Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

    அத்தியாயம் – 101

‘என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என ருஹானாவின் விருப்பத்தை அன்போடு வினவாமல், ஆர்யன் ‘என்னை திருமணம் செய்து கொள்’ என சட்டமாக சொல்ல, பெரும் திகைப்படைந்த ருஹானா கேட்டாள். “எனக்கு… புரியல. நீங்க என்ன சொல்றீங்க?”

தலையாட்டிய ஆர்யன் அவள் கன்னங்களில் இருந்து கைகளை விலக்காமல் அவள் கண்ணோடு கண் நோக்கி “என்னை திருமணம் செய்து கொள்” என்றான் மீண்டும். 

ருஹானா கண்கள் அகன்று, வாய்பிளந்து பதில் சொல்லாமல் அவனை பார்க்க, ஆர்யன் “அதான் சரி வரும்னு நான் நினைக்கறேன்…” என அவன் மேலே பேசும்முன் அவள் இடையிட்டாள்.

“ஆனா எப்படி? அதாவது நீங்க.. நான்.. எதுக்கு நாம திருமணம் செய்யணும்?” என அவள் கைகளை விரித்து கேட்கவும், ஆர்யன் மனதில் ஏமாற்ற அலை மோத, மெல்ல தன் கைகளை எடுத்துக்கொண்டான். 

“எனக்கு தெரியும்.. இது திடீர்ன்னு அமைந்திடுச்சு. ஆனா இதை பத்தி நான் நிறைய யோசனை செய்தேன்” என ஆர்யன் சொல்ல, ருஹானாவின் புருவங்கள் உயர்ந்தன. சுற்றுமுற்றும் பார்த்தவள் அவனிடமிருந்து விலகி வெளியே சென்றுவிட்டாள்.

இவான் அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்ட ருஹானா பெரிதாக மூச்சிரைத்தாள். ஆனால் சிறிய கீற்றாக புன்னகைத்தாள். கைகளை பிசைந்து கொண்டு நடந்தபடி யோசித்தாள். “ஏன் அப்படி கேட்டார்? அவர் என்னை காதலிக்கிறதாலயா? இல்லன்னா அவருக்கு புரிஞ்சிடுச்சா நான் அவரை…”

அவள் சிந்தனையை தடைசெய்தது கதவை தட்டும் ஓசை. “கதவை திற!”

ஆர்யனின் குரல் கேட்டும் “நான் பிசியா இருக்கேன்” என்று பதில் சொன்னாள்.

எப்படியும் அவள் சம்மதத்தை பெற்றுவிட முடிவு செய்த ஆர்யன் “கதவை திறயேன். நாம பேச வேண்டியிருக்கு” என சொல்ல, ருஹானா மெல்ல பூட்டை திறந்தாள்.

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஆர்யன் “நான் சொல்ல வர்றது என்னன்னு சரியா கேட்காமலேயே நீ இங்க வந்துட்டே. நான் உன்னை திருமணத்துக்கு கேட்டேன் தான். ஏன்னா.. ஏன்னா.. அதான் இவானுக்கு நல்லது. நான் லாயர்ஸ்ட்ட பேசினேன். நாம கல்யாணம் செய்துக்கிட்டா இவானோட கஸ்டடியை நீ இழக்க மாட்டே! அப்புறம் நாம எல்லாரும் இங்க மாளிகையிலயே இருக்கலாம். வெளிநாடு போகவேண்டிய அவசியம் இல்ல” என்றான்.

இப்போது ருஹானாவிற்கு மிகுந்த ஏமாற்றம். “அப்போ… இது இவானுக்காகவா?“

அவள் முகத்தை பார்த்து பொய் சொல்ல முடியாத ஆர்யன் வேறுபக்கம் நோக்கி “ஆமா, ஃபார்மாலிட்டிக்காக..” என்று சொல்ல, ருஹானாவின் வாயிலிருந்து வார்த்தை ஏதும் வரவில்லை. 

அவள் உதிர்க்கும் முத்துக்காக படபடக்கும் இதயத்துடன் காத்திருந்த ஆர்யன் “நீ என்ன சொல்றே?” என கேட்டான். அப்போதும் அவள் வாய் திறக்காது கண்களை உருட்டி யோசிக்க, அவன் “ஏதாவது சொல்லு!” என வற்புறுத்தினான்.

“நான்.. நானும் இவானோட கஸ்டடியை இழக்க விரும்பல” என அவள் தொடங்கவும், புன்னகைக்க தொடங்கிய அவன் இதழ்கள்  “ஆனா.. இது சட்டுன்னு முடிவு செய்யற விஷயம் இல்ல” என அவள் சொன்னதும் இறுகிப் போயின.

“நான் என்ன சொல்றேன்னா.. திருமணம் நல்லத் திட்டம் போலத் தான் தெரியுது.” மலர ஆரம்பித்த அவன் கண்கள் அவள் அடுத்து சொன்னது கேட்டு நெறித்தன. “ஆனாலும்… எனக்கு தெரியல.. அதான்.. நீங்களும் நானும்… இல்ல.. என்னால முடியாது” என சட்டையின் கைகளை வெளியே இழுத்தபடி அவள் தடுமாறி பேச, அவன் உடல் முழுதும் இறுக்கமானது.

கோபமாக தலையை வெட்டிய ஆர்யன் “சரி.. விடு.. அதை மறந்திடு.. அது ஒரு அறிவுகெட்ட யோசனை. நாம வெளிநாட்டுக்கே போகலாம். நான் அந்த வேலையை அவசரப்படுத்துறேன்” என்று சொல்லி வேகமாக வெளியேறிவிட்டான்.

“ஆனா.. இருங்க.. நான்…” என அவள் ஒரு நொடி விட்டு கதவை திறந்துவர, அதற்குள் படிக்கட்டில் வேகமாக இறங்கிய ஆர்யன் வாசற்கதவை திறந்து வெளியே சென்று கதவை படாரென மூடினான்.

———

“அவன் என்னை அப்படி கத்தினான், அக்கா. அதும் அந்த பிச்சைக்காரி முன்னால. எனக்கு ரொம்ப வலிக்குது.”

“கவலைப்படாதே, சல்மா! பொறுமையா இரு. நம்ம திட்டம் வெற்றியடையும்போது இந்த வலி, வேதனைலாம் ஒன்னுமே இல்லாம போய்டும். ஆர்யன் உனக்கு மட்டும் தான்.”

“இல்ல.. இனி ஆர்யன் இல்ல.. அவன் வேற நாட்டுக்கு போறான். நாம தூங்கி எழும்போது அவன் மாளிகைல இருக்க மாட்டான்.”

“எங்கயும் போக முடியாது. நான் விட மாட்டேன். முதல்ல அவங்க எங்க போறாங்க, எப்போ போறாங்கன்னு நான் தெரிஞ்சிக்கணும். அப்போ தான் அதை முறியடிக்க நான் திட்டம் போட முடியும்.”

———

“சாரா அக்கா! உங்ககிட்டே வயிற்றுவலிக்கு எதாவது மருந்து இருக்கா?”

“என்னாச்சு ருஹானா?”

“தெரியல, அக்கா.. திடீர்னு வலிக்குது.”

“நான் ஒரு கசாயம் போட்டு தரேன். அது ஆறினதும் கொஞ்சம் கொஞ்சமா அடிக்கடி எடுத்து குடி. ஒரே நாள்ல சரியாகிடும்.”

அப்போது நஸ்ரியா “பெரியம்மா! ஆர்யன் சார் வேகமா கார் எடுத்துட்டு போறார்….” என்றபடி உள்ளே வர, அங்கே ருஹானாவைப் பார்த்ததும் “இல்ல, கொஞ்ச நாளா ஆர்யன் சார் நல்ல மூடில் இருந்தார். இன்னைக்கு தான்…” என மென்று விழுங்க, சாரா அவளை முறைத்தார்.

ருஹானா யோசனையாய் தண்ணீர் குடித்தாள்.

——–

“சித்தி…. சித்தி… என்ன சித்தி கழட்டின சட்டையே திரும்ப மாட்றீங்க?”

“நான் கவனிக்கல, அன்பே!”

“சித்தி! உங்களுக்கு நான் பால்ல தேன் கலந்து எடுத்துட்டு வரட்டுமா?”

“ஏன் கண்ணே?”

“நான் கவலையா இருக்கும்போது சாரா ஆன்ட்டி அதான் தருவாங்க. அதை குடிச்சதும் நான் சந்தோசமாகிடுவேன்.”

“நீ தான் என் தேன். நீ தான் என்னோட எல்லாமும், ஆருயிரே!” ருஹானா அவனை அணைத்து முத்தமிட்டாள்.

“யார் உங்களை கவலையாக்கினது, சித்தி?”

“யாரும் இல்ல, செல்லம். நான் தான் ஒருத்தருக்கு கவலையை தந்துட்டேன்.” 

“அவங்களுக்கும் தேன்பால் கொடுத்திடலாமா, சித்தி?”

“அது நான் கொடுத்துக்கறேன், மானே! நீ படு! நான் உனக்கு கதை படிக்கிறேன்.”

———

“இல்ல.. நிறுத்த வேண்டாம். விரைவா செய். ஆமா, நான் தான் நிறுத்தி வைக்க சொன்னேன். இப்போ நான் தான் வேகமா செய்ய சொல்றேன்.” அலைபேசியில் அழுத்தமாக பேசிக்கொண்டிருந்த ஆர்யன், கதவு தட்டி ருஹானா உள்ளே வந்த பின்னும் பேச்சை நிறுத்தவில்லை.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாங்க வெளிநாட்டுக்கு போகணும். வேலைய முடிச்சிட்டு கால் செய்” என சொல்லி பேசியை மேசையில் வைக்க, ருஹானா வருத்த முகமாகவே அவனை நெருங்கி வந்து நின்றாள்.

“முக்கியமான விஷயமா?” என ஆர்யன் அவளிடம் முறைப்பாகவே கேட்டான். அவள் தன்னை வேண்டாம் என சொன்னது அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

“நான்… நீங்க கேட்டது பத்தி பேசணும்” என அவள் சொல்ல, மீண்டும் அவன் மனதில் ஆவல் அலை எழுந்தது. அதை மறைத்துக்கொண்டு அவள் பேச்சை கவனித்தான்.

“திருமணம்.. திருமண யோசனை.. நீங்க சட்டுன்னு சொல்லவும் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. நீங்க சொன்னது எனக்கு திகைப்பா இருந்தது. நிச்சயமா, நானும் உங்களப் போல தான் இவானோட நலத்தை நினைக்கிறேன். இவானுக்காக நான் உயிரையும் கொடுப்பேன், அது உங்களுக்கே தெரியும்” என அவள் சொல்ல, இதோ சம்மதிக்க போகிறாள் எனும் ஆசையில் அவனும் தலையாட்டினான்.

“ஆனா நீங்க என்னையும் புரிஞ்சிக்கணும். திருமணம் ஒரு கடினமான முடிவு, அது சம்பிரதாயத்துக்கு செய்தாலும்…” அவள் மறுக்க, அவன் சோக பெருமூச்சு விட்டான்.

“எனக்கு புரியுது. நீ இதுக்கு மேல விளக்க வேண்டாம். இந்த விஷயம் இதோட முடிந்தது. நாம வெளிநாடு கிளம்புவோம்” என சொல்லியவனின் பேச்சை தடுத்து ருஹானா ஏதோ சொல்ல வர, “ எனக்கு வேலை இருக்கு.. நீ..” என அவன் சொல்லி கணினி புறம் திரும்பிக் கொண்டான்.

அவனிடம் மாற்றத்தை உணர்ந்த ருஹானா மெல்ல கதவை நாடி சென்றாள். அவள் கதவு பக்கம் சென்று அவனை திரும்பி பார்க்கும்வரை அப்படியே இருந்தவன், அவள் கதவை மூடவும், கணினியையும், கோப்பையும் வேகமாக மூடினான்.

——– 

ஆர்யனின் பாராமுகம் ருஹானாவை வேதனைப்படுத்த தன் மேசையில் இருந்த முடிவீலி சின்னத்தை கையில் எடுத்துப் பார்த்தாள். ஆர்யன் இவானுக்காக என்று கேட்காமல் ‘நான் உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என்று கேட்டிருந்தால் உடனே மகிழ்ச்சியுடன் சம்மதம் சொல்லியிருப்பாளோ? 

சாரா கொடுத்த கஷாயம் ஒரு குடுவையில் இருக்க, அதை எடுத்து இரண்டு மிடறு விழுங்கினாள். அவள் மனதை போலவே அதுவும் கசந்தது. முகத்தை சுருக்கியவள், கட்டிலில் படுத்து தூங்க முயன்றாள். அது இயலாமல் போக ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதில் கவனம் செலுத்த முனைந்தாள்.

எதுவும் உதவாமல் போக எழுந்து கஷாயத்தை ஒரு மடக்கு அருந்திவிட்டு குளிராடையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினாள். மூடிய ஆர்யனின் அறையை பார்த்தவள் அங்கே சென்றாள். கதவு அருகே செல்ல தைரியம் இருந்தவளுக்கு அதை தட்ட துணிவில்லை.

அங்கிருந்து அகன்று கீழே இறங்கினாள். வரவேற்பறைக்கு வந்து வெளியே பார்த்துக்கொண்டு நின்றாள்.

ருஹானாவிற்கே உறக்கம் பிடிக்கவில்லை என்றால் இதயம் அடிபட்ட ஆர்யனுக்கு மட்டும் அது வருமா என்ன? பல்வேறு சிந்தனைகளில் புரண்டு கொண்டிருந்த அவனும் படுக்கையை நாடவே இல்லை. ‘தன்னை அவள் காதலிக்கவே இல்லையோ. தனது அளவுக்கு மீறிய கற்பனை தானோ அது?’ எனும் சந்தேகம் அவனை பாடாய்ப் படுத்தியது.

அவனும் கதவை திறந்து கொண்டு ருஹானாவின் மூடிய அறைக்கதவை பார்த்தபடி கீழே இறங்கினான். தூக்கம் வராமல் இருவரும் அர்த்த ராத்திரியில் ஆளுக்கொரு பக்கம் நடமாடிக் கொண்டு இருக்கின்றனர்.

வரவேற்பறையில் நின்ற ருஹானா உணவு மேசை வழியாக சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கே இருந்த ஜாடியில் இருந்து தண்ணீரை ஒரு குவளையில் ஊற்றி குடித்தாள். பின் வந்த வழியே வரவேற்பறைக்கு வந்தாள்.

ஆர்யன் உள்ளறை வழியாக சமையல்கட்டுக்குள் வந்தவன் அவள் குடித்த அதே குவளையில் தண்ணீரை ஊற்றிக் குடித்தான். அவன் வெளியே வரும்முன் ருஹானா பின்பக்க கதவை திறந்து நிலா முற்றத்தில் போய் நின்று வானத்தை நோக்கினாள்.

ஆர்யனும் நிலா முற்றம் செல்ல இருந்தவன் ருஹானா அங்கே நிற்பதை பார்த்து தயங்கினான். அவளும் யோசனையில் இருப்பதை புரிந்து கொண்டான். அவள் குளிரால் ஆடையை இறுக்குவதையும், கைகளை தேய்த்துக் கொள்வதையும் பார்த்தவன் சோபாவில் இருந்த கம்பளியை கையில் எடுத்தான்.

——–

வாயில் இருந்து புகையாய் பனிக்காற்று கிளம்ப, அதை இலட்சியம் செய்யாமல் நின்ற ருஹானா தன்னை சுற்றி கம்பளி போர்த்தப்படுவதை உணர்ந்து ஆர்யன் தான் என நினைத்து முகம் மலர புன்னகையுடன் திரும்பினாள். அங்கே ஜாஃபரை கண்டதும் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டாள்.

“நீங்களும் இன்னும் தூங்கலயா, ஜாஃபர் அண்ணா?”

“தூங்கிட்டு தான் இருந்தேன், ருஹானா மேம்! சத்தம் கேட்டு தான் எழுந்து வந்தேன். நீங்க நின்னுட்டு இருந்தீங்க. ஆர்யன் சார் இந்த போர்வையை எடுத்துக் கொடுத்தார்.”

கம்பளியை குனிந்து பார்த்த ருஹானா மேலே நிமிர்ந்து பார்த்தாள். ஆர்யன் அறையில் விளக்கெரியக் கண்டாள்.

“ருஹானா மேம்! நீங்க இந்த நேரம் முழிச்சி இருக்கறீங்க, ஏதோ முக்கியமா யோசிக்கிறீங்கன்னு எனக்கு தோணுது.”

“ஆமா.. முக்கியமானது தான். எனக்கு உதவி செய்ங்களேன்.”

“சொல்லுங்க, ருஹானா மேம்!”

“என் முன்னே ரெண்டு பாதை இருக்கு. எது சரியான வழின்னு எப்படி தெரியும்? நான் எதை தேர்ந்தெடுக்க?”

“நான் என்ன நினைக்கிறேன்னா போகும் பாதையை முடிவு செய்றதுக்கு முன்னாடி யார்கூட பயணம் செய்யப்போறோம்னு தீர்மானம் செய்தா நல்லது.”

ருஹானா ஜாஃபரின் பேச்சை கூர்ந்து கவனித்தாள்.

“பாதை எங்க முடியும்னு நமக்கு தெரியாது. அதுல என்னன்ன தடைகள் வரும்னும் தெரியாது. ஆனா நம்மோட வழித்துணையோட அந்த தடைகளை தகர்க்க முடியும். அதனால முதல்ல துணையை தெரிந்தெடுக்கறது தான் முக்கியம்.”

“நன்றி, ஜாஃபர் அண்ணா.”

———-

Advertisement