Advertisement

“மிஸ்டர் ஆர்யனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும், உங்க உறவு எத்தனை பலமானதுன்னு கண்டுபிடிக்க தான் இந்த கேள்விகள்” என்று லைலா ருஹானாவிடம் சொல்ல, அதையே ஆர்யனின் அலுவலக அறையில் மற்ற அதிகாரி ஆர்யனிடம் சொன்னார். இருவரையும் தனி தனி அறையில் வைத்து அதிகாரிகள் ஒரே மாதிரியான கேள்விகளை இருவருக்கும் கேட்டனர்.

“அவருக்கு பிடித்த உணவு எது?”

“கார்னியாரிக்.” ருஹானா முகத்தில் புன்னகை மீண்டது.

“ருஹானாவுக்கு என்ன இனிப்பு பிடிக்கும்?”

“பஞ்சு மிட்டாய்!” ஆர்யனும் நிம்மதி கொண்டான்.

“மிஸ்டர் ஆர்யன் பிறந்த தேதி என்ன?”

“மிஸ் ருஹானா பிறந்த தேதி எது?”

இருவரும் சரியான பதிலை கூறினார்கள்.

“ருஹானாவுக்கு சின்னவயசுல பிடித்த விளையாட்டு பொருள் ஏதாவது இருக்கா?”

“இருக்கு. கலைடாஸ்கோப்”

“அவர் அண்ணனுக்கு அவரே மரத்தால செய்து கொடுத்த கார்.”

“உங்களுக்கு ருஹானா ஏதாவது பரிசு கொடுத்து இருக்காங்களா?”

ஆர்யன் எழுந்து சென்று மேசை இழுப்பறையில் இருந்து அந்த துண்டு சீட்டை எடுத்துக் காட்டினான். “நான் ஹாஸ்பிடல்ல இருக்கும்போது ஒரு நர்ஸ் மூலமா இதை கொடுத்துவிட்டா.”

‘இங்கே காத்திருக்கிறேன், உங்களுக்கு வாக்கு கொடுத்தபடி’ என்று எழுதி இருந்த அந்த சீட்டை பார்த்ததும் அதிகாரிக்கு புன்முறுவல்.

“அவரே செதுக்கிய முடிவீலி சின்னம்” என ருஹானா ஆர்யன் தந்த பரிசைப் பற்றி கூறினாள்.

“மிஸ் ருஹானா எதுக்கு பயப்படுவாங்க?”

“இருட்டுக்கு!”

“ஆர்யனுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு எது?”

“நீலக் கடல்ல போயிட்டே இருக்கற கப்பல் பயணம்.”

“வானத்து நட்சத்திரங்களை பார்த்துட்டு இருக்கறது அவளுக்கு பிடிக்கும். ஏன்னா அவளோட அன்புக்குரியவங்க அங்க இருக்கறதா அவ நினைக்கிறா.”

“இதோடு கேள்விகள் முடிந்தது. என்னோட சக அதிகாரிட்ட கலந்து பேசிட்டு முடிவு சொல்றோம்.”

“இன்னைக்கே முடிவு தெரிந்துடுமா?” என ஆர்யன் கேட்க, “பார்க்கலாம்” எனும் பதில் வந்தது.

———

அதிகாரிகள் ஒரு அறையில் ஆலோசிக்க, ஆர்யனும் ருஹானாவும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

“ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான கேள்விகள்னு தான் நினைக்கிறேன்” என பதட்டம் நீங்கிய ருஹானா சொல்ல, “ஆமா!” மோதிரத்தை பிடித்தபடி ஆர்யன் சொன்னான்.

“உணவை பற்றிய கேள்விகள் எளிது தான். உங்க பிறந்த நாள் இவான் சொல்லி எனக்கு தெரியும். ஆனா என் பிறந்த நாள்.. உங்களுக்கு எப்படி?”

“திருமணப்பதிவுக்கு உன் ஐடி கொடுத்தியே. அதுல இருந்ததே?” என்றவன் அவள் முகத்தில் சிரிப்பை காணவும் “நீ நினைத்தது போல கேள்விகள் சிரமமா இல்ல தானே?” என கேட்டான்.

“ஆமா, பக்கத்திலேயே இருக்கறவங்க எப்படி ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிக்காம இருப்பாங்க? அது எனக்கு இப்போ தான் புரிந்தது” என ருஹானா சிவந்த முகத்துடன் சொல்ல, ஆர்யன் அவளை ரசித்து பார்த்தான்.

இரு அதிகாரிகளும் அங்கே வர, இருவருக்கும் மறுபடியும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கரீமாவும் மேல்மாடி வளைவில் வந்து நின்று ஆவலாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இவானைப் போல சின்ன குழந்தையை பற்றிய விஷயம்ங்கறதால நாங்க கவனமா எல்லாத்தையும் ஆராய்ந்தோம். இவானோட நலத்தை கருத்தில்கொண்டு… அவன் உங்ககிட்டேயே வளரலாம்ன்னு நாங்க முடிவு எடுத்திட்டோம்.”

ஆர்யனும் ருஹானாவும் ஆனந்தத்தில் திக்குமுக்காடி நன்றி சொல்லக் கூட மறந்தனர். கரீமா முகம் கறுத்து சுருங்கியது.

“தனிப்பட்ட கேள்விகளுக்கும் நீங்க நேர்மையா பதில் சொன்னீங்க. அதுல உங்களோட உணமையான காதல் தெரிந்தது. உங்களுக்கு இடையே வலிமையான இணைப்பு இருக்கு. ஒரு குடும்பமா நீங்க மகிழ்ச்சியா இருப்பீங்க. உங்க கூட இவான் சந்தோசமா இருப்பான்.”

ருஹானாவின் கண்கள் மகிழ்ச்சியால் கலங்க, ஆர்யன் மனதின் பெரும் பாரம் இறங்கியது. அப்போது இவான் அங்கே ஒரு பெட்டியோடு வர, லைலா “இவான் உங்களுக்காக ஒரு பரிசு வச்சிருக்கான்” என்றார்.

“என்ன அன்பே இது?” என ருஹானா கேட்க, அதை திறந்து காட்டிய இவான் “என்னோட விளையாட்டு பொருட்கள்” என்றான்.

“இது உனக்கு வேண்டாமா?”

“இல்ல. இனிமேல் இது என் தம்பிக்கு. அவன் பிறந்ததும் நான் அவன் கூட விளையாடுவேன்” என்று ஒரு பால்புட்டியை எடுத்துக் காட்ட, ருஹானாவிற்கு எங்கே சென்று ஒளிந்து கொள்வது என தெரியவில்லை. அவளால் நிற்கவே முடியவில்லை.

அவள் அதிர்ச்சியுடன் ஆர்யன் முகத்தை பார்க்க, அவன் ருஹானாவின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அப்படியே திகைத்து நின்றான். அவன் அதுவரை இவானை சுற்றியே தன் உலகத்தை அமைத்திருந்தான். தன் தனிப்பட்ட குடும்பம் என்று ஒன்றை அவன் எதற்காகவும் கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை.

இவான் தான் ஆர்யன் மனதில் திருமணம் என்னும் வித்தை முதலில் விதைத்தான். இப்போது குழந்தை எனும் செல்வத்திற்கு ஆசை காட்டுகிறான். தனக்கும் ஒரு குழந்தை என்ற நினைப்பே ஆர்யனை ஏகாந்தத்தில் மிதக்க வைத்தது.

“தம்பி வந்ததும் அவனோட நான் விளையாடுவேன். எல்லாமும் அவனுக்கு கொடுப்பேன்” என்று இவான் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் காட்டினான்.

இவானின் பேச்சை கவனித்த ஆர்யன் கனிவாக ருஹானாவை பார்த்து இளநகை புரிந்தான்.

“சித்தி! உங்களுக்கு அண்ணா இருக்கார்ல, தன்வீர் அங்கிள்?” என இவான் கேட்க, ருஹானாவிற்கு வார்த்தை வராமல் “ம்ஹூஹும்!” என்றாள். “அவரைப்போல நானும் அண்ணா. உங்களுக்கு அவர் எப்படியோ அப்படியே நான் என் தம்பிக்கு” என்று இவான் சொல்ல, ஆர்யன் மனதில் இன்பக் கற்பனைகள் விரிந்தன.

“இப்போ இதை நான் எடுத்து வச்சிடுறேன்” என்று ருஹானா எல்லாப் பொருட்களையும் பெட்டியில் எடுத்துப் போட்டபடி, கண்களால் மட்டும் நகைக்கும் ஆர்யனின் பார்வையை தவிர்த்தாள்.

——–

ஆர்யனும் ருஹானாவும் ஒரு மலையுச்சியில் நின்றிருந்தனர். அங்கே இருந்து பார்க்க கீழே வண்ண விளக்குகள் மின்ன அகாபா நகரம் முழுவதும் கண் கொள்ளா காட்சியாக தெரிந்தது என்றால், வானத்தில் எண்ணற்ற விண்மீன்களும் போட்டி போட்டுக் கொண்டு ஜொலித்தன.

“ரொம்ப…. ரொம்ப அழகா இருக்கு. இது எந்த இடம்? நாம ஏன் இங்க வந்திருக்கோம்?”

“இன்னைக்கு நாம ஒரு கடினமான தேர்வை கடந்து வந்திருக்கோம். உனக்கு நான் கடமைப் பட்டிருக்கேன். அதுக்கு உனக்கு நன்றி சொல்ல தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.”

“நன்றியா? ஆனா…”

விரலை உயர்த்தி ஆகாயத்தை காட்டிய ஆர்யன் “அந்த வானம் தான் உனக்கு சரியான பரிசு. ஏன்னா வானத்து நட்சத்திரங்களை பார்த்து ரசிக்க அகாபா நகரத்துல இதான் சரியான இடம்” என்றான்.

“எனக்கு நட்சத்திரங்கள் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

“இன்னைக்கு தானே நாம வெற்றிகரமா பரிட்சை எழுதி முடித்தோம்?”

ஆர்யனின் கேள்வியில் ஆனந்தமான ருஹானா வசதியாக அமர்ந்துகொண்டு வானை ரசிக்க, ஆர்யனும் அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

வானத்தை காட்டிய ருஹானா “அது நம்ம கைல பிடிக்கிற தூரத்துல தான் இருக்கற மாதிரி தெரியும். ஆனா எட்டாத தூரத்துல இருக்கு” என்றவள் ஆர்யனை பார்த்து “நீங்க எப்பவும் இங்க வருவீங்களா, நட்சத்திரங்களை பார்க்க?” எனக் கேட்டாள்.

“எனக்கு நட்சத்திரங்களை பற்றி ஒன்னும் தெரியாது. நான் மேலே இருந்து  பூமியை பார்ப்பேன். ஏன்னா மேலே இருந்து கீழே பார்க்கறது ஒரு அதிகாரத்தை, சக்தியை எனக்கு தந்திருக்கு” என்றவன் “ஆனா நான் கீழ பார்க்கும்போது நீ வானத்தை பார்க்கறே” என்றான் இறங்கிய குரலில்.

“இப்பவும் ஒன்னும் காலம் கடந்து போயிடல. நீங்க நட்சத்திரங்களைப் பற்றி தெரிஞ்சிக்க விரும்பறீங்களா? நான் சொல்லவா?”

ஆர்யன் தலையசைக்க, ருஹானா கையை நீட்டிக் காட்டினாள். “அங்க பாருங்க, அதான் துருவ நட்சத்திரம். அது அங்க தான் எப்பவும் இருக்கும். மாலுமிகள், பயணிகள் துருவ நட்சத்திரத்தோட உதவியால தான் தங்களோட வழியை கண்டுபிடிக்கிறாங்க.”

அவள் காட்டிய இடத்தை பார்த்திருந்த ஆர்யன் வேகமாக திரும்பி ருஹானாவை நோக்கி “உன்னைப் போல!” என சொல்ல, ருஹானாவின் விழிகள் பளிச்சிட்டன.

“உன்னால தான் இன்னைக்கு இவான் நமக்கு கிடைச்சான். இப்போ இன்னும் ஒரு படி நம்ம முன்ன இருக்கு. உன்னைப் போல ஒரு வழிகாட்டி கூட இருக்கும்போது எதுவும் கடினம் இல்ல. நாம சேர்ந்தே அதையும் கடப்போம்.”

வானமும் பூமியும் பார்த்திருக்க, இருவரும் இரவின் தனிமையில் கண்கள் கலந்து இதயங்கள் பேச மொழியின்றி மௌனமாய் வீற்றிருந்தனர்.

இனிதாய்தொடரும் கப்பல்பயணம்போல் 

நம்மிருவர் வாழ்வாகின்

ஆழ்கடல் நெஞ்சம் கொண்டு 

பூமியையே ஆராயும் என் கண்கள்!

வான்நிலவும் நட்சத்திரங்களும் 

ரசிகமனம் கொண்ட உன்னை கவர்ந்திழுக்கும்!

வானத்து இரவின் நிறமும் பகலின் நிறமும்

கடலின் நிறமாய் ஒளிப்பரப்ப…

இரவின் பயணத்தில் துணையாய்

துருவ நட்சத்திரமாய் நீ வழிகாட்ட

உன் கரம் கோர்த்து பயணிக்கிறேன்!

(தொடரும்)

Advertisement