“குறிப்பா உங்களுக்கு தேவைப்படறது சொல்லுங்க. உங்களுக்கு பிடித்த உணவு நான் சமைப்பேன். மசாலா பொருட்கள் முக்கியம்” என சொல்லி எழுத ஆரம்பித்தாள்.

அவள் எழுதும் அழகையே பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன், மை தீர்ந்த பேனாவை அவள் உதறுவதை பார்த்து வேறு பேனா எடுத்து நீட்டினான்.

“நமக்கு எதுவும் தேவை இல்ல. நாம ஒன்னா இருக்க போறோம்.” இன்பக்கனவில் ஆழ்ந்தபடி ஆர்யன் சொல்ல, ருஹானா அவன் கையில் இருந்த பேனாவை இழுக்க, மூடி மட்டும் அவள் கையோடு வந்து மை கொட்டி பேப்பரில் சிதறியது.

“உன் துணியில் பட்டுடுச்சா?”

“இல்ல.”

“தொடாதே. மை கறை லேசுல போகாது.”

“திரும்ப புது லிஸ்ட் தான் எழுதணும்.”

“விடு. எதும் கொண்டு போக வேண்டாம். நாம சேர்ந்து இருக்கறதே…” ஆர்யன் சொல்லப் போவதை தடுத்த ருஹானா “ஆமா, நாம இவானை விட்டு பிரியமாட்டோம். ஆனா அவன் சின்னவன். அவனுக்கு பழக காலம் பிடிக்கும். புது நாட்டுல வேற மொழி, வேற கலாச்சாரம். பயமாத்தான் இருக்கு” என பேச்சை இவான் புறம் திருப்பினாள்.

“நம்ம தாய்மொழி தவிர இன்னொரு மொழி கத்துக்க போறோம். இவான் அவனோட நம்பிக்கை உரிய ரெண்டு பேர் கூட இருக்கப் போறான். இவானுக்கு நம்ம இருக்கற எந்த இடமும் அவன் வீடு தான். கவலைப்படாதே! சாலை பயம் தரும் தான். ஆனா நாம யார் கூட அதுல பிரயாணம் செய்றோம்ங்றது தான் முக்கியம்.”

மனதை வருடும்படி ஆர்யன் பேச ருஹானாவின் மனத்துக்கு இதமாக இருந்தது. உருகி கரைந்துவிடுவோமோ என எண்ணி “நான் இவானை போய் பார்க்கறேன்” என தப்பியோடிவிட்டாள்.

செல்லும் அவளை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் மனதில் தோன்றியது. ‘விண்ணில் உலா வரும் நிலவாய் என்னுள் உலா வருகிறாய்!’

——-

“உன் ஆளு என்ன சொல்றான், அக்கா?” அலைபேசியில் பேசி முடித்து வைத்த கரீமாவிடம் சல்மா கேட்டாள்.

“ரஷீத், லாயர்ஸ் நடவடிக்கையை கவனிக்க சொன்னேன். அவங்க எந்த பரபரப்பும் இல்லாம தான் இருக்காங்களாம். இவானை அவ்வளவு எளிதா விட்டு கொடுத்துடுவாங்களா, என்ன? ஆபிஸ் அமைதியா தான் இருக்கு. வீட்ல தான் ஏதோ நடக்குது.”

“ஏன்னா நடக்கற எல்லாமே இவங்க ரெண்டு பேருக்குள்ள தான் நடக்குது. அந்த பூனையை பேச வைக்கணும், அக்கா!”

“சும்மா இருக்கற தேன்கூட்டில கை வைக்காதே, சல்மா. நான் வேற வழி யோசிக்கறேன்.”

“யோசி, யோசி, நல்லா யோசி! நீ போடுற ஒவ்வொரு திட்டமும் அவங்களுக்கு தான் நல்லதா அமையுது. அவங்களை பிரிக்கறதுக்கு பதிலா நீயே சேர்த்து வைக்கறே!”

“முள்ளை தாண்டி தான் ரோஜாவை அடைய முடியும். உனக்கு பொறுமை வேணும், சல்மா. நான் ஒவ்வொரு முள்ளா எடுக்கறேன்.”

———

“புத்தகம், இவான் பொம்மை, ப்ளுபெர்ரி தர்ஹானா.. (பதப்படுத்தப்பட்டு காயவைக்கப்பட்ட சூப் செய்ய உதவும் உணவுப் பொருள்)” ருஹானா சொல்லிக்கொண்டே எழுத, “தர்ஹானா! சித்தப்பாக்கு பிடிக்குமே!” என இவான் சிரிப்புடன் சொல்ல, ருஹானாவின் முகத்திலும் புன்னகை.

“ஆமா அன்பே!” என சொல்லிவிட்டு திரும்ப எழுத ஆரம்பித்தாள். “மூலிகை டீத்தூள், மர வண்டி, அகாபா காபித்தூள், போட்டோ ஆல்பம், வில், அம்பு, உடைகள்…”

“சித்தி! என்ன பட்டியல் இது?”

அவனிடம் பொய் சொல்ல பிடிக்காமல் சற்று யோசித்த ருஹானா உண்மையை வேறுவிதமாக சொன்னாள். “எனக்கு பிடிச்சதுலாம் எழுதுறேன், கண்ணே!”

‘எதும் வேணாம், நாம சேர்ந்து இருக்கறதே…’ என்ற ஆர்யனின் பேச்சுக்கு அவள் கவனம் சென்றது. வெட்கப் புன்னகையுடன் அவள் அதில் ஆழ்ந்திருக்கும்போது, இவான் “சித்தி! எனக்கு பசிக்குது” என்றான்.

“இரவு உணவுக்கு இன்னும் நேரம் இருக்கே. வா, உனக்கு எதாவது லேசா சாப்பிட செய்து தரேன்” என்று எழுதியதை மேசையில் வைத்துவிட்டு ருஹானா எழுந்தாள்.

“நானும் உங்களுக்கு உதவுவேன். அப்புறம் எனக்கு பிடித்தது லிஸ்ட் போடலாம்” என இவானும் அவளுடன் வெளியே சென்றான்.

அவர்கள் அறையை விட்டு கீழே சென்றதும் உள்ளே வந்த கரீமா அந்த தாளை எடுத்து பார்த்தாள். “என்ன லிஸ்ட் இது?”

——-

“அதிகமா சாப்பிடாதீங்க, லிட்டில் சார். உங்களுக்கு பிடிச்ச இரவு உணவு செய்றேன்.”

“சாரா ஆன்ட்டி! எனக்கு பெரிய வயிறு. நான் எல்லாம் சாப்பிடுவேன்” என இவான் சொல்ல, சாராவும் ருஹானாவும் சிரித்தனர். சிரித்தபடி உள்ளே நுழைந்த கரீமாவிடம் சாரா கேட்டார். “எதும் வேணுமா கரீமா மேம்?”

“இல்ல சாரா! இவான் குரல் கேட்டுது. அவன் கிட்ட பேசலாம்னு வந்தேன்.”

“உங்களுக்கு தெரியுமா, பெரியம்மா. நாங்க எங்களுக்கு பிடிச்சது பற்றிய ஒரு பட்டியல் தயாரிக்கறோம்” என இவான் சொல்ல, ருஹானா திகைத்தாள்.

மாறிய ருஹானாவின் முகத்தை பார்த்துக்கொண்டே கரீமா “அப்படியா இவான் டியர்? நான் எதும் உதவி செய்யவா?” என இவானிடம் கேட்டாள்.

“நன்றி கரீமா மேம்! அது ஒன்னும் அத்தனை முக்கியம் இல்ல” என ருஹானா மழுப்ப, அவளை காப்பாற்ற வந்தவன் போல ஆர்யன் அங்கே வந்தான்.

“சித்தப்பா!” என அழைத்த இவானின் கன்னம் பற்றி தடவிய ஆர்யன் மகிழ்ச்சி ததும்ப ருஹானாவை பார்த்தான். அவன் பார்வையில் இருந்து ஒன்றும் புரிந்துகொள்ள முடியாமல் ருஹானா அவனை கேள்வியாக பார்க்க, இருவரையும் கரீமா மாற்றி மாற்றி பார்த்தாள்.

“இவான் சாப்பிட்டதும் வா. பேசணும்” என ஆர்யன் ருஹானாவை அழைக்க, அவள் தலையாட்ட, கரீமா “ஆர்யன் டியர்! அது சோசியல் சர்வீஸ்ல இருந்து வந்த செய்தியா? இவான் பற்றிய தகவல் எதும் இருக்கா?” என ஆவலை அடக்க முடியாமல் கேட்டாள்.

“எதும் இல்லயே” என அவளுக்கு ஏமாற்றம் தந்த ஆர்யன், திரும்பவும் ருஹானாவை குறிப்பாக பார்த்துவிட்டு நகர்ந்தான்.

“ருஹானா! நீ போ. நான் இவானை சாப்பிட வைக்கிறேன்.”

“நன்றி, சாரா அக்கா!” என்று சொன்ன ருஹானா, கரீமாவிற்கு தலையாட்டிவிட்டு மேலே சென்றாள். சாரா இவானுக்கு சான்ட்விச்சை வெட்டிக்கொடுக்க, சிறிது இடைவெளி விட்டு கரீமா ருஹானாவை பின்தொடர்ந்து சென்றாள்.

——-

“என்ன? எதும் புது செய்தியா?” என கலவரமாக கேட்டபடி ருஹானா உள்ளே வர, அதுவரை தான் பார்த்திருந்த டேப்லெட்டை அவள் புறம் நகர்த்திய ஆர்யன், “ஆமா! இங்க பார்! நான் அங்க நம்மோட வீட்டை ஏற்பாடு செய்திட்டேன்” என்று படங்களை தள்ளி தள்ளி காட்டினான், அவள் அருகில் மிக நெருக்கமாக நின்று.

இதற்கு தான் அத்தனை ஆவலாக அவளை கூப்பிட்டானா?

“ரொம்ப… ரொம்ப அழகா இருக்கு!” ருஹானாவின் முகம் ஆச்சர்யத்தில் மலர்ந்து இருந்தது. ஆர்யன் அதை ரசித்துக்கொண்டே சொன்னான்.

“பண்ணை வீடு போல இருந்தா இவானுக்கு ஓடி ஆட வசதியா இருக்கும்னு நான் நினைச்சேன்.” இன்னும் அவளிடமிருந்து பாராட்டை எதிர்ப்பார்க்கிறான் போல… பாராட்டை மட்டுமா?.. இல்லை வேறு எதையுமா?

“ஆமா, அவனுக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு நினைவு இருக்கா, ஜோஹ்ரா அம்மாவோட கிராமத்தை அவன் எவ்வளவு ரசிச்சான்? நம்மோட மீதி வாழ்க்கை பூராவும் நாம இங்க வசிக்கப் போறோம்னு என்னால நம்பவே முடியல.”

வெளியே ஒட்டுக்கேட்டு நின்றிருந்த கரீமாவிற்கு இதுவரை ஒன்றும் புரியவில்லை. கதவுக்கு நெருங்கி நின்று காதை கூர் தீட்டிக்கொண்டாள்.

சந்தோஷத்தில் பூரிப்பான ருஹானாவின் முகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை, ஆர்யனுக்கு.

“இவான் இங்க கண்டிப்பா சந்தோசமா இருப்பான்னு நான் நம்புறேன். என்னோட ஒரே ஆசை, வேற நாட்டுல இருக்கோம்ன்ற உணர்வே அவனுக்கு வரக் கூடாது” என ருஹானா சொல்ல, “நாம ரெண்டு பேரும் அவன் கூட தானே இருப்போம்? அவன் மகிழ்ச்சியா இருப்பான்” என ஆர்யன் சொன்னதை கேட்டதும், கரீமாவின் முகம் விகாரமானது. கோப நடை நடந்து தங்கையை தேடிச் சென்றாள்.

“நாம அங்க போனதும் சில மாற்றங்கள் செய்துக்கலாம்” ஆர்யன் அவள் அருகாமையில் இருந்து அகலவில்லை.

அவன் பேச்சை மறுத்து “தேவையே இல்ல. நம்ம வீடு இப்படியே நல்லா தான் இருக்கு” என உணர்சிவசப்பட்ட ருஹானா, ஆர்யன் முகத்தில் பளீரென்ற வெளிச்சத்தை காணவும் “அது வந்து.. நாம இருக்கப் போற வீடு.. எப்படியும் நாம அந்த வீட்டு சொந்தக்காரங்க இல்ல தானே.. இல்ல அது சொந்த வீடா.. எனக்கு தெரியலயே… வாடகைக்கு தானே எடுத்து இருக்கீங்க?..” என தடுமாறி படபடப்பாக அவள் பேச, அவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

அவர்கள் பேச்சில் இப்போதெல்லாம் நாம், நமக்கு, நம்முடையது போன்ற வார்த்தைகள் அவர்களையும் அறியாமல் இணைந்தே வருகின்றன.

அவளை இயல்புக்கு கொண்டுவர, ஆர்யன் திரும்ப கணினியின் பக்கம் திரும்பி “நாலு அறைகள் இருக்கு. கிச்சன் பெருசா இருக்கு” என அவளுக்கு காட்ட, அவளும் ஆசுவாசமானாள்.

ஆமாம், மூன்று பேருக்கு நான்கு அறைகள் எதற்கு?

———

“என்ன! என்ன இது? எப்படி? வெளிநாடா?” மூச்சிரைக்க பேசிய சல்மாவை கரீமா பயத்துடன் தான் பார்த்தாள்.

‘ஆமா, சல்மா! நான் கேட்டேன். ஆர்யன் வீடு கூட பார்த்துட்டான்.”

“இல்ல. இல்ல.. இல்ல…” அவள் கையில் இருந்த கோப்பையை சுவரில் விட்டெறிந்தாள்.

“இங்க பாரு! பாரு சல்மா! நான் போக விட்டுடுவேனா? அவங்க கனவு தான் காணணும். நான் விட மாட்டேன். உனக்கு புரியுதா?”

“நீ என்ன செய்வே? உன்னால என்ன செய்ய முடியும்?” கட்டிலில் போய் அமர்ந்து அழுத சல்மா “அவங்க சேர்ந்து கனவு காணுறாங்க தான். வேற நாட்டுக்கு போக விரும்புறாங்க. அந்த கனவை, விருப்பத்தை நீ எப்படி அழிப்பே? வெளிநாடு போறதை நீ தடுக்கலாம். ஆனா அவங்க தலைக்குள்ள போய் அவங்க கனவை உன்னால கலைக்க முடியுமா?” என சல்மா விரக தாபத்தில் கரைந்தாள்.

“இந்த பிரமாண்டமான சொத்தை அடைய நான் காண்ற கனவு உன்னோட மலிவான பொறாமையை விட பெருசு. அதை பொய்யாக்க நான் விட மாட்டேன். எப்பவும்” என்ற கரீமா தேம்பி அழும் தங்கையின் முதுகை தடவிக் கொடுத்தாள்.

———–