Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

    அத்தியாயம் – 104

பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு மெல்ல நிமிர்ந்த ஆர்யன் உலகத்தையே வென்றவன் போல மகிழ்ச்சி அடைந்தான். செக்க சிவந்த ருஹானாவின் முகத்தை பார்க்க சலிக்கவில்லை அவனுக்கு. அவளின் அகன்ற கண்களில் தொலைந்து போக ஆவல் கொண்டான்.

ருஹானாவின் நிலையோ விவரிக்க முடியாததாக இருந்தது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்றவள் மெல்ல திரும்பி மேலே பார்க்க மேலும் திகைத்தாள். ‘ஆனா அங்க யாரும் இல்லயே!’

“இது போன்ற சூழ்நிலைக்குலாம் நாம தயாரா இருக்கணும்” என்று ஆர்யன் சமாளிக்க, “நான் இவானை போய் பார்க்கறேன்” என்று வேகமாக சென்றுவிட்டாள்.

தனது அறைக்கு ஓடிவந்து கதவை தாளிட்டவள் கண்ணாடி முன் போய் நின்று வலது கன்னத்தை வெட்கமுடன் தடவிப் பார்த்தாள். புன்னகையுடன் தன் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள். ‘யாருமே இல்லாம இவர் ஏன்…?’ என நினைத்தவளுக்கு அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை.

ஆர்யனும் தன் அறை வந்தவன் கோட்டையும் கழுத்துப் பட்டையும் கழட்டி போட்டுவிட்டு சட்டை பட்டனையும் தளர்த்தினான். கட்டிலில் குறுக்கே படுத்துக்கொண்டு கடந்து போன நிமிடங்களுக்குள் மீண்டும் சென்றான். திரும்ப ருஹானாவின் கன்னத்தில் முத்தமிட்டவன் அந்த நொடியிலேயே புன்னகையுடன் லயித்துப் போனான்.

——– 

இன்பக் கனவுகளுடன் தூங்கி எழுந்த ருஹானா தன் விரலில் இருந்த மோதிரத்தை அப்படியும் இப்படியும் திருப்பி அழகு பார்த்தாள். ஆர்யன் மோதிரத்தை போட்ட நிகழ்விலிருந்து முத்தமிடும் தருணம் வரை நினைத்து பார்த்தவள் நாணம் கொண்டு போர்வையை தலைக்கு மேல் மூடிக் கொண்டாள்.

ருஹானா சோம்பேறித்தனமாக படுத்திருக்க, ஆர்யன் சுறுசுறுப்பாக எழுந்து கிளம்பி அலுவல அறையில் டேப்லெட்டில் அகாபா செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தான். 

‘கப்பல் அதிபர் ஆர்யன் அர்ஸ்லான் திருமணம் செய்யப் போகும் இந்த அழகு மங்கை யார்?’ என்ற தலைப்பில் செய்திகளோடு அவர்கள் இணைந்து நிற்கும் படங்களும் பல்வேறு கோணத்தில் வெளியிடப்பட்டு இருந்தன. அவை ஒவ்வொன்றையும் சந்தோஷ முறுவலுடன் பெருமையாக பார்த்துக் கொண்டே இருந்தான்.      

அதே படங்களை நஸ்ரியா சாராவிற்கு காட்டிக் கொண்டிருந்தாள். “பாருங்க பெரியம்மா! எங்க திருப்பினாலும் ஆர்யன் சார் ருஹானா போட்டோஸ் தான். ஆர்யன் சாரோட கரிஸ்மா பாருங்க! ருஹானாவும் அசரடிக்கிற அழகு தான்!”

ருஹானா இவானை அழைத்துக்கொண்டு அங்கே வர, “ருஹானா! உங்க படங்கள் எல்லாம் நீங்க பார்த்தீங்களா?” என நஸ்ரியா கேட்க, இவான் “நஸ்ரியா அக்கா! எனக்கு காட்டுங்க!” என்று அலைபேசியை வாங்கி பார்த்தவன் “சித்தி! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்றான்.

“சாரா அக்கா! மூலிகை டீ இன்னும் இருக்கா?” என ருஹானா வெட்கத்தை மறைக்க, “உனக்கு இன்னுமா வயிறுவலி சரியாகல? ஃப்ரிட்ஜ்ல இருக்கும் பார், ருஹானா. ஆனா ரொம்ப குடிக்கக் கூடாது, உனக்கு தெரியும் தானே?” என சாரா கவலைப்பட்டார்.

“ஒரு மடக்கு தான் குடிக்கிறேன், சாரா அக்கா! அப்பப்ப வலிக்குது” என்று ருஹானா தேநீரை எடுக்க, ஜாஃபர் வந்து “ஆர்யன் சார் உங்களை கூப்பிடுறார்” என்றான். 

“நான் இவானுக்கு சாப்பாடு தரேன். நீ போ!” என்று ருஹானாவை அனுப்பிய சாரா “லிட்டில் சார்! உங்க சித்தப்பாவுக்கும் சித்திக்கும் கல்யாணம் நடக்கப் போகுது. உங்களுக்கு சீக்கிரமே ஒரு தம்பி வருவார்” என சாரா இவானுக்கு உணவு ஊட்ட, “தம்பியா?” என இவான் கேட்க, சாரா அவனுக்கு கதை சொல்லிக்கொண்டே சாப்பிட வைத்தார்.  

——-

பர்வீன் இரவு நேர பணி முடிந்தும் வீட்டுக்கு வராத மகன் தன்வீரை தொலைபேசியில் அழைத்து அன்று அந்தி வேளையில் ருஹானாவை பெண் கேட்டு அர்ஸ்லான் குடும்பத்தினர் வரப் போகும் செய்தியை சொல்லி, ஏற்பாடுகள் செய்ய அவனையும் சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னார்.

“என்ன! ஆர்யன் அர்ஸ்லானுக்கா?” என ஆச்சர்யமாக கேட்ட தன்வீர் பக்கத்தில் இருந்த கமிஷனர் வாசிமிடம் ருஹானாவின் திருமண செய்தியை பகிர, அது வாசிமுக்கும் வியப்பை தந்தது. “ருஹானா ஆர்யன் அர்ஸ்லானை திருமணம் செய்துக்கப் போறாங்களா?” என வாசிம் கேட்க, தன்வீர் தலையை மட்டும் ஆட்டினான். 

——-

“கூப்பிட்டீங்களா என்னை?” என கேட்டுக்கொண்டே ருஹானா உள்ளே வர, அவளை பார்த்ததும் ஆர்யன் சோபாவில் இருந்து எழுந்து கொண்டே “ஆமா, சோசியல் மீடியால நம்ம போட்டோ ஒன்னு போஸ்ட் செய்யணும்” என்றான். கரீமாவோ, சல்மாவோ அவனை பார்க்க வரும்போது இப்படி எழுவதில்லை, அவன்.

“ஏன்?”

“சமூக சேவை நிறுவனம் இதையெல்லாம் கவனமா பார்ப்பாங்க. காதலர்கள் சாதாரணமா என்னென்ன செய்வாங்களோ அதெல்லாம் நாம செய்யணும். நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குற ஒரு போட்டோவை வலைத்தளத்துல பார்த்தா யார்க்கும் சந்தேகம் வராது.”

“இப்போ நான் என்ன செய்யணும்? இவானோட நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குற போட்டோ நான் தரவா?” என ருஹானா கையிலிருந்த அவள் அலைபேசி படங்களை காட்ட, அவளை நெருங்கி அவற்றை பார்த்த ஆர்யன் “அதும் போடலாம். ஆனா அதுல நம்மள பார்த்தா..” என இழுத்தான்.

“கல்யாண ஜோடிகள் போல தெரியாது” என ருஹானா முடிக்க, “ஆமா, அதான் இப்போ புதுசா ஒன்னு எடுத்துக்கலாம்” என ஆர்யன் சொல்ல, ருஹானாவும் சம்மதித்தாள்.

அவளை நெருங்கி நின்று தன் அலைபேசியில் ஆர்யன் நிழற்படம் எடுக்க முயல, ருஹானாவின் உருவம் அதன் திரையில் தெரியவில்லை. “நீ இல்லவே இல்ல. கொஞ்சம் கிட்ட வர்றீயா?” என ஆர்யன் சொல்ல, அவளும் அவனை ஒட்டி உரசாமல் நின்றாள். 

இரண்டு, மூன்று புகைப்படங்களை எடுத்த ஆர்யன் அவற்றை தள்ளி தள்ளி பார்த்தான் “இதுல நாம நெருக்கமாவே இல்ல” என்று ருஹானா சொல்ல, மீண்டும் செல்ஃபி எடுத்தான். “நீங்க இதுல சிரிக்கவே இல்ல” என ருஹானா குறைப்பட, அடுத்த படத்தில் கண்களை மட்டும் சுருக்கி, சிரிப்பது போல ஏதோ செய்தான்.

அவனுடைய செயல் ருஹானாவிற்கு சிரிப்பை தர “இதான் உங்க சிரிப்பா?” என கேட்டாள். “இப்போ பார்” என்றவன் மீண்டும் கண்களையே குறுக்க, ருஹானா சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

“இது எப்படி?”

“பரவால்ல.”

“இல்ல, உனக்கு பிடிக்கல. நாம வேற எடுக்கலாம்” என்று மறுபடியும் படம் பிடித்தான்.

“இது நல்லாருக்கு. ஆனா நீங்க சிரிக்கல” என அவள் சொல்ல, திகைப்பாக பார்த்தவன் “சிரிக்கலயா?” என கேட்டான். “ஆமா, இன்னும் கொஞ்சம் சிரிக்கலாம் நீங்க” என்று சொல்லி தன் கன்னத்துப் பகுதியை விரல்களால் தூக்கி காட்டினாள், எப்படி சிரிப்பது என்பது போல.

“இந்த முறை சரியா எடுத்துடலாம்” என்று சொல்லி புகைப்படம் எடுத்து அவள் முகத்தை பார்த்தவன் “இல்ல, உனக்கு திருப்தியா இல்ல” என்று சொல்லி மறுபடியும் எடுக்க முனைந்தான். அவளை அவன் அறையை விட்டு அனுப்பவே அவனுக்கு மனம் வரவில்லை.

இறுதியாக தன் கையை சுற்றி அவள் தோள் அருகே கொண்டுவந்தவன் அவளின் அனுமதி பெற்று அவள் தோளை தொட்டான். அவள் முகமருகே தன் முகத்தை கொண்டுவந்து கிளிக்கிக் கொண்டே இருந்தான். அவன் முகத்தை அவள் பார்க்க, அவள் முகத்தை அவன் பார்க்க, இருவரும் ஒருவரையொருவர் பார்க்க, திரையை பார்க்க என அவன் செல்பேசி முழுதும் அவர்கள் படங்களாய் நிறைந்தன. 

“இது அப்லோட் செய்யவா?” என அழகு படம் ஒன்றை தேர்ந்தெடுத்து அவன் காட்ட, “இருங்க, அது கீழே ஏதாவது வாக்கியம் சேர்க்கணும்” என்றாள் தயக்கமாக. அவன் கேள்வியாக பார்க்க “என்னுடைய முதல்.. இப்படி ஏதாவது” என அவள் முகம் சிவக்க கூறினாள்.

அவன் இன்னும் புரியாமல் பார்க்க அவனுக்கு விளக்கினாள். “நான் சந்தோசத்துடன் இருக்கிறேன்…. என் வாழ்வில் நீ வந்தது என் பாக்கியம்.. இப்படிலாம் நீட்டி போடுறதுக்கு பதில் இப்போலாம் இப்படி சுருக்கமாக இனிமையா எழுதுறாங்க.” 

“என்னுடைய முதல்?” என திரும்ப கேட்டான்.

“ஆமா.. அது உங்களுக்கு பிடிக்கலனா வேற ஏதாவது சேருங்க.”

“இல்ல, இதுவே நல்லா இருக்கு. இதே எழுதுறேன்” என்று கூறி, அதே வாக்கியத்துடன் அந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றினான்.

“எனக்கு நீ இன்னொரு உதவி செய்யணும்” என ஆர்யன் கேட்க, ருஹானா என்ன என வினவ, “சாயந்திரம் நான் என்ன டிரஸ் போட? உன் உடைக்கு பொருத்தமா உடுத்தணுமே?” என கேட்க, இருவரும் அவனுடையை படுக்கையறைக்கு சென்றனர்.

அவனுடைய அலமாரியில் அவள் அவனுடைய உடைகளை தொட்டு நகர்த்தி தேட, அவனுக்கு சொல்ல முடியாத மகிழ்வாக அது இருந்தது. இருவருக்குமே ஆனந்தத்தில் முகத்தில் ஒளி வீசிக்கொண்டிருந்தது. 

ஒரு கோட்டை எடுத்து அவன் மேல் வைத்து அவள் பார்க்க, அவன் அதை பார்க்காமல் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். “இது எப்படி இருக்கு?” என அவள் கேட்க, “உனக்கு பிடிச்சிருந்தா சரி தான்” என்று குறும்பாக சொன்னவன் அதை கையில் வாங்கிக்கொண்டான்.

அவனுடைய ஒவ்வொரு செயல்களும் அவர்களுடைய திருமணம் மெய்யான திருமணம் தான் என்பதை நிருபித்துக்கொண்டே இருக்கிறது. அவள் அதை உணராமல் அவன் வார்த்தைகளையே கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறாளா?

“இப்போ சட்டையும் டையும் எடுக்கணும்” என்று சட்டைகள் இருந்து பகுதிக்கு நகர்ந்தவள் “அது எங்கே போச்சி?” என ஆராய்ந்தாள்.

“எதை தேடுறே?”

“அன்னைக்கு பிசினஸ் லஞ்ச்சுக்கு ஒரு சட்டை போட்டு இருந்தீங்க. அது உங்களுக்கு ரொம்ப..”

“எனக்கு ரொம்ப..?” ஆவலாக புருவம் உயர்த்திக் கேட்டான்.

“வந்து.. அந்த சட்டைக்கும் டைக்கும் பொருத்தமா இருந்தது” என்று அவள் சமாளிக்கப் பார்க்க, “உன் கண்ணுல இருந்து எதும் தப்புறது இல்ல” என்று அவன் புன்னகையுடன் சொன்னான்.

அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அவள் தேடிய சட்டையையும் டையையும் எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு “நான் என் டிரெஸ்ஸை அயர்ன் செய்யப் போகணும்” என்று விடைபெற்று சென்றுவிட்டாள்.

———

கரீமா தன் தங்கையிடம் ருஹானாவிடம் சென்று மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தினாள். என்ன தான் ருஹானாவின் மனதில் இரக்கம் பிறக்கும்படி தான் பேசியிருந்தாலும் அவள் ஆர்யனிடம் சல்மா தன் கழுத்தை நெறித்ததை கூறிவிட்டால் அவன் சல்மாவை மாளிகையை விட்டு விரட்டிவிடுவான், எனவே அவள் காலை பிடித்தாவது மன்னிப்பு பெறும்படியும் காலம் வரும்போது ருஹானாவின் காலை நாம் வாரிவிடலாம் எனவும் ஆசை காட்டியிருந்தாள்.

தமக்கை அறிவுறுத்தல்படி ருஹானாவிடம் சென்ற சல்மா தான் அவளை தவறாக புரிந்துகொண்டு தப்பாக நடந்துக் கொண்டதாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு வேண்ட, அந்த ஏமாளியும் அவளை நம்பி அந்த பயங்கர சம்பவத்தை இருவரும் மறந்துவிடலாம் என சல்மாவிற்கு தேறுதல் சொல்லி அனுப்பினாள்.

ருஹானாவின் விரலில் மின்னிய மோதிரத்தை பார்த்துவிட்ட சல்மா தனது அறைக்கு வந்து தலையணையில் முகம் புதைத்து சத்தம் வெளியே வராமல் கத்தினாள். அந்த திருமணத்தை நடக்க விட மாட்டேன் என்று சபதம் எடுத்தாள். 

————-

ஆர்யன் அறைக்குள் ருஹானா கதவை தட்டிவிட்டு நுழைய, கணினியில் வேலையாய் இருந்த ஆர்யன் எழுந்து அவளை நோக்கி வந்தான். 

கையில் பைகளுடன் கிளம்ப ஆயத்தமாகி “நான் கொஞ்சம் சீக்கிரம் போறேன். பர்வீன் அம்மா உதவிக்காக…” என்று அவள் சொல்ல, தலையாட்டிய அவன் “நான் வேற எதும் செய்யணுமா?” என கேட்டான்.

Advertisement