Advertisement

அடுத்த நாள் காலை ருஹானா இவானின் அறைக்கு செல்ல, அவன் விளையாட்டுப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

“குட்மார்னிங் அன்பே! காலைலயே என்ன செய்றீங்க? சித்தி உதவி செய்யவா?”

“குட்மார்னிங் சித்தி! நான் என் வேலையை முடிச்சிட்டேனே.”

இருவரின் பேச்சுக் குரலை கேட்ட சல்மா மெதுவாக நடந்து ருஹானாவின் அறைக்கு சென்றாள். அங்கே மேசை மேலிருந்த ருஹானாவின் கஷாயத்தில் கொடிய நஞ்சு முழுவதையும் கலந்தாள். அதை மூடிவைத்துவிட்டு திரும்பும் சமயம் சாராவின் குரல் பின்னே கேட்டது.

“சல்மா மேம்!”

காலி விஷப் புட்டியை சட்டையில் மறைத்தவள் “என்ன வேணும், சாரா?” எனக் கேட்டாள்.

“நான் மெத்தைக்கு விரிப்பு மாத்த வந்தேன்” என சாரா சொல்ல, அதற்குள் அங்கே இருந்த ருஹானாவின் புத்தகங்களைப் பார்த்து சமாளித்துக்கொண்ட சல்மா “நானும் ருஹானாட்ட படிக்க புக் வாங்க வந்தேன். அவ ரூம்ல இல்ல போல. அப்புறம் வரேன்” என சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

——–

சமையலறை சிறிய மேசையில் இவானுக்கு ருஹானா காலை உணவு கொடுத்துக் கொண்டிருக்க, நஸ்ரியா அவளிடம் திருமண உடை பற்றி ஆர்வமாக பேச்சுக் கொடுத்தாள்.

“என்ன மாதிரியான கவுன் போடப் போறே ருஹானா?”

“நான் இன்னும் அதுப் பற்றி யோசிக்கலயே, நஸ்ரியா!”

“என்ன இன்னும் முடிவு செய்யலயா? கல்யாணம் பக்கத்துல வந்துடுச்சே. இங்க பாரு, நான் உனக்காக இன்டர்நெட்டுல எத்தனை உடை பார்த்து வச்சிருக்கேன்” என்று தன் அலைபேசியை ருஹானாவிற்கு காட்டினாள்.

இருவரும் அதை பார்த்துக் கொண்டிருக்க, உள்ளே வந்த சாரா “சொன்ன வேலையை மட்டும் விட்டுட்டு மத்தது எல்லாம் செய். போ! ஆர்யன் சார் அறையை சுத்தம் செஞ்சிட்டு வா” என திட்டி அனுப்பி வைக்க, அவள் முனகிக் கொண்டே சென்றாள்.

கையோடு எடுத்து வந்திருந்த ருஹானாவின் கஷாயத்தை அவளிடம் காட்டிய சாரா “என்ன ருஹானா! இது இப்படி நிறம் மாறியிருக்கு? பழசாகிடுச்சி போல. நான் வேற தயாரிக்கவா?” என கேட்டார்.

“இல்ல சாரா அக்கா! இதை நேத்து இரவு தான் நான் செய்தேன். அதிகமா மூலிகை போட்டுட்டேன் போல” என அவள் சொல்ல, “அப்போ ரொம்ப கொஞ்சமா குடி” என்று சொல்லிவிட்டு அவர் அடுப்பருகே நின்று வேலையைப் பார்த்தார்.

கஷாயத்தை குடிக்க திறந்த ருஹானா இவான் இருமவும் அதை வைத்துவிட்டு அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தாள். பின் கையில் இருந்த நஸ்ரியாவின் செல்பேசியில் கவனம் செல்ல திருமண உடைகளை பார்க்கலானாள்.

ருஹானாவையும் இவானையும் தேடிவந்த ஆர்யன் அவளுக்கு பின் நின்றுகொண்டு அவனும் அவற்றை பார்க்க, ஒரு உடையை அவள் பார்த்துக்கொண்டே இருக்க “போட்டோல பார்க்கறதை விட நீ அதை உடுத்தினா இன்னும் அழகா இருக்கும். நீ என்ன நினைக்கிறே சிங்கப்பையா?” என அண்ணன் மகனிடம் கேட்டான்.

இவானும் சித்தப்பாவிற்கு ஏற்றார்போல் “என் சித்தி கதைகள்ல வர்ற இளவரசியைப் போல இருப்பாங்க” என்று சாப்பிட்டுக்கொண்டே சொல்ல, ருஹானா எழுந்து நின்றாள். அவள் பக்கம் வந்து நின்ற ஆர்யன் “நானும் அதை நம்புறேன்” என்றான்.

சங்கடமான ருஹானா “நஸ்ரியா தரவிறக்கம் செய்து வச்சிருக்கா. நான் சும்மா பார்த்துட்டு இருந்தேன்” என்றாள்.

“நீ பார்த்ததுல உனக்கு ஏதாவது பிடிச்சதா?”

“இல்ல, நான் சும்மா… வந்து.. இதெல்லாம் விலை அதிகம்” என்று அவள் சொல்ல, ஆர்யன் அவளை செல்லமாக முறைக்க, “இல்ல.. ஆடையில் இவ்வளவு பணத்தை வீணாக்குவாங்களா?” என கேட்டாள்.

“உனக்கு பிடிச்சிருந்தா அதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. பாரு, நமக்கு நேரம் குறைவா இருக்கு. இதுல இருந்தே தேர்ந்தெடுக்கலாம்” என்று சொல்லி அவளை நெருங்கி நின்று அவளோடு அவனும் பார்க்க, சாரா சிரித்தபடி அவர்களை பார்த்தார்.

ஒரு ஆடையில் அவள் விரல் சில வினாடிகள் அதிகம் நின்று அதை தள்ளப் போக, அவள் விரலை பிடித்த ஆர்யன் “இரு, இது அருமையா இருக்கே! உனக்கு பிடிச்சிருக்கா?” என கேட்க, “எனக்கு தெரியலயே!” என்று அவள் சொல்ல, ஆர்யன் கைப்பேசியை தான் வாங்கிக்கொண்டு அதை உற்று பார்த்தான்.

பதட்டமான ருஹானா கஷாயத்தை குடிக்க எடுக்க, ஜாஃபர் உள்ளே வந்து “சமூக சேவை அதிகாரிகள் வந்திருக்காங்க. வரவேற்பறையில் உட்கார வச்சிருக்கேன்” என்று சொல்ல, ருஹானாவிற்கு மேலும் பதட்டம் ஏற்பட குடுவையை மூடி வைத்துவிட்டு இவான் அருகே சென்றாள்.

“கண்ணே! நீ சாப்பிட்டுட்டு சாரா ஆன்ட்டி கூட உன் அறைக்கு போ!” என்று தலையை தடவி அவனுக்கு தைரியம் அளிக்க, அவனும் தலையாட்டினான்.

———

“எங்களுக்கும் அதிக ஆச்சரியம் தான். திருமணம் செய்ய ஆர்யன் முடிவு எடுப்பான்னு நாங்களும் எதிர்பார்க்கல” என கரீமா சந்தேகம் ஏற்படும்வகையில் சமூக சேவை அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தவள், ஆர்யனும் ருஹானாவும் வருவதை பார்த்துவிட்டு மாற்றிப் பேசினாள், முகத்தில் புன்னகையை கொண்டுவந்து.

“ஆனா காதல் எந்த நேரம் வந்து கதவை தட்டும்னு யாருக்கும் தெரியாதுல? எங்களுக்கு சந்தோசம் தான்.”

ருஹானா வந்து இருவரையும் வரவேற்றுவிட்டு குடிக்க பானங்கள் கொண்டுவர விசாரிக்க, அதை மறுத்த லைலா “இல்ல, நாங்க நேரத்தை வீணடிக்க விரும்பல. நேரே விசாரணைக்கு போகலாம்” என்று சொல்ல, முகம் மாறிய ருஹானா ஆர்யனை கவலையாகப் பார்த்தாள்.

ஆர்யன் அவளுக்கு கண்ணால் அமைதிபடுத்திவிட்டு எதிர் சோபாவை கையால் காட்ட, ருஹானா அதில் அமர கரீமா உள்ளே சென்றாள்.

ஆர்யனும் ருஹானாவின் அருகே அமர்ந்ததும் “நாங்க முதலில் உங்க திருமண ஏற்பாடு இவானை எவ்வளவு தூரம் பாதிச்சிருக்குன்னு பார்க்கணும். இரண்டாவது உங்க திருமணத்தோட உண்மைத் தன்மையை சோதிக்கணும். இது இவானோட கஸ்டடிக்காக செய்ற ஏமாற்று திருமணம் இல்லைன்னு எங்களுக்கு உறுதியா தெரியணும்” என்று லைலா சொல்ல, இருவரும் படபடப்பாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“அதுக்காக உங்க ரெண்டு பேர் கிட்டேயும் நாங்க தனித்தனியா பேசணும். இவான்ட்டயும் பேசணும். அவனுக்கு இந்த திருமணத்துல விருப்பம் இருக்கான்னு பார்க்கணும்” என்று லைலா சொல்ல, ருஹானா பயந்து போனாள்.

ஆர்யன் அவள் கையை பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக்கொள்ள அவள் பதற்றம் தணிந்தது. அதை அதிகாரிகளும் பார்க்க, ஆர்யன் “நாங்க ரெண்டு பேருமே இவானின் நலனை தான் பெருசா மதிக்கிறோம். அவன் எங்களைவிட்டு பிரியறதைப் பற்றி எங்களால நினைச்சிக் கூட பார்க்க முடியாது. நீங்களும் நல்ல முடிவு எடுப்பீங்கன்னு எங்களுக்கு தெரியும்” என்று சொன்னவன் ருஹானாவை பார்த்து “நான் சொன்னது சரி தானே?” என கேட்டான்.

“ஆமா, நீங்க சொன்னது சரி தான்” என்று ருஹானா சொல்ல, “நாங்க இவானிடம் பேசிட்டு உங்களிடம் பேச வரோம்” என்று அதிகாரிகள் எழுந்து கொள்ள, ருஹானாவின் முகம் வலியைக் காட்ட, “உனக்கு இன்னும் வயிறு வலிக்குதா?” என ஆர்யன் கேட்டான்.

ஆமென ருஹானா தலையை ஆட்ட “உன் மூலிகை டீ கிச்சன்ல இருக்கு. ஜாஃபரை எடுத்துட்டு வர சொல்லவா?” என கேட்டான்.

“இல்ல, நானே இப்போ போய் எடுத்துக்கறேன்.”

“அலட்சியமா இருக்காதே! அப்புறம் மோசமாகிடும்.”

“சரி!” என்று சொல்லி ருஹானா எழுந்து செல்ல, அதிகாரிகள் இருவரும் சிரித்துக் கொண்டனர்.

———

சல்மா கை நடுங்க நகத்தை கடித்துக்கொண்டு இருக்க, கரீமா கோபமாக உள்ளே வந்தாள்.

“டேமிட்!”

“என்ன அக்கா! என்ன ஆச்சு?”

“அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட மாதிரி பேசிட்டு இருந்தேன். அதுக்குள்ள ஆர்யன் வந்துட்டான்.”

“ஒஹ்! அப்படியா?”

“இருக்கட்டும். இவானை அதிகாரிங்க கூட்டிட்டு போய்ட்டா இந்த கல்யாணமே நடக்காது. அதுக்கு என்ன வாய்ப்பு கிடைக்கும்னு நான் பார்க்கணும்.”

“ஓஹோ!”

“என்ன! ஆர்வமே இல்லாம கேட்கறே? நீ வேற ஏதாவது திட்டம் வச்சிருக்கியா?”

“இல்லயே! நான் என்னோட நம்பிக்கை எல்லாம் இழந்துட்டேன்.”

“இப்படி ரூமில் அடைஞ்சி கிடக்காம அங்க வந்து எனக்கு உதவி செய்யலாம்ல. ஒன்னுக்கு ரெண்டு மூளையா யோசிச்சா ஏதாவது ஐடியா வரும் தானே?”

“என்னை கொஞ்சம் தனியா விடு அக்கா!”

“பாரு, உன் கை எப்படி கை நடுங்குது. நீ மாத்திரை போட்டு ஒழுங்கான மனநிலைல இருந்தாலே எனக்கு போதும். மத்தது நான் பார்த்துக்கறேன்.”

———

“இவான் செல்லம்! உன்னோட சித்தி சித்தப்பா பற்றி உனக்கு தெரியுமா?”

“ஆமா! ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்க போறாங்க” என சிரிப்புடன் இவான் சொல்ல, இரு அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர்.

“உனக்கு அதுல சந்தோசமா?”

“ஆமா! நான் என்னோட அப்பாவை பார்த்தது இல்ல. என் அம்மா இறந்துட்டாங்க. நான் ரொம்ப அழுதேன். எனக்கு வருத்தமா இருந்தது. இப்போ எனக்கு அம்மாவும் அப்பாவும் கிடைக்கப் போறாங்க. நாங்க சந்தோசமா இருப்போம்.”

“ஏன் இந்த பொம்மைகளை எடுத்து பெட்டியில் போடுறே?”

“இது என்னோட தம்பிக்கு எடுத்து வைக்கிறேன். அவனோட பல் வளரும்போது இதை இப்படி கடிப்பான்” என இவான் செய்து காட்ட, இரு பெண்களும் சிரித்தனர்.

——–

கையில் கஷாயத்தை வைத்துக்கொண்டு ருஹானா அங்குமிங்கும் நடக்க, ஆர்யன் அவளை அமைதிப்படுத்தினான்.

“நிதானமா இரு. இவானோடு விசாரணை நமக்கு சாதகமா தான் அமையும். நம்ம திருமணத்துல மத்தவங்க யாரையும் விட அவனுக்கு தான் அதிக மகிழ்ச்சி.”

“ஆமா, அவனோட கண்ணுலயே மகிழ்ச்சி பொங்கும். நான் அவனை பத்தி கவலைப்படல. என்னை பத்தி தான். நான் எல்லாத்தையும் கெடுத்துடுவனோன்னு பயமா இருக்கு.”

ஆர்யன் அவளை திகைப்பாக பார்த்தான்.

“அவங்க நம்ம கல்யாணத்தை பற்றி நிறைய கேள்வி கேட்பாங்க. உண்மையான காதலர்களா இல்லாம அதுக்கு சரியான பதில் சொல்றது கஷ்டம்.”

ஆர்யன் மனமே உடைந்துவிட்டது. அவளை அதிர்ச்சியாக, பாவமாக பார்த்தான்.

“இவ்வளவு குறுகிய காலத்துல நமக்கு எப்படி நம்மளப் பத்தி தெரிஞ்சிருக்கும்?”

ஆர்யன் பதில் சொல்வதற்குள் இவான் அறையில் இருந்து வெளியே வந்து ருஹானாவைக் கட்டிக் கொண்டான்.

———

Advertisement