Advertisement

காலையில் உணவு மேசையில் ஆர்யனும் கரீமாவும் மட்டுமே உணவருந்திக் கொண்டிருந்தனர்.

“என்னை ஒரு விஷயம் அதிகமா கவலைப்பட வைக்குது. அதை பத்தி நான் உங்ககிட்டே பேசணும்.”

“சொல்லு ஆர்யன் டியர்! இவானை பற்றித் தானே?”

“இல்ல, சல்மாவை பத்தி. அவ கிட்டே சொல்லுங்க. சக மனிதர்களை ஒழுங்கா நடத்தணும்னு.”

“ஆர்யன் டியர்! நடந்ததுக்கு அவ சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன். அவளுமே தன் தப்பை உணர்ந்துட்டா. இனிமேல் ஒழுங்கா நடந்துப்பா. நானும் அவகிட்டே சொல்லி வைக்கிறேன்.”

“அண்ணன் எப்படி இருக்கார்?” என அடுத்த கேள்விக்கு ஆர்யன் தாவினான். சல்மாவை எப்படி அப்படி சுலபமாக விடலாம்?

“இப்போ பரவாயில்லை. அதுக்கு அப்புறம் அட்டாக் வரல. ஆனாலும் அவர் இவானை நினைச்சி அதிகமா கவலைப்படறார். உண்மையில நாம என்ன செய்யப்போறோம், ஆர்யன்? இவானை அவங்க கூட்டிட்டு போய்டுவாங்களோன்னு எனக்கும் கவலையா இருக்கு.”

“கவலைப்படாதீங்க. அந்த சிக்கலுக்கு ஒரு முடிவு நான் யோசித்திருக்கேன்.”

“அப்படியா? என்ன அது?” என கரீமா ஆவலாக கேட்க, அப்போது காலடியோசையும் கேட்க, ஆர்யன் பக்கவாட்டில் இலேசாக திரும்பிப் பார்த்தான். ருஹானா வருவதை கண்டவன் பாதி உணவிலேயே எழுந்து சென்றுவிட்டான்.

அவனை பார்த்துக்கொண்டே வந்த ருஹானா அவன் எழுந்து செல்லவும், அவன் சென்ற திசையை வருத்தமாக பார்த்து நின்றாள்.  

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கரீமா “குட்மார்னிங் டியர்!” என சிரிப்புடன் கூறினாள். அவளுக்கு பதில் வணக்கம் சொன்ன ருஹானா, “இவான் எங்க? உணவு மேசையில இருப்பான்னு இங்க தேடி வந்தேன்” என்று கரீமா எதிரே அமர்ந்தாள்.

“அவன் சீக்கிரம் எழுந்துட்டான். சாப்பிட்டிட்டு அவன் பெரியப்பா கூட தோட்டத்துல இருக்கான்.”

“என்னால சரியா தூங்க முடியல. அதனால காலைல தாமதமா எழுந்தேன்.”

“எல்லாருக்கும் இவான் பற்றிய கவலையில தூக்கம் வரல தான். நீ இவானோட சித்தி. உனக்கும் அப்படித்தானே இருக்கும்?” என்றாள் பேச்சை மாற்றி. சல்மா ருஹானாவை கண்டபடி பேசியதும், ருஹானா அழுததும் இவளுக்கு தெரியும் தானே?

“ஆனா நீ இப்போ நிம்மதியாகலாம், அந்த பிரச்சனை தான் தீர போகுதே. ஆர்யன் சொன்னானே?” என சாமர்த்தியமாக கரீமா பேச, ருஹானா, ”அவர் என்ன சொன்னார்?” என கேட்டாள்.

“எல்லாத்தையுமே!” பெருமையாக சொன்ன கரீமா, ருஹானா அடுத்து சொல்ல போகும் தகவலுக்காக ஆவலோடு காத்திருந்தாள்.

“எல்லாமா? எல்லாம்னா.. அவர் அதை பற்றியுமா?” 

“என்ன, ருஹானா?”

“அவர்.. அதான் உங்ககிட்டே சொல்லியிருப்பாரே!” வெளிநாடு செல்லும் செய்தியை சொல்ல தொடங்கிய ருஹானா கடைசி வினாடியில் சுதாரித்தாள்.

“ஆமா.. இவான் பிரச்சனைல தீர்வு வந்துடும்ன்னு ஆர்யன் சொல்லிட்டான். உனக்கு தான் தெரியுமே, அவன் சொன்னா நடத்திக் காட்டுவான்னு. அதான் நானும் ஆறுதலா இருக்கேன்.”

தலையாட்டிய ருஹானா ஜாஃபர் சொன்னதை நினைத்துப் பார்த்தாள். ஆர்யனின் காலியான நாற்காலியை பார்த்தவள் “வழித்துணை அவசியம் தான்” என மெல்ல புன்னகையுடன் சொன்னாள்.

“என்ன சொன்னே, ருஹானா டியர்?”

“ஒன்னுமில்லையே! நீங்க சாப்பிடுங்க” என எழுந்து கொண்டாள்.

“நீ சாப்பிடலயே?”

“எனக்கு பசி இல்ல!” என சொன்ன ருஹானா “இனிய உணவு!” என சொல்லி கரீமாவிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டாள்.

——-

‘அத்தனை பெரிய கண்களில் நான் உன்மேல் வைத்திருக்கும் காதல் உனக்கு தெரியவில்லையா?’ என ஆர்யன் அங்கலாய்த்து நிற்க, அவன் அறைக்கதவை தட்டிக்கொண்டு அவளே, “நான் உங்களுக்கு காபி கொண்டு வந்திருக்கேன்” என உள்ளே வந்தாள்.

“நஸ்ரியா எங்க?”

“அவ தான் கொண்டு வந்தா. உங்ககிட்டே பேசணும்னு நான் வாங்கிக்கிட்டேன். உங்களுக்கு நேரம் இருந்தா நான் உங்களோட பேசணும்.”

“பேசறதுக்கு எதும் இல்ல. ஏற்கனவே நாம எல்லாம் பேசிட்டோம்” என அவள் முகம் பார்க்காமல் சொன்னவன் “எனக்கு நேரமில்ல. நான் போகணும்” என நகர்ந்தான்.

வேறு யாரோ போல அவளிடம் அவன் பேசுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு முன்னே வந்து மறித்தாள்.

“ப்ளீஸ் நில்லுங்க. இது ரொம்ப முக்கியம். நான்.. நிறைய யோசித்தேன், நேத்து நாம பேசினது பற்றி. அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தேன்.”

தடதடக்கும் இதயத்தை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு, ஆர்யன் ருஹானா சொல்வதை மகிழ்ச்சியுடன் கூர்ந்து கேட்க தயாரானான்.

“நாம இவான்ட்ட சொல்லணும், வெளிநாடு போறது பற்றி. அவனுக்கும் மாற்றத்தை ஏத்துக்க நேரம் தேவை தானே?”

“சரி, நீயே அவன்கிட்டே சொல்லிடு” கசப்பை விழுங்கிவிட்டு அவன் அறையில் அவளை விட்டுவிட்டு வேகமாக சென்றுவிட்டான். கையில் காபி ட்ரேவுடன் ருஹானா அசையாது நின்றாள். 

 

ஏற்க எளிதல்ல அவளின் நிராகரிப்பு

அத்தனை நேசம் கொண்டவளின் மறுப்பு!

காதலில் கோபம் தலைக்கேறி பித்தாக

தவிப்புகள் அவனை ஆக்கிரமிக்க தொடங்க

அவள் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லிலும்

சம்மதத்தை எதிர்நோக்கும் அவன் இதயம்

ஏமாந்து சுருங்கி விரியாமல் போகிறதே!

———-

“ஜாக்கிரதையாக செய், இவான் செல்லம்! வேர்ல படாம கொத்திவிடணும்” என அம்ஜத் தம்பி மகனுக்கு தோட்டக்கலையை கற்றுக்கொடுக்க, ருஹானா அங்கே வந்தாள்.

“சித்தி, உங்களுக்கு தெரியுமா, இது வெயில் காலம் வரும்போது பெருசா வளர்ந்திடும்.”

“அப்படியா அன்பே? சிறப்பு!”

“ஆமா, ருஹானா! அடுத்த வருஷம் இந்த மரம் காய் காய்க்கும்.”

“மரத்துல இருந்து நானே பழம் பறிக்கலாமா, பெரியப்பா?”

“கண்டிப்பா, செல்லம்!”

“சித்தி, பெரியப்பா சொல்றார், நான் வளரும்போது இந்த மரங்களும் என்கூடவே வளர்ந்திடுமாம். நாம இந்த மரங்களுக்கு கீழே உட்கார்ந்து சாப்பிடலாம். ஆமா தானே சித்தி?” என ஆர்வமாக கேட்க, வெளிநாடு பயணம் பற்றி அவனிடம் சொல்ல வந்த ருஹானாவின் கண்களில் நீர் திரண்டது.

“என் அன்பே! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் இப்போ வந்திடுறேன். சரியா?” என சொல்லி சென்றாள்.

“எனக்கு வயசானதும் நீ தான் தோட்டத்தை பார்த்துக்கணும், சரியா?”

“நான் பார்த்துக்குவேன், பெரியப்பா. எல்லா செடிக்கும் நானே தண்ணீ ஊத்துவேன்.”

“குட்பாய்!” என அம்ஜத் இவானின் நெற்றியில் முத்தமிட்டான்.

———

ஆர்யன் தன்னை கடுமையாக திட்டியதை நினைத்து சல்மா அழுது கொண்டிருக்க, கரீமா வேகமாக உள்ளே நுழைந்தாள்.

“என்ன அக்கா? ஏதாவது கண்டுபிடிச்சியா?”

“ருஹானா வாயில இருந்து தகவலை பிடுங்கலாம்னு பார்த்தா ஒன்னும் முடியல.”

“வெரிகுட்! அவங்க அகாபா விட்டு போய்ட்டா நம்ம மொத்த திட்டமும் அதோகதி தான். சொத்துல பங்கு தேத்தலாம்னு இருந்த நீ, அவங்க அனுப்புற வெளிநாட்டு போஸ்ட்கார்டை சேகரிக்க வேண்டியது தான்.”

“கவலைப்படாதே! அவங்களுக்குள்ள இப்போ ஏதோ சரியில்ல. ருஹானா சாப்பிட வரும்போது ஆர்யன் முகத்தை திருப்பிக்கிட்டு எழுந்து போய்ட்டான்.”

“அந்த பட்டிக்காடு அயல்நாட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லியிருக்குமோ?”

“தெரியல. நீ ஆபீஸ் போ. அங்க ரஷீத்கிட்டே இருந்து செய்தி தெரியுதான்னு பாரு”

“சரி அக்கா! இப்பவே போறேன்.”

——– 

“என்ன! ஆர்யன் திருமணத்துக்கு கேட்டாரா?” பர்வீன் உற்சாகப்பட்டார்.

“பர்வீன் அம்மா! நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. இது சம்பிரதாய கல்யாணம்.”

“எனக்கு புரியுது மகளே. சரி, அவர் கேட்டதுக்கு நீ என்ன சொன்னே?”

“நான் ஒத்துக்கல. அவர் கோபமா போய்ட்டார். என்னால எப்படி? அவரோட…. நடக்காத காரியம். இவான் என்னோட உயிர். ஆனா அதுக்காக இப்படி திருமணம்? உடனே எப்படி முடிவு செய்ய முடியும்?”

பர்வீன் சிரிப்புடன் தலையாட்ட, ருஹானா மேலும் பேசினாள்.

“இது திருமணம். ஆனா திருமணம் இல்ல. கேட்கவே விசித்திரமா இருக்கு தானே?” ருஹானா தோள்களை குலுக்கினாள்.

“ஏன் விசித்திரம்? இது சம்பிரதாய கல்யாணம் தானே? அதுக்கு ஏன் நீ இவ்வளவு யோசிக்கறே?”

பதில் சொல்லமுடியாமல் ருஹானா திகைத்தாள்.

“ஏன்னா நீ உன்னோட இதயத்து அடி ஆழத்துல ஆர்யன் நிஜமா  திருமணத்துக்கு கேட்கறார்னு நினைக்கிறே. அதான் நீ இவ்வளவு உணர்ச்சிவசப்படறே!”

ருஹானா தலையை குனிந்து கொண்டாள். 

“விசாரணை முடிவு எதிரா வந்தா எப்படியும் ஆர்யன் இவானோட நீ வேற தேசத்துக்கு போகத் தானே போறே? அப்பவும் நீ ஆர்யன் கூட வசிக்கத்தான் போறே!”

“இவான் அவன் வீட்டை விட்டு போகக்கூடாதுன்னு நீ நினைச்சா இந்த கல்யாண ஏற்பாட்டுக்கு சம்மதிக்கத் தான் வேணும். ரெண்டு வழியிலயும் நீ ஆர்யன் வழியில் தான் அவர்கூட போகப் போறே. உனக்கு பிடிக்குதோ, இல்லயோ எப்படியும் ஆர்யன் போற பாதை தான் உன்னோடதும்.”

“இப்போ நீயே முடிவெடு. இவானுக்காக ஆர்யன் பக்கம் நிற்க போறியா, இல்லயா?”

———

ஆர்யன் வெகுநாட்களுக்கு பிறகு அமைதி இழந்து தோட்டத்தில் அம்பு எய்து கொண்டிருந்தான். வீடு திரும்பிய ருஹானா கேட்டின் அருகிலேயே அவனை பார்த்துவிட்டாள்.

மரணத்தில் இருந்து ஆர்யன் அவளை காப்பாற்றிய அத்தனை தருணங்களையும் அவள் நினைத்துப் பார்த்தாள். தந்தையை போல தன் விருப்பம் நிறைவேற்ற பஞ்சு மிட்டாய் வாங்கி தந்ததும், தன்னை விட்டு எப்படி வெளிநாடு போவேன் என அவன் கேட்டதும் அவளுக்கு நினைவு வந்தது.

ஜாஃபரின் அறிவுரையும், பர்வீனின் பேச்சும் அவள் காதில் ஒலிக்க, தீர்மானம் எடுத்தவள் உறுதியுடன் அம்பு பலகையின் முன்னே போய் நின்றாள்.

அடுத்த அம்பை எடுத்து வில்லில் மாட்டி அதை விடுவதற்காக உயர்த்திய ஆர்யன், கண்முன்னே எதிரே நின்ற ருஹானாவைப் பார்த்து அதிர்ந்து வில்லை கீழே தாழ்த்தினான். 

எங்கு தொடங்கியதோ அவர்கள் சண்டை அங்கேயே முடிவுக்கு வருகிறது. 

அன்று அவன் எய்தான் அம்பை. அவள் மயங்கி விழுந்தாள். 

“நான் உங்க திருமண ஏற்பாட்டுக்கு சம்மதிக்கிறேன்.”

வில்லின்றி இன்று இவள் எய்த அம்பு நேராக அவன் இதயத்தில் பாய்ந்து மகிழ்ச்சி அணையை உடைத்தது.

ஆர்யனின் உள்ளே பிரவாகம் எடுத்த ஆனந்த வெள்ளம் அவன் கண்களில் பொங்கியது.

(தொடரும்)

 

Advertisement