Advertisement

பாதி சூப்பை சிரமப்பட்டு குடித்த ருஹானா ஆர்யனின் முகத்தை பாவமாக பார்க்க, அவன் புருவம் உயர்த்தி முறைப்போடு கிண்ணத்தை காட்டினான். அவள் மெல்ல குடிக்க, அவன் தன்னுடைய பெருமித புன்னகையை மறைத்துக்கொண்டான்.

அவள் சாப்பிட்டு முடித்ததும் கிண்ணத்தை வாங்கி மேசையில் வைக்க அவனுடைய செய்கையில் அவள் இப்போது பெருமிதமாக உணர்ந்தாள்.

கிண்ணத்தை எடுத்துப் போக வந்த ஜாஃபர் “வேற எதும் வேணுமா, மேம்?” என கேட்க, “இல்ல, ஜாஃபர் அண்ணா!” என அவள் மறுக்க, ஆர்யனுக்கு சொல்வதற்கு நிறைய இருந்தது.

“ப்ரெஷ் ஆரஞ்ச் ஜூஸ் எடுத்துட்டு வாங்க. அதோட நட்ஸ் கொண்டு வாங்க. முக்கியமா வால்நட், பாதாம், திராட்சை..”

“அது எதுக்கு? டாக்டர் தான் விட்டமின் மாத்திரை கொடுத்திருக்காரே!”

“அது ஒரு பக்கம் இருக்கட்டும். சத்துள்ளது சாப்பிட்டா சீக்கிரம் உடம்பு தெம்பாகும்” என அவளிடம் சொன்ன ஆர்யன், ஜாஃபரிடம் “நான் சொன்னபடி செய்ங்க. இவங்களுக்கு வால்நட் ரொம்ப பிடிக்கும். அது நிறைய எடுத்துட்டு வாங்க” என்றான்.

“கண்டிப்பா!” என சொல்லி ஜாஃபர் செல்ல, ஆர்யனின் கரிசனையில் ருஹானா உள்ளம் நெகிழ்ந்து போனாள். “இது எல்லாம் என்னால தான். ஸாரி, நான் உங்களுக்கும் சிரமம் தரேன்” என அவள் வருத்தப்பட்டாள்.

“உன்னை சார்ந்த எதுவும் எனக்கு சிரமம் இல்ல. உன்னை நான் நல்லா கவனிச்சிக்கணும். உன்னை நீ மட்டுமே பார்த்துக்க வேண்டிய அவசியம் இல்ல. இனிமேல் நான் இருக்கேன் உனக்கு. உன்னோட உடல்நிலை, கஷ்டங்கள், பிரச்சனைகள் எல்லாத்தையும் நீ எனக்கு சொல்லணும். சரியா?”

தலையாட்டிய ருஹானாவின் கண்கள் லேசாக கசிந்தன, அவனது அக்கறையால்.

“நீ ஓய்வெடு! நான் இப்போ வந்துடுறேன்” என்று அவன் எழுந்து செல்ல, செல்லும் அவனை அவள் பார்த்திருக்க, கதவை மூடும்முன் இருவரின் வழக்கம் போல அவளைப் பார்த்துவிட்டே சென்றான்.

——-

“குட்மார்னிங்!” ஆர்யன் அறைக்குள் ருஹானா வர, மேசையில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தவன் எழுந்து அவளை வரவேற்றான்.

“அதுக்குள்ள படுக்கையை விட்டு எழுந்திட்டியா? இப்போ உடம்பு எப்படி இருக்கு?”

“தூங்கி எழுந்ததும் எனக்கு எல்லாம் சரியாகிடுச்சி. ஜாஃபர் அண்ணா கொடுத்த நட்ஸ்ஸும் சாப்பிட்டேன்.”

“நல்லது!” என்று சொன்னவன் அவளிடம் ஒரு பேப்பரை நீட்டினான். “நேத்து நான் சொன்ன லிஸ்ட் ரெடி ஆகிடுச்சி. நீயும் ஒருமுறை சரிபார்த்துடு. திருமணம் நடக்கும் இடம், அதை நடத்துற கம்பெனி, உடைகள், சீதனம், விருந்து, பரிசுகள் எல்லாமே.. எது எது எப்படி எப்போ நடக்கணும்னு நாம பார்க்கணும்” என ஆர்யன் அடுக்க, ருஹானா மூச்சு வாங்கினாள்.

“திரும்ப மயக்கம் வராதே உனக்கு?” என ஆர்யன் குறும்பாக கேட்க, அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டாள். “நிச்சயமா இல்ல. ஆனா லிஸ்ட் பெருசா இருக்கே. இது எல்லாமே இந்த குறுகிய காலத்துல எப்படி செய்து முடிக்க போறோம்?”

“அதெல்லாம் செய்யலாம். நீ பதட்டப்படாதே. நீயும் உன்னோட ஆரோக்கியமும் தவிர வேற எதும் முக்கியம் இல்ல. முக்கியமா நீ தான் கவனமா இருக்கணும். சாதாரணமாவே இது சோர்வாக்குற நிகழ்வுகள் தான். அதோட நாம நிறைய பேரை நம்ப வைக்கவும் செய்யணும். அதனால நீ நல்ல உடல்நலத்தோட இருக்கறது அவசியம். நாம எந்த தப்பும் செய்திடக் கூடாது” என ஆர்யன் சொல்ல, படப்படப்பான ருஹானா அங்கே இருந்த அட்டைப் பெட்டியை கை தவறி தட்டி விட்டாள்.

இருவரும் கீழே குனிந்து சேர்ந்து சிதறிய தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து அட்டைப் பெட்டியில் போட்டனர். ஆர்யனுக்கு அவளுடன் சேர்ந்து செய்யும் எந்த வேலையும் உவப்பையே தந்தன. அவளோடு இருக்கும் பொழுதுகளை நீட்டிக்கவும் மனம் பேராவல் கொண்டது.

“என்னை மன்னிச்சிடுங்க. நான் எந்த நிலைமைக்கு இழுத்துட்டு வந்துட்டேன்?”

“எல்லாம் சமாளிச்சிக்கலாம். முதலில் அழைப்பிதழ் தெரிவு செய்யலாம்.”

“நான் இதை அடுக்கிடுறேன். அப்போ தான் பார்க்க வசதியா இருக்கும்.”

இதயத்தில் வரைந்த காதல் ஓவியம்

முற்றும் முழுமை பெறும் நிகழ்வாய்

இருமனங்கள் இணையும் நாள்….

இந்நாளை காதல் கனவோடு

சிற்பி செதுக்கும் சிற்பமாய்

ஒவ்வொரு நிகழ்வையும்

காதலன் வகைப்படுத்துகிறான்!

காதலாய் மெனக்கெடுகிறான்!

———

இரவு முழுவதும் தூங்காமல் பலத்த யோசனையில் கரீமா அமர்ந்திருக்க, தூங்கி எழுந்த அம்ஜத் “என்ன கரீமா? உன்னோட அமைதி பறந்துடுச்சா?” என கவலையாகக் கேட்டான்.

“இல்லயே டியர்! நான் இப்போ தான் அதிக அமைதியா இருக்கேன்” என்று எழுந்த கரீமா, சல்மாவின் அறைக்கு வந்தாள்.

அமைதியாக தங்கைக்கு மாத்திரையை எடுத்து கையில் கொடுக்க, சல்மா “என்னை மன்னிச்சிடு அக்கா. நேத்து என்னோட கட்டுப்பாடு இல்லாம இதெல்லாம் செய்துட்டேன்” என்றாள்.

“நடந்தது எல்லாம் போகட்டும். இனிமேல் என் கண்ணு முன்னால தான் நீ மாத்திரை சாப்பிடப் போறே. எனக்கு நீ உதவிக்கு வேணும், சல்மா! இனி நான் செய்யப் போற வேலைக்கு என்னோட ஒரு மூளை பத்தாது. நீயும் துணைக்கு இருந்தா தான் இந்த போர்ல என்னால சண்டை போட முடியும்.”

“உனக்கு என்னமோ யோசனை இருக்கு அக்கா! நீ பதட்டம் இல்லாம இருக்கே!”

“நீயும் அப்படி ஆகிடுவே. ஒழுங்கா மாத்திரை சாப்பிடு. சீக்கிரமே எல்லாம் சரியாகிடும். உன்னோட முழு சக்தியும் திரட்டிக்கோ!”

——–

சோபாவில் அருகருகே அமர்ந்து இருவரும் அழைப்பிதழ்களை ஆராய்ந்துக் கொண்டு இருந்தனர்.

“எப்படி தான் இப்படி அழைப்பு கொடுத்து கல்யாணம் செய்துக்கறாங்களோ?” என ஆர்யன் அலுத்துக் கொள்ள, ருஹானாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. “இதுல பாரேன்! ஜிகினா தூள் தான் கொட்டிக் கிடக்கு” என்று ஆர்யன் ஒவ்வொன்றின் முகப்பையும் பார்த்து  திருப்தி இல்லாமல் மறுத்துக் கொண்டிருந்தான்.

ருஹானா எடுத்து பார்த்த ஒரு அழைப்பிதழில் திருமண ஜோடியின் புகைப்படம் இருந்தது. அதை இழுத்தால் வரவேற்பு வாசகங்கள் தெரிந்தது. அவள் புன்னகையோடு அதை இழுத்து பார்க்க “இது உனக்கு பிடிச்சிருக்கா?” என ஆர்யன் கேட்க, “இல்லயே!” என அவள் அதை தள்ளி வைத்துவிட்டாள்.

நெடுநேர தேடுதலுக்கு பின் இறுதியாக ஒரு பூக்குவியலின் இடையே முடிவீலி சின்னம் கொண்ட அழைப்பிதழை பார்த்த ருஹானா “நான் தேர்ந்தெடுத்துட்டேன்னு நினைக்கிறேன்” என அதை கையில் எடுத்து ஆர்யனிடம் கொடுத்தாள்.

அதை மகிழ்வாக பார்த்த ஆர்யன் “முதல் வேலையை வெற்றிகரமா முடிச்சிட்டோமா?” என்றான். இருவரும் ஆர்யன் செதுக்கிய முடிவீலியை ருஹானாவிற்கு பரிசளித்த நினைவுகளுக்கு சென்றுவிட்டனர்.

“அழைப்பிதழ் தேர்ந்தெடுத்துட்டோம். அதுல எழுதற வாக்கியங்கள்? அது தான் நம்மை அதிக வேலை வாங்கப் போகுது” என ஆர்யன் சொல்ல, “உங்கள் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இது போதாதா?” என ருஹானா கேட்டாள்.

“இது எல்லாத்துலயும் இருக்கற அதே வாக்கியங்கள். நாம அழைப்பு மட்டும் விடுக்கல. நம்மோடது நிஜ கல்யாணம்னு எல்லாரையும் நம்ப வைக்க போறோம்” என ஆர்யன் சொல்ல, ருஹானா பெருமூச்செறிந்தாள்.

“ஆமா, பழசுல இருக்கறது நமக்கு ஏதாவது ஐடியா தருதான்னு பார்க்கலாம்” என்றவள் ஒரு அழைப்பை எடுத்து படித்தாள். “எங்கள் மகிழ்ச்சியைக் காண வாருங்கள். இல்ல.. இது சரி வராது” என அவளே வைத்துவிட்டாள்.

”அது எடுத்து பாரு!”

“இந்த நாளில் இந்த நேரத்தில்..”

“இது வியாபார சந்திப்பு அழைப்பு போல இருக்கு” என ஆர்யன் சொல்ல, ருஹானா சிரித்தாள்.

“இந்த சந்தோசமான நாளில், காதலின் படிக்கட்டில் நாங்கள் அடியெடுத்து வைக்கும்போது…” பாதியிலேயே நிறுத்திவிட்டாள்.

“எல்லாம் வழக்கமான வாக்கியங்கள். இது சரிவரும்னு நீ நினைக்கிறியா? வேற ஒருத்தர் வாழ்க்கைல நடந்தது நம்ம வாழ்க்கைக்கு எப்படி பொருந்தி வரும்?”

“ஒன்னு சாதாரணமா இருக்கு. இல்லனா செயற்கையா இருக்கு. அப்படியும் இல்லனா மிகைப்படுத்தப்பட்டதா இருக்கு” என ருஹானாவும் ஆமோதித்தாள்.

“எதுவும் உண்மையா இல்ல. ஏதோ குறையுது” என இருவரும் சேர்ந்து சொல்ல, இருவர் முகத்திலும் புன்முறுவல்.

“நீ சொல்றது சரி தான். இது சாதாரணமாவும் இருக்கக் கூடாது. அழைப்பிதழ்ல எழுத போற வாக்கியங்கள் தான் திருமண ஜோடி எப்படிப்பட்டவங்கங்றதை எல்லாருக்கும் காட்டும். அதனால அது சிறப்பா இருக்கணும்” என்று சொன்ன ஆர்யன், வருத்தம் தோய்ந்த ருஹானாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் கண்டுபிடிச்சிட்டேன்னு நினைக்கறேன்” என ஆர்யன் சொல்ல, ருஹானா ஆவலாக அவனை திரும்பிப் பார்த்தாள்.

காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது, நாங்கள் இருவர் மட்டும் இருக்கும் உலகத்தில்… உலகின் மற்றுமொரு அதிசயம் என நான் அவளை வியந்து கொண்டிருக்கிறேன். ஓர் இரவின் பொழுதில் அவள் வீட்டின் எல்லா கடிகாரங்களையும் நிறுத்தினாள். 

பின்னும் எழுந்து சென்று மேசை மேல் இருந்த மணற்கடிகாரத்தை சாய்த்து படுக்க வைத்தாள். “அதை நேராக நிறுத்தாவிட்டால் நேரம் காட்டாதே, பின் ஏன் அதை நிறுத்துகிறாய்?“ என நான் கேட்டேன்.. 

அவள் என் கண்களை பார்த்து சொன்னாள். “உன்னுடன் கழிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் எனக்கு அற்புதமானவை. இந்த வீட்டில் உன்னுடன் காலம் கடந்தும் நான் இருக்க விரும்புகிறேன்.” 

நான் திரும்பி அந்த மணற்கடிகாரத்தை பார்த்தேன். இரு பகுதிகளாக இருந்த அதை நடுவில் ஓடிய மணல் ஒன்றாக இணைத்திருந்தது. 

அது எங்களைப் போலவே இருந்தது. அச்சு அசல் எங்களைப் போலவே..” 

ருஹானாவின் கண்களை பார்த்து ஆர்யன் மனப்பாடமாக உருக்கமாக சொல்ல, அவளின் விரிந்த விழிகள் ஆடாமல் நின்றன.

(தொடரும்)

Advertisement