Advertisement

“அக்கா! ஆர்யனும் அந்த பட்டிக்காடும் என்ன செய்றாங்க? ரெண்டு பேரும் தனியா இருக்காங்களா? இல்ல, திருமண உடை பார்க்க போயிருக்காங்களா?”

“பதட்டப்படாதே சல்மா! நான் ஆர்யன் கூட பேசினேன். இது பொய்யான திருமணம்னு அவன் ஒத்துக்கல. ஆனா இது நிஜமா ஏமாற்று கல்யாணம் தான். எனக்கு ஆர்யனைப் பற்றி நல்லா தெரியும். இவ்வளவு வேகமா திருமண முடிவு எடுக்கறவன் இல்ல அவன்.”

“காதல்.. அதை தவிர வேற இல்ல. இது காதல்!”

———

“பத்திரிக்கைகாரங்க இனி மத்த வேலையை பார்த்துடுவாங்க. நாளைக்கு அகாபா நகரம் முழுவதும் நம்ம திருமண செய்தி பரவிடும். நாம எப்போ இருந்து ஒன்னா இருக்கோம்.. எங்கலாம் போனோம்… இப்படி எல்லா தகவலும் அவங்க சேகரிப்பாங்க. உன்னை பத்தியும் விசாரிப்பாங்க. உன்கிட்டே வராம நான் பார்த்துக்கறேன். இருந்தாலும் நீயும் தயாரா இரு.”

“அவங்க இதை நம்புவாங்களா?”

“ஏன் நம்ப மாட்டாங்க?”

“நான் ஒருவேளை.. உங்க கூட வழக்கமா இருக்கற பெண்களைப் போல நான் இல்லாம இருக்கலாம்.” வருத்தமாகவும் எரிச்சலாகவும் சொன்னாள். கண்ணால் பார்த்திராத பெண்கள் மேல் ருஹானாவிற்கு பொறாமை ஏற்பட்டது.

“ஆமா.. நீ அப்படி இருக்க மாட்டே.“ ஆர்யன் ஒத்துக்கொள்ள அவள் முகம் கூம்பியது.

“ஏன்னா என் பக்கம் எப்பவும் பெண்கள் இருந்தது இல்ல. நீ தான் முதல்…”

நொடியில் அவள் எண்ணங்கள் மறைந்து முகத்தில் இன்பப் புன்னகை மலர்ந்தது.

“இருந்தாலும்.. உங்க பரிவாரம் வேற இல்லயா? உங்க கூட இருக்க வேண்டிய பெண் மாதிரி நான் இல்லயே. நான் எங்கயோ இருக்கற பெண் போல அவங்களுக்கு தோணலாம். என்னைவிட வித்தியாசமான பெண்ணை உங்க பக்கத்தில்  பார்க்க அவங்க ஆசைப்பட்டிருக்கலாம்.”

அவளின் முகத்தில் வருத்தத்தை பார்த்த ஆர்யன் அதை துடைத்தெறிய வேகமாக பேசினான். “நீ சொன்ன அந்த பெண்கள்.. ஆமா, அவங்க வித்தியாசமானவங்க தான். ஆனா நீ அவங்களில இருந்து முற்றிலும் வேறுபட்டவள். அதனால தான் எல்லாம் இயல்பா, நம்பகத் தன்மையோட இருக்கு.”

“வேறுபட்டவளா?” பொங்கிய ஆனந்தத்தை அவளால் மறைக்க முடியவில்லை.

“ஆமா.. வேறுபட்டவள்… நேர்மையானவள்.. அப்புறம் சிறப்பானவள். நீ யாரைப் போலவும் இல்ல. மத்தவங்க கிட்ட இல்லாத ஏதோ ஒன்னு.. உன்கிட்டே இருக்கு.” ஆர்யன் உணர்ந்து சொல்ல அவள் முகம் சிரிப்பால் மலர, அவளை அவளை ரசிக்க, பின் உணவு கட்டணம் செலுத்த வேண்டி ஆர்யன் எழுந்து சென்றான்.

ருஹானாவின் மலர்ச்சி நிறைந்த முகத்தை சுருங்கிய முகத்துடன் பார்த்தபடி எதிரே மிஷால் நின்றான். அவன் நகர்ந்து செல்லப் போக அவனை பார்த்துவிட்ட ருஹானா அவனை அழைத்தாள். “மிஷால்! நீயா? ஆச்சரியமா இருக்கே!”

“உங்க ரெண்டு பேரையும் பார்க்க எனக்கும் ஆச்சரியம் தான். இந்த உணவு விடுதி உரிமையாளர் என்னோட நண்பன். அவனை பார்க்க வந்தேன்” என்றவன் அவள் விரலில் மோதிரத்தைப் பார்த்தான்.

“வெளிய செய்தியாளர்கள் யாரோட திருமணத்தை பற்றி பேசிட்டு இருந்தாங்க. இப்போ தான் அது உன்னோடதுன்னு தெரியுது. உன் மகிழ்ச்சிக்கு என்னோட வாழ்த்துக்கள்.”

“நன்றி மிஷால்! எல்லாம் வேகமா முடிவாகிடுச்சி. நானே நம்ம வீட்டுப்பக்கம் வரும்போது உன்கிட்டே சொல்லணும்னு இருந்தேன். நீ என் நெடுநாள் தோழனாச்சே.”

“பரவாயில்ல. அது ஒன்னும் முக்கியம் இல்ல. நான் போறேன். மீண்டும் என் வாழ்த்துக்கள்.”

“நன்றி மிஷால்!”

பெருகும் கண்ணீரை மறைத்தவாறே மிஷால் வேகமாக சென்று மறைந்துவிட்டான்.

———

“பெரியம்மா! ருஹானா மோதிரம் கண்ணை பறிக்குது! அதோட ருஹானா முகமும் மின்னுது! ஆர்யன் சாரும் அழகா இருக்கார்” வெளியே சென்று மாளிகைக்கு திரும்பிய இருவருக்கும் கதவு திறந்துவிட்டு வந்த நஸ்ரியா சாராவிடம் காதல் ஜோடிகளின் புகழ் பாடினாள்.

“கெட்ட கண்கள்ல இருந்து அல்லாஹ் ருஹானாவை காப்பாற்றட்டும்!”

“ஆமின் பெரியம்மா! சல்மா மேடமோட திருஷ்டி விழாம இருந்தாலே போதும். காபி கொடுக்கும்போது பார்த்தேன். கோபத்துல கொதிச்சிட்டு இருக்காங்க.”

“தேவையில்லாதது பேசாதே. உன் கை தான் வேலை செய்யணும். வாய் இல்ல!”

———

கரீமாவும் அவர்களை வாசலிலேயே எதிர்கொண்டாள். ருஹானாவின்  மோதிரத்தை அவளும் பார்த்துவிட்டாள். அவள் முகம் இருண்டு போனது. இருவரையும் வரவேற்பு அறையில் அமர வைத்தாள்.

“கல்யாண ஏற்பாடுகள் பார்க்கணுமே! சொல்லுங்க, நீங்க என்ன மனசுல வச்சிருக்கீங்க?”

“ஏன் இப்பவே?” என ஆர்யன் கேட்க, கரீமா “இப்பவே தொடங்கினா தான் எல்லா முறைகளும் செய்ய முடியும். கல்யாண சடங்குகள் செய்ய உனக்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் கிடையாது. எல்லா ஆண்களையும் போல தானே நீயும்!” என சலிப்பாக அலுத்துக் கொண்டாள்.

“நான் அப்படியெல்லாம் கிடையாது. எல்லா சம்பிராதயங்களும் தவறாம கடைப்பிடிக்கலாம்.” ஆர்யன் விருட்டென்று சொல்ல, கரீமா முகம் மாறினாள்.

“நீ கோபப்படாதே ஆர்யன் டியர்! பொதுவா ஆண்கள் இதுலலாம் கலந்துக்க விருப்பட மாட்டாங்க. திருமணத்துல நிறைய சடங்கு, செய்முறைகள் இருக்கு.”

“என்ன என்ன?”

“பெண் கேட்கறது, நலுங்கு, சீதனம்.. உனக்கு இதெல்லாம் போரடிக்கும்.” ஆர்யனை சாமர்த்தியமாக கழட்டிவிட கரீமா திட்டமிட்டாள்.

“நான் தான் சொல்லிட்டேனே.. எல்லாமே கண்டிப்பா நடக்கும். சீக்கிரமே நடக்கும். நாளைக்கு வரலாமான்னு உன் பர்வீன் அம்மா கிட்டே கேளு!” ஆர்யன் ஜெட் வேகத்தில் திட்டமிட்டு கரீமாவின் திட்டத்தில் பாறாங்கல்லை போட்டான்.

“இப்பவே கேட்கறேன்” என ருஹானா எழுந்து செல்ல, திருமண ஏற்பாடுகளை முறியடிக்க திட்டமிட்ட கரீமா, இப்போது தானே அந்த ஏற்பாடுகளை துரிதப்படுத்திவிட்டோமே என நொந்து போனாள்.

———

“என்னை மன்னிச்சிடுங்க பர்வீன் அம்மா! எல்லாமே வேகமாக நடந்திடுச்சி. முதல்ல மோதிரம், அப்புறம் செய்தியாளர்கள்.. எனக்கே நம்ப முடியல.. அவர் திடீர்ன்னு சொன்னதும்.. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. இப்படி உங்களுக்கு போன் செய்யறேன்.”

“இரு இரு.. மகளே! பொறுமையா சொல்லு. என்ன ஆச்சு? எது வேகமாக நடந்தது? நீ சொல்றது எனக்கு புரியவே இல்ல!”

“பர்வீன் அம்மா! நாளைக்கு உங்களுக்கு நேரம் இருக்குமா? வேற வேலை எதும் இல்லயே? உங்கட்ட என்னை பெண் கேட்க வர்றதா சொல்ல சொன்னார்.”

“ஒஹ்! என் மகளே! ஆர்யன் சொல்லிட்டாரா? எனக்கு ரொம்ப சந்தோசம். உன் சந்தோசத்தையும், படபடப்பையும் பார்த்து எனக்கு இன்னும் சந்தோசம்..”

“பர்வீன் அம்மா! இது நிஜ கல்யாணம் இல்ல. அப்புறம் ஏன் எனக்கு பதட்டம்?”

“சரி, உனக்கு பதட்டம் இல்ல. இது பொம்மை கல்யாணம் தான். நாளைக்கு நான் எதிர்பார்த்துட்டு இருப்பேன். நீ ஆர்யன்ட்ட சொல்லிடு.”

“சரி, உங்களுக்கு உதவி செய்ய நான் சீக்கிரம் வந்துடறேன்” என பேசிவிட்டு அறையை விட்டு வெளியே வந்த ருஹானாவின் எதிரே வந்த கரீமா “ருஹானா டியர்! உனக்கு நன்றி சொல்ல தேடினேன், நீ சல்மா செய்ததை யாருக்கும் சொல்லல. அதுக்கு நான் எப்பவும் உனக்கு கடமைப்பட்டுருக்கேன்” என்று நடித்தாள்.

“பரவாயில்ல. இந்த வீட்டோட அமைதி கெட்டுப் போகக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.”

“சல்மாவும் நிறைய வருத்தப்பட்டு அழுறா. அறையை விட்டு வெளிய வரவே இல்ல. அவளை அமைதிப்படுத்த மாத்திரை கொடுத்து தூங்க வச்சிருக்கேன்” என்று சொன்னவள் “உனக்கு எந்த தேவைனாலும் என்னை கூப்பிடு. நான் வந்து செய்து தரேன்” என்று விடைபெற்றாள்.

———

போன் பேச சென்ற ருஹானா உடை மாற்றி வரும்வரை முதல் மாடி நிலா முற்றத்திலேயே அவளுக்காக ஆர்யன் காத்திருந்தான். அவன் நாசியிலிருந்து வெளிவரும் காற்று கூட பனிப்புகையாய் சென்றது. திருமண நாளை எண்ணி ஆனந்தத்தில் திளைந்திருந்த அவனுக்கு விறைக்கும் குளிரும் தென்றலாகத் தான் இதம் தந்தது.

“பேசிட்டேன். பர்வீன் அம்மா நாளைக்கு வர சொன்னாங்க” என்றபடி வந்த ருஹானா, “அவங்களுக்கு மட்டும் உண்மை தெரியும்” என்றாள்.

“இங்க ஜாஃபருக்கு மட்டும் தெரியும். ஆனா அண்ணிக்கு இன்னும் சந்தேகம் தான். நம்மை உன்னிப்பா கவனிக்கிறாங்க. கேள்விகள் கேட்டுட்டு இருக்காங்க. அவங்களை நம்ப வைக்கறது தான் பெரிய செயல். இப்போ கூட மேலே இருந்து நம்மை கண்காணிக்கிறாங்க” என சொன்ன ஆர்யன் இலேசாக தலையை தூக்கி மேல் மாடியில் நின்ற கரீமாவைப் பார்த்தான்.

“என்னையும் கேள்வி கேட்டாங்க. ஆனா அது சாதாரணமா தான் இருந்தது. அவங்களுக்கு நல்ல இதயம். குடும்பத்து மேல அதிக அக்கறை.”

“இருந்தாலும் நாமளும் எச்சரிக்கையா இருக்கணும். அவங்க எளிதா பின்வாங்குறவங்க இல்ல.”

“சரி, நான் கவனமா இருக்கேன். அவங்க இன்னும் பார்க்கறாங்களா?” ருஹானாவின் பின்பக்கமாக மேலே நின்ற கரீமாவை அவளால் பார்க்க முடியவில்லை.

“ஆமா, அவங்க சந்தேகத்தை இப்போ நாம நீக்குவோம்” என ஆர்யன் அவளை நெருங்கி வந்தான்.

“நாம என்ன செய்யப் போறோம்?” ருஹானா அச்சத்துடன் கேட்க, ஆர்யன் முன்னால் கிடந்த அவள் முடியை கோதி மிருதுவாக வருடி பின்னால் தூக்கிப் போட்டான்.

அவள் முன் நெற்றி முடியை அவன் விரலால் நகர்த்தி இடது காதோரம் ஒதுக்க, அவள் மயக்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.

ஆர்யன் ஓரக்கண்ணால் மேலே பார்க்க, கரீமா அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள். என்றாலும் ஆர்யன் முன் வைத்த முகத்தை பின் இழுக்கவில்லை

ஆர்யன் அவள் முகத்தின் அருகே குனியவும், ருஹானாவின் கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடுவதை போல பெரிதாகின.

கொண்ட கடமையை எந்த இடையூறு வந்தாலும் இன்பமாக நிறைவேற்றுபவனாக ஆர்யன் தலை சாய்த்து எந்த அவசரமும் இல்லாமல் மெல்ல அவள் சிவந்த ஆப்பிள் கன்னத்தில் இதழ் ஒற்றினான்.

சித்தம் கவர்ந்தவளை நித்தம் கண்டிட

முத்தமிடவில்லையென பித்தம் கொள்ள.. 

மயக்கம் வென்று தயக்கம் முற்றும் துறந்து

முதல் முத்தம் கன்னத்து முத்தம்

நிலா முற்றத்து முத்தம்!

(தொடரும்)

Advertisement