Advertisement

“திருமண நாள் நெருங்குது. இன்னைக்கு விருந்து சமைக்கணும், நஸ்ரியா! மடமடன்னு வேலையை பாரு” என சாரா நஸ்ரியாவை தட்டிக்கொடுத்து உற்சாகமாக சொல்ல, மூலிகை தேநீர் வேண்டி உள்ளே வந்த ருஹானா வெட்கமாக புன்னகைத்தாள்.

“ருஹானா, மகளே! நீ எங்க ஆர்யன் சாரை கல்யாணம் செய்துக்க போறது எனக்கு அதிக சந்தோசம். உன்னோட அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு அப்புறம் நீ இந்த மாளிகைக்கு எஜமானியாகப் போறே” என்றபடி சாரா அவளை கட்டிக் கொண்டார்.

“ருஹானா! நீ ஆர்யன் சாருக்கு ரொம்ப பொருத்தம். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ இருக்குன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிடுச்சி” என நஸ்ரியா தோழியாய் குதுகலிக்க, சாரா அவளை கண்டிப்புடன் பார்த்து கையைப் பிடித்து கிள்ளினார்.

ஆனாலும் நஸ்ரியா “எப்போ திருமண உடையை தேர்ந்தெடுக்கப் போறீங்க?” என ஆவலாக கேட்க, “தெரியலயே. நாங்க இன்னும் அதை பத்தி பேசல” என்று ருஹானா சொல்ல, அங்கே திருமண மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

——–

“ஆர்யன் டியர்! நான் உன்கிட்டே பேச வந்திருக்கேன்.”

“சொல்லுங்க அண்ணி!” செய்துக்கொண்டிருந்த வேலையை நிறுத்திய ஆர்யன், மேசையின் அருகே வந்து நின்ற கரீமாவை நோக்கினான்.

“நான் வெளிப்படையாவே பேசிடுறேன். நீ இப்படி அவசரமா முடிவு எடுக்க மாட்டியே! இது வசதிக்காக செய்ற திருமணமா? சமூக சேவை நிறுவனத்திற்காக செய்றியா? என்னை நம்பி உண்மையை சொல்லு.”

உள்ளே எழுந்த கோபத்தை மறைத்துக்கொண்ட ஆர்யன் அழுத்தமாக சொன்னான். “இந்த திருமணத்திற்கும் இவான் கஸ்டடிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது நாங்க ரொம்ப முன்னமே எடுத்த முடிவு தான். இவானுக்காக இப்போ ஏற்பாடுகளை அவசரமா செய்றோம்.”

திகைத்துப் போன கரீமா “திரும்ப கேட்கறேன்னு நினைக்காதே. உனக்கும் ருஹானாவுக்கும் நடுவுல அவ்வளவு நடந்த பின்னாடி இந்த திருமணம் எல்லாருக்கும் ஆச்சரியமா இருக்கு. நான் சொல்லறது சரிதானே?” என அவர்களது மோதலை நினைவுப்படுத்தினாள்.

“இல்ல, தப்பு. முதல்ல எங்களுக்குள்ள நடந்தது, கருத்து வேறுபாடும் கோபமும் தான். அதோட காலம் நிற்கலயே? அதுக்கு அப்புறம் தியாகம், நேர்மை, நம்பிக்கை எல்லாம் நிகழ்ந்ததே!” என ஆர்யன் நிஜத்தை சொல்லியும் கரீமா ஏளனமாக சிரித்தாள்.

“அப்படின்னா இத்தனை வருசத்துக்கு அப்புறம் கடைசியா ஒரு பொண்ணை உன்னால நம்ப முடியுது?”

அவனுடைய கடந்த கால புண்ணை குத்தி கரீமா பேசவும் எரிச்சலான ஆர்யன் “வேற எதும் பேச இல்லனா… எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என கணினி திரையின் பக்கம் திரும்பிக் கொண்டான்.

——–

“காபி, ஆர்யன் சார்! உங்க திருமணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்” என ஜாஃபர் வாழ்த்த, ஏற்றுக்கொண்ட ஆர்யன் “ஏன் இந்த திருமணம் நடக்குதுன்னு உங்களுக்கு தெரியும்” என்றான்.

சிரிப்புடன் தலையசைத்த ஜாஃபர் “சிலசமயம் நாம ஒரு காரணத்துக்காக ஒரு செயலை செய்யும்போது அது நாம நினைக்காத காரியத்தையும் நிறைவேற்றிடும்” என பூடகமாக சொன்னான்.

“எல்லாரையும் இது உண்மை திருமணம் தான்னு நம்ப வைக்கணும். இல்லனா இவானை நாம இழந்திடுவோம்” என ஆர்யன் கவலை கொள்ள, ஜாஃபர் யோசனை தெரிவித்தான்.

“இந்த பந்தம் நிஜமா தெரியணும்னா நீங்க ருஹானா மேம் கூட சேர்ந்து இருக்கணும். எல்லாரும் அதை பார்க்கணும். எத்தனை பேருக்கு தெரியப்படுத்த முடியுமோ அத்தனை பேருக்கும் தெரிய வைங்க.”

——–

ருஹானா மூலிகை தேநீரை தயார் செய்து புட்டியில் ஊற்ற, நஸ்ரியாவின் பேச்சு இன்னும் ஓயவில்லை. “நடிகர்கள் வருவாங்க. நிறைய புகழ்பெற்றவங்க வருவாங்க. மாளிகையே நிறைந்து போய்டும்.”

“நீ தானே விருந்தினர் லிஸ்ட் தயாரிக்கணும். உன்கிட்டே தானே ஆர்யன் சார் கேட்பார்?” என சாரா கிண்டலடிக்க, நஸ்ரியா கழுத்தை வெட்டினாள்.

“இல்ல.. நம்ம குடும்பம் மட்டும் தான்” என ருஹானா சொல்ல, வியந்த நஸ்ரியா ஏதோ சொல்ல வாய் திறந்தவள் மூடிக்கொண்டாள், உள்ளே வரும் ஆர்யனை பார்த்து.

“நாம வெளிய சாப்பிட போகலாம்!”

“சரி!”

“நான் காத்திருக்கேன்!”

“சரி!”

வெளியே நகரப்போனவன் திரும்பி “நாம போற இடம் நவீனமானது, புகழ் பெற்ற உணவு விடுதி. அதுக்கு ஏத்த மாதிரி நம்ம ஆடை இருக்கணும்!” என்றான்.

“சரி!”

கதவருகே நின்றவன் “இல்ல.. நீ உன் மனசுக்கு என்ன தோணுதோ அதையே உடுத்திக்கோ. இடம் முக்கியம் இல்ல” என்று சொல்லிவிட்டு வெளியே செல்ல, ருஹானா முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது.

சாரா சந்தோசத்துடன் குனிந்து வேலையை பார்க்க, நஸ்ரியா “ஆர்யன் சார் எத்தனை ரொமாண்டிக்! இடத்தை விட நீ தான் முக்கியம்னு சொல்றார். எவ்வளவு காதல்!” என பெருமூச்சு விட, ருஹானா வெட்கத்துடன் “நான் போய் கிளம்பறேன்!” என சென்றுவிட்டாள்.

“நஸ்ரியா! உன் நாக்கு அடங்கவே அடங்காதா? இப்போ பாரு ருஹானா சங்கடப்பட்டு ஓடிட்டா.”

“இதுல என்ன சங்கடம் பெரியம்மா? அவங்க காதல் தான் முன்னாடியே நமக்கு தெரிஞ்சதே. அவங்க இப்போ தான் வெளிய சொல்லியிருக்காங்க.”

ஆர்யனிடம் பேசிவிட்டு வந்த கரீமாவிற்கு இதைக் கேட்டதும், இத்தனை நாள் சல்மா சொன்ன ஆர்யன் ருஹானாவின் காதலை நம்பாமல் இருந்தவளுக்கு, அது உண்மையாக இருக்குமோ எனும் பெருத்த சந்தேகம் ஏற்பட்டது.

——–

“நல்வரவு ஆர்யன் சார்! உங்க மேசை தயார்” என ஆர்யனுக்கும், ருஹானாவிற்கும் பலத்த வரவேற்பு கிடைக்க, அழகு உடை அணிந்த இருவரும் உள்ளே நுழைந்தனர்.

ஆர்யன் ருஹானாவின் நாற்காலியை நகர்த்தி அவள் அமர வசதி செய்து தர, அந்த உபசரணையில் ருஹானா நெகிழ்ந்து போனாள். அவன் எதிரே அமர்ந்ததும் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி “நாம இங்க வந்திருக்க வேண்டியதே  இல்ல. உங்களுக்கு வேலை இருந்தா நீங்க போங்க. நேரம் வீணாக்க வேண்டாம். நான் கொஞ்ச நேரம் வெளிய இருந்துட்டு வீட்டுக்கு போறேன்” என்றாள்.

“எனக்கு புரியல. நான் எதுக்கு போகணும்? நீ ஏன் வெளிய நேரம் செலவழிக்கணும்?”

“அப்போ தானே நம்ம வீட்ல இருக்கறவங்க நாம சேர்ந்து சாப்பிட வந்தோம்னு நினைப்பாங்க? அவங்களை நம்ப வைக்கத் தானே நாம வந்தோம்?”

முகம் மாறிய ஆர்யன் “இது.. ஏதோ ஒரு டின்னர் இல்ல..” என தயங்கினான். ருஹானா அவனை புரியாது பார்க்க, அவன் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

அவன் தயக்கத்தை பார்த்து ருஹானா “என்ன?” என கேட்க, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வலது பையில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்து மேசையில் அவள் புறம் வைத்தான். மேசையில் ஏற்கனவே அழகான மெழுகுவர்த்திகள் வெளிச்சம் தர, பக்கத்தில் சிகப்பு ரோஜாமலர்கள் சிரித்தன.

‘ஒஹ்! இதற்கு தான் கூட்டிவந்தானா?’ என ருஹானா அதிசயமாக பார்க்க, அவன் “நீ இதை போட்டு பார்க்கறியா?” என கேட்டான். அவள் படபடப்பாக திருமண மோதிரத்தை எடுத்து வலதுகை மோதிர விரலில் சிரமப்பட்டு தள்ளினாள்.

“நான் உன் அளவை வாங்கியிருக்கணும். அதுக்கு நேரம் இல்ல. சரியா இருக்கா?”

“ஆமா.. நிச்சயதார்த்தத்துக்கு போடணும் தானே? நான் இப்போ கழட்டிடுறேன். யா அல்லாஹ்! போடும்போது எளிதா இருந்தது. இப்போ வர மாட்டேங்குது. நான் போய் கழட்டிட்டு வரேன்” என அவள் எழுந்து செல்ல, எதற்காகவோ ஆர்யன் முகம் சந்தோசத்தை காட்டியது.

ஓய்வறைக்கு சென்ற ருஹானா சோப் பயன்படுத்தி மோதிரத்தை கழட்டினாள். கண்ணாடியில் முகம் பார்த்தவள் ‘என்ன நான் இப்படி இருக்கேன்? இன்னும் என்ன ஆகப் போறேனோ?’ என தண்ணீரை தொட்டு முகம், கழுத்து என துடைத்துக் கொண்டாள்.

ஆர்யன் முன்னே வந்து அமர்ந்தவள் “இது கொஞ்சம் சின்னது” என்று சொல்லி பெட்டியில் வைத்து அவன் புறம் நகர்த்தினாள்.

“சரி, நான் வேற மாத்திடுறேன்” என்று சொன்ன ஆர்யன், இடது பையில் இருந்து வேறு ஒரு மோதிரத்தை எடுத்து நீட்டினான்.

தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்த ருஹானா வியப்புடன் “இது என்ன?” என கேட்டாள்.

“நான்… புதுசு… எனக்கு… இது பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது. திருமணத்துக்கு கேட்கும் ஆண்…. இதை செய்யணும்னு… கல்யாணத்துக்கு முன்னே…” ஆர்யனுக்கு சரியாக வார்த்தைகள் வரவில்லை.

“ஆனா.. இது விலை அதிகம் மாதிரி தெரியுதே.” வெகு அழகான அந்த மோதிரத்தில் வைர கற்கள் ஜொலித்தன.

“அதனால?”

“வந்து.. இது அவசியம் இல்ல… இது நான் வாங்கிக்க மாட்டேன்.”

மெலிதாக கோபப்பட்ட ஆர்யன் “நான் மலிவான மோதிரம் வாங்கினா நம்பற மாதிரி இருக்காது. இந்த கல்யாணம் எல்லாவிதத்திலயும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதா இருக்கணும். நீ திருமணம் செய்யப் போறது ஆர்யன் அர்ஸ்லானை..” என கம்பீரமாக சொல்ல, ருஹானாவால் பெருமித மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை.

அவள் புன்னகையை கண்ட ஆர்யன் எழுந்து வந்து அவள் பக்கம் நின்று இடது கையை நீட்டினான். ருஹானா அதே மலர்ச்சியுடன் அவன் கையில் தனது இடது கையை வைத்தாள். ஆர்யன் மெல்ல கவனமாக அவள் விரலில் மோதிரத்தை போட, ருஹானா அவனை காதலுடன் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

இந்த மோதிரம் அவள் விரலுக்கு சரியாக இருந்தது. சந்தோசமாக மோதிரத்தை போட்டு முடித்த பின்னரே அவளை பார்த்த ஆர்யன் அவள் கண்களில் மாட்டிக்கொள்ள அப்படியே நிமிடங்கள் கடந்தன.

வேகமாக உள்ளே நுழைந்த சில செய்தியாளர்கள் அந்த காட்சியை அப்படியே படம் பிடித்தனர்.

பயந்துபோய் ஆர்யனின் கைப்பற்றி எழுந்த ருஹானா “என்ன நடக்குது? யார் இவங்க? நாம போகலாம்” என அவனை நெருங்கி காதில் சொன்னாள். படபடவென புகைப்படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட, ஆர்யன் “பயப்படாதே. இது தான் செய்தியை பரப்ப சுலபமான வழி” என்றான்.

“இதுக்கு தானா அதெல்லாம்..?” என ருஹானா கேட்க, ஆர்யன் பதில் சொல்லும்முன் பத்திரிகைப் பெண் ஒருத்தி “மிஸ்டர் ஆர்யன்! நீங்க  திருமணம் செய்துக்கப் போறது உண்மை தானா?” என கேட்க, ஆர்யன் “ஆமா!” என்றான்.

“உங்க கூட இருக்கிற பெண்மணியோட பேர் என்ன?” என இன்னொரு கேள்வி வர, ஆர்யன் ருஹானாவின் முகத்தை பார்த்தான். அவள் பெயரை அவன் நா ஒருமுறை கூட உச்சரித்தது இல்லையே, இதுவரை.

“தொந்தரவு செய்யாதீங்க! போங்க!” என விடுதியின் காவலர்கள் அவர்களை தள்ள, “மிஸ்டர் ஆர்யன்! பொண்ணு பேர் சொல்லுங்க” என கத்திக்கொண்டே அவர்கள் வெளியே சென்றனர்.

———

Advertisement