Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

    அத்தியாயம் – 106

சல்மா நகத்தை கடித்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருக்க, கரீமா கோபமாக கதவை திறந்தபடி உள்ளே வந்தாள்.

“என்ன நடந்தது அக்கா?”

“நீ கூட கேள்வி கேட்கறியா, என்ன? வெரிகுட்! ரூம்லயே தானே அடைஞ்சி இருப்பே!”

“உனக்கு சொல்ல விருப்பம் இல்லனா சொல்லாதே, போ!”

“ஆர்யன் ருஹானா காதல்ல திருப்தியாகி இவானை தந்துட்டு ஆபிஸர்ஸ் கிளம்பிட்டாங்க” என்று சொன்ன கரீமா, சல்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த கோபமோ, ஏமாற்றமோ அதில் தெரியாதது கண்டு “உன்னோட பிளான் என்ன, சல்மா?” எனக் கேட்டாள்.

“என்ன இருக்க முடியும் அக்கா? திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்காதே!”

“நீ நார்மலா இல்ல..  அதான் கேட்கறேன்.”

“ஆமா, என்னால எதும் செய்ய முடியல. நான் தோத்துட்டேன். ஒத்துக்கறேன். விடு” என்று சொன்ன சல்மா கைப்பையை தோளில் போட்டுக்கொண்டு, “நான் போய் கொஞ்சம் வெளிக்காத்து வாங்கிட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டாள்.

———

மலை முகட்டில் மாலை மயங்கி இரவு கவிழும் நேரம்.

விண் தாரகைகளின் அழகை ரசித்துக்கொண்டு ருஹானா இருக்க, தன் தாரகையின் அழகை பருகிக்கொண்டு ஆர்யன் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.

ருஹானா மூக்கை உறிஞ்சவும், தன் குளிராடையை கழட்டி அவள் தோளில் போர்த்தினான். அவள் நன்றி சொல்ல, “நீ போலாம்னு சொன்னா நாம கிளம்பலாம். குளிர்காற்று அதிகமானது உனக்கு தெரியல.  உனக்கு வயிறும் சரியில்ல” என ஆர்யன் அவள் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தந்து சூழலையும் விவரித்தான்.

“அது பரவாயில்ல. இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க வந்தது எனக்கு நல்லா இருக்கு. நன்றி” என்று அவள் சொல்ல, தலையாட்டி அவள் நன்றியை ஏற்றுக்கொண்ட ஆர்யன் எழுந்து கொண்டு, ருஹானா எழுவதற்கு உதவ கை நீட்டினான்.

அங்கே வேறு யாரும் இல்லாத போதும் கை கொடுக்கும் ஆர்யனை அதிசயமாகப் பார்த்த ருஹானா, சற்று தயங்கினாலும் அவன் கையைப் பற்றிக்கொண்டு எழுந்தாள்.

“அதோ எரிநட்சத்திரம்!” என ருஹானா மறுகையை வானை நோக்கி காட்டி உற்சாகமாக சொல்ல, ஆர்யனின் அலைபேசி அடித்தது.

“ஆர்யன் சார்! நீங்க எப்ப வருவீங்கன்னு ரஷீத் கேட்கறார். நான் என்ன சொல்ல?” என ஜாஃபர் கேட்க, “நாங்க மஞ்சள் மலைல இருக்கோம். இன்னும் 15 நிமிடத்துல வந்துடுவோம்” என்று ஆர்யன் சொல்ல, புன்னகை செய்த ஜாஃபர் “மஞ்சள் மலையா? சரி சார்! நான் ரஷீத்ட்ட சொல்லிடறேன்” என்று போனை வைத்தான்.

எழுந்து நின்ற பின்னும் ருஹானா ஆர்யன் கையை பிடித்துக்கொண்டே எரிநட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆர்யன் போன் பேசும்போதும் சரி, பேசி முடித்தபின்னும் சரி அவள் கையை விலக்கவில்லை.

செல்பேசியை கோட் பையில் வைத்த ஆர்யன் தங்களின் இணைந்த கைகளை பார்த்துக்கொண்டே இருந்தான். ஆகாயத்தை விட்டு சிரிப்புடன் பார்வையை திருப்பிய ருஹானா, ஆர்யனின் நிலைத்த பார்வையை தொடர, தான் இன்னும் அவன் கையை பிடித்திருப்பது கண்டு மெல்ல உருவிக்கொண்டாள்.

ருஹானாவின் மனம் தன்னை நெருங்குவதை இது போன்ற தருணங்கள் மூலம் ஆர்யன் உணர்ந்தே இருந்தான். அதனாலேயே சமூகசேவை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இருந்தபோது அவளுக்கு தான் சந்தேகமும் பயமும் இருந்ததே தவிர அவனுக்கு ஒரு கணப்பொழுதும் இல்லை. அவளின் பதட்டம் கண்டு அவன் ஆச்சரியமும் அடைந்தான்.

    ———

காரில் அமர்ந்திருந்த சல்மா “எங்க இருக்கே? சீக்கிரம் வா! வந்து விஷத்தை குடிச்சிட்டு செத்து போ! எங்க வாழ்க்கையை விட்டு போ!” என முன்னே இருந்த சக்கரத்தை ஓங்கி அடித்தாள்.

ஆர்யன் கார் தெரு முனையில் நின்ற சல்மாவின் காரை கடந்து அர்ஸ்லான் மாளிகைக்குள் நுழைந்தது.

“என்னோட காதலை, வாழ்க்கையை அபகரிச்சிட்டேல? போய் குடி! அதான் உன் முடிவு! உனக்கு அது தேவை தான்! இப்போ நீ சவ சீலைல சுத்தி தான் வெளிய போகப் போறே!”

கண்ணீருடன் பேயைப் போல சிரித்தாள் சல்மா.

———

ஆர்யன் அறை வாசலில் விடைபெறும்போது ருஹானா திரும்பவும் நன்றி சொல்ல “உன் மூலிகை டீயை குடிக்க மறக்காதே!” என அவன் நினைவூட்டினான். தலையசைத்து அவள் திரும்பி நடக்க “இன்னொரு விஷயம்” என்று சொல்லி அவளை நிறுத்தினான்.

“நடுவுல துருவ நட்சத்திரம் நிற்க எல்லா நட்சத்திரங்களும் அதை சுத்தி வருது” என அவன் சொல்ல, அவளால் சந்தோஷ திகைப்பை மறைக்க முடியவில்லை. அதற்கு பதில் சொல்லவும் முடியவில்லை.

அறைக்கு வந்து கதவை சாத்தியவள் சிரிப்புடன் குளிரங்கியை கழட்டினாள். சந்தோசத்தில் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரு மோதிரங்களையும் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

மேசை மேல் இருந்த கஷாயத்தை எடுத்து இரண்டு மடக்கு அருந்தினாள். ஜன்னல் திரையை விலக்கி துருவ நட்சத்திரத்தை பார்த்துக்கொண்டே இன்னும் இரண்டு மிடறு விழுங்கினாள். அன்று நடந்த சந்தோஷ நிகழ்ச்சிகளையும் மஞ்சள் மலையை பற்றியும் எண்ணி உதடுகள் விரிய முறுவலித்தாள்.

அப்போது கதவை தட்டி உள்ளே வந்த ஆர்யன் “உன் கிட்ட ஒன்னு சொல்லணும்.  உனக்கு வயிறு வலி இப்போ எப்படி இருக்கு?” என்றான்.

“இப்போ பரவால்ல. சாரா அக்காவோட மூலிகை டீ நல்லா வேலை செய்யுது.”

“நல்லது!”

“நீங்க என்ன சொல்ல வந்தீங்க?”

“நம்ம திருமணத்துக்கு என்னன்ன செய்யணும்னு பார்க்கனும். நாட்கள் குறைவா இருக்கு. ஜாஃபர்ட்ட லிஸ்ட் போட சொல்லி இருக்கேன், செய்ய வேண்டிய லிஸ்ட்..  நாளைக்கு ரெடியாகிடும்.  அதன்படி மடமடன்னு வேலையை தொடங்கணும்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ருஹானாவின் கண்கள் இருள இலேசாக தள்ளாடினாள்.

“என்ன ஆச்சு உனக்கு?”  என பதறிய ஆர்யன் அவள் கையைப் பிடித்தான்.

“லேசா தலைய சுத்திச்சி. வேற ஒன்னும் இல்ல.”

“நீ சரியா இல்ல. உன்னால நிக்க கூட முடியல.”

“இல்ல, நல்லா தான் இருக்கேன். கொஞ்ச நேரத்தில சரியாகிடும்.”

“எதும் வேணுமா உனக்கு?” என ஆர்யன் கேட்க, “தண்ணீ குடிச்சா போதும்” என வெளியே செல்லப் போன ருஹானா, அடுத்த எட்டு வைக்க முடியாமல் தடுமாறினாள்

அவளை பிடித்துக்கொண்ட ஆர்யன் “உன்னால நடக்க முடியுமா?” என கேட்க, அவள் தலையாட்டவும் அவளை கைத்தாங்கலாக கீழே அழைத்து சென்றான்.

சமையலறையில் நின்ற கரீமா “ருஹானா டியர்! உனக்கு என்ன ஆச்சு?” என பதற, “நான் நல்லா இருக்கேன்” என ருஹானா பதில் சொல்ல, ஆர்யன்  “இல்ல, இவ நல்லா இல்ல” என மறுத்தான்.

“நீ சாப்பிட்ட எதும் ஒத்துக்காம போயிடுச்சா?”

“இல்ல, கரீமா மேம்! நான் எதும் சாப்பிடல. மூலிகை டீ மட்டும் தான் குடிச்சேன்.”

“அப்போ உன்னோட இரத்த அழுத்தம் குறைஞ்சிருக்கும். நான் சாராவை உனக்கு உப்பு போட்டு தயிர் கொடுக்க சொல்றேன். அது உன்னை சரியாக்கும்” என்ற கரீமா, சாராவை தேடிச் செல்ல, “நாம நேரத்தை வீணாக்குறோம். உடனே ஹாஸ்பிடல் போகலாம்” என ஆர்யன் கோபமாக சொன்னான்.

“கரீமா மேம் சொன்ன மாதிரி தான் இருக்கும். இப்போ தண்ணீ குடிச்சா சரியாகிடும்” என அவள் தண்ணீரை எடுக்க செல்ல, அவள் பின்னாலேயே ஆர்யனும் சென்றான். அவளால் டம்ளரில் தண்ணீரை ஊற்ற முடியவில்லை.

“நான் தரேன். உனக்கு ரொம்ப முடியல. வா, ஹாஸ்பிடலுக்கு” என்று ஆர்யன் வற்புறுத்த, “எனக்கு ஒன்னும் இல்ல. கொஞ்சம் ஓய்வு எடுத்தா சரியாகிடும்” என அப்போதும் ருஹானா மறுத்தாள்.

“அப்போ டாக்டரை இங்க வரவழைக்கறேன். அதுக்கும் எதும் சொல்லாதே” என அவன் போனை கையில் எடுத்தான்.

——–

கரீமா அக்கம்பக்கம் பார்த்து சல்மாவிற்கு அழைப்பு விடுக்க, அது எடுக்கப்படவில்லை. “டேமிட்! எங்க போனே நீ? போனை எடு” என திரும்ப முயற்சி செய்தாள்.

காரில் காத்திருந்த சல்மா அலைபேசியின் அழைப்பை நிராகரித்தாள். “இப்போ உன்னோட என்னால பேசிட்டு இருக்க முடியாது, அக்கா” என வாய்விட்டு சொன்ன சல்மா, கரீமா அனுப்பிய செய்தியை படித்தாள். ‘நீ எங்க இருந்தாலும் உடனே வீட்டுக்கு வா!’

கைகளை பிசைந்து கொண்டவள் காரின் பக்கவாட்டில் குத்தினாள். “ஏன் இன்னும் எதும் நடக்கல? அந்த முட்டாள் விஷத்தை குடிக்கலயா?” தலைமுடியை பற்றி பிடுங்கினாள்.

மீண்டும் சல்மாவை தொடர்பு கொள்ள முயன்ற கரீமா, ருஹானாவை ஆர்யன் அணைத்து அழைத்து வருவது கண்டு அங்கே ஓடினாள். “சாரா எங்கன்னு தெரியல. நானே மோர் கலக்கி தரேன்” என அவள் சமையலறைக்கு விரைந்தாள்.

படிக்கட்டில் ஒரு காலை வைத்த ருஹானா “எனக்கு தலை… சுத்துது..” என பின்னால் சாய, ஆர்யன் அவளை பிடிக்க, அவன் கைகளில் மயங்கி சரிந்தாள். ஆர்யன் அதிர்ச்சியடைந்து நின்றான்.

——–

Advertisement