Advertisement

பயந்து போன ருஹானா “நான் வெளியே போய் பார்க்கறேன்” என கிளம்ப, ஆர்யன் ஜன்னல் திரையை கண்ஜாடையில் அவளுக்கு காட்டினான். அங்கே இவானின் காலணிகள் வெளியே தெரிந்தன.

ஆர்யன் திரையை விலக்க, ருஹானா “என் அன்பே! ஏன் இங்க ஒளிஞ்சிருக்கே?” எனக் கேட்டாள்.

“அவங்க என்னை இங்க கண்டுபிடிக்க மாட்டாங்க தானே? நான் அங்க போக மாட்டேன்” என்றவனை ஆர்யன் தூக்கிக்கொள்ள, இவான் ருஹானாவை நோக்கி கையை நீட்டினான்.

அவளுக்கு முகம் மாறவும், ஆர்யன் அழாதே என அவளை கண்ணால் கண்டித்தான். இருவரையும் நெருங்கிய ருஹானா, நீண்டிருந்த இவான் கையைப் பிடித்து முத்தமிட்டாள்.

“உங்களை விட்டு நான் பிரிய மாட்டேன்.”  இவானின் ஒரு கை ஆர்யனின் தோளில் இருக்க, மறுகையால் ருஹானாவின் கழுத்தை கட்டி அருகே இழுத்தான்.

“நாங்க எப்பவும் இப்படியே தான் சேர்ந்து உன்கூட  இருப்போம். கவலைப்படாதே, சிங்கப்பையா!” என ஆர்யன் உறுதி அளிக்க, இவான் “நாம பிரிய மாட்டோம் தானே? சத்தியமா?” என கேட்டான்.

“நாம பிரிய மாட்டோம்னு நான் உனக்கு சத்தியம் செஞ்சி கொடுக்கறேன்.”

“சித்தி! நீங்களும் செய்ங்க!”

“சத்தியமா, என்னுயிரே!”

இருவர் கன்னங்களிலும் முத்தமிட்ட இவான் இருவரையும் சேர்த்து அணைத்தான். இருவரும் தடுமாறி மோதிக் கொண்டனர்.

நாணம் கொண்ட ருஹானா ஆர்யனின் தோளில் இருந்து அவசரமாக இவானை இறக்கி “வா! சாப்பிட போகலாம்!” என அவனை அழைத்துச் சென்றாள். ஆர்யன் புன்னகை முகத்துடன் என்றாலும் அடுத்து என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்து நின்றான்.

——

“என்னை கூப்பிட்டீங்களாமே?” என ஆர்யனின் அறைக்கு வந்த ருஹானா கேட்க, வழமை போல மேசைக்கு பின்னே நாற்காலியில் அமராமல், ஆர்யன் எதிரே சோபாவில் அமர்ந்திருந்தான்.

அவளை பார்த்ததும் எழுந்தவன், டீபாயில் இருந்த உலக வரைப்படத்தைக் காட்டி கேட்டான். “வடக்கா, தெற்கா?”

ருஹானா அதிசயமாக பார்க்க “நமக்கு 206 இடங்கள் தேர்ந்தெடுக்க இருக்கு. அதுல ஒன்னை இப்போ நாம முடிவு செய்யணும். இப்போதைக்கு நம்ம ரெண்டு பேருக்குள்ள தான் இந்த விஷயம் இருக்கணும். வேற யாருக்கும் தெரியக்கூடாது” என ஆர்யன் சொல்லிக்கொண்டே போக, அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

“நீங்க.. நீங்க நிஜமா தான் சொல்றீங்களா?” என அவள் கேட்க, அவன் ஆமென கண்மூடி திறந்தான்.

அவள் வரைப்படத்தை பார்த்தபடி சோபாவில் அமர்ந்துக்கொண்டே “எனக்கு தெரியலயே!” என்று சொன்னாள். அவனும் அவள் அருகே அமர்ந்தான்.

“என் முன்னாடி உலக வரைபடத்தை பார்க்கும்போது.. உலகம் எத்தனை பெருசு, மனிதர்கள் எவ்வளவு சின்னவங்க, வரைப்படத்தில் பார்க்கும் போது கூட.”  இன்னும் நம்பமுடியாமல் அவள் பேச, ஆர்யன் அந்த படத்தை நான்காக மடித்து சுருக்கி அவளிடம் காட்டினான்.

“உலகம் பெருசு தான். அதுக்காக நீ பயப்படாதே. நீ விரும்பினா எந்த இடத்தையும் நீ இல்லமாக்க முடியும். அன்புக்குரியவங்க கூட சேர்ந்து இருக்கறதே போதுமானது.” அவள் பாடத்தை அவளுக்கே படித்தான்.

ஆர்யன் திரும்ப படத்தை விரித்து மேசையை நிரப்ப, “விசாரணை அறிக்கை வர வரை நாம காத்திருக்க போறதில்லயா?” என அவள் கேட்டாள்.

“எல்லாத்துக்கும் நாம தயாரா இருக்கணும் இல்லயா?” என அவன் பதிலுக்கு கேட்க, அவள் பெருமூச்செறிந்தாள். “நீ ஏன் இன்னும் பயப்படறே?”

“எனக்கு விசித்திரமா இருக்கு. நான் இதுவரை வெளிநாடு போனது இல்ல. தெரியாத ஊர்ல என்னோட மீதி வாழ்க்கையும் இனி வாழணும்னு யோசிச்சா பயமா இருக்கு. தெரிந்தவங்களை எல்லாம் விட்டுட்டு..” என அவள் சொல்ல, ஆர்யன் வருத்தத்தை வெளிக்காட்டாமல் இறுகிய முகத்துடன் வரைப்படத்தை மடிக்கப் போனான்.

படத்தின் மேல் கை வைத்து தடுத்த ருஹானா, “நீங்க இருப்பீங்க தானே? நீங்க கூட இருக்கறதால எல்லாம் எளிதாவே இருக்கும். நான் மட்டும் தனியா இப்படிப்பட்ட முடிவை எடுக்கவே மாட்டேன்” என்று சொல்ல, ஆர்யன் இறுக்கம் தளர்ந்தது.

மடங்கிய படத்தை நீவிவிட்ட ருஹானா “வாழ்க்கையோட சுருக்கங்களையும் இது போலவே நீக்க முடிந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என தத்துவம் பேசியவள் “நீங்க கூட இருக்கலனா இப்படி வேற நாட்டுக்கு போறது சாத்தியமே இல்ல. ஒன்னும் தெரியாம எப்படி போய் வாழ முடியும்?” என்றாள்.

“இவானால போர்வையால ஒரு கூடாரம் அமைக்க முடியும்னா நாம இந்த பேப்பரால நம்ம எதிர்காலத்தை உருவாக்கலாம்” என அவளுக்கு நம்பிக்கை அளித்தவன் “இவானுக்கு செய்த சத்தியத்தின்படி நாம பிரியவே மாட்டோம்…. மூணு பேரும்!” என்றான்.

உலகப்படத்தின் மீது விரலை ஓட்டிய ருஹானா “இப்படி பிரயாணம் செய்றது எவ்வளவு எளிது, இல்லயா?” எனக் கேட்க, ஆர்யன் நகரும் அவள் விரலை பார்த்திருந்தான்.

“என் அப்பா சொல்வார், பூமி தான் நம்மோட படுக்கை. நாம தூங்கி எழுந்து பார்க்கற போது நேத்து பார்த்த வானத்தை இன்னைக்கு பார்க்க மாட்டோம்” என சொல்லிக்கொண்டே போன ருஹானாவின் கையை பற்றிய ஆர்யன் ஒரு நாட்டின் மீது நிறுத்தினான். ஆனாலும் பற்றியிருந்த அவள் கையை விடவில்லை.

“உன் அப்பா சொன்னது எத்தனை உண்மை. நமக்கு ஏத்த மாதிரி ஒரு நாடு தேடுவோம், நம்ம நாட்டுக்கு ஒத்திசைவா. அப்போ தான் இவான் வித்தியாசமா உணர மாட்டான்.”

“அல்பேனியா!” அவள் விரலை வைத்து ஆர்யன் காட்டிய நாட்டின் பெயரை ருஹானா படிக்க,  அவன் முகத்தில் இனிமையான முறுவல். மிக அருகே அழகாக இருந்தவனை, அவன் முறுவலை ருஹானா ரசித்து பார்த்திருந்தவள், தன்னிலை உணர்ந்து சடாரென கையை அவன் பிடியிலிருந்து பின்னுக்கு இழுத்தாள்.

அவள் கைப்பட்டு அங்கே இருந்த கோப்பை சாய்ந்து காபி வரைப்படத்தில் கொட்டியது. “அச்சோ! படம்! என்னால தான்…”

“அது பரவாயில்ல!”

“ஆனா உங்க படம் பாழாயிடுச்சே!”

“கப்பல் கம்பெனி வச்சிருக்கேன். என்கிட்டே உலக வரைபடங்கள் நிறைய இருக்கு. கவலைப்படாதே!”

“உங்களுக்கு வேற காபி கொண்டு வரேன்” என ருஹானா கோப்பையை எடுத்துக்கொண்டு எழுந்து செல்ல, “எனக்கு காபி வேணாம்!” என ஆர்யன் சொன்னது காற்றோடு தான் போனது.

கல்யாணம் செய்து கொள்வார்கள் என இவான், சையத், பர்வீன், ஜாஃபர் போன்றவர்கள் நினைத்தால், இவர்கள் என்ன தேனிலவு செல்ல திட்டமிடுகிறார்கள்?

———

ருஹானாவின் அறைக்கதவை தட்டிக்கொண்டிருந்த கரீமா, அவள் ஆர்யன் அறையிலிருந்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்து “ருஹானா டியர்! எங்க போயிட்டே?” என கேட்டாள்.

“என்ன விஷயம் கரீமா மேம்?”

“சோசியல் சர்வீஸ்ல இருந்து எதும் தகவல் உண்டா? உன் முகத்தை பார்த்தா ஏதோ வழி கிடைச்ச மாதிரி தோணுதே!”

“இல்ல. இதுவரைக்கும் ஒன்னும் இல்ல.” ருஹானாவிற்கு தடுமாறாமல் பொய் சொல்ல வரவில்லை.

“நீ சந்தோசமா இருக்கறது போல தெரியுது. அதான் கேட்டேன். சரி, நல்ல தகவலுக்காக காத்திருப்போம்.” கரீமா மேலும் தோண்டிப் பார்த்தாள்.

“நான் வேற காபி கொண்டு வரப் போறேன்” என ருஹானா காபி கோப்பையுடன் வேகமாக சென்றுவிட்டாள்.

‘நீ என்ன மறைக்கறேன்னு நான் கண்டுபிடிக்கிறேன், ராங்கிக்காரி!’ என பொருமிய கரீமா, தங்கையின் அறைக்குள் நுழைந்தாள்.

பாட்டு பாடியபடி கண்ணாடி முன் நின்று அலங்கரித்து கொண்டிருந்த சல்மாவை பார்த்ததும் கரீமாவின் கோபம் அதிகரித்தது.

“வா, அக்கா! நம்ம வெற்றியை நாம காபி குடித்து கொண்டாடுவோம்.”

“அதுக்கு இப்போ அவசியம் இல்ல. மாளிகையில ஏதோ நடக்குது. அதை என்னால தெரிஞ்சிக்க முடியல.”

“என்ன அது?”

“ஆர்யன் ருஹானா கிட்டே சொல்றான், சிக்கல் முழுசா தீர்ந்துடும்னு.”

“அவன் அந்த களிமண்ணு கிட்டே சொல்றான். நமக்கு சொல்ல மாட்டானா?”

“சல்மா, இப்போ இது ரொம்ப முக்கியமா? நீ திருந்தவே மாட்டியா? என்ன அவங்க திட்டம்னு உடனே தெரிஞ்சிக்கணும்.”

“அந்த குப்பையை கூப்பிட்டு கேட்க வேண்டியது தானே?”

“பேசி பார்த்தேன். மழுப்பறா.”

“கேட்க வேண்டிய விதத்துல கேட்கணும். இரு நான் போய் விசாரிக்கறேன்.”

“சல்மா, இரு. கிறுக்குத்தனமா எதும் செஞ்சிடாதே” என கரீமா தங்கையின் பின்னால் ஓட, ஆர்யனின் அறைக்கு காபி கொண்டு செல்லும் ருஹானாவை பார்த்து “நில்!” என சல்மா கத்த, அது ருஹானாவின் காதில் விழும்முன் அவள் ஆர்யனின் அறைக்குள் போயிருந்தாள்.

“என்ன நடக்குது இங்க? என்ன திட்டம் போடுறீங்க?” என சல்மா கத்த, கரீமா அவள் வாயை பொத்தியிருந்தாள். “சின்ன தீப்பொறி விழுந்தாலும் பெரிய சேதாரம் ஏற்படும். அதுல சிக்கி அழியப் போறது நாம ரெண்டு பேரும் தான்.. பொறுமையா இரு, சல்மா”

“அக்கா! அவ ஆர்யன் கூட இருக்கா. நான் அவங்கள தனியா விட மாட்டேன். என்னால பொறுக்க முடியாது.” திமிறிய சல்மாவை கரீமா அவள் அறைப் பக்கம் தள்ளினாள்.

“நீ உன் ரூம்க்கு போ. நான் என்ன செய்தின்னு பார்த்துட்டு வரேன்.”

——–

“நாம எப்படி போகப் போறோம்?” காபி குடித்துக்கொண்டு இருந்த ஆர்யனிடம் ருஹானா கேட்டாள்.

“நான் ஏற்கனவே உன்னை யாட்ல கூட்டிட்டு போறதா வாக்கு கொடுத்து இருந்தேன். இப்போ போகப் போறது என்னோட கப்பல், அதை விட பெருசு. அளவு வேறனாலும் வாக்கு வாக்கு தான். இல்லயா?” சிரிப்புடன் ஆர்யன் கேட்க, பிரச்சனையின் கனம் குறைந்து ருஹானாவும் சிரித்தாள்.

“இப்போ நாம விரிவான திட்டம் போடணும். இங்க இருக்கற வாழ்க்கை முறை வேற, அங்க வேற. எல்லாமே நாம தான் செஞ்சிக்கணும் அங்க. நான் உடனே வீடு தேடறேன். நாம அங்க போறதுக்குள்ள வீடு தயாரா இருக்கணும்.உதவிக்கு ஆளும்..”

“சமையல், வீடு சுத்தம் எல்லாம் நான் பார்த்துக்குவேன்” என்ற ருஹானா அங்கிருந்த நோட்டையும் பேனாவையும் எடுத்தாள். “நான் ஒரு லிஸ்ட் போடுறேன். அதிக சுமை எடுத்துட்டு போகாம இருந்தா நல்லது, இல்லயா?” என அவள் கேட்க, அவன் மெச்சுதலாக தலையசைத்தான்.

Advertisement