியது.

அதிலிருந்து வெளியே வர முடியாத ருஹானா “அப்போ…” என தடுமாற, “அழைப்பு வாசகமும் முடிவாகிடுச்சி!” என்றான் ஆர்யன் புன்னகையோடு. அதற்கு மேல் அவனை பார்க்க முடியாமல் “ஹூஹும்!” என்றவள் “நான் இவானை போய் பார்க்கறேன்” என எழுந்து கொள்ள, ஆர்யனும் எழுந்தான்.

“நஸ்ரியா அவனுக்கு உணவு கொடுத்துருப்பா. நாம அடுத்த வேலையை பார்க்கலாமே!”

“இல்ல.. நான்..”

“ஆனாலும் நீ போய் இவானை பார்க்கணும். அதானே?” என அவன் அவளை புரிந்து கொண்டு கேட்க, அவள் ஆமென தலையசைத்துவிட்டு நகர்ந்தாள்.

———–

இவான் சீக்கிரமே சாப்பிட்டு விளையாட சென்றுவிட, மற்றவர்கள் உணவு மேசையில் ஒன்றாக அமர்ந்து உண்டு கொண்டிருக்க, கரீமா சல்மாவிற்கு முட்டையை எடுத்து வைத்தாள்.

“நேத்து முடியை பிடிச்சி இழுத்து அடிச்சாங்க. இன்னைக்கு ஊட்டிவிடுறாங்க. அதுக்குள்ள ராசியாகிட்டாங்க போல” என நஸ்ரியா சாராவின் காதில் கிசுகிசுத்தாள்.

“நஸ்ரியா நீ உன்….”

“சரி! நான் என் வாயை மூடிக்கிட்டு வேலையை பார்க்கறேன்.”

கரீமா எதிரே சாப்பிட்டுக் கொண்டிருந்த ருஹானாவிடம் “ருஹானா டியர்! திருமண வேலைகள் எந்த அளவுக்கு இருக்கு?” எனக் கேட்க, “நிக்கா அழைப்பிதழ் தேர்ந்தெடுத்துட்டோம்” என்று ருஹானா தயக்கமாக சொன்னாள்.

“அதுக்குள்ளயா? எனக்கு அதை பார்க்க ஆசையா இருக்கே!” என கரீமா கேட்க, சல்மா அவளை முறைத்தாள்.

“நான் போய் கொண்டு வரேன்” என ருஹானா எழுந்து கொள்ள, “நீ சாப்பிடு! என்கிட்டயே இருக்கு. ஜாஃபர்ட்ட அச்சுக்கு கொடுக்க எடுத்துட்டு வந்தேன்” என்று ஆர்யன் தன் கோட் பையில் இருந்து வெளியே எடுத்தான்.

“மாஷா அல்லாஹ்! எத்தனை வேகமாக வேலை செய்றீங்க?” என்றபடியே கரீமா அதை வாங்க, ஆர்யன் “இல்ல, நாங்க தாமதமா தான் செய்றோம்” என்றான்.

“ஆமா, ஆர்யன் டியர்! இன்னும் பத்து நாட்கள் தானே இருக்கு, கல்யாணத்துக்கு.”

“நான் அதை சொல்லல. நாங்க ரொம்ப முன்னமே திருமணம் செய்திருக்கணும்” என ஆர்யன் ருஹானாவை பார்த்தபடி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தான். ருஹானா சிரித்தபடி குனிந்து கொள்ள, சல்மா இருவரையும் மாறி மாறி வெறுப்பாக பார்த்தாள்.

“நானும் அதான் ஆசைப்படுறேன். ஆனா எல்லாமே தகுந்த நேரத்துல தான் நடக்கும்” என ஆத்திரத்தை மறைத்துக்கொண்டு சொன்ன கரீமா, “சல்மா! இந்த டிசைன் அழகா இருக்குல?” என காட்ட, “ஆமா எனக்கும் பிடிச்சிருக்கு” என்றாள் சல்மா வேண்டாவெறுப்பாக.

“திறந்து படி கரீமா” என அம்ஜத் அவசரப்பட்டான். கரீமா வாக்கியங்களைப் படிக்க சல்மாவின் முகம் வேப்பெண்ணையை குடித்தது போல மாறியது. நஸ்ரியா நெகிழ்ந்து நிற்க, சாரா ஆனந்த கண்ணீரை துடைத்தார்.

இது எதையும் கவனிக்காமல் மணம் புரியப் போகும் இருவரும் தங்களுக்குள் மூழ்கி இருந்தனர். “ஆஹா! அருமை! பிரமாதம்!” என அம்ஜத் கைத்தட்ட, “ரொம்ப அழகா வந்திருக்கு ஆர்யன் டியர்!” என கரீமாவும் பாராட்டினாள்.

“அற்புதம்! நல்லா இருக்கு” என்று நஸ்ரியா ருஹானாவிற்கு ரொட்டியை வைத்துக்கொண்டே அவள் காதில் சொல்ல, அவள் வெட்கமாக சிரித்தாள்.

அம்ஜத் சல்மாவை பார்த்தான். “சல்மா! உன் கழுத்துல என்ன காயம்?”

“அது ஒண்ணுமில்ல மச்சான்! நான் கிளிப் போடும்போது கழுத்துல கீறிடுச்சி” என சல்மா சொல்ல, நஸ்ரியா வாய்மூடி சிரிக்க, சாரா அவளை உள்ளே போக சொல்லி சைகை செய்ய, கரீமா பேச்சை மாற்றினாள்.

“திருமணத்துக்கு எந்த இடம் யோசித்து வச்சிருக்கே, ஆர்யன் டியர்? நாம ஆடம்பரமான மண்டபத்தை பார்க்கணும். உன்னோட திருமணத்திற்கு வர்த்தகத் துறையில் இருந்தும் கலைத்துறையில் இருந்தும் பெரிய ஆட்கள் வருவாங்க. கூட்டத்தை கவனிக்க இடம் பெருசா இருக்கணும்” என கரீமா சொல்லிக்கொண்டே போக, அம்ஜத் மிரண்டு போய் பார்த்தான். ருஹானாவும் கைகளை பிசைந்தாள். இருவரையும் ஆர்யன் கவனித்தான்.

“பத்திரிக்கைக்காரங்களையும் நாம மறந்திடக் கூடாது. எல்லாருடைய கவனத்தையும் கவர்ற வகையில மண்டபத்தோட அமைப்பு இருக்கணும். வெளியே பரந்தவெளி இருந்தா பாதிப் பேரை அங்கயே நிறுத்திக்கலாம். அப்போ தான் நாம ஓரளவு சமாளிக்க முடியும்” என கரீமா வர்ணிக்க, ஆர்யன் முடிவாக சொன்னான்.

“நம்ம மாளிகையில தான் திருமணம்.” ஆர்யன் சொன்னதைக் கேட்டு ருஹானா நிம்மதி பெருமூச்சு விட, அம்ஜத் தலையாட்டி சிரித்தான்.

அப்போது அழைப்புமணி ஒலிக்க, சில வினாடிகளில் ஜாஃபருடன் ஒரு அழகிய இளம்பெண் உள்ளே வர, அவளை பார்த்த ஆர்யன் “சமீரா!” என எழுந்தான்.

“ஹாய் ஆர்யன் டியர்! எப்படி இருக்கீங்க?” என வந்தவள் அவன் கழுத்தை கட்டிக்கொள்ள, ருஹானா திடுக்கிட்டாள். இத்தனைக்கும் ஆர்யன் அவளை தொடவில்லை. சங்கடமாக நின்றிருந்தான். ஆனால் அவளை தடுக்கவும் இல்லை.

ருஹானாவின் முகம் போன போக்கைப் பார்த்து கரீமாவிற்கு மகிழ்ச்சியானது. சல்மாவின் முகமும் கோபமானது.

ஆர்யனை விட்டு விலகிய சமீரா “சலாம் அம்ஜத் அண்ணா! கரீமா அக்கா நீங்க அப்படியே மாறாம இருக்கீங்க!” என கலகலப்பாக பேச, அம்ஜத் “எப்படி இருக்கே சமீரா?” என கேட்டான்.

“நல்லா இருக்கேன். நான் உங்களை எல்லாம் மிஸ் செய்தேன்” என சமீரா சொல்ல, “நாங்களும் தான். உனக்கு நல்வரவு” என்று சொன்னாள் கரீமா புன்னகையுடன்.

அங்கே புதிதாக தெரிந்த ருஹானாவை பார்த்த சமீரா “மெர்ஹபா! நான் சமீரா!” என கையை நீட்ட, அவள் கைப்பற்றி குலுக்கிய ருஹானா “நான் ருஹானா! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று செயற்கையான புன்னகையுடன் சொன்னாள்.

“அவ என்னோட..” என சொல்ல வந்த ஆர்யனை இடைமறித்த சமீரா, “ஸாரி ஆர்யன் டியர்! நான் சொல்லாம வந்துட்டேன். ஆனா அவசரமா எனக்கு உங்க உதவி தேவை. சுவிட்சர்லாந்துல நம்ம கம்பெனி தொடங்க போறது உங்களுக்கு தெரியும் இல்லயா? எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. நீங்க உதவி செய்வீங்கன்னு உடனே கிளம்பி வந்துட்டேன். செய்வீங்க தானே?” என கடகடவென்று பேச, ருஹானா அவள் ஆர்யனிடம் காட்டும் நெருக்கத்தை வித்தியாசமாக பார்த்தாள்.

“கண்டிப்பா.. நான் பார்க்கறேன்” என ஆர்யன் சொல்ல, “பிரான்ஸ்ல இருந்து இப்போ தான் வந்தேன். அதுக்குள்ள இந்த வேலைகள். ஒன்னுமே ஓடல எனக்கு” என சமீரா படபடத்தாள்.

“பயப்படாதே. நாம பார்த்துக்கலாம். பிரான்ஸ் டெக்ஸ்டைல் தொழிற்சாலைல உற்பத்தி நல்லா போகுது தானே? மார்கெட்டிங்லயும் இறங்கப் போறீங்களா?”

“அது இன்னும் ஒரு முடிவுக்கு வரல. அதுல எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு. அதை பத்தியும் நாம விரிவா பேசணும்” என ஆர்யனின் கையை பிடித்த சமீரா, “நீங்க ஜெர்மனி கம்பெனி கூட ஒப்பந்தம் போட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். வெரிகுட். ரியல் எஸ்டேட் பிசினஸ்லயும் டாப்ல வந்துட்டீங்களாமே? உங்க யுவா வீடுகள் திட்டத்துக்கு என்னோட வாழ்த்துக்கள், மிஸ்டர் ஆர்யன்!” என்றபடி ஆர்யனின் நெஞ்சில் தட்டினாள்.

அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ருஹானா எழுந்து கொண்டாள். “எக்ஸ்கியூஸ்மீ! நான் இவானை போய் பார்க்கறேன்” என்று இருவருக்கும் இடையே புகுந்து சென்றாள்.

“நானும் வெளியே கிளம்பறேன். நாம அப்புறம் பேசலாம், சமீ” என்று கரீமாவும் ருஹானாவின் பின்னால் சென்றாள்.

படிக்கட்டின் அருகே ருஹானாவை நெருங்கிய கரீமா “சமீரா இனிமையானவ, இல்லயா?” எனக் கேட்க, “எனக்கு அவங்களை பற்றி தெரியாதே! பார்க்க அப்படித்தான் தெரியுறாங்க” என்றாள் சலிப்புடன் ருஹானா.

“ஆனா அவ இந்த கல்யாண நேரத்துல வந்திருக்க வேண்டாம்.”

“எனக்கு புரியல, ஏன்?” என ருஹானா குழப்பமாக கேட்க, அக்கம்பக்கம் பார்த்த கரீமா குரலை தழைத்துக் கொண்டாள்.

“ருஹானா டியர்! அவ ஆர்யனோட முன்னாள் கேர்ள் ஃப்ரெண்ட். ஆனா அது பழைய கதை” என்று ருஹானாவை கலங்கடித்தவள் “நான் ஒரு கால் பேசணும். வரேன்” என்று சென்றுவிட்டாள்.

ருஹானா திக்பிரமை அடைந்து அங்கேயே நிற்க, சல்மா அவளை இளக்காரமாக பார்த்தபடி கடந்து போனாள்.

———-

“அக்கா! யார் இந்த சமீரா? நீ பார்த்தியா, அந்த பட்டிக்காடு அவளை எப்படி பார்த்தா? பொறாமை அவ கண்ணுல தெரிஞ்சது.”

“சமீராவை விடு. அவளை நாம பொம்மையைப் போல பயன்படுத்திக்கலாம். சரி நாம இப்போ தொடங்கலாம். நீ தயாரா, சல்மா?”

“என்ன அக்கா? என்ன தொடங்கப் போறோம்?”

“நீ ருஹானாவை கொல்ல விரும்பினே தானே? அதைத் தான் நாம இப்போ செய்யப்போறோம். ஆனா என்னோட வழியில்… கத்தி இல்லாம, ரத்தம் இல்லாம, விஷம் கொடுக்காம… நாம அவளை கொன்னு புதைக்க போறோம். அவளோட கல்லறை ஆர்யனோட இதயத்தில்…”

கொடூர முகத்துடன் கரீமா விவரிக்க, சல்மா புரியாது பார்த்தாள்.

“ஆர்யனைப் பொறுத்தவரை ருஹானா சாகப் போறா. ஏன்னா ‘அவ ஒரு பணத்தாசை பிடிச்சவ’ன்னு ஆர்யனுக்கு தெரியப் போகுது. ஆர்யனோட துன்பமான இளமைக் கதைக்கு நாம அவனை கூட்டிட்டு போகப் போறோம். அவனோட அம்மாவையும், அவனோட அவநம்பிக்கையையும் திரும்ப கொண்டு வருவோம். அவனோட அம்மாவை போலவே ருஹானாவும் பணந்தின்னி கழுகுன்னு ஆர்யனை நம்ப வைப்போம்.”

“நாம எப்படி அதை செய்ய முடியும்? ஆர்யன் நம்மளை நம்ப மாட்டானே?”

“நாம செய்யப் போறது இல்ல, சல்மா! ருஹானாவோட அக்கா தஸ்லீம் சொல்லப் போறா. இந்த கடிதங்கள் மூலமா…” என்ற கரீமா மறைத்து வைத்திருந்த கத்தையான கடிதங்களை எடுத்துக் காட்டினாள்.

“அதுல என்ன எழுதி இருக்கு?”

“இதெல்லாம் தஸ்லீம் ருஹானாவுக்கு எழுதின கடிதங்கள். இதுல எதுவும் வெளிய போகாம நான் பார்த்துக்கிட்டேன். இதுல அவங்க பிரத்தியேக விஷயங்கள் இருக்கு.”

“இதை வச்சி நாம என்ன செய்றது, அக்கா?”

“இந்த கையெழுத்து வச்சிக்கிட்டு நாம எழுத போறோம். ஆர்யனை மயக்கி எல்லா சொத்தையும் அபகரிக்க தஸ்லீம் தன்னோட தங்கைக்கு யோசனை சொல்றா. அதுக்கு ருஹானா பதில் எழுதப் போறா. ருஹானாவோட கையெழுத்தை எடுத்து நாம எழுதப் போறோம். இதான் நம்மோட விளையாட்டோட அடிப்படை!”

பிசாசும் அஞ்சும் கொடுமையான சதியை கரீமா வகுக்க, வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்த சல்மா “நீ.. ஒரு சைத்தான் அக்கா!” என மெச்சினாள். புன்னகைத்து அதை ஏற்றுக்கொண்ட கரீமா தங்கைக்கு தெளிவாக விளக்க ஆரம்பித்தாள்.

Advertisement