Advertisement

“இல்ல.. நன்றி!”

“கேக் நான் கொண்டு வரேன். ஸ்பெஷல் சாக்லேட்ஸ்ஸும் ஆர்டர் செய்திருக்கேன்.”

“உங்களுக்கு எதுக்கு சிரமம்?”

“நல்ல விஷயத்துக்காக வரும்போது வெறும்கையோட வரக் கூடாது” என்று சொன்னவன் உடனே “அப்போ தான் பார்க்கறவங்களுக்கு சந்தேகம் ஏற்படாது” என சேர்த்து சொன்னான்.

“உங்களோட கப்லிங்க் மேசை மேல வச்சிருக்கேன்.” 

“சரி, உனக்கு எதும் தேவைன்னா போன் செய். நான் கொண்டு வரேன்.”

“சரி!” என்று சொன்னவள் நகராமல் நிற்க, “சாயந்திரம் பார்க்கலாம்!” என ஆர்யன் ஆசையாக சொல்ல, ருஹானா பிரிய மனமின்றி சென்றாள்.

———

மிஷாலின் உணவகத்துக்கு சென்ற ருஹானாவின் சகோதரன் தன்வீர், மிஷாலிடம் ருஹானாவின் திருமண ஏற்பாடுகளைப் பற்றி சொன்னான். மிஷால் தனக்கு அந்த தகவல் நேற்றே தெரியும் என கூற, தன்வீர் நண்பனின் சோக முகத்தை பார்த்து வருத்தப்பட்டான். 

“எனக்கும் ருஹானா ஆர்யனை திருமணம் செய்யறது விருப்பம் இல்ல தான். நான் அவகிட்டே இன்னும் இது பத்தி பேசல. ஆனா திருமணம் ஒருத்தரோட சொந்த விருப்பம். இனி நீ உன் வழியை பார், மிஷால்” என தன்வீர் மிஷாலில் கையைப் பிடிக்க, மிஷால் பாவமாக தலையசைத்தான்.

——-

“என் டை எப்படி இருக்கு சாரா ஆன்ட்டி?” என பிரமாதமாக உடை அணிந்திருந்த இவான் கேட்க, சாரா “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, லிட்டில் சார்” என புகழ்ந்தார். ஜாஃபரும், நஸ்ரியாவும் மகிழ்வோடு பார்த்திருக்க, சல்மா கடுப்புடன் சோபாவில் அமர்ந்திருந்தாள்.

அம்ஜத்துக்கு கரீமா டையை கட்டிக்கொண்டிருக்க, அம்ஜத் “இன்னைக்கு அர்ஸ்லானோட முக்கியமான நாள், இல்லயா கரீமா?” என்று கேட்க, அவள் பல்லைக் கடித்துக்கொண்டு “ஆமா டியர்!” என்றாள்.

“ருஹானா இல்லனா இந்த நாளே இல்ல. ருஹானாவை தவிர வேற யாராலும் ஆர்யன் மனசுல இடம் பிடிச்சிருக்க முடியாது” என்று அம்ஜத் சொல்ல, சல்மா பாம்பைப் போல சீறி அவனை பார்க்க, கரீமா டையை இறுக்கினாள்.

“ம்ஹூம்.. கரீமா! எனக்கு மூச்சு விட முடியல” என அம்ஜத் திணற, ஆர்யன் கீழே இறங்கி வர, கரீமா முடிச்சை தளர்த்தினாள்.

“வாவ்! என் தம்பி எவ்வளவு அழகா இருக்கான்!” என அம்ஜத் சென்று ஆர்யனை கட்டிக்கொள்ள, ஆர்யனின் வசீகரத்தை பார்த்து சல்மா பொறுத்துக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டாள்.

“ஆமா, பெரியப்பா! சித்தப்பா அழகு” என்று இவான் ஓடிவந்து தன் உடையை ஆர்யனிடம் காட்ட, ஆர்யன் சிரிப்போடு அவன் கன்னத்தை தட்டி “போய் பெரியப்பா கையை பிடிச்சிக்கோ, சிங்கப்பையா!” என்று அனுப்பி விட்டான்.

கரீமாவிடம் ஆர்யன் “என் அண்ணன் உணர்ச்சிவசப்படுவார். அங்க நீங்க தான் திருமண சம்மதம் கேட்கணும்” என்று சொல்ல, தன் தலைவிதியை நொந்துக்கொண்ட கரீமா வெளியே சிரித்தபடி “சரி, ஆர்யன் டியர்!” என்றாள்.

“ஆர்யன்!” என சல்மா வேகமாக கூப்பிட, பயந்து போன கரீமா ‘எதுவும் சொல்லிடாதே!’ என தங்கைக்கு கண்ணை காட்டினாள். “என்னால வர முடியாது. எனக்கு உடம்பு சரியில்ல. நான் ஹாஸ்பிடல் போறேன். என்னோட வாழ்த்துக்கள்!” என்று சல்மா சொல்ல, ஆர்யன் நன்றி என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு வெளியே நடந்தான்.

——–

“பர்வீனம்மா! நான் ரெடி!” என்று அறையிலிருந்து வெளியே வந்த ருஹானா பச்சை வண்ண கவுனில் மிக மிக அழகாக இருந்தாள்.

“நீ ரொம்ப அழகா இருக்கே, மகளே! உன்னை இப்படி பார்த்துட்டேன். இதை விட எனக்கு வேற என்ன வேணும்?” என பர்வீன் ஆனந்த கண்ணீர் வடிக்க, “நீங்க இல்லனா நான் தனியாளா இருந்திருப்பேன். உங்களைப் போல அம்மா கிடைக்க நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி” என ருஹானா அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“என்னோட கல்யாணத்துல போட்ட கம்மல் இது. இது உனக்காகத் தான் வச்சிருந்தேன்” என்று ஒரு நகைப் பெட்டியை கொடுத்த பர்வீன், அதை திறந்து காட்டினார். “எப்படி இருக்கு?”

“கண்ணை பறிக்குது!” என்று சொன்ன ருஹானா அதை காதில் மாட்டிக்கொள்ள, பர்வீன் “இப்போ இன்னும் அழகா ஜொலிக்கிறே!” என்று அவள் கன்னம் தடவ, ருஹானா அவர் கைகளைப் பற்றி முத்தமிட்டாள்.

“பர்வீன் அம்மா! நான் உங்களுக்கு என்ன செய்யப் போறேன்? என் அம்மா இல்லாத குறை தெரியாம என்னை வளர்த்தீங்க!” என்று ருஹானா கண்கலங்க, “நீ என் மகள் தானே!” என்று அவரும் கண்ணீர் வடிக்க, கையில் பைகளுடன் உள்ளே வந்த தன்வீர் “உன்னோட அண்ணனும் இங்க தான் இருக்கேன்” என்று சிரித்தான். 

“சோ, என் செல்ல தங்கைக்கு கல்யாணம் ஆக போகுது. எனக்கு சந்தோசம் தான். ஆனா ஏன் ஆர்யன் அர்ஸ்லான்?” என தன்வீர் கேட்க, ருஹானா பதில் சொல்லும்முன் பர்வீன் “ம்.. இது பேச இதுவா சமயம்? ருஹானா எடுக்குற எந்த முடிவும் தப்பா ஆகாது. கவலைப்படாதே தன்வீர். விருந்தாளிகள் வர நேரம். போ நீயும் தயாராகு” என்று அவனை அனுப்பி வைத்தார். 

“உன்னோட நல்வாழ்வு பற்றிய அக்கறை அண்ணன் அவனுக்கு இருக்கும் தானே?” என ருஹானாவை தேற்றிய பர்வீன் “நான் போய் தன்வீர் வாங்கிட்டு வந்ததை எடுத்து வைக்கிறேன்” என்று பரபரக்க, ருஹானா “பதட்டப்படாதீங்க பர்வீன் அம்மா! இது நிஜ திருமணம் இல்லயே!” என அமைதிப்படுத்த முயன்றாள்.

“எப்படி இருந்தாலும் நம்மோட வரவேற்பு முறையா இருக்கணும்” என பர்வீன் சொல்லிக்கொண்டிருக்கும்போது கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

“பர்வீன் அம்மா! அவங்க வந்துட்டாங்க” என ருஹானா வேகமாக சொல்ல, “ஃபார்மாலிட்டி திருமணம் தானே? நீ ஏன் பதட்டப்படுறே?” என சிரித்த பர்வீன் அவள் தலையை வருடியவர், அவளை கதவை திறக்க சொல்லிவிட்டு  உணவு மேசையை அலங்கரிக்க உள்ளே சென்றார்.

ருஹானா முகத்தில் சந்தோசமும், பயமும், வெட்கமும், சங்கடமும் போட்டி இட்டன.

———

ஆர்யன் தன் காரில் இருந்து இறங்கி தன்னை திருமணத்துக்கு அழைத்து வந்த எதிர்பாரா வாழ்க்கை பயணத்தையும் அதில் ருஹானாவின் பங்கையையும் பற்றி யோசித்து வாசலில் நிற்க, பின்னால் நின்ற காரிலிருந்து வந்த அம்ஜத் “என்ன ஆர்யன்?” என கேட்டான்.

“ஒன்னுமில்லையே அண்ணா!” என சொல்லிவிட்டு ஆர்யன் அம்ஜத்தின் கையில் இருந்த அழகிய பெரிய பூங்கொத்தை தன் கையில் வாங்கிக் கொண்டு முதல் ஆளாக முன்னே நடந்தான். இவானை கையில் பிடித்திருந்த கரீமா அதை குரோதத்துடன் பார்க்க, அந்த தெருவில் நின்ற மிஷால் கண்ணீரோடு பார்த்தான்.

——–

அழைப்பு மணி சத்தம் கேட்டும் அசையாமல் ருஹானா நிற்க, உள்ளிருந்து வந்த பர்வீன் “கதவை திறக்க மாட்டியா, மகளே?” என்று சிரிப்புடன் கேட்க, ருஹானா தயக்கமாக சென்று பெரிதாக ஒரு மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு கதவை திறந்தாள்.

அங்கே அவள் தேர்ந்தெடுத்து தந்த உடையில் ஆர்யன் ஆணழகனாய் நிற்க, அவனை பார்த்ததும் அவன் பின்னால் நிற்பவர்கள் ருஹானாவின் கண்ணுக்கு தெரியவில்லை. பலமுறை துடித்தது அவள் இமைகள் அவள் விழிகளுக்குள் அவனை சேர்க்க…

அவனும் ருஹானாவின் அழகில் மெய்மறந்து நிற்க, பர்வீன் அனைவரையும் உள்ளே வருமாறு வரவேற்றார்.

அதன்பின்னே ருஹானாவும் “நல்வரவு!” என ஆர்யனிடம் சொல்லி, கை குலுக்குவதற்காக கையை நீட்டினாள். ஆனால் அவள் அழகில் சொக்கியிருந்த ஆர்யன் ஆடாமல் அசையாமல் அவளையே பார்த்திருந்தான். 

சங்கடமடைந்த ருஹானா தன் கையை மெல்ல பின்னுக்கு இழுக்க, ஆர்யனின் கை பாய்ந்து வந்து அவள் கையைப் பற்றிக்கொண்டது. பிடித்த கையை விடாமல் உள்ளே வந்த ஆர்யன் மெல்ல குனிந்து அவள் இடது கன்னத்தில் முத்தமிட்டான்.

போதும் என்ற ஒரு சொல் ஒருபோதும் போதாது

காதல் நெஞ்சம் நேசமுடன் முத்தமிடும்போது…

மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும்வேளை

முத்த ஊர்வலம் வரிசையாய் வலம் வரட்டும்!

 

அவளின் கண்வீச்சிலிருந்து அகலாமல் கையில் இருந்த பூங்கொத்தை அவளிடம் அவன் தர, இருவரும் தங்கள் தனி உலகில் மூழ்கி இருந்தனர். 

மற்றவர்களும் உள்ளே வந்தனர். அனைவரையும் பர்வீன் அமர சொல்ல, “என் சித்தி அழகா இருக்காங்க!” என்று இவான் பெருமையடிக்க, தன்வீரும் வந்தவர்களை வரவேற்றான். தயக்கமுடன் என்றாலும் தவறாமல் ஆர்யனின் கையை குலுக்கி நல்வரவு சொன்னான்.

கரீமா பரிசுப் பொருட்களை கொடுக்க, அதை வாங்கிய பர்வீனும், பூங்கொத்தை வைக்க ருஹானாவும் உள்ளே சென்றனர். “மாஷா அல்லாஹ்! மாஷா அல்லாஹ்! ரெண்டு பேருக்கும் எத்தனை பொருத்தம்! எந்த தீய கண்ணும் படாமல் இருக்கட்டும்” என பர்வீன் ருஹானாவை தழுவிக் கொண்டார்.

“பர்வீனம்மா!” என ருஹானா ஏதோ ஆட்சேபம் சொல்ல வர, “நீ ஒன்னும் சொல்லாதே! என் மகிழ்ச்சியைக் கெடுக்காதே! காபி கொண்டு வா!” என்று சொல்லி பர்வீன் வரவேற்பறைக்கு சென்று விருந்தினருடன் அமர்ந்தார். 

“ஆர்யன் எப்படி இருக்கீங்க?” என்று பர்வீன் கேட்க, “நல்லா இருக்கேன்!” என்று ஆர்யன் சொல்ல, அம்ஜத் “என் தம்பி நல்லா இருக்கான். ருஹானா வந்த பின்னால ரொம்ப நல்லா இருக்கான்” என்று சந்தோசமாக ஆர்யனின் தோளைத் தட்டினான்.

“தண்ணீரால உங்க பொருட்கள் எல்லாம் ரொம்ப சேதாரமாகிடுச்சா?” என ஆர்யன் வினவ, “ஆமா! இரண்டு அறைகளைத் தான் இதுவரை சரி செய்திருக்கோம். மற்றது எல்லாம் இனி தான்..” என்ற பர்வீன் தன்வீரை பார்க்க, அவனுக்கு ஆர்யனிடம் பேச வராமல் சங்கடமாக தலையை மட்டும் ஆட்டினான். 

நல்லவேளையாக ருஹானா காபி கொண்டு வந்து அனைவருக்கும் அளிக்க, இவான் “சித்தப்பா! அந்த காபியை குடிக்காதீங்க. அதுல உப்பு போட்டு இருப்பாங்க” என ஆர்யனை தடுத்தான்.

சத்தமாக சிரித்த பர்வீன் “இவான் செல்லம்! உனக்கு இதெல்லாம் யார் சொன்னது?” என கேட்க, வெட்கத்துடன் “சாரா ஆன்ட்டி” என்றான்.

“பயப்படாதே அன்பே! நான் அப்படி எதும் செய்யல” என நாணப் புன்னகையுடன் ருஹானா சொல்ல, ஆர்யன் “அப்படியே இருந்தாலும் நான் குடிப்பேன், அக்னிசிறகே!” என ருஹானாவை காதலுடன் பார்த்து சொன்னான். மற்றவர்கள் சிரிக்க கரீமாவின் முகத்தில் கடுகு வெடித்தது.

காபி குடித்து முடித்ததும் பொறுமை இழந்த இவான் “எப்போ என் சித்தியை கேட்க போறீங்க?” என கேட்டான். ஆர்யன் ருஹானாவின் அன்பு பார்வைகளை அதற்கு மேல் தாங்க முடியாத கரீமா “இதோ, இப்பவே!” என்று சொல்லி பர்வீனிடம் “அல்லாவின் கருணையால் கேட்கிறேன். எங்க ஆர்யனுக்கு உங்க மகள் ருஹானாவை திருமணம் செய்து தர உங்களுக்கு சம்மதமா?” என கேட்டாள்.

பர்வீன் ஆனந்த கண்ணீரோடு “ரெண்டு பேரும் நேசிக்கிறாங்க. பொருத்தமா இருக்காங்க. அவங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு. இதை விட திருமணத்துக்கு வேற என்ன வேணும்? எங்களுக்கு சம்மதம். அல்லாஹ் அருளால ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டும்” என்றார். 

அம்ஜத் “இன்ஷா அல்லாஹ்!” என்று சொல்ல, பர்வீன் “ஆமீன்!” என்றார். முகம் கொள்ளா சிரிப்போடு ருஹானா ஆர்யனை பார்க்க, சந்தோஷ மின்னல்கள் உள்ளே ஒளிவீசினாலும் ஆர்யன் கண்கொட்டாமல் ருஹானாவின் மகிழ்ச்சியையே ரசித்திருந்தான். அம்ஜத்தும் இவானும் கைகளை உயர்த்தி தட்டிக் கொண்டனர். 

——-

காரை ஓரமாக நிறுத்தி இறங்கிய சல்மாவிடம் வந்த ஒரு பெண் ஒரு சிறிய புட்டியை கொடுத்தாள். அவளிடம் கத்தை பணத்தை கொடுத்த சல்மா “இது உடனே வேலை செய்யுமா?” என கேட்டாள். அந்த பெண் “மூணு சொட்டு போதும். மூணு நிமிஷத்துல ஆள் காலி” என்றாள்.

——

ஒரே மாதிரியான இரண்டு மோதிரங்கள் ஒரு அழகிய ரிப்பனில் கட்டப்பட்டிருக்க, அதை ஒரு ட்ரேயில் வைத்து பர்வீன் நீட்ட, அவற்றை எடுத்த அம்ஜத் “உங்களின் நீண்ட சந்தோஷ வாழ்க்கைக்காக” என்று சொல்லி இருவரின் வலதுகையின் மோதிர விரலில் மாட்டினான். 

“இன்ஷா அல்லாஹ்!” என்று பர்வீன் வழிமொழிய, ஆர்யனும் ருஹானாவும் சிறகின்றி மகிழ்ச்சி வானில் மிதந்தனர். ருஹானாவின் உதட்டில் புன்னகை நிரந்தரமாக இருக்க, ஆர்யன் கண்களில் மட்டுமே மகிழ்ச்சியைக் காட்டினான்.

“இவான்! நீ ரிப்பனை வெட்டு! அல்லாஹ் பெயரால், பிஸ்மில்லாஹ் என்று சொல்லி வெட்டு!” என்று பர்வீன் சொல்ல, இவான் சிரிப்போடு “பிஸ்மில்லாஹ்!” என்று சொல்லி மோதிரங்களில் தொங்கிக் கொண்டிருந்த ரிப்பனை வெட்ட, அனைவரும் கைகளை தட்டினர்.

“அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரட்டும். ஆனந்தமும் காதலும் என்றும் நிலைக்கட்டும்” என்று வாழ்த்திய பர்வீனின் கண்ணீரைப் பார்த்து ருஹானாவின் கண்களும் கலங்கின.

எதிரே நின்ற ருஹானாவை நெருங்கிய ஆர்யன் அவள் கன்னங்களை இருகைகளிலும் தாங்கி அவள் முகம் நோக்கி குனிய, ருஹானா கண்களை மூடிக்கொண்டாள். ஆர்யனும் கண்களை மூடிக்கொண்டு காதலுக்கு மரியாதையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான், அழுத்தமாக.

(தொடரும்)

Advertisement