Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                   அத்தியாயம் – 102

அர்ஸ்லான் மாளிகை தோட்டத்தில் கடும்குளிர்காற்று வேகமாக வீச, மிதமாக பனியும் கொட்டிக் கொண்டிருக்க, ஆர்யன் வாழ்விலும் மகிழ்ச்சிக் காற்று வீசத் தொடங்க, மெல்ல ஆனந்தப் பூமழையும் பொழிய விழைகிறது.

ருஹானாவின் சம்மதம் கேட்டு ஆர்யனுக்கு அபரிமிதமான சந்தோஷம் ஏற்பட்டாலும் ஒரு ஓரத்தில் கோபமும் இருந்தது. ஒரு நாள் முழுதும் அவனை சோகத்தில் மூழ்கடித்து விட்டாளே!  “இப்போ என்ன மாறுச்சி?” கோபமாகவே கேட்டான்.

அவள் பதில் சொல்லாது தலை குனிய, “நேத்து முடியாதுன்னு சொன்னே. இன்னைக்கு சரின்னு சொல்றே? அதுக்குள்ள என்ன மாறுதல்?” விடாமல் கேட்டான்.

“நான் நிறைய யோசித்தேன்… அதை பற்றி….., உங்க திருமண ஏற்பாடு பற்றி..” அவள் நிறுத்தி நிதானமாக பேச, அவன் அவளை பார்த்தபடியே உன்னிப்பாக கவனித்தான்.

“எனக்கு தெரியும், அது உண்மையானது இல்ல.” இப்போது ஆர்யன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான், அது மெய் தான் என சொல்ல முடியாமல்…. சொன்னால் திருமணத்திற்கு மறுத்துவிடுவாளோ என்ற பயத்தில்…

“ஆனா அதான் இவானுக்கு சிறந்தது. அவனுக்கு 5 வயசு தான். அதுக்குள்ள நிறைய இழப்புகளை பார்த்துட்டான். இப்போ நாம நாட்டை விட்டு போனா அவனோட அன்புக்குரியவங்க கிட்ட இருந்து அவன் பிரிக்கப்படுவான். அம்ஜத் அண்ணா, கரீமா மேம், குடும்பத்தினராக பழகும் பணியாட்கள்…”

‘அப்படி ஒன்றும் நீ இவானுக்காக என்னை மணம் புரிய தேவையில்லை’ என சொல்லிவிட கால் நொடி தோன்றியது, ஆர்யனுக்கு. ‘வேண்டாம், அதற்காகவாவது சரி என்றாளே, மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என உடனே மனம் அந்த சிந்தனையை அழித்துவிட்டது.

“ஆமா, வேற நாட்டில நாமளும் அவன் கூட இருப்போம் தான். ஆனா முன்னே மாதிரி எதுவும் இருக்காது. அவனோட சின்ன இதயம் இத்தனை பிரிவுகளை எப்படி தாங்கும்?” ருஹானா உருக்கமாக பேச ஆர்யன் தலையாட்டினான்.

“அதனால நீங்க தேர்ந்தெடுத்த வழி சரிதான். இவான் மேலே பாசம் வச்சிருக்கவங்க கிட்டே இருந்து பிரிக்காம ஒரு தீர்வு தேடனும். அதுக்கு ஒரே வழி கல்யாணம் தான்.”

அவள் வாயால் கல்யாணம் என்ற வார்த்தையை கேட்க ஆர்யனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தாலும், வில்லை இன்னும் கையில் வைத்திருந்தவன் மீண்டும் கேட்டான். “இருந்தாலும், நீ நல்லா யோசிச்சிக்கோ. இதை ஒரு கடமையா நீ எடுத்துக்கக் கூடாது. வெளிநாடு போறதுங்கற ஒரு வழி இன்னும் இருக்கு.”

“இதை ஏற்கனவே யோசித்து பார்த்துட்டேன். இதே திருமணத்துக்கு வேற யாராவது கேட்டு இருந்தா நான் கண்டிப்பா முடியாதுன்னு தான் சொல்லியிருப்பேன்.” இப்போது தான் அவன் மனதை குளிர்விக்கும்படி பேசுகிறாள்.

“ஆனா நான்…. மத்த யாரையும் நம்புறதை விட உங்களை நான் நம்புறேன்.” ஆர்யன் அளவற்ற ஆனந்தம் கொண்டான். கண்கள் மலர்ந்தன. இதழ்களில் புன்னகை கீற்று அழகாய் வெளிப்பட்டது.

அந்த புன்னகை அவளிடமும் பிரதிபலிக்க “உங்களுக்கு நினைவு இருக்கா, சில மாதங்களுக்கு முன்னே நம்மோட முதல் சண்டை இதே இடத்துல தான் நடந்தது?” என்று கேட்க, அவனும் இலேசாக தலையசைத்தான்.

“நீங்க வில் பயிற்சி செய்துட்டு இருக்கும்போது நான் இவானை கேட்டு இங்க தான் நின்னேன். அப்போ உங்க இரக்கத்தை எதிர்பார்த்து இவானுக்காக கெஞ்சினேன். என் உயிரே போறதா இருந்தாலும் இவானை நான் விட்டு விலகி இருக்க மாட்டேன்.”

ருஹானா சொல்ல சொல்ல, ஆர்யனும் அந்த நாளுக்கு சென்றுவிட்டான்.

“ஆனா அதுக்கு அப்புறம் நாம நிறைய போராட்டங்களை சந்தித்தோம். இப்போ அதே நிலைல நான் இருந்தா பயப்படாம உங்க அம்புக்கு முன்னே நிற்பேன். ஏன்னா இப்போ எனக்கு உங்களை பற்றி தெரியும்.”

இவளை நேசிப்பதில் தவறே இல்லை என்று ஆர்யன் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டான்.

“என்னோட அன்புக்குரியவங்களையும், மற்ற எல்லாத்தையும் விட்டுட்டு இவானுக்காக உங்க கூட வெளிநாட்டுக்கும் வருவேன். யார் முகத்தையும் பார்க்காம எங்கயோ இருக்குற கிராமத்துல  வருஷக்கணக்கா வசிப்பேன். அது போலவே இந்த மாளிகைல வசிக்கணும்னா அதையும் செய்வேன்…. உங்க கூட..”

காதல் என்ற வார்த்தையை மட்டும் சொல்லாமல் சுற்றி வளைத்து எல்லாமே சொல்லிவிட்டாள், ருஹானா. கேட்டுக்கொண்டிருந்த ஆர்யன் மனதின் கடின பாறையெல்லாம் உடைந்து பூப்பூவானது.

வில்லை அதன் இடத்தில் செருகிய ஆர்யன் அவளை நோக்கி நடந்து வந்து பக்கம் நின்றான். “நீ சரியான முடிவு தான் எடுத்துருக்கே. இது இவானுக்கு சிறந்தது..” என்று ஆர்யன் சிரிப்புடன் சொல்ல, ருஹானா தலையை ஆட்டி ஆமோதித்தாள். ‘எனக்கும் இதுவே மிகச்சிறந்தது!’ என எப்போது சொல்வான்?

“இங்கயே எனக்காக காத்திரு. எங்கயும் போய்டாதே” என்று அவளிடம் சொன்னவன் வேகமாக மாளிகைக்குள் சென்றான்.

உண்மையான அன்பின்மீது

நம்பிக்கைக் கொண்டு வாரிசு நாடி

துவங்கிய போராட்ட பயணம்

காடு மேடு கரை பல தாண்டிட

மெல்ல மெல்ல சிறுவன் மட்டுமின்றி

தலைவனும் மனச்சிறையில் இணைந்து  

வழித்துணையாய் வர விரும்பும்போது

தயக்கமானது மறுத்து சொல்ல..

கொண்ட மயக்கம் சம்மதம் சொல்ல..

வில் எந்தியவனது இதயத்தை

சொல் அம்புகள் மலரச் செய்கிறதே!

——-

சமையலறைக்குள் வந்த கரீமா நஸ்ரியாவிடம் இன்முகமாக தேநீர் கேட்டாள். நஸ்ரியா தேநீர் தயாரிக்க ஜன்னல் அருகே சென்ற கரீமா அதன் திரையை விலக்க, தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த ருஹானா அவள் கண்ணில் பட்டாள்.

நொடியில் முகம் மாறிய கரீமா, ருஹானாவிடம் தகவல்கள் திரட்ட வேகமாக நகர, நஸ்ரியா “உங்க டீ ல தேன் சேர்க்கவா, கரீமா மேம்?” என கேட்க, கரீமா அவளை எரிப்பது போல பார்த்தாள். பயந்து போன நஸ்ரியா அதே கேள்வியை மெதுவாக கேட்க, அவளுக்கு பதில் சொல்லாமல் வெளியே வந்தாள்.

அவள் வாசலுக்கு செல்லும்போது ஆர்யன் தடதடவென படிக்கட்டில் இறங்கும் சத்தம் கேட்டு தாமதித்தாள். “ஆர்யன் டியர்! டென்சனா தெரியுறே! எங்க வேகமா போறே?” என கரீமா கேட்க, புதிதாக மாற்றிய கோட்டின் கழுத்துப் பட்டையை சரிசெய்தபடி இறங்கிய ஆர்யன் “எனக்கு உடனே செய்யவேண்டிய முக்கியமான வேலை இருக்கு” என்று சொன்னபடியே நிற்காமல் வெளியே விரைந்து விட்டான்.

பலமணி நேரமாக அவன் கொண்ட கோபமும் வருத்தமும் நிமிடங்களில் நீங்கி, நிம்மதியும் ஆனந்தமுமாக வெளியே வந்த ஆர்யன் தனது பணப்பையை கோட்பையில் வைத்தபடி ருஹானாவை பார்த்து கண்கள் பளபளக்க தலையாட்டி கூப்பிட்டான். “நாம போகலாம்.”

அவன் பரபரப்பையும் சந்தோசத்தையும் பார்த்த ருஹானா, “எங்க?” எனக் கேட்டாள்.

திரும்பவும் “போலாம், வா!” என அழைத்தப்படி காரை நோக்கி ஆர்யன் செல்ல, அவனை பின்தொடர்ந்த ருஹானா “எங்க போறோம்? எங்கன்னு சொல்ல மாட்டீங்களா?” என்று கேட்டபடியே காரில் ஏறி அமர்ந்தாள்.

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த ஆர்யன் அவளை ஆழ்ந்து பார்த்து “திருமணப்பதிவு அலுவலகத்துக்கு!” என சொன்னதும் ருஹானா திகைத்தாள். வாய் திறந்து கண்களை தட்டி தட்டி யோசித்தவள் “என்ன.. இப்பவா?” என கேட்டாள். ஆர்யன் அவளை ஆசையாகப் பார்க்க, ருஹானா பதட்டமாக கேள்விகளை அடுக்கினாள்.

“சாட்சிகள் வேணாமா? இப்படியே ஓகே தானா?… அல்லாஹ்!.. உடனேயா?… இந்த டிரஸ்லயேவா?.. ம்ப்ச்.. நான்… எனக்கு முதல்லயே தெரிஞ்சிருந்தா நான் நல்லா உடுத்தியிருப்பேனே!”

அவளின் பதற்றத்தை சந்தோசமாக ரசித்த அந்த குறும்புக்காரன், “பொறுமை, பொறுமை!.. நாம இப்பவே கல்யாணம் செய்துக்க போறதில்ல. நம்மோட விவரங்களை பதிவு செய்திட்டு கல்யாணத்துக்கு தேதி கேட்கப் போறோம்” என முறுவலுடன் சொல்ல, அவள் பதட்டம் குறைந்தது.

“நேரத்தை வீணாக்காம உடனே செயல்முறைகளை தொடங்கணும். இல்லனா நாம இவானை பிரிய நேரலாம்” என்று சொன்னவன், சங்கடமாக விழித்த அவளை பார்த்து உள்ளூர நகைத்தப்படி “உன் அடையாள அட்டை வச்சிருக்கிறியா?” என கேட்டான்.

அவன் முன்னே கல்யாணம் என்று அவசரப்பட்டு திணறி மாட்டிக்கொண்டோமே என வெட்கம் கொண்டவள் “இதோ பார்க்கறேன்… வந்து.. நீங்க திருமணப்பதிவுன்னு சொன்னதும்.. ஆம்.. இருக்கு… ஐடி இருக்கு என்கிட்டே… ஆமா, நீங்க சொல்றது சரி தான்… நாம காலம் தாழ்த்தக் கூடாது” என்று தடுமாறியபடி காரின் பாதுகாப்பு பட்டையை அவள் எடுத்து மாட்ட, ஆர்யன் மிதப்பாக காரை நகர்த்தினான்.

வாசற்கதவின் பின்னே ஒளிந்திருந்த கரீமா கார் செல்வதை பார்த்துக்கொண்டே வெளியே வந்து அலைபேசியை எடுத்து “சல்மா! அங்க எதாவது தகவல் தெரிஞ்சதா? இங்க ஆர்யனும், சல்மாவும் வெளியே போறாங்க. அவங்க சண்டையெல்லாம் முடிஞ்சது போல. எங்கன்னு தெரியல” எனக் கேட்டாள்.

“எங்க போறாங்க? நாட்டை விட்டு போயிட்டாங்களா?”

“இல்லல்ல. இவான் இங்க தான் இருக்கான். அவனை விட்டுட்டு எப்படி போவாங்க? ஆனா அவசரமா போனாங்க. சரி, ரஷீத்ட்ட இருந்து எதும் கண்டுபிடிச்சியா?”

“இல்ல அக்கா! ஆனா அவன் கண்டிப்பா ஏதோ மறைக்கிறான்.”

“என்ன நடக்குதுன்னு நாம சீக்கிரம் தெரிஞ்சிக்கணும்.”

——–

“உன்னோட ஐடியும் போட்டோவும் வேணும்.” காரை திருமண பதிவு அலுவலகத்தின் முன் நிறுத்திய ஆர்யன் தனது பர்சை திறந்தபடி கேட்டான்.

“ஐடி இங்க இருக்கு. போட்டோ.. தேடுறேன்.. சாரி.. உங்களை காக்க வைக்கிறேன்…” இன்னும் திகைப்பு நீங்காத ருஹானா அவளது கைப்பையைத் துழாவினாள். கண்கள் சிரிக்க அவளை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனை பார்க்கவும் அவளுக்கு கைகள் வசப்படவே இல்லை.

“இதோ கிடைச்சிடுச்சி!” என எடுத்தவள் அனைத்தையும் நழுவ விட்டாள். அவள் மடியில் கிடந்த இரு நிழற்படங்களையும் கையில் எடுத்த ஆர்யன் அதை அருகே வைத்து ஆராய்ச்சி செய்தான். “எது கொடுக்கலாம்?”

அவன் தோளருகே முகத்தை கொண்டுவந்து நெருங்கிய ருஹானா இரண்டு படங்களையும் பார்த்தாள். ஆர்யன் “ரெண்டுமே அதிக அழகா இருக்கு. அப்படி இல்லாம இருக்க வாய்ப்பே இல்ல” என அவளின் அழகை முதல்முறையாக புகழ, கன்னம் சிவந்தாள்.

ரசிக்கும் அவன் கண்களை பார்த்த ருஹானா அதன் வீச்சிலிருந்து விலகி நகர்ந்து அமர்ந்து “இது!” என்று ஒரு படத்தை தேர்ந்தெடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு வெளியே திரும்பிக் கொண்டாள்.

இருவரின் அடையாள அட்டைகளையும் ஒன்றாக பிடித்த ஆர்யன், இருவரின் புகைப்படங்களையும் அக்கம்பக்கம் பிடித்தான். இருவரின் அழகிய பொருத்தத்தை  ஆர்வமாக பார்த்தவன் அதை ருஹானாவிற்கும் தூக்கிக் காட்டினான்.

அவளும் அதை பார்த்து மகிழ்ந்தவள் அதை காட்டிக்கொள்ளாமல் கைப்பையை சரிசெய்வது போல திரும்பிக் கொண்டாள்.

“இதை நம்ம ஆளுங்க வந்து வாங்கிட்டு போவாங்க. அவங்களே மத்த நடைமுறை செயல்கள்லாம் பார்த்துக்குவாங்க. அதுக்குள்ள நாம சில விஷயங்கள் பேசணும்.”

“எதைப் பற்றி?”

“நம்மோட கல்யாணத்தில் யார்க்கும் எந்த சந்தேகமும் வரக் கூடாது. உண்மையான திருமணம்னு எல்லாரும் நம்பணும். அதைப் பத்தி தான் நாம பேச வேண்டியிருக்கு.”

——-

Advertisement