Advertisement

படிக்கட்டில் இருந்து இறங்கிய நஸ்ரியா தனது எஜமானர் ருஹானாவுடன் இணைந்து நிற்பதை பார்த்து முகம் கொள்ளா சிரிப்புடன் வரவேற்பறைக்கு வந்து ஜாஃபரின் அருகே நின்றாள்.

“ஆர்யன் டியர். இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். ஆனா திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்தே? இது எப்போ எப்படி தொடங்குச்சி? எங்களுக்கு எப்படி தெரியாம போச்சி?” என கரீமா கேட்க, ஆர்யன் “இதுல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பொருத்தமா இருப்போம்னு நினைச்சோம்” என மேலோட்டமாக சொன்னான்.

“அது எப்படி? பொருத்தமா இருந்தா இப்படி ஒரு முடிவுக்கு வருவீங்களா?” என கரீமா கேட்க, அம்ஜத்தும் ஆவலுடன் பதிலை எதிர்ப்பார்க்க இப்போது ருஹானா பதில் சொல்ல முன்வந்தாள்.

“நீங்க அதிசயப்பட நியாயம் இருக்கு. உங்களுக்கே தெரியும், நாங்க முதல் முதலா சந்திக்கும்போது எப்படி சண்டை போட்டோம்னு. நீங்களே அதுக்கு சாட்சி. நான் அவரை பார்த்து பயந்தேன்” என ருஹானா சொல்ல, ‘என்ன! இப்படி சொல்லிட்டே!’ என்பது போல ஆர்யன் அவளை பாவமாக பார்த்தான்.

“ஆனா காலம் செல்ல செல்ல, ஒரு கடினமான திரைக்கு பின்னே இருந்த மிக நல்ல மனிதரை நான் பார்த்தேன். நான் பயந்து நடுங்கின அவர்கிட்டே இருந்தே எனக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு கிடைக்குதுனு எனக்கு ஆச்சரியமா இருந்தது. அப்புறம்.. உடனே நடக்கலனாலும் என்னோட உணர்வுகளை நான் இனம் கண்டுக்கிட்டேன். எல்லாமே மெதுவா தான் வளர்ந்தது.  ஏன் எனக்கேவும் அதிசயமா தான் இருக்கு, உங்களைப் போலவே…” என அவள் சொல்ல, ஆர்யன் அவளை ஆதுரமாக பார்க்க, அம்ஜத் இருவரையும் பார்த்து சந்தோசமாக கண்களை நிறைத்துக்கொண்டான்.

ஆர்யன் “இதுல அதிசயப்பட ஒன்னுமே இல்ல.  என்மேல பாய வரும் துப்பாக்கி குண்டுகளை முன்வந்து தாங்குற பெண்ணை நான் எப்படி விட முடியும்? என்னோட கடினமான நேரத்துல இவ என்கூட இருந்திருக்கா. இவானுக்காக இவ செய்யாத தியாகங்கள் இல்ல. அதனால எனக்கு திருமணத்துக்கு முடிவெடுக்க தயக்கமே இல்ல” என அறிவித்தான்.

நஸ்ரியா தனது ஆதர்ச கதாநாயகனை பிரமிப்புடன் ரசித்து பார்க்க, கரீமா “நல்லது. ஒரு கதை படிச்சது போல் இருக்கு. நாம கோடைக்காலத்துல பிரமாண்டமான திருமணத்துக்கு ஏற்பாடு செய்யலாம். எது பொருத்தமான இடம்னு நான் தேட ஆரம்பிக்கிறேன்” என்றாள். அதற்குள் அவள் மண்டையில் ஆயிரம் யோசனைகள், திருமணத்தை தடுக்க.

“நாங்க கோடைக்காலம் வரை காத்திருக்கப் போறதில்ல, அண்ணி. இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்.” ஆர்யன் கரீமாவின் தலையில் ஒரு மலையை தூக்கிப் போட்டான்.

“ஏன் இத்தனை அவசரப்படுறே? கல்யாண ஏற்பாடுகள் செய்ய அவகாசம் வேணாமா?”

“நீங்க கவலைப்படாதீங்க. நான் எல்லா ஏற்பாடும் கச்சிதமா செய்துடுவேன். நாங்க இவான் கிட்டே திருமணம் பற்றி சொல்லணும்” என ஆர்யன் ருஹானாவை கையுடன் அழைத்துச் சென்றான்.

நடந்த எதையுமே நம்ப முடியாமல் கரீமா மேலே செல்லும் அவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அம்ஜத் எரியும் காட்டுத்தீயில் தீப்பெட்டியைத் தூக்கிப் போட்டான். “ஹா! கரீமா, அவங்க கொடுத்தது எத்தனை நல்ல செய்தி?”

“ஆமா டியர்.. மிக நல்ல செய்தி தான்!”

——-

“பெரியம்மா! ஆர்யன் சாரும் ருஹானாவும் கல்யாணம் செய்துக்க போறாங்க” என நஸ்ரியா ஓடிவந்து சொல்ல, சாரா பின்னால் நின்றிருந்த சல்மாவை கண்ணால் காட்டினார்.

கோபக்கனலாய் கொதித்துக்கொண்டிருந்த சல்மாவை பார்த்த நஸ்ரியா வாயை மூடிக்கொள்ள, சாரா தாங்க முடியாத மகிழ்ச்சியில் திரும்பி நின்று புன்னகைத்தார்.

அங்கே இருந்த பாத்திரத்தை தட்டிவிட்டு சல்மா ஆங்காரமாக செல்ல, சாராவை வந்து கட்டிக்கொண்ட நஸ்ரியா ஒரு சிறந்த காதல் படத்தை பற்றி சொல்வது போல ரசனையுடன் விளக்கினாள்.

“அவங்க கைகோர்த்துட்டு நின்னது பார்க்க அவ்வளவு அழகா இருத்தது. அவ்வளவு பொருத்தமா இருந்தாங்க!”

“எனக்கு ஆர்யன் சாரோட கல்யாணத்தை பார்க்கற பாக்கியம் கிடைச்சிருக்கு. அல்லாஹ்க்கு நன்றி!” சாரா அகமகிழ்ந்தார்.

——-

இவான் அறைக்கு முன் வந்த  நின்ற பின்னரே ஆர்யன் ருஹானாவின் கையை தளர்த்தினான். அப்போதும் திரும்பி யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்துக் கொண்டான்.

தன் கையை இழுத்துக் கொண்ட ருஹானா “அவங்க நம்பிட்டாங்களா?” என கேட்க, “நீ எல்லாத்தையும் ரொம்ப இயல்பா சொன்னே!” என ஆர்யன் பாராட்டினான்.

“எனக்கு எது முதல்ல மனசுல தோணுச்சோ அதை சொன்னேன்” என சடாரென அவள் சொல்ல, ஆர்யன் அவளை கூர்மையுடன் பார்க்க அவள் அவன் பார்வையை தவிர்த்தாள்.

“எனக்கு கவலையா இருக்கு. இவான் எப்படி இதை எடுத்துக்க போறான்னு தெரியல. அதான் நான் யோசிக்கிறேன்”

——-

“டேமிட்! டேமிட்! கல்யாணம் செய்ய போறாங்க டேமிட்! கல்யாணம் செய்ய போறாங்க டேமிட்! கல்யாணம் செய்ய போறாங்க டேமிட்! கல்யாணம் செய்ய போறாங்க.” சல்மா கட்டிலில் இருந்த தலையணைகளை கரீமா மேல் தூக்கி அடித்தாள்.

“சல்மா சத்தத்தை குறை. யாராவது கேட்டுட போறாங்க. அமைதியா இரு.”

“என்ன சொல்றே நீ? அவங்க கல்யாணம் செய்ய போறாங்க. நான் எப்படி அமைதியா இருக்க முடியும்?”

“டியர்! என்னை பாரு!”

“எல்லாம் உன்னால தான். எனக்கு உன் குரலை கேட்கப் பிடிக்கல. உன் முகத்தை பார்க்கப் பிடிக்கல. வெளிய போ!” அக்காவை சரமாரியாக அடித்தாள்.

“உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா, சல்மா?”

“வெளியே போ!” வெளியே நெட்டித் தள்ளி கதவை சாத்தினாள்.

“சல்மா! கதவை திற!”

“வாயை மூடு! டேமிட்! கல்யாணம் செய்ய போறாங்க. நீ வாயை மூடு வெளிய போ!”

கரீமா வெளியே இருந்து கூப்பிட, சல்மா நடந்துக் கொண்டே எல்லா பொருட்களையும் கதவை நோக்கி வீசி எறிந்தாள்.

——-

“ஹேய்! அப்போ நீங்க என்னோட அம்மா  அப்பாவாக போறீங்க?” ஆனந்த மிகுதியில் இருவருக்கும் இடையே அமர்ந்திருந்த இவான் குதித்து எழுந்தான்.

“ஆமா தேனே! உனக்கு சந்தோசம் தானே?”

“ரொம்ப சந்தோசம். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. ரொம்ப ரொம்ப சந்தோசம். ரொம்ப ரொம்ப” என இவான் கைகளை விரிக்க, இருவருக்கும் தாங்கள் எடுத்த முடிவில் இருந்த கொஞ்சநஞ்ச சந்தேகங்களும் கரைந்து மறைந்தன.

“அப்படின்னா பள்ளி தொடங்கும்போது நீங்க என்கூட வருவீங்க, அப்படித்தானே?” என இருவரையும் இவான் கேட்க, இருவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஏன் அப்படி கேட்கறே, சிங்கப்பையா?”

“நான் சினிமால பார்த்தேன். முதல்நாள் ஸ்கூல்க்கு போகும்போது அப்பா அம்மா கூட தான் போறாங்க. எனக்கு அம்மா அப்பா இல்லாததால நான் கவலைப்பட்டுட்டு இருந்தேன்.”

ருஹானாவின் கண்களிலிருந்து கண்ணீர் கோடாய் இறங்கியது.

“இப்போ நீங்க என் அப்பா அம்மாவாகிட்டீங்க. இனிமேல் நான் பயப்பட மாட்டேன். நீங்க எப்பவும் என்கூட இருப்பீங்க.”

“மை பேபி!” என ருஹானா அவனை அணைத்து முத்தமிட்டாள்.

“கவலைப்படாதே அக்னிசிறகே! எப்பவும் நாங்க உன்னை விட்டு பிரிய மாட்டோம்.”

“உங்களுக்கு கல்யாணம் ஆனதும் நாம பிக்னிக் போலாம், காத்தாடி விடலாம், பந்து விளையாடலாம். சித்தப்பா எனக்கு மரத்துல ஊஞ்சல் கட்டித் தருவார்.”

“கண்ணே! இப்பவும் நாம இதெல்லாம் செய்யலாம் தானே?” ருஹானா குறுகுறுப்புடன் கேட்டாள்.

“ஆனா அது மாதிரி இல்ல. இப்போ நீங்க என்னோட அம்மா அப்பா. நான் என்னோட அம்மா அப்பா கூட பிக்னிக் போனதே இல்ல” என சொல்ல, ஆர்யன் தனது சகோதரனை நினைத்து சோகமானான்.

“ஓகே அன்பே! நாம எல்லாம் சேர்ந்து செய்யலாம்” என ருஹானா வாக்கு தர, இவான் நெளிந்தான். என்ன என ருஹானா வினவ, “நான் பாத்ரூம் போகணும். ஆனா உங்களை விட்டுட்டு போக எனக்கு மனசு வரல” என குட்டி சொன்னதும் அவள் சிரித்தாள்.

ஆர்யன் புன்னகைக்க, “நாங்க எங்கயும் போயிட மாட்டோம், செல்லம். நீ போயிட்டு வா” என ருஹானா இவானின் முதுகை தட்ட, அவன் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

“இது எளிதா….” வழக்கம்போல இருவரும் ஒன்றாக தொடங்க, “நீ சொல்லு” என ஆர்யன் விட்டுக் கொடுத்தான்.

“இது நாம நினைச்ச மாதிரி கஷ்டமான வேலை இல்ல. எளிதா முடிந்தது” என அவள் சந்தோசப்பட, “அவன் இதுக்காக காத்திருந்தான் போல..” என இவானை நினைத்து ஆர்யன் பெருமூச்சு விட்டான்.

அவனின் சோகம் மலர்ந்திருக்கும் ருஹானாவின் கண்களை கண்டதும் மாறியது. அவன் பார்வையை தவிர்க்க அவள் வேறுபக்கம் பார்க்க ‘மௌனமாயிருந்தே என் மனதை கொள்ளையடிக்கிறாயே, அது எப்படி?’ என அவளிடம் மனதில் பேசினான்.

அந்த இறுக்கம் தாங்காமல் ருஹானா எழுந்து, சிதறிக்கிடந்த இவானின் விளையாட்டு பொருட்களை எடுக்க, இடைவரை விரிந்த அவளது கூந்தல் அவளை இடைஞ்சல் செய்தது. அதை விலக்கி விட்டுக்கொண்டே அவள் வேலை செய்ய, அவள் கூந்தலின் மேல் அபார மோகம் கொண்ட ஆர்யன் அதன் மேலேயே கண்ணை வைத்திருந்தான்.

யார் பாதையையும் தொடராத அவன் விழிகள்
அவள் வழியை தொடர்ந்து சென்று கொண்டே இருந்தன. பின் அவனும் எழுந்து சோபாவில் இருந்த இவானின் பொம்மைகளை எடுத்து அவளிடம் கொடுக்க, அவளின் மரகத கண்களில் சிக்கிக் கொண்டான்.

திருமணம் உறுதியாகிவிட்ட தெம்பில் இருவரும் எந்தவித தயக்கமும் இன்றி கண்கள் கலந்து நிற்க “நான் வந்திட்டேன்!” என்று இவான் ஓடிவர, இருவரும் மயக்கம் தெளிந்து நகர்ந்தனர்.

ஆர்யனை ஓடிவந்து இவான் கட்டிக்கொள்ள, ஆர்யன் அவனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டான். தன் சிறிய தந்தையை விரல்களால் தடவி பார்த்து சந்தோசப்பட்ட இவான், வேலை செய்துக் கொண்டிருந்த சித்தியையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டான்.

இருவரும் இவானை தூங்க வைக்க, இவான் சந்தோசமாக மனநிறைவுடன் தூங்கிவிட்டான். அவனது சிரித்த முகத்தை பார்த்தவாறு இருவரும் வெளியே வர “நான் கிச்சனுக்கு போறேன்” என ருஹானா நகர்ந்தாள்.

“இரு! ஒரு நிமிஷம்” என சொன்ன ஆர்யன் தனது அறைக்கு சென்று திருமண பதிவு அலுவலகத்தில் தந்த ஆவணத்தை எடுத்து வந்து கொடுத்தான்.

“இது பெண்ணுக்கு கொடுக்க வேண்டியதுன்னு நினைக்கிறேன்.”

புன்னகை செய்த ருஹானா “இது இல்ல. திருமண சான்றிதழ் தான்!” என்று சொல்ல,

திருமண நடைமுறைகள் தெரியாத ஆர்யன் “அப்படியா? அது இன்னும் ரெண்டு வாரத்துல வந்துடும். இது கூட சேர்த்து வச்சிக்கோ” என திருமணத்தை ஆவலோடு எதிர்நோக்கி சொன்னான்.

அவளும் தனது சந்தோசத்தை மறைத்துக்கொண்டு “எனக்கு தூக்கம் வருது. குட்நைட்!” என தன் அறை நோக்கி நடந்தாள்.

“நீ கிச்சனுக்கு போகணும்னு சொன்னே!” அவளது வார்த்தைகளை என்றுமே மறக்காத ஆர்யன் எடுத்துக் கொடுக்க, வெட்கப்பட்ட ருஹானா “மனச மாத்திக்கிட்டேன்” என தனது அறைக்குள் நுழைய, ஆர்யன் அவள் மூடியபின்னும் அறைக்கதவை பார்த்து நின்றுவிட்டு சென்றான்.

இத்தனையும் தூண் மறைவில் சல்மா பார்த்திருந்தவள் நகத்தை ஆவேசமாக கடித்து துப்பினாள்.

——–

கதவை மூடி அதன் மேலேயே சாய்ந்திருந்த ருஹானா தனது கையில் இருந்த ஆவணத்தை சிரிப்போடு அணைத்துக் கொண்டாள். அதைக்கொண்டு வந்து மேசையின் இழுப்பறையில் பத்திரப்படுத்திவிட்டு, சாரா அவளது வயிற்று வலிக்கு தந்த கஷாயத்தை குடித்துக்கொண்டு இருக்கும்போது கதவு படாரென திறந்தது.

அவள் திடுக்கிட்டு திரும்ப கர்ண கொடூரமாக சல்மா அவளை நோக்கி பாய்ந்து வந்தாள். “கடைசில நீ திட்டம் போட்டதை சாதிச்சிட்டேல. அவனை மயக்கிட்டே. ஆனா கல்யாணம் அத்தனை ஈஸியா முடியாது.”

ருஹானாவை பிடித்து இழுத்து கட்டிலில் தள்ளினாள். “சல்மா? என்ன செய்றே? ஒழுங்கா நடந்துக்க” என ருஹானா கத்த, அவள் மேல் ஏறி அமர்ந்த சல்மா பல்லைக் கடித்துக்கொண்டு ருஹானாவின் கழுத்தை நெறித்தாள்.

“புதையல் தேடி வந்த குப்பை நீ! நான் உன்னை கொல்லப் போறேன்! செத்துப்போ! இதான் முடிவு! எல்லாம் முடிந்தது. சாவு! செத்துப்போ!”

(தொடரும்)

Advertisement