Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

    அத்தியாயம் – 105

ஆர்யன் ருஹானாவின் திருமண உறுதி சடங்குகளும் விருந்தும் முடிந்து விடைபெறும் சமயம் வர, பர்வீன் ருஹானாவை கட்டிக்கொண்டு நெகிழ்ந்தார். “என்னோட சின்ன மகள் நீ. இப்போ அவளுக்கே ஒரு குடும்பம் வரப் போகுது.”

கரீமா சலிப்பாய் நிற்க, ஆர்யனும் அம்ஜத்தும் அந்த தாயின் அன்பை உருக்கமாகப் பார்த்தனர். “எனக்கு மகள் வேணும்னு நான் ஏங்கி தவிச்சப்ப அல்லாஹ் எனக்காக அனுப்பின அழகான தேவதை நீ” என பர்வீன் சொல்ல, ‘எனக்காகவும்’ என ஆர்யன் இதயம் அடித்துக் கொண்டது.

இது நீண்டு கொண்டே இருக்கவும், கரீமா “இவான் டியர்! உனக்கு தூக்கம் வருதா?” என கேட்டு, அம்ஜத்தையும் கூட்டிக்கொண்டு அவர்கள் வந்த காரில் சென்று அமர்ந்து விட்டாள்.

“நீங்க அழாதீங்க, அம்மா! நீங்க அழுதா எனக்கு வேதனையா இருக்கு” என ருஹானா பர்வீனின் கண்ணைத் துடைக்க, “இது ஆனந்த கண்ணீர், மகளே!” என அவர் சிரித்தார்.

 “நான் உங்க அன்புக் கடனை எப்படி அடைப்பேன், பர்வீனம்மா?  நான் எது செய்தாலும் அது தீராது.”

“நீ எப்பவும் சந்தோசமா இரு! அது போதும் எனக்கு. என் மகள் பாதுகாப்பான கைகளுக்கு போய் சேர்ந்துட்டா. எனக்கு அதுவே மகிழ்ச்சி” என்று பர்வீன் ஆர்யனை பார்க்க, ‘ஆமாம், இனி நான் பார்த்துக் கொள்வேன், உங்கள் மகளை!’ என்பது போல அவன் கண்களை மூடித் திறந்து தலையாட்டினான்.

ருஹானா பர்வீன் கைகளுக்கு முத்தமிட்டு சலாம் சொல்லி நகர, ஆர்யன் அவளுக்கு கார் கதவை திறந்து அமர வைத்தான். “நாம எல்லாம் சரியா செய்தோமா?” என அவன் கேட்க, அவளும் ஆமென ஆமோதித்தாள்.

ஆர்யன் ஓட்டுனர் இருக்கைக்கு வர, வீட்டின் உள்ளிருந்து வந்த தன்வீர் “என் தங்கையை கவனமா பார்த்துக்கங்க. சரியா?” என முறைப்பாகவே கேட்க, ஆர்யன் “உனக்கு அதில் சந்தேகமே வேண்டாம்” என்று உறுதியளித்து காரில் ஏறினான்.

———

தன் கையில் இருந்த விஷ புட்டியை பார்த்து சல்மா வெறி கொண்டவள் போல பேசினாள். “என்னோட காதலனை நீ அபகரிக்க பார்த்தா, நான் உன் உயிரை எடுத்துடுவேன். எங்க வாழ்க்கையை விட்டு நீ போகலனா நான் உன்னை உலகத்தை விட்டே அனுப்பிடுவேன்.”

காரை செலுத்திக்கொண்டு மாளிகைக்கு வந்த சல்மா, வரவேற்பு அறையில் அமர்ந்தாள். நஸ்ரியா அவளது குளிரங்கியையும் கைப்பையையும் எடுக்க, வெடுக்கென்று கைப்பையை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள். “நான் என் ரூம்க்கு தான் போகப் போறேன். நானே எடுத்துட்டு போறேன்” என பையை மார்போடு அணைத்துக் கொண்டாள்.

விழாவிற்கு சென்றவர்கள் திரும்பி வர, சல்மா ருஹானாவிற்கும் வாழ்த்து தெரிவித்தாள். “ஹாஸ்பிடல் போயிட்டு அங்க வரலாம்னு பார்த்தேன். ஆனா எனக்கு உடம்புக்கு முடியல” என்று சல்மா சொல்ல, கரீமா அவளை சந்தேகமாக பார்த்தாள்.

“சீக்கிரம் குணமாகட்டும்” என ருஹானாவும் ஆர்யனும் சொல்ல, “சித்தி! எனக்கு தூக்கம் வருது!” என்ற இவான் இருவரின் கைகளை பிடித்துக்கொண்டு மேலே அழைத்து சென்றான்.

அவர்கள் செல்லும்வரை பார்த்திருந்த கரீமா “இப்போ என்ன திட்டம் போடுறே, சல்மா?” எனக் கேட்டாள்.

“திட்டமா? என்ன அக்கா சொல்றே? நீ தானே அவ கூட சாதாரணமா பேச சொன்னே? இப்போ இப்படி கேட்கறே?” என்று தந்திரமாக அக்காவையே கேள்வி கேட்க, “அப்போ நீ இயல்புக்கு வந்துட்டே?” என விடாமல் கரீமா கேட்டாள்.

“ஆமா! இதுக்கு மேலே என்ன செய்ய சொல்றே?” என கேட்ட சல்மா கைப்பையை எடுத்துக்கொண்டு மேலே செல்ல, சந்தேகம் நீங்காமல் கரீமா அவளையே பார்த்து நின்றாள்.

———-

ருஹானா தேர்ந்தெடுத்த உடையை மாற்ற மனம் இல்லாமல் கோட்டை மட்டும் கழட்டி பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆர்யன் அன்று எடுத்த நிழற்படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் நின்ற ருஹானாவின் படத்தை பெரிதாக்கி ரசித்தவன் மெல்ல அவள் கன்னத்தை விரல் கொண்டு வருடினான்.

ருஹானா கதவைத் தட்டி உள்ளே வந்தது கூட தெரியாமல் படங்களை தள்ளி பார்த்துக் கொண்டிருந்தவன், கை விரலுக்கு இன்னும் பழகாத மோதிரத்தையும் தடவிக் கொண்டான். அதைப் பார்த்து முறுவலித்த ருஹானா தன் மோதிரத்தையும் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

“நீங்க எதும் சொல்லணுமா என்கிட்டே?” என ருஹானா கேட்ட பின்பே நிமிர்ந்தவன், சோபாவில் இருந்து எழுந்தான். பச்சை கவுனை மாற்றி சிகப்பு சட்டையும் கருப்பு மேல்கோட்டும் அணிந்திருந்தவள் அருகே வந்தாள்.

“ஆமா, உனக்கு தெரியும் தானே நாளைக்கு சோசியல் சர்வீஸ் ஆபிஸர்ஸ் வருவாங்க?”

“ஆமா!”

“நாளைக்கு எந்த சிக்கலும் வரக் கூடாது. நாம இன்னைக்கு சாயந்தரம் எடுத்த போட்டோஸ் கூட வலைத்தளத்துல பதிவு செய்யலாம். அவங்களுக்கு சின்ன சந்தேகம் கூட வரக் கூடாது.”

“நல்லது!”

அதை அவனே செய்ய வேண்டியது தானே? ஏன் அதற்கு அவள் உதவி வேண்டும்? எல்லா நிகழ்வுகளிலும் அவளையும் ஈடுபடுத்தி அவர்கள் திருமணம் நிஜமானது என உணர்த்தப் பார்க்கிறானா?

அவன் மறுபடியும் சோபாவில் அமர்ந்து படங்களைப் பார்க்க, சில வினாடிகளுக்கு பின்பே ருஹானா நின்றுகொண்டு இருப்பதை கவனித்தான். பக்கத்தில் அவன் கோட் இருக்க அதை எடுத்து தள்ளி வைத்தான். ‘வா, வா! வந்து பக்கத்துல உட்காரு!’ என்பது போல.

அவள் அவனுக்கு நெருக்கமாக உட்காராமல் தள்ளி அமர அவனுக்கு ஏமாற்றமானது. என்றாலும் செல்பேசியை அவன் எட்டியே பிடித்திருக்க அவள் படங்களை கூர்ந்து கவனிக்க அவனை நெருங்க, இப்போது தான் அவன் மனது லேசானது.

எல்லோரும் இருக்கும் ஒரு குருப் போட்டோவை பார்த்தவள் “இது நல்லா இருக்கு” என்றாள்.

“உன்னோட பர்வீன் அம்மா அழாத போட்டோவை அப்லோட் செய்யலாம். அவங்களுக்கே இப்படி அழற போட்டோவை பார்க்கறது பிடிக்காம போகலாம்” என்றான் ஆர்யன் விஷமத்துடன்.

“பர்வீனம்மா அதிக மகிழ்வா இருந்தாங்க. அதனால தான் அவங்களால கண்ணீரை கட்டுப்படுத்த முடியல” என்று ருஹானா சந்தோசமாக சொல்ல, ஆர்யன் முகத்திலும் லேசான மகிழ்ச்சிப் புன்னகை.

உடனே ருஹானா சமாளித்து “இது பெயரளவு கல்யாணம்னாலும் அம்மாவோட இதயம் அது!” என்று சொல்ல, ஆர்யன் மெதுவாக தலையாட்டினான்.

“எல்லாருமே இதுல நல்லா இருக்காங்க. கேமிராவை பார்க்கறாங்க. இதையே போஸ்ட் செய்யவா?” என அவன் ஒரு படத்தைக் காட்டி கேட்க, ருஹானா சம்மதித்தாள்.

“நாம ரெண்டு பேர் மட்டும் இருக்குற போட்டோவும் போடணும். அப்போ தான் நம்பற மாதிரி இருக்கும்” என அவன் சொல்ல, “நீங்க சொல்றது சரி தான்” என அவளும் ஒத்துக்கொண்டாள்.

ஒவ்வொரு படத்தையும் பார்த்துவிட்டு அவளையும் ஆர்யன் பார்க்க அவளுக்கு வெட்கமானது. ஒரு படத்தில் அவன் பார்வை நீண்ட நேரம் நிலைக்க, அதை பதிவேற்றிவிடுவானோ என பயந்த ருஹானா “இதுல நான் அவ்வளவா நல்லா இல்ல” என்றாள்.

‘அது எப்படி சாத்தியம்?’ என்று அதிர்ந்து போன ஆர்யன் அவளையும் படத்தையும் மாறி மாறிப் பார்த்தான். பின் வேறொரு படத்தை காட்டி “இதுல நீ ரொம்ப அழகா இருக்கே!” என தன்னை அறியாமல் வெளிப்படையாக புகழ, ருஹானாவின் முகம் சிவந்து போக, “ம்..ம்..  இதுல கேமிரா கோணமும் நல்லா இருக்கு. துல்லியமாவும் இருக்கு. அதான் அப்படி சொன்னேன்.  ஓகேவா?” என கேட்டு பதிவேற்றினான்.

ஆர்யன் மீண்டும் மோதிரத்தை தடவுவதை பார்த்த ருஹானா “உங்களுக்கும் இது பழக்கம் ஆகல தானே?” என கேட்க, தலையாட்டிய ஆர்யன் “அப்போதிலிருந்து இருந்து என் விரலையே நான் பார்த்துட்டு இருக்கேன்” என்றான்.

“நானும்!” என ருஹானா சிரிக்க, “பழகிரும்!” என்ற ஆர்யன் “எதிர்காலத்தில இதை நாம கழட்டி வச்சா விரல்ல ஏதோ குறையுற உணர்வு ஏற்படற காலமும் வரும்” என்று தீவிரமாக அவர்களது வருங்காலத்தை பற்றி பேச, ருஹானாவிற்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை.

“வேற எதும் இல்லயே? நான் போகவா?” என அவள் எழுந்து கொள்ள, அவனும் எழுந்து கொண்டு “சரி, குட்நைட்!” என்றான் மனதில்லாமல். ஒரு இரவு முத்தம் தந்திருந்தால் அவன் உள்ளம் உவகை கொண்டிருக்குமோ?

———

பூனையைப் போல அரவம் செய்யாமல் சல்மா அறைக்குள் எட்டிப் பார்த்த கரீமா, தங்கை ஆழ்ந்து தூங்குவது கண்டு உள்ளே வந்தாள். சல்மாவின் அலைபேசியை எடுத்து குறுஞ்செய்திகளையும், அழைப்புகளையும் ஆராய்ந்தாள்.

சல்மா திரும்பி படுக்கவும் சற்று நிதானித்த கரீமா, அவள் விழிக்காதது கண்டு நிம்மதியடைந்து, மேசை இழுப்பறைகளிலும், தங்கையின் கைப்பையிலும் சந்தேகத்துக்கு இடமாக ஏதாவது இருக்கிறதா என தேடினாள்.

எதுவும் கிடைக்காமல் போக மெல்ல கதவை சாத்தி கரீமா வெளியேறவும், கண் திறந்த சல்மா தலையணைக்கு கீழே வைத்திருந்த நஞ்சு குடுவையை கையில் எடுத்துப் பார்த்து சிரித்தாள்.

———-

இரவு உடையை மாற்றி படுத்த ருஹானாவிற்கும் உறக்கம் பிடிக்கவில்லை. உடையும் மாற்றாமல் காலணிகளைக் கூட அகற்றாமல் சோபாவிலேயே சாய்ந்த ஆர்யனுக்கும் கண்மூடியும் தூக்கம் வந்து தழுவவில்லை.

இருவரும் கண் திறந்தனர். மோதிரத்தைப் பார்த்தனர். எழுந்து தண்ணீர் குடித்தனர். பால்கனிக்கு வராமல் திரையை விலக்கி காரிருளை வெறித்தனர்.

ஒருவரையொருவர் காண ஆசை கொண்டனர். கதவருகே வந்து கைப்பிடியை பிடித்தனர். இந்த நேரம் என்ன காரணம் சொல்லி பேசுவது என தயங்கினர். திரும்பி சென்று படுத்துக் கொண்டனர். கண் திறந்தே கனவு காணலாயினர்.

———-

Advertisement