Advertisement

“எனக்கு பைத்தியம் பிடிக்குது. உள்ள என்ன தான் நடக்குது?” என்று புலம்பிய சல்மா தலையில் அடித்துக்கொண்டாள். இருக்கையில் அமர்ந்தபடியே ஆடினாள். ஓவென கத்தினாள். வாயை இறுக்கமாக கைகளால் மூடிக்கொண்டாள்.

மருத்துவரின் கார் உள்ளே செல்ல கடகடவென சிரித்தாள். “டாக்டர் போறாரே.. இதோ தொடங்கிடுச்சி.. அவ சாகப் போறா.. சாகப் போறா…”

கண்களில் கண்ணீர் வடிய சிரித்தவள் முகம் விகாரமானது. “நான்.. கொலைகாரி! நான் அவளை கொன்னுட்டேன்” என அழுதாள். கண்களை உருட்டியவள் அரக்கத்தனமாக சிரித்தாள். “அவளுக்கு இது வேணும்! அவ எனக்கு செஞ்சதுக்கு நல்லா வேணும்!”

——–

மயங்கி கிடந்த ருஹானாவை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருக்க, அருகில் கவலையாக நின்ற ஆர்யன் “அவ எதுவுமே சாப்பிடல. மூலிகை டீ மட்டும் தான் குடிச்சா. ஆனா அவளால நிற்க கூட முடியல” என சொன்னான்.

——-

“என்ன ரொம்ப நேரமா ஒரு சத்தமும் இல்ல” என்ற சல்மா முகத்தை துடைத்துக்கொண்டாள். தலைமுடியையும் சரிபடுத்தியவள் காரை விட்டு இறங்கி மெல்ல மாளிகைக்குள் எட்டிப் பார்த்தாள்.

அவள் முடியை பற்றிய கரீமா அவளை தள்ளிக்கொண்டு படி ஏறினாள். “அக்கா! என்ன செய்றே? விடு, வலிக்குது” என சல்மா கத்த, அவள் வாயையும் பொத்தி அறைக்கு இழுத்துக்கொண்டு போனாள். நஸ்ரியா இதை பார்த்தவள் ஓரமாக ஒளிந்து கொண்டாள்.

“இந்த முறை நீ எல்லை மீறிட்டே சல்மா” என அவளை கரீமா கட்டிலில் தள்ளினாள்.

“என் முடியை விடு” என சல்மா கத்த கரீமா அவளை மாறி மாறி அறைந்தாள். “முட்டாள்! முட்டாள்! அறிவு கெட்டு போச்சா உனக்கு?”

“அக்கா நிறுத்து!”

“யோசிச்சி எதும் செய்ய மாட்டியா? நம்ம ரெண்டு பேரையும் சாகடிக்க போறீயா? என்ன செய்து வச்சிருக்கே நீ?” என சல்மாவின் தலையை பிடித்து ஆட்டினாள்.

“உனக்கு… உனக்கு தெரிஞ்சிடுச்சி!” என அதிர்ச்சியான சல்மா “அவ என்ன ஆனா? இன்னும் சாகலயா?  ஏன் சாகல?” என முகத்தில் அடித்துக்கொண்டு அழுதாள்.

“சல்மா! எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறே நீ!”

“நீ தான் நிறுத்தி இருக்கே! ஐயோ! நான் அவ கதையை முடிச்சிட்டேனே! நீ நடுவுல வந்து கெடுத்துட்டே!” என அக்காவை பிடித்து தள்ளி விட்டாள்.

சல்மா வெளியே கிளம்பவும் அவள் மீதான சந்தேகம் தீராத கரீமா அவளது அறையின் குப்பைத்தொட்டியை ஆராய அதில் கிடந்த காலி புட்டியை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அதில் வீசிய நாற்றம் அவளது சந்தேகத்தை உறுதிப்படுத்த ருஹானாவின் அறைக்கு விரைந்தாள்.

ஆர்யனும் ருஹானாவும் மஞ்சள் மலைக்கு சென்றிருக்க, ருஹானாவின் கஷாய குடுவையை திறந்து பார்த்தாள். அதே வாசம் அதிலும் அடிக்க அதைக் கீழே கொண்டுவந்து கொட்டிவிட்டு குளிர்சாதன பெட்டியில் சாரா தயாரித்து வைத்திருந்த மூலிகை தேநீரை அதில் ஊற்றி அதை எடுத்த இடத்தில் வைத்துவிட்டாள்.

“ஆமா, நீ அவளுக்கு விஷம் வைப்பே! ஆர்யன் உன்னை போம்மான்னு உனக்கு பரிசு கொடுத்து அப்படியே அனுப்பி வைப்பான். முட்டாளுக்கெல்லாம் முட்டாளே! அவன் உன்னை தீர்த்துக் கட்டாம விடமாட்டான். உன்னோட சேர்த்து என்னையும் உயிரோட குழி தோண்டி புதைச்சிடுவான்.”

“நான் அவளை கொன்னுருப்பேன். ஆர்யன் எனக்கு கிடைக்கலனா அவளுக்கும் கிடைக்கக் கூடாது. நீ தடுக்கலனா இந்நேரம் அவ நரகத்துக்கு போயிருப்பா! என் முயற்சி எல்லாம் நீ வீணாக்கிட்டே!”

“உனக்கு அறிவே வேலை செய்யாதா? நீ ஆர்யன் கிட்டே தப்பிச்சாலும் போலீஸ்ட்ட மாட்டி ஜெயில்ல களி சாப்பிட போயிருப்பே. நீயும் உன் கோபமும்… உன்னை எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு பார்?”

——–

ருஹானாவிற்கு சிகிச்சை முடித்த மருத்துவர் “எதும் கவலைப்படற மாதிரி இல்ல. ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் குறைஞ்சிருக்கு. இன்னைக்கு ஒரு நாள் ஓய்வு எடுத்தா சரியாகிடும்” என்று சொல்ல, ஊசி போட்ட இடத்தை தடவி விட்ட ருஹானா “நானும் அதை தான் சொன்னேன்” என சொல்ல, மருத்துவர் சிரித்தார். “ஆனாலும் மிஸ்டர் ஆர்யன் பயந்துட்டார்.”

இன்னுமுமே கவலை நீங்காத ஆர்யன் “ஆனா ஏன் இப்படி மயக்கம் வந்தது?” என மருத்துவரிடம் கேட்டான்.

“சமீபத்தில அவங்க உணர்ச்சிவசப்படற மாதிரி ஏதாவது நடந்ததா?”

“நாங்க எங்க திருமண நாளை நெருங்கிட்டு இருக்கோம்” என ஆர்யன் சொல்ல, அவர் புன்னகைத்தார்.

“இப்போ எனக்கு புரியுது. நீங்க நல்லா சாப்பிடுங்க! தூங்கி எழுந்திருங்க! எல்லாம் நார்மலுக்கு வந்துடும். சில வைட்டமின் மாத்திரைகள் எழுதி இருக்கேன். அதையும் சாப்பிடுங்க” என்று சொன்னவர் “திருமணம் நல்ல செயல் தான். அதோட உங்களையும் நீங்க கவனிச்சிக்கங்க. ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. உங்களை சோர்வடைய வச்சிக்காதீங்க” என்று அறிவுறுத்தினார்.

——–

“என்னால ஒத்துக்கவே முடியல அக்கா! எனக்கு வேதனை தாங்க முடியல! நான் ஆர்யனை அதிகமா நேசிக்கறேன். அவன் அந்த குப்பையை கல்யாணம் செய்துக்க போறான்ங்கற நினைப்பையே என்னால ஏத்துக்க முடியல. நான் செத்துப் போறேன்” என சல்மா கரீமாவை கட்டிக்கொண்டு அழுதாள்.

“அப்படி மட்டும் யோசிக்காதே! இன்னொரு முறை உன் கிட்டே இருந்து அந்த வார்த்தையை நான் கேட்கக் கூடாது.”

கரீமாவை தள்ளிவிட்ட சல்மா “நீ கேட்டா கேளு, கேட்கலனா போ! என்னால முடியல.  எனக்கு சுவாசிக்க முடியல! என் நெஞ்செல்லாம் எரியுது. எனக்கு வாழ பிடிக்கல. நான் சாகப் போறேன்” என விக்கி அழுதாள்.

திரும்ப வந்து தங்கையை தழுவிக்கொண்ட கரீமா “வாயை மூடு சல்மா! திரும்ப சொல்லாதே! என்மேலே நம்பிக்கை வை. எல்லாம் சரியாகும். இது சத்தியம்” என அவள் கண்ணீரை துடைத்தாள்.

——–

கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ருஹானா தன் உடல்நலம் குறித்து ஆர்யன் கொள்ளும் கவலையை நினைத்து பூரித்திருக்க, கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும் ஆர்யனோ என நிமிர்ந்து அமர்ந்தாள். கலைந்த கூந்தலை கையால் சரிபடுத்திக் கொண்டாள்.

சாரா உணவு கோப்பையுடன் உள்ளே வரவும் ஏமாற்றமானாள். “ருஹானா! எப்படி இருக்கே மகளே? இந்த சூப்பை குடி!” என சாரா சொல்ல “நல்லா இருக்கேன், சாரா அக்கா! இதை நான் தூங்கி எழுந்து குடிக்கவா?” என கெஞ்சுதலாக கேட்டாள்.

“அதெல்லாம் முடியாது. சீக்கிரம் உடம்பு சரியாகணும்னா நீ குடிச்சி தான் ஆகணும்.”

“எனக்கு இப்போ குடிக்க பிடிக்கல, சாரா அக்கா!”

“ஆர்யன் சார் சொல்லி தான் நான் செஞ்சி எடுத்துட்டு வந்தேன். உனக்கு வேணாம்னா நான் அவர்கிட்டே சொல்லிடுறேன்” என சாரா மிரட்ட “சரி, கொடுங்க. ஒரு ஸ்பூன் இல்லனா ரெண்டு ஸ்பூன் சாப்பிட்டு பார்க்கறேன்” என வாங்கி ஒரு கரண்டி குடித்தவள் முகம் சுருக்கினாள்.

“இல்ல, என்னால சாப்பிட முடியல” என ருஹானா திருப்பி தர கதவருகே நின்ற ஆர்யன் “நீ சாப்பிட்டு தான் ஆகணும்” என்றபடி உள்ளே வந்தவன் “டாக்டர் சொன்னது நீயும் கேட்டே தானே?” என்று சாராவின் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டான்.

சாரா சிரித்தபடி வெளியே செல்ல, ஆர்யன் ஒரு முக்காலியை அவள் கட்டில் அருகே நகர்த்திப் போட்டு அமர்ந்தான். கரண்டி நிறைய சூப்பை எடுத்தவன் “சாப்பிடு!” என அவளிடம் நீட்டினான்.

அவள் கோப்பையோடு கையில் வாங்கிக்கொள்ள “அப்படித்தான்!” என பக்கம் அமர்ந்து ஆர்யன் ஊக்குவிக்க, அவள் மெல்ல சாப்பிட ஆரம்பித்தாள்.

———

கீழே வந்த சாராவை வேகமாக கையை பிடித்து இழுத்த நஸ்ரியா அவரை நாற்காலியில் அமர வைத்தாள். “உங்களை எங்க எல்லாம் தேடுறது, பெரியம்மா? நான் ஒரு ரகசிய தகவல் வச்சிருக்கேன்” என்று சொல்ல, “நான் உன்னைப் போல இல்ல, நஸ்ரியா. வேலை பார்க்கறேன்” என சாரா முறைத்தார்.

“அதெல்லாம் விடுங்க பெரியம்மா! கரீமா மேடம் சல்மா மேடமை முடியை பிடிச்சி தரதரன்னு இழுத்துட்டு போனாங்க. இது மாதிரி நான் பார்த்ததே இல்ல” என கரீமா செய்ததை போல நஸ்ரியா செய்து காட்ட, சாரா பதறினார்.

“வாயை மூடு. அவங்க சகோதரிகள். என்ன வேணா செய்யட்டும். இங்க பாரு, இதைப்பற்றி நீ யார்கிட்டேயாச்சும் சொன்னேன்னு தெரிஞ்சது உன் காலை உடைச்சிடுவேன். போய் அரிசியை கழுவு. கைக்கு வேலை கொடு. வாய்க்கு கொடுக்காதே!”

“நான் நினைக்கிறேன், ஆர்யன் சாரை சல்மா மேடம் காதலிக்கறதால தான் இந்த சண்டை”

“அல்லாஹ்! இந்த பொண்ணுக்கு அறிவை கொடுங்க!”

“மாளிகைல என்ன என்னமோ நடக்குது. நான் இங்க அரிசியை கழுவிட்டு இருக்கேன். ஏழையா இருந்தா பணக்காரங்க பத்தி வதந்தி கூடவா பேசக்கூடாது?”

“உன் காலோடு சேர்த்து உன் வாயையும் உடைக்கப் போறேன், பார்!”

——–

Advertisement