“இவான் இங்க நல்லா விளையாடலாம். இங்க நாம காய்கறி கூட பயிரிடலாம். பாருங்க, இந்த மரத்துல ஊஞ்சல் கட்டலாம். இவான் ஊஞ்சல்னா ஆசைப்படுவான்.” புது வீட்டை பார்த்து சிறுகுழந்தையை போல குதூகலிக்கும் ருஹானாவை ஆசையாக பார்த்த ஆர்யன் அவளை விட உள்ளுக்குள் உற்சாகமாக உணர்ந்தான்.
“அப்புறம், நான் லிஸ்ட் ரெடி செய்திட்டேன். உங்களுக்கு பிடிச்ச ப்ளுபெர்ரி தர்ஹானா அதுல சேர்த்துருக்கேன். மூலிகை டீயும்.. உங்க நோய் எதிர்ப்பு சக்திக்கு அது நல்லது. வேற என்ன உங்களுக்கு தேவைன்னு எனக்கு தெரியல. இவானோட பொம்மை….”
அவள் பேசிக்கொண்டே போக தங்கள் நலன் நாடும் அவளின் அன்பில் உருகியவன் அவள் அழகால் வசியம் செய்யப்பட்டு சிலை போல அசையாது நின்றான். சிரித்து சிரித்து அவன் முகம் பார்த்து அவர்களின் வருங்கால வீட்டின் அழகை அவள் விவரிக்க, அவனுக்கு கண்களை தவிர வேறு எந்த புலன்களும் வேலை செய்யவில்லை.
“எனக்கு இன்னும் லேசா பயம் இருக்கத்தான் செய்யுது. ஒரு புதிய வாழ்க்கை லேசான பயத்தோட…” அவள் முகம் சுருங்கி பேச, அவனிடம் புன்முறுவல் தவிர வேறு பதில் இல்லை.
அவனை விசித்திரமாக பார்த்தபடி “இவானோட நல்ல எதிர்காலத்துக்காக எதுவும் செய்யலாம். அவன் பயப்படாம இருந்தா அதுவே எனக்கு போதும்” என்று அவள் சொல்ல, அவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
சங்கடமான ருஹானா “இவான் பயப்பட மாட்டான் தானே?” என சத்தமாக கேட்டு பார்த்தாள். அதற்கும் எந்த பயனும் இல்லை. சிலை கண் சிமிட்டக்கூட இல்லை.
அதற்கு மேல் அவன் பார்வை வீச்சை தாங்க முடியாத ருஹானா “இவான் என்னை தேடுவான். நான் வரேன்” என திரும்பி ஓடிச்செல்ல, அவள் கதவருகே சென்றதும் தான் அவன் உயிர் பெற்றான்.
“நான்….” என அவளிடம் அவன் பேச முற்பட, அவள் கதவை சாத்திவிட்டு சென்றுவிட்டாள்.
ஆர்யன் அவளிடம் என்ன சொல்ல முயன்றான்? ‘நான்.. உன்னை காதலிக்கிறேன்’ என்றா? இந்த ருஹானா பெண் சற்று நின்று கேட்டு சென்றிருக்கலாம்!
———-
ஆர்யனின் அறைக்கதவை மூடிய ருஹானா, மிதமிஞ்சிய சந்தோஷத்தில் அங்கேயே சில நொடிகள் நின்றாள். பின் தன் அறைக்கு நடை போட பின்னாலிருந்து சல்மாவின் குரல் கேட்டது.
“இன்னும் நீ நல்ல சித்தி வேஷத்தை போடுறீயா? நல்லாத்தான் நடிக்கிறே. வெல்டன். நீ யாரும் இதை கண்டுபிடிக்கமுடியாதுன்னு நினைக்கறே தானே? ஆனா எனக்கு தெரியும், சேரியில வாழ்ந்த உன்னோட பேராசை பிடித்த நோக்கம், ஆர்யனை மயக்குற உன் திட்டம்.”
சல்மா பேசவும் நின்று கவனித்த ருஹானா அவள் பேச்சு பிடிக்காமல் திரும்பி நடக்க, அவள் கையை சல்மா பிடித்துக்கொண்டாள்.
“எங்க போறே நீ? அவ்வளவு ஈஸியா என்னை நீ தவிர்க்க முடியாது. நான் பேசுறதை கேட்டுத் தான் ஆகணும்.”
அவள் கையை உதறிய ருஹானா தன் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள். சல்மாவின் அபாண்டமான பேச்சில் அவளுக்கு கைகால் எல்லாம் நடுங்கிவிட்டது. சுவாசம் செய்ய முடியாமல் அவள் தவிக்க, கதவை தள்ளிக்கொண்டு சல்மா உள்ளே வந்தாள்.
“உனக்கு ஆர்யன் மேலே கண்ணு. உன்னோட இந்த சின்ன மூளையை வச்சிக்கிட்டு அவனை அடைய பார்க்கறே” ருஹானா பின்னடைய சல்மா பேசிக்கொண்டே ருஹானாவின் நெற்றிப்பொட்டைத் தொட்டு காட்டி நெருங்கினாள்.
மேசையின் விளிம்பில் சாய்ந்து கொண்ட ருஹானா “நான் அப்படி எதும் செய்யல” என்றாள், அழுகையும் கோபமும் கலந்த குரலில்.
“முடியுமா? உன்னால அப்படி செய்ய முடியுமா? நான் விட்டுடுவேனா?” பைத்தியம் போல தலையை ஆட்டிக்கொண்டு சல்மா கேட்டாள்.
“போதும் நிறுத்து. என்கிட்டே இது போல பேசாதே.” ருஹானா சத்தமாக சீறினாள். அவளை விட சத்தமாக சல்மா கத்தினாள்.
“நீ உன்னை பத்தி என்ன நினச்சிட்டு இருக்கே? இந்த வீட்டு எஜமானின்னா? நான் சொல்றேன், நீ யாருன்னு. நீ ஒரு நாற்றம் அடிக்கும் சாக்கடை!”
சல்மா!!!!
பின்னால் இருந்த வந்த ஆர்யனின் இரைச்சலில் இரு பெண்களுக்கும் தூக்கி வாரிப் போட்டது. சல்மாவின் கண்கள் தானாகவே நீரை நிரப்பின.
ருஹானா சல்மாவை இரக்கமாக பார்க்க, சல்மா கிலியுடன் மெல்ல திரும்பினாள்.
“உன்னோட இடத்தை தெரிஞ்சி நடந்துக்கோ. எனக்கு பிடிக்காத செயலை என்னை செய்ய வச்சிடாதே!” ஆர்யனின் குரலில் ஆங்காரம் குறையவில்லை.
“ஆர்யன்! நான்….”
“வெளியே போ!”
ருஹானாவை திரும்பிப் பார்த்த சல்மா வேகமாக வெளியேறிவிட்டாள். அவள் சென்ற பிறகே சுவாசத்தை வெளியிட்ட ருஹானா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
புருவங்கள் சுருங்க, வருத்தம் அப்பிய முகத்துடன் அவளை நெருங்கிய ஆர்யன் அவள் இருகைகளையும் பற்றி “இங்க வா! உட்காரு” என அவளை கட்டிலில் அமர வைத்தான். “அழாதே!” என்று சொன்னவன் மேசையில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து அவளுக்கு தந்தான்.
ருஹானா விக்கி அழ, அவள் உடல் நடுங்க தொடங்கியது. கைநடுக்கத்துடன் குவளையை அவனிடமிருந்து வாங்கினாலும் அவளால் வாய் அருகே கொண்டு செல்ல முடியவில்லை.
அவளின் நிலையை பார்த்த ஆர்யன் அவளின் பக்கம் அமர்ந்து “நான் தரேன்” என வாங்கிக்கொண்டவன் ஒரு கையால் அவள் தோளை பிடித்தபடி மறுகையால் அவளுக்கு நீரை புகட்டினான்.
———-
“ஏன் இப்படி செய்தே சல்மா? ஆயிரம் முறை நான் உனக்கு சொல்லியிருக்கேன். ஆர்யனோட கோபத்துக்கு ஆளாகக் கூடாதுன்னு..”
“ஆர்யன் அறையில இருந்து அந்த பாம்பு வெளிய வந்தது எனக்கு பொறுக்கல, அக்கா. என்னால என்னை கட்டுப்படுத்த முடியல.”
“எவ்வளவு தூரம் ஆர்யன் கேட்டு இருப்பானோ, தெரியலயே! நீ என்னன்ன சொல்லி தொலைச்சியோ? ஐயோ சல்மா.. உன்னை வச்சிக்கிட்டு நான் என்ன தான் செய்றது? நீ எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்கறே!”
“என்னால தாங்க முடியல அக்கா. அந்த பாம்பு ஆர்யன் பக்கத்துல நிற்கறது பார்த்தா எனக்கு பத்திகிட்டு வருது. அந்த பாம்பை நம்ம வாழ்க்கையில இருந்து தூக்கி அடிக்கணும். இல்லனா என் கையாலேயே நான் அவளை கொன்னுடுவேன்.”
கரீமா கன்னத்தில் கைவைத்து நிற்க, சல்மா தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
——–
“இப்போ உனக்கு பரவாயில்லையா?” என ஆர்யன் கேட்க, ருஹானா கண்ணீருடன் பலமுறை தலையாட்டினாள். இன்னமும் அவளுக்கு அதிர்ச்சி நீங்கவில்லை.
“சரியாகணும். நீ சரியாகித்தான் தீரனும். இல்லனா இவானோ நா…” பேச்சை பாதியில் நிறுத்திவிட்டான்.
ஆர்யன் இவான் பெயரை சொன்னதும் அவளுக்கு அவன் நினைவு வர, படக்கென்று எழுந்து கொண்டாள். “இவான்… இதெல்லாம் அவனுக்கு தெரிஞ்சா?”
வாயை பொத்தியபடி அவள் அழ, அவள் தோள்களை பிடித்துக்கொண்ட ஆர்யன் “பதட்டப்படாதே. அவன் கீழே ஜாஃபர் கூட இருக்கான்” என அவளை அமைதிப்படுத்த, வாயால் நிறைய மூச்சுகளை வெளியிட்ட ருஹானா தனது சக்தியை திரட்டிக்கொண்டு தன்னை பற்றி தெளிவுபடுத்த ஆரம்பித்தாள்.
“நான்… நான் இவான்கூட வசிக்கணும்னு மட்டும் தான் நினச்சேன். அவன் மகிழ்ச்சியா இருக்கணும்னு நினச்சேன். எனக்காக எதும் வேணும்னு நான் நினைக்கல.” மூச்சுவிடாமல் பேசும் அவள் படும்பாட்டை ஆர்யனால் பார்க்கமுடியவில்லை. “என்னோட பொக்கிஷம், இவானை பாதுகாக்கணும்னு தான் ஆசைப்பட்டேன்”
“நம்மோட பொக்கிஷம்!” என ஆர்யன் இடைமறிக்க, ஆமென தலையாட்டிவிட்டு திரும்பவும் தொடர்ந்தாள். “நம்மோட பொக்கிஷம். அதனால தான் அவனை உங்க கிட்டே இருந்து கூட என்னால பிரிக்க முடியல. அவன் துக்கத்துல இருந்து மீண்டு வர, அவன் சந்தோசமா இருக்க, அவனோட நல்லதுக்குதான் எல்லாமே நான் செய்தேன். பணத்தை பற்றி, சொத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்ல….”
அவள் பேசிக்கொண்டே போக, ஆர்யனின் நினைவுகள் அவள் சொல்வதைக் கேட்காமல் எங்கோ சென்றது. இருவரின் புதிர் துண்டுப் படங்கள் பொருந்திக் கொண்டதும், இவான் இருவரையும் இழுத்து நெருக்கமாக நிழற்படம் எடுத்துக்கொண்டதும், இருட்டில் இதழ்கள் இணைய இருந்ததும் அவனது மனத்திரையில் ஓடின.
பேச்சின் முத்தாய்ப்பாக “நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது!” என ருஹானா கண்ணீருடன் சொல்ல, “உஷ்!” என்றபடி ஆர்யன் அவள் உதட்டில் அவன் விரல்களை வைத்தான்.
அவளுடைய அழுகை நின்றது. பேச்சு நின்றது. கண்கள் அகல விரிந்தன. மூச்சை இழுத்துப் பிடித்தாள்.
உதடுகளை மெல்ல வருடியபடி விரல்களை எடுத்துக்கொண்ட ஆர்யன், தன் இரு உள்ளங்கைகளால் அவள் முகத்தை ஏந்தினான். அவளின் கண்கள் திகைப்பால் மேலும் பெரிதாகின. அவள் வாய் திறந்தபடியே இருந்தது.
அவள் அழகில் மெய்மறந்திருந்த ஆர்யன் தன் உலகத்தை அவள் கண்களில் பார்த்தான்.
“நான்… எனக்கு தெரியும் நீ யார்னு…” ஆர்யனின் கண்களிலும் மெல்லிய நீரோட்டம். அவன் கண்களில் தீர்மானம் தெரிந்தது. தீர்மானத்தின் முடிவாக ஆர்யன் சொன்னதைக் கேட்டு ருஹானா மூச்சு விடவும் மறந்தாள்.