Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                  அத்தியாயம் – 103

ருஹானாவின் கழுத்தை சல்மா நெறிக்க, அவளின் விழி பிதுங்க தன்னை விடுவித்துக்கொள்ள வெகுவாய் போராடினாள். தெய்வாதீனமாக உள்ளே ஓடிவந்த கரீமா சல்மாவை பிடித்து பின்னே இழுத்தாள். “சல்மா! விடு அந்த பொண்ணை!”

சல்மா திமிறத் திமிற அவளை கட்டிலிலிருந்து இழுத்தாள். “சல்மா! எழுந்திரு!”

“என்னை விடு!” என அப்போதும் சல்மா அக்காவை தள்ள, அவளை ஒரு ஓரமாக தள்ளிவிட்ட கரீமா ருஹானாவை கைத்தாங்கலாக தூக்கி அமர வைத்தாள். “ருஹானா டியர்! உனக்கு ஒன்னும் இல்ல தானே! சாரி, சாரி! என்ன நடந்தது? மன்னிச்சிடு. நீ நல்லா இருக்கே தானே?”

“நான் என்ன செஞ்சிட்டேன்? எனக்கு என்ன ஆச்சு?” என சல்மா கேள்வி கேட்க, அவளை முறைத்துப் பார்த்த கரீமா, ருஹானாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து அவளை சமாதானப்படுத்த முயற்சித்தாள். “உனக்கு மூச்சு விட முடியுதா? நீ ஓகே தானே? ருஹானா டியர்! நான் திரும்பி வரவரைக்கும் இதை யார்ட்டையும் சொல்லாதே. உன்னை கெஞ்சி கேட்கறேன். நான் இப்போ வந்திடுறேன். நான் உனக்கு எல்லாம் விளக்கமா சொல்றேன். சரியா?”

கரீமா சல்மாவை பிடித்து “போ! போ!” தள்ளிக்கொண்டு அவள் அறைக்கு கூட்டிச் சென்றாள். “பைத்தியமா நீ? உனக்கு இவ்வளவு அறிவு கெட்டு போச்சா? எப்படி இப்படி முட்டாளாகிப் போனே?”

“அக்கா! எனக்கு என்ன நடந்ததுன்னே ஞாபகம் இல்ல. என்னை மீறி இதெல்லாம் நடந்துடுச்சி.”

“என்ன செய்தோம்னு தெரிஞ்சி தான் செய்தியா? என்னை தவிர வேற யாரும் அங்க வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? அந்த பொண்ணு செத்து போயிருந்தா? நீ ஜெயில்ல கத்திட்டு இருப்பியா?”

“என்னை மன்னிச்சிடு அக்கா. நான் என்ன செய்றேன்னு தெரியாம செஞ்சிட்டேன். எப்படி அங்க போனேன்னே எனக்கு நினைவு இல்ல.”

மாத்திரையை எடுத்துக் கொடுத்து அவளை கட்டிலில் தள்ளிய கரீமா,  “இதை போட்டுட்டு அவ உன்னை மன்னிச்சிடணும்னு பிரார்த்தனை செய். அவ ஆர்யன் கிட்டே எதும் சொல்லிடக் கூடாதுன்னு பிரார்த்தனை செய். புரியுதா? நான் அவகிட்டே பேசிட்டு வரேன்” என்று சொல்லி ருஹானாவின் அறைக்கு ஓடிவந்தாள்.

கழுத்தை பிடித்துக்கொண்டு மூச்சிரைக்க அமர்ந்திருந்த ருஹானாவிடம் வந்த கரீமா “ருஹானா டியர்! நீ ரொம்ப பயந்துபோயிருப்பே, எனக்கு தெரியும். இது இனிமே நடக்காது. நான் உனக்கு சத்தியம் செய்றேன். சல்மா சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன். சல்மா நல்ல பொண்ணு தான். ஆனா ஒரு நிமிடத்துல நிலைதடுமாறிட்டா. என்னாலயே நம்ப முடியல. உன்னோட சந்தோஷமான நாள், இன்னைக்கு போய் இப்படி நடந்திருக்க வேண்டாம்” என அவள் கையை பிடித்தாள்.

“சல்மா… அவரை காதலிக்கிறாளா?” ருஹானாவின் கேள்வியில் கரீமா திக்குமுக்காடிப்போனாள். “இப்போ கொஞ்ச நாளா என்கிட்டே முறைப்பா தான் நடந்துகிட்டா. இன்னைக்கும் இப்படி செய்ததை பார்த்தா என்னால வேற காரணம் யோசிக்க முடியல.”

இவளை சமாளிக்க தன் பேச்சு சாமர்த்தியம் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் போல என நினைத்த கரீமா “அவ சீக்கிரமா உணர்ச்சிவசப்பட்ட கூடிய பொண்ணு. அதும் நம்ம குடும்பத்தை பொறுத்தவரை அதிகமா கவலைப்படுவா. ஆனா இப்படி நடந்துகிட்டதுக்கு அது ஒரு சமாதானம் இல்ல. இது பயங்கரம். யாராலும் ஏத்துக்கவே முடியாது” என தானும் கண்ணீரை உகுத்தாள்.

“ஆனா நான் உனக்கு அவளை பத்தி விளக்கி சொல்றேன். நாங்க வறுமையான சூழ்நிலையில வளர்ந்தோம். எங்களுக்குன்னு யாரும் கிடையாது. யோசித்து பாரேன். எந்த பாதுகாப்பு இல்லாம தனியா ரெண்டு பெண்கள். என்ன பாடுபட்டுருப்போம்னு உனக்கு சொல்ல தேவையில்லை.”

“ஆர்யன் தான் எங்களை காப்பாத்தினான். அதுனால அவன் மேலே அவளுக்கு அபரிமிதமான பாசம்.. ஒரு சகோதரனைப் போல. நீ அவனுக்கு பொருத்தம் இல்லன்னு அவ தப்பா நினைக்கிறா. உன்கிட்டே இருந்து இந்த குடும்பத்தை காப்பாற்றணும்னு இப்படி செய்திட்டா.”

“அவளை மன்னிச்சிடு. பெரிய தவறு தான். ஆனா என் தங்கை கெட்டவ இல்ல. ப்ளீஸ் ருஹானா! உன்னை கெஞ்சி கேட்கறேன். இதை ஆர்யன்ட்ட சொல்லிடாதே. ஆர்யன் அவளுக்கு தண்டனை கொடுத்தா, சல்மா தற்கொலை செஞ்சிக்குவா. தயவுசெய்து அவளை மன்னிச்சிடு.”

கரீமாவின் பேச்சையும் கண்ணீரையும் நம்பிய ருஹானா “எனக்கு புரியுது. கவலைப்படாதீங்க. நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என வாக்கு கொடுத்தாள்.

“மிக்க நன்றி ருஹானா. இந்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன்.”

——–

படிக்கட்டில் இருந்து இறங்கிய ஆர்யன் சமையல்கட்டுப் பக்கம் எட்டிப் பார்க்க, வரவேற்பறையில் நின்றிருந்த நஸ்ரியா “ஆர்யன் சார்! ருஹானா மேம் பின்னாடி முற்றத்துல இருக்காங்க” என உற்சாகமாக தெரிவித்தாள். ஆர்யன் அவளை உற்று பார்க்கவும் பயந்து போனவள் “நீங்க அவங்களை தான் தேடுறீங்கன்னு…” என தடுமாறி வேகமாக நகர்ந்தாள்.

“நஸ்ரியா!” என ஆர்யன் அழைக்க கைகால் நடுங்க திரும்பினாள். “முற்றத்துக்கு ரெண்டு காபி கொண்டு வா!” என ஆர்யன் சொல்லவும் பளீர் சிரிப்பு சிரித்தவள் “இதோ! கொண்டு வரேன்!” என ஓடினாள். ஆர்யன் புன்னகையுடன் ருஹானாவை தேடிச் சென்றான்.

ருஹானாவிற்கு சுவாசம் இன்னும் சீராகாமல் இருக்க, வயிற்று வலியும் தொல்லை தர, சாரா தந்த கஷாயத்தை ஒரு கண்ணாடிக் குடுவையில் வைத்திருந்தவள், அதை குடித்துக்கொண்டே வானத்தை பார்த்து யோசித்திருந்தாள்.

சல்மா தந்த அழுத்தம் அவள் உடலிலும், மனதிலும் வேதனையை கொடுக்க அதைத் தவிர அவளால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.

“நீ தூங்கியிருப்பேன்னு நினைச்சேன்.” பின்னால் ஆர்யன் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள்.

“என்னால தூங்க முடியல!” ருஹானா அவனிடம் உண்மையையே சொன்னாள். அவள் முகத்தை உற்றுப் பார்த்த ஆர்யன் கவலை கொண்டான். “நீ ஓகே தானே?”

“நல்லா தான் இருக்கேன். இயற்கை காற்று வாங்கலாம்னு…”

“ஏதோ மாதிரி இருக்கியே! முகம் வெளுத்து இருக்கு.” அவளின் மாற்றத்தை கண்டுகொண்டான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.”

“எனக்கும் சந்தோசம் தான் நீ தூங்காம இருக்கறது” என ஆர்யன் சொல்ல, அவள் திகைத்து விழித்தாள்.

“நாள் முடியறதுக்குள்ள உன்னை இன்னொரு முறை பார்த்திட்டேன்” என அவன் மகிழ்வோடு சொல்ல, ருஹானா கையிலிருந்த குடுவையை தவறவிட்டு பிடித்தாள். அவள் வலி வேதனை அனைத்தும் மறைய, என்ன இப்படி பேசுகிறான் என அவன் முகத்தை நோக்க, அது புன்னகை மாறாமலேயே இருந்தது.

“காபி!” என நஸ்ரியா வர, ருஹானாவிற்குள் சிந்தனை. ‘நஸ்ரியா வந்ததால இப்படி பேசினாரா.. இல்ல உண்மையிலேயே..’

ஆர்யன் சொல்லும்போது நஸ்ரியா அதை கேட்கும் தூரத்தில் இல்லை என்பதை அவள் கணக்கிட தவறிவிட்டாள்.

ஆர்யன் காபி குடித்துக்கொண்டே “நாம இப்படி நேரம் செலவழிக்கறதை நம்மை சுத்தி இருக்கறவங்க பார்க்கறது முக்கியம்” என்று சொல்ல.. ‘ஓ! அது தானா?’ என அவளுக்கு ஏமாற்றமானது.

“நான் உனக்கும் காபி கொண்டு வர சொன்னேன். நீ ஏதோ குடிக்கிறியே, என்ன அது? நாம ஒருத்தரை பற்றி ஒருத்தர் நல்லா தெரிஞ்சிக்கறதும் அவசியம்.”

“இது மூலிகை டீ. படபடப்பால எனக்கு வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சி. அதுக்காக சாரா அக்கா போட்டு கொடுத்தாங்க. இப்போ நடக்கறதுலாம் பார்த்தா இந்த டீ எனக்கு அடிக்கடி தேவைப்படும் போல.”

ஒரு எட்டு முன்னே வைத்து அவளை நெருங்கிய ஆர்யன் “நாம போற இந்த வழியில நீ தனியா இருக்கேன்னு நினைச்சிடாதே. நானும் உன்கூட தான் நடந்து வரேன். உனக்கு எப்போ என்ன உதவி தேவைனாலும் நான் உனக்கு உறுதுணையா இருப்பேன்” என அழுத்திச் சொல்ல, ருஹானாவின் மனது நிம்மதியானது.

——-

“அக்கா! அந்த பாம்பு ஆர்யன்ட்ட சொல்லிடுவாளா?”

“இல்ல.. சொல்ல மாட்டா.. அவ மனசை மாத்தி வச்சிருக்கேன்.”

“எனக்கு ஆர்யன் வேணும், அக்கா! அவன் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல. ஏதாவது செய் அக்கா!”

“பயப்படாதே சல்மா! உனக்காக நான் எது வேணும்னாலும் செய்வேன். இந்த உலகத்துல நீ மட்டும் தான் எனக்கு இருக்கே. ஒரு நாள் இந்த அர்ஸ்லான் சொத்துக்கள் எல்லாம் நமக்கே நமக்கு கிடைக்கும். உனக்கும் ஆர்யனுக்கும் பிறக்க போற குழந்தைக்கு கிடைக்கும்.”

“இந்த இடத்துக்கு அவ்வளவு ஈஸியா நான் வந்துடல. எவ்வளவோ திட்டம் போட்டு உயிரைக் கொடுத்து போராடி வந்திருக்கேன். அதனால யாரையும் உள்ளே விட மாட்டேன். அதுவும் அந்த மாயக்காரியை..”

“ஆர்யனை அவள் கல்யாணம் செய்துக்கவே முடியாது. ருஹானா அர்ஸ்லான்ங்கற பேர் எப்பவும் வராது.  என் மூச்சு இருக்கறவரைக்கும் அது நடக்கவே நடக்காது.”

“தேவைப்பட்டா அவ அக்கா போன இடத்துக்கே இவளையும் அனுப்பிடலாம். எது வந்தாலும் பார்த்துக்கலாம். வெள்ளைத்துணியை சுத்தி அவளை பிணமா வெளியே அனுப்புவேனே தவிர திருமண உடையை போடவே விட மாட்டேன்.”

——–

Advertisement