Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                   அத்தியாயம் – 100

வாசலில் நின்ற அதிகாரிகளைப் பார்த்து இவான் பயந்துபோய் ஆர்யனின் கால்களை கட்டிக்கொள்ள, சகோதரிகள் சந்தோசமாக அருகில் வர, வாயடைத்து நின்ற இருவரில், ருஹானாவே முதலில் சமாளித்தாள்.

“இல்ல, இங்க பாருங்க, இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. நாங்க இவானோட பெரியப்பாவை பார்க்க வந்தோம். அவருக்கு உடம்பு சரியில்ல.”

“ப்ளீஸ் மிஸ் ருஹானா! எங்களுக்கு எந்த விளக்கமும் தேவை இல்ல. நாங்க அத்தனை முறை எச்சரிக்கை செய்திருந்தும் இது நடந்துருக்கு.”

“ஆனா நான் சொல்றதை கேளுங்க…”

“வேண்டாம், உங்களுக்காக நான் தனிப்பட்ட முறையில் சலுகைகள் தந்தேன். ஆனா நீங்க சட்டதிட்டங்களை மீறியிருக்கீங்க.”

கரீமாவும், சல்மாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். ஆர்யனின் அணைப்பிலிருந்து விலகாத இவான் “அம்ஜத் பெரியப்பாக்கு உடம்பு சரியில்ல. அதான் பார்க்க வந்தோம்” என்றான் பாவமாக.

அவனை பார்த்து புன்னகை செய்த லைலா “அவர் சீக்கிரம் குணமாகட்டும், இவான். பெரியவங்க அவங்க கொடுத்த வாக்குறுதிய காப்பாத்தணும். நீ பெரியவனானதும் உனக்கு இது புரியும்” என்று சொல்ல, மற்ற அதிகாரி “உன்னோட நல்லதுக்குத்தான் இதை நாங்க செய்றோம். உனக்காக எப்பவும் நாங்க இருக்கோம். நீ கவலைப்படாதே” என சொன்னார்.

இவான் ருஹானாவின் கையையும் சேர்த்து பிடித்துக்கொண்டான்.

“நான் ஏற்கனவே தெளிவா சொல்லியிருந்தேன், அடுத்த எச்சரிக்கைக்கு அவசியம் இல்லாம நடந்துக்கங்கன்னு. ஆனா நீங்க அப்படி நடக்கல. எங்க விசாரணை குழு சீக்கிரமே எல்லாத்தையும் ஆராய்ந்து அறிக்கை தருவாங்க. நான் இப்பவே சொல்லிடுறேன். அது உங்களுக்கு சாதகமா இருக்க வாய்ப்பில்ல.”

“தயவு செய்து இப்படி செய்யாதீங்க” என ருஹானா கெஞ்ச, அதிகாரிகள் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை.

“சிறுவர் விடுதியில் இடம் இல்லாத காரணத்தால இவானை நாங்க இப்போ கூட்டிட்டு போக முடியாது. அறிக்கை தயாரானதும் இவானை எங்களோட அனுப்ப அவனை மனதளவில் தயார் செய்து வைங்க.”

“இல்ல.. இவானை விட்டு எங்களால பிரிந்து இருக்க முடியாது” என ருஹானா அழுதாள்.

“மிஸ் ருஹானா! எங்க வேலையை கடினமாக்காதீங்க. அது இவானுக்குமே நல்லது இல்ல. எங்களுக்குமே அது பிடித்தம் இல்ல. விரைவில் உங்களுக்கு தகவல் சொல்றோம்” என்று சொல்லி, பெண் அதிகாரிகள் இருவரும் சென்று விட்டனர்.

“சித்தி, அவங்க மறுபடியும் வருவாங்களா?” என்று கேட்டு இவான் அழ, ருஹானா அவனை அணைத்துக்கொண்டாள். ஆர்யன் ஜாஃபருக்கு கண்ணைக் காட்ட, அவன் அருகே வந்து இவானின் கையைப் பிடித்தான்.

“சிங்கப்பையா! நீ தூங்குற நேரம் வந்திடுச்சி” என ஆர்யன் அவனை அனுப்ப, “என் சித்தி என்கூட வரணும்” என இவான் சொல்ல, “நீ போ அன்பே! நான் பின்னாலயே வரேன்” என ருஹானா சொல்ல, அவனும் ஜாஃபருடன் சென்றான்.

“யா அல்லாஹ்! என்ன இப்படி நடந்திடுச்சி? நான் அம்ஜத்தை அமைதிப்படுத்தி இருக்கணும். என்னால தான் இப்படி ஆகிடுச்சி” என கரீமா முதலைக்கண்ணீர் வடிக்க, சல்மாவின் பூரிப்பு வெளிப்படையாக தெரிந்தது.

“இப்ப என்ன ஆகும்? நாங்க வேணா அந்த வீட்டுக்கு போகட்டுமா? அதிகாரிகளுக்கு சொல்லலாம், நாங்க அங்க தான் இருக்கோம்னு. நாம அங்க தான் இருந்தோம், இப்போ தான் வேகமாக கிளம்பினோம்னு பக்கத்து வீட்டுக்காரங்களையும் சொல்ல சொல்லலாம்” என ருஹானா படபடப்பாக பேசினாள்.

“அதெல்லாம் விடு. எதையும் யோசிக்காதே. என்ன செய்ய முடியும்னு நான் பார்க்கறேன். நீ கவலைப்படாதே!” என ஆர்யன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

———

இவானை தூங்கவைத்துவிட்டு வெளியே வந்த ருஹானா கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தபடி தன் அறைக்கு நடந்தாள்.

அவளை வழிமறித்த சல்மா “எந்த கைக்குட்டையும் உன் பொய்யான கண்ணீரை துடைக்காது, மை டியர்! புதையல் நழுவுதேன்னு கண்ணீர் விடுறியா? இங்க டேரா போடணும்னு ஆசைப்பட்ட உன் கனவு பலிக்கலயா? ஐயோ பாவம்! இவான் போன பின்னாடி நீயும் அவன் கூடவே வெளிய போக வேண்டியது தான்” என சொல்ல, ருஹானா அவளிடமிருந்து விலகி நடந்தாள்.

சல்மா அவளின் முழங்கையை பற்றிக் கொள்ள, அவள் கையை உதறிய ருஹானா “இரக்கம் இல்லாதவளே! உனக்கு இதயமே இல்லயா? கொஞ்சங்கூட உனக்கு வருத்தம் வராதா? நான் உன் உயிரை பிரியறேன், அவன் என் அக்காவோட வாரிசு. இவானோட நிலைமையை பார்த்து உனக்கு பரிதாபம் ஏற்படலயா?” என கண்ணீரோடு கேட்டாள்.

“இவானோட நிலைமையை பார்த்து நிஜமாவே உனக்கு பாவமா இருக்கா? என்கிட்டே இந்த சோக சித்தி டிராமாலாம் நடிக்காதே. உன்னோட சுயரூபம் எனக்கு தெரியும். இந்த மாளிகைல நிரந்தரமா இருக்கலாம்ங்கற உன் கனவை எல்லாம் மூட்டை கட்டிட்டு கிளம்ப தயாரா இரு.”

சல்மாவிடம் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என முடிவு செய்த ருஹானா அவளிடமிருந்து விலகி அறைக்குள் சென்றுவிட்டாள்.

——-

“கெடுத்துட்டேன். நான் தான் கெடுத்துட்டேன். எல்லாத்தையும் கெடுத்துட்டேன். இவான் வாழ்க்கையை பாழாக்கிட்டேன்” என கேவிக்கொண்டே தண்ணீர் குடிக்க கண்ணாடி குவளையை எடுக்கப் போன ருஹானா அதை தவற விட்டாள். அந்த சத்தமும் அவள் அழுகை சத்தமும் கேட்டு ஆர்யன் ஓடிவந்தான். “என்ன! உனக்கு ஒன்னும் அடிபடலயே!”

“என் தப்பு! எல்லாம் என் தப்பு!” ருஹானாவின் புலம்பல் நிற்கவில்லை. உடைந்த கண்ணாடித் துண்டுகளை கையில் எடுத்துக்கொண்டே அழுதவளின் அருகே மண்டியிட்ட ஆர்யன் அவளிடமிருந்து அந்த துண்டுகளை வாங்கினான். “விடு! கைல வெட்டிக்க போறே.”

“இவான் பயப்படறான், என் பேபி பயப்படுறான்” என மேலும் அவள் சிதறிய துண்டுகளை சேகரிக்க, அவளை தடுத்த ஆர்யனின் விரலில் கண்ணாடித் துண்டு குத்தி இரத்தம் வந்தது.

“உங்க கைல வெட்டிடுச்சி” என அவன் கையை பிடித்துக்கொண்டு அவள் அழுகையை தொடர்ந்தாள்.

“உனக்கு படலல?” என அவன் அவளை எழுப்ப, “உங்க கைல காயம். உங்களுக்கு அடி” என கைக்குட்டையை எடுத்து அவன் காயத்தில் சுற்றினாள்.

அவளை கைத்தாங்கலாக அணைத்து கூட்டி வந்த ஆர்யன் “வா! வந்து உட்கார்!” என்று அவளை கட்டிலில் அமர வைத்து தானும் பக்கத்தில் அமர்ந்தான்.

“அவன் நம்ம கிட்ட சொல்ல மாட்றான். ஆனா அவனை கூட்டிட்டு போய்டுவாங்கன்னு அவனுக்கு தெரிஞ்சிடுச்சி.”

“எல்லாம் சரியாகிடும்! நான் சொல்றதை கேளு.”

“அவங்களுக்கு பயந்து போர்வையை டெண்ட் மாதிரி செஞ்சி உள்ள உட்கார்ந்திருக்கான். ஆனா அவங்க கூட்டிட்டு போய்டுவாங்க.”

“என்னை பாரு!” அவன் சொன்னது எதுவும் அவள் காதில் விழவில்லையே! அவனை திரும்பிப் பார்க்காமல் அவள் அழுது கரைய, அவன் அவளின் நாடியை பிடித்து அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.

“நான் விட மாட்டேன். இந்த முறை இவானை நம்ம கிட்டே இருந்து யாரும் எடுத்துட்டு போக முடியாது. என்னை நம்ப மாட்டியா? தேவைப்பட்டா நான் அவனை வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போய்டுவேன்” என அவன் அழுத்தமாக சொல்லவும், அவள் பயந்து விட்டாள்.

சென்ற முறை அவளை காட்டில் தனியே தவிக்க விட்டு இவானை ஆர்யன் கப்பலில் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றது அவளுக்கு நினைவு வர, “வெளிநாட்டுக்கா? இல்ல…” என அவள் பதறினாள்.

“இந்த முறை நீ, நான், இவான்!” ஆர்யன் வேகமாக அவள் பயத்தை தெளிவித்தான்.

“உன்னை விட்டுட்டு போவேன்னு நீ எப்படி நினைப்பே?” மெல்லிய கோபத்தோடு அவன் கேட்க, ருஹானாவின் அழுகை மட்டுப்பட்டது.

“நீ இல்லாமல் இவானுக்கு ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியாது. அவனோட ரத்தத்தில் உன்னோடதும் இருக்கு. என்னோடதும் இருக்கு” என்று சொன்னவன் “எதிரான அறிக்கை வந்துடுச்சினா நாம உடனே வெளிநாடு போய்டலாம்” என்றான் தீர்மானமாக.

“உன்னை வலிமையாக்கு. உனக்கு ஞாபகம் இருக்கா, முதல் முறை இங்க வந்தபோது நீ எத்தனை உறுதியாவும் பிடிவாதமாவும் இருந்தே?”

“இந்த உலகமே தலைகீழா சுத்தினாலும் இவானை உன்கிட்டே இருந்தோ, என்கிட்டே இருந்தோ பிரிக்க முடியாது. சரியா?” என அவன் கேட்க, அவள் தலையாட்டினாள்.

அவள் மனதை தேற்றி மாற்றுவதற்குள் அவனுக்கு நெற்றியெல்லாம் வியர்த்து வடிந்தது. “கண்ணாடியை தொடாதே. நான் நஸ்ரியாவை எடுக்க சொல்றேன்” என சொன்னவன் எழுந்து சென்று கதவருகே நின்று அவளை திரும்பிப் பார்த்தான். அவள் மிக இலேசாக புன்னகை செய்யவும் தான் கதவை மூடி வெளியேறினான்.

——–

காலையில் இவானின் அறைக்கு வந்த ருஹானா கதவை திறக்கும்முன் ஆர்யனின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள். ஆர்யன் அவளை உற்று பார்க்க, அவள் “குட்மார்னிங்! உங்க கை எப்படி இருக்கு?” என கேட்டாள்.

புன்னகையுடன் கேட்ட அவள் முகம் தெளிவாக இருப்பதை பார்த்து அவன் நிம்மதி அடைந்தான். “நல்லா இருக்கு. நீ எப்படி இருக்கே?”

“உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். நேத்து இருந்த குழப்பம் இப்போ இல்ல. எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி, என்ன நடந்தாலும் நம்மகிட்ட இருந்து இவான் பிரிய மாட்டான், நீங்க அதை அனுமதிக்க மாட்டீங்கன்னு எனக்கு புரிஞ்சிடுச்சி.”

ருஹானா சொன்னது ஆர்யனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றால் மறைந்திருந்து அவர்கள் பேசுவதை கேட்ட கரீமாவிற்கு திகைப்பை அளித்தது.

“ஒரு வினாடி கூட தயங்காதே. இன்னைக்கே இதுக்கு முடிவு வந்திடும். இதை நினைச்சி இனி நீ கவலைப்பட தேவை இருக்காது. அதாவது நாம கவலைப்பட வேண்டாம்” என ஆர்யன் சொல்ல, “வாய்ப்பே இல்லை” என கரீமா பல்லைக் கடித்தாள்.

“இவான் எழுந்துட்டானா?”

“தெரியல, எழுந்ததும் என் அறைக்கு ஓடி வருவான். தூங்குறான் போல” என சொல்லிக்கொண்டே ருஹானா கதவின் பிடியில் கை வைக்க, ஆர்யனும் அவள் கை மேல் கை வைத்தான்.

ஆர்யன் அவளை கனிவாக பார்க்க, அவள் அவனை வெட்கமாக பார்க்க, இருவரும் சேர்ந்தே கதவை தள்ளி திறந்தனர்.

அவர்கள் இவான் அறைக்குள் செல்ல “என்ன திட்டம் போடுறீங்க? என்ன?” என கரீமா குழம்பிப் போனாள்.

கட்டிலைப் பார்த்த ருஹானா “இவன் இவ்வளவு நேரம் தூங்க மாட்டானே!” என ஆர்யனிடம் சொல்லிக்கொண்டே போர்வையை விலக்க, அங்கே தலையணைகள் தான் இருந்தன.

Advertisement