Advertisement

கூட்டமாக இருந்த ஒரு உணவகத்தில் ஆர்யனும், ருஹானாவும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

“நம்ம குடும்பத்தினர் கிட்டே இருந்தே எதுக்கு மறைக்கணும்? அது கஷ்டம் இல்லயா? அது அவங்களை ஏமாத்துற மாதிரி இருக்காதா?”

“எனக்கும் அவங்க கிட்டே இருந்து மறைக்க ஆசை இல்ல. ஆனா அவங்க மட்டும் மாளிகைல வசிக்கல. பணியாட்கள், பாதுகாவலர்கள், ஆபீஸ் ஸ்டாப்ஸ், மாளிகைக்கு வந்து போறவங்க.. எவ்வளவு பேர் இருக்காங்க! அதுமில்லாம நம்ம பக்கத்துல இருக்கற யாரோ தான் நமக்கு எதிரா வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அது யாருன்னு நாம இன்னும் கண்டுபிடிக்கல.”

ஆர்யன் விளக்கி சொல்லியும் ருஹானாவின் முகம் தெளியவில்லை.

“அப்புறம் அண்ணனும், இவானும் எதையும் மறைக்க தெரியாம பேசக் கூடியவங்க. அவங்க சோசியல் சர்வீஸ் அதிகாரிங்ககிட்ட ஏதாவது சொல்லிட்டாங்கன்னா நமக்கு இவான் கிடைக்கறது சிரமமாகிடும். அதனால இது உண்மையான கல்யாணம் தான்னு எல்லாரும் நம்பணும். இல்லனா இவானோட கஸ்டடிக்கு ஆபத்தாகிடும்.”

நீளமாக ஆர்யன் பேச, ருஹானா ஒருவழியாக ஏற்றுக்கொண்டாள்.

“நீங்க சொல்றது சரிதான். ஆனா அது நம்மால முடியுமா? எப்பவும் உண்மையை மறைச்சிக்கிட்டு கவனமா இருக்கறது எவ்வளவு நாளைக்கு சாத்தியம்?” என கேட்டவள் “அப்புறம்.. வந்து.. ம்ம்..” என தயங்க “என்ன?” என அவன் கேட்டான்.

கண்களை உருட்டி அக்கம்பக்கம் பார்த்த ருஹானா முன்னால் தலையை நீட்டி குரலை தழைத்துக்கொண்டு  “கல்யாணத்துக்கு அப்புறம்… நாம ஒரே அறையில இருக்கணுமா?” என கேட்டு முடித்துவிட்டாள்.

அந்த கேள்வியை எதிர்பாராத ஆர்யனும் முகம் மாறி, ஆனால் வேகமாக “கண்டிப்பா!” என்றான். உள்ளுக்குள்ளே சந்தோசம் தானோ? “இவானை இழக்காம இருக்க நாம என்னென்ன செய்யணுமோ அதெல்லாம் செஞ்சி தான் ஆகணும். திருமணத்துக்கு முன்னாடியும், பின்னாடியும் நாம காதலிக்கிற ஜோடியைப் போல தான் இருக்கணும். இல்லனா நாம யாரையும் நம்ப வைக்க முடியாது.”

“அப்படினா இதெல்லாம் எப்போ நாம ஆரம்பிக்கணும்? இப்படி.. இருக்கறது…” காதல் ஜோடி என்று சொல்ல அவளுக்கு கூச்சம்.

“சீக்கிரமே திருமணத்தை அறிவிக்கணும். நம்ம கிட்டே நேரம் இல்ல. நாம வீட்டுக்கு போகும்போது நமக்கு ஒரு புது வாழ்க்கை தொடங்கும். வெளிப்படையா…” என்றவன் அதற்கு மேல் அவளை சங்கடப்படுத்தாமல் பணியாளை அழைத்தான்.

“எனக்கு காபி.. உனக்கு என்ன வேணும்?”

அவன் முகத்தை பாராமல் கன்னங்களை தொட்டு பார்த்துக் கொண்டவள் “எனக்கு ஐஸ்வாட்டர் போதும்” என்றாள்.

“நாம இப்பவே சமூக சேவை நிறுவனத்துக்கு போய் நம்ம திருமணம் பற்றி சொல்வோம்.”

“அவங்க கேட்க மாட்டாங்களா, ஏன் நீங்க கல்யாணம் செய்றீங்கன்னு? அப்போ என்ன பதில் சொல்றது?”

“ஏன்னா.. நாம… காதலிக்கிறோம்.” ஆர்யன் அவளை பார்த்துக்கொண்டே உள்ளத்திலிருந்து சொல்ல, அவளும் ஒரு கணம் தன்னை மறந்தாள்.

பின் அவள் இமைகளை தட்ட, தன்னை மீட்டுக்கொண்ட ஆர்யன் “வந்து.. பொதுவா இப்படித்தானே சொல்வாங்க…? அதையே நாமும் சொல்வோம். கல்யாணம் செய்ய எல்லாரும் என்ன காரணம் சொல்றாங்களோ அதையே சொல்வோம். காதல்…”

அவளின் நாண முகத்தை கனிவாக பார்த்தவன் சுதாரித்துக்கொண்டான். “இல்லனா நாம ஃபார்மாலிட்டிக்காக தான் திருமணம் செய்றோம்னு அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க” என கண்களை உருட்டி அவன் பேச, அவள் மாட்டிக்கொண்ட திருடனைப் போல விழித்தாள்.

அப்போது ஆர்யனின் பணியாள் வந்து ஒரு ஆவணத்தை கொடுத்து “ஆர்யன் சார்! எல்லா வேலையும் முடிச்சிட்டேன். திருமண தேதி இன்னும் ரெண்டு வாரத்தில..” என்று சொல்ல ஆர்யன் தலையாட்டினான்.

“ரெண்டு வாரத்துக்கு அப்புறம்..” ருஹானாவின் விழி பிதுங்கியது.

——-

“உட்காருங்க! நீங்க விசாரணைக் குழு அறிக்கையை பற்றி கேட்க வந்தீங்கன்னா அது நாளைக்கு தான் தயாராகும். அதுக்கு முன்ன நீங்க தெரிஞ்சிக்க முடியாது.”

“நாங்க அதுக்காக வரல” என்று சொன்ன ஆர்யன், சமூக சேவகி லைலாவின் முன்னே திருமண அறிவிப்பு ஆவணத்தை வைத்தான்.

“இது உண்மையான கல்யாணமா? இல்ல இவான் கிடைக்க செய்யற ஏமாற்று வேலையா?” லைலா கடுமையாக கேட்க ருஹானா இல்லை என தலையாட்டினாள். “நான் இப்பவே உங்களை எச்சரிக்கை செய்றேன். அப்படி பொய்யான கல்யாணமா இருந்தா இவானோட கஸ்டடியும் உங்களுக்கு கிடைக்காது. அதுக்கு அப்புறம் இவானை பார்க்கக்கூட உங்களால முடியாது.”

“இது நிஜ திருமணம் தான். நீங்க செக்கிங்க்கு வரும்போது கூட நாங்க திருமண ஏற்பாடுகளைப் பற்றி தான் பேசிட்டு இருந்தோம். அப்போ எங்க குடும்பத்தினருக்கே சொல்லாததால உங்களுக்கும் சொல்ல முடியல. அதனால தான் இத்தனை குழப்பமும்.”

“அப்படின்னா இனி வழிமுறைகள் மாறும். இவானோட வசிப்பிடம் அர்ஸ்லான் மாளிகையா இருக்க போறதால இன்னும் ஒரு ஆய்வு நடக்கும். உங்க திருமணத்தோட நம்பகத்தன்மையும் சோதிக்கப்படும். எல்லாத்தையும் விட முக்கியம் இவான். அவன் இந்த கல்யாணத்தை எப்படி எடுத்துக்கறான்னு நாங்க தெரிஞ்சிக்கணும். வெள்ளிக்கிழமை நாங்க விசாரிக்க வரலாமா?”

இதுவரை வாய் திறந்து பேச முடியாமல் சிரமப்பட்டு புன்னகை செய்திருந்த ருஹானாவை பார்த்து லைலா கேட்க, அவள் ஆர்யனை பார்த்தாள். அவன் தலையாட்டவும், அவளும் லைலாவிடம் சரியென தலையாட்டினாள்.

                                          ——-

“எங்க அவங்க? ரெண்டு மணி நேரமா காத்திருக்கோம்” என அர்ஸ்லான் மாளிகை வரவேற்பறையில் நின்றிருந்த சல்மா கடுப்பாகி, நடந்து கொண்டிருந்த கரீமாவிடம் கேட்டாள்.

சோபாவில் அமர்ந்திருந்த அம்ஜத் “கரீமா! நான் வேகமாக போய் என் பூக்களை பார்த்துட்டு வந்துடட்டுமா?” என கேட்க, எரிச்சலான கரீமா “அமைதியா உட்காருங்க டியர்!” என்றாள்.

“சீக்கிரம் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என அம்ஜத் முரண்டு பிடிக்க, கரீமா “ஆர்யன் நம்மள இங்க காத்திருக்க சொல்லியிருக்கான். நம்ம கிட்டே பேசணும்னு போன் செய்து சொன்னான். கொஞ்ச நேரம் சோபால உட்காருங்க, ப்ளீஸ்” என அவனை கெஞ்சி அமர வைத்தாள்.

“வெளிநாட்டுக்கு போறோம்னு சொல்லப் போறான். இல்லனா நம்மள ஏன் கூப்பிட்டு பேசப் போறான்?” சல்மா கழுத்தை தடவியபடி கடுகடுத்தாள்.

“எனக்கு….. தெரியல… சல்மா. அம்ஜத் மாதிரி நீயும் தொணதொணக்காதே!”

மூவரும் பொறுமையின்றி மூடிய வாசற்கதவை பார்த்தப்படி இருந்தனர்.

———-

கருப்பு நிற டொயோட்டா செக்வயா ஒளியை பாய்ச்சிக்கொண்டு உள்ளே வர, ஆர்யன் அதை இரும்பு கேட்டின் அருகிலேயே நிறுத்தினான். பக்கத்தில் அமர்ந்திருந்த ருஹானாவை பார்த்த ஆர்யன் “நீ தயாரா?” எனக் கேட்டான். அவளுக்கு தான் திணறல் திண்டாட்டம் எல்லாம். அவன் புதுவிதமான பூரிப்பில் தான் திளைத்திருந்தான்.

“ஹுஹூம்!” ருஹானாவின் ஒப்புதல் வெறும் ஓசையாய் வெளிவந்தது.

அவளையே பார்த்தபடி அவன் இருக்க “இங்க ஒரே வெப்பமா இருக்கு. நான் வெளிக்காற்று வாங்கறேன்” என அவள் கதவை திறந்து கீழே இறங்க, ஆர்யனும் காரைவிட்டு இறங்கினான்.

அவள் பக்கம் வந்து நின்றவன் “நாம திருமணத்தை பற்றி சொல்லும்போது எல்லாரும் நம்பற மாதிரி சொல்லணும்” என்றான்.

“சரி!” என அவள் சொல்ல, ஆர்யன் அவளை நோக்கி வலது கையை நீட்டினான். ருஹானா அவன் முகத்தை நோக்க, அவன் கண்களில் தெரிந்த நம்பிக்கையை கண்டு மெல்ல தன் இடது கையை அவன் கையில் வைத்தாள்.

அவன் ஒவ்வொரு விரலாக மெதுவாக மென்மையாக அவளது கரத்தை பற்ற அவள் கண்களை மூடிக்கொண்டாள். கையில் அழுத்தத்தை உணர்ந்து அவள் கண் திறக்க, ஆர்யன் அவளை தன் இணையாக நோக்கினான். இருவரும் கார் விளக்கின் ஒளி வெள்ளத்தில் மாளிகையை நோக்கி மெல்ல நடந்தனர்.

‘என்னால அந்த வழியில நடக்க முடியாது, சையத் பாபா! ஏன்னா எனக்கு அதுல எப்படி நடக்கணும்னு தெரியாது!’

‘உன்னால நடக்க முடியும், மகனே! அதுக்கு நீ உன்னோட கூட்டிலிருந்து வெளியே வரணும்! உன் உள்ள உணர்வுகளை மறைக்காதே! இறுதிவரை உன் துணையை கைவிடக்கூடாது! நீ நடக்க தயாரா?’

இருவரும் கைகோர்த்தபடி ஒருவரையொருவர் பார்த்த வண்ணமே வாசற்கதவை அடைந்தனர். கதவை திறந்த ஜாஃபர் இருவரின் இணைந்த கைகளை பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார், ‘எனக்கு தான் இது முன்னமே தெரியுமே!’ என்பது போல.

“நல்வரவு!” என ஜாஃபர் சொல்ல, ருஹானா வெட்கத்துடன் தலையை குனிந்து கொள்ள, ஆர்யன் மலர்ந்த முகத்துடன் தலையசைத்து விட்டு ருஹானாவுடன் சேர்ந்தே உள்ளே நுழைந்தான்.

அவர்களை முதலில் பார்த்த அம்ஜத் உள்ளார்ந்த மகிழ்வுடன் எழுந்து நின்று சிரித்தான். எட்டிப்பார்த்த கரீமாவும் சல்மாவும் வாயடைத்து திக்கி திக்பிரமை அடைந்தனர். கரீமா சல்மாவின் முகத்தை பயத்துடன் பார்க்க, அவள் கண் கலங்க சுவாசத்துக்கு திணறினாள்.

உள்ளே வரவும் ருஹானா ஆர்யனை பிடித்திருந்த பிடியை விட, ஆர்யன் குனிந்து தான் பிடித்திருந்த அவள் கையை பார்த்தான். அவளை கேள்வியாக பார்த்தவன், அவள் முகத்தில் பயத்தை காணவும் கண்களை மூடித்திறந்து அவளுக்கு தைரியம் சொன்னான். அவள் கையையும் இறுக்கி பிடித்தான்.

ருஹானாவும் அவன் கரத்தை பற்ற,  அவளை அழைத்துக்கொண்டு மூவரையும் நெருங்கினான். முன்னே வந்த கரீமா “ஆர்யன் டியர்! என்ன நடந்தது?” என கேட்டாள்.

ருஹானாவை ஒரு நொடி நோக்கிய ஆர்யன் “நாங்க திருமணம் செய்துக்க போறோம்!” என்றான் கம்பீரமாக.

சல்மா விக்கித்து பார்க்க அவள் கண்களில் கண்ணீர் திரண்டது. நம்ப முடியாத கரீமா மீண்டும் கேட்டாள். “திருமணமா?”

அதற்குள் அம்ஜத் “நீங்க திருமணம் செய்துக்க போறீங்களா? கரீமா கேட்டியா? ரெண்டு பேருக்கும் கல்யாணமாம்!” என ஓடிவந்து ஆர்யனை தழுவிக் கொண்டான்.

“வாழ்த்துக்கள் ஆர்யன். எனக்கு ரொம்ப சந்தோசம். ருஹானா! வாழ்த்துக்கள்” என சொல்லி நிற்க, ஆர்யன் மீண்டும் ருஹானாவின் கையுடன் கோர்த்துக்கொண்டான்.

“என்னை பொறுத்தவரை நீங்க ஒருத்தொருக்கொருத்தர் பொருத்தமானவங்க. நீங்க ரெண்டு பேரும் நேசிக்கிறீங்கன்னு எனக்கு ஆரம்பத்துலயே புரிஞ்சது. நீங்க எங்களுக்கு நல்ல செய்தியை சொல்லி இருக்கீங்க. கை கோர்த்துட்டு நிற்கிற உங்க ரெண்டு பேரையும் பார்க்க அழகா இருக்கு.”

அம்ஜத் பேசவும் தன்னை சுதாரித்துக்கொண்ட கரீமா “வாழ்த்துக்கள் ஆர்யன் டியர்! எங்களுக்கு ஆச்சரியமா இருக்கு. என்ன ஒரு இனிய அதிர்ச்சி!” என்று சொல்ல, சல்மாவின் கையில் இருந்த கண்ணாடி குவளை கீழே விழுந்தது.

“உனக்கு ஒன்னுமில்லயே, டியர்” என கரீமா பக்கம் வர, “என் கை நழுவி விழுந்திடுச்சி” என்று சொன்ன சல்மா குனிந்து உடைந்த துண்டுகளை கையில் எடுத்தாள்.

இவர்களை கவனிக்காமல் ஆர்யனும் ருஹானாவும் கண்களால் பேசிக்கொண்டிருக்க, அம்ஜத்தும், ஜாஃபரும் அதை புன்னகையுடன் பார்த்திருந்தனர்.

“விடு. நஸ்ரியா வந்து சுத்தம் செய்வா!” என கரீமா தடுக்க, “இல்ல.. நானே எடுத்துட்டு போறேன்” என்று கண்ணாடி துண்டுகளை சேகரித்த சல்மா சமையலறைக்கு சென்று சுவரில் சாய்ந்து நின்றாள்.

அரவம் கேட்டு திரும்பிய சாரா “உங்களுக்கு எதும் வேணுமா சல்மா மேடம்?” என அருகில் வந்து கேட்க, சல்மா கண்ணாடி துண்டுகளை இறுக்கி பிடிக்க, ரத்தம் வழிந்தது. “ஐயோ உங்க கையில் ரத்தம் வடியுது. நான் மருந்து கொண்டு வரேன்.”

“எனக்கு வேணாம். உன் வேலையை பார்த்துட்டு போ. என்னை தனியா விடு”

பயந்து போன சாரா முன்னே சென்று அவர் வேலையை தொடர, சல்மா கண்ணாடி துண்டுகளை கீழே விட்டாள். கோபமாக மூச்சிரைக்க, அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

———-

Advertisement