Advertisement

“அக்கா! இங்க ஒன்னும் கிடைக்கல. ஆர்யன் ஆபீஸ்க்கும் வரலயே? அவ வீட்டுக்கு திரும்பிட்டாளா?”

“இல்லயே! ஒருவேளை ரெண்டுபேரும் லாயரை பார்க்க போயிருப்பாங்களா, சல்மா? சரி நான் அதை கண்டுபிடிக்கிறேன். நீ அங்க பார்” என போனை வைத்த கரீமா, அங்கே வந்த இவான் அருகே போனாள்.

“இவான் நீ உன் சித்தியை தேடுறியா?”

“ஆமா”

“வா, நாம உன் சித்தி கூட வீடியோ கால் பேசலாம்” என கரீமா காணொளி அழைப்பை ஏற்படுத்தி இவானிடம் தன் தொலைபேசியை கொடுத்தாள்.

“சித்தி! நீங்க எங்க இருக்கீங்க?”

“என்ன கண்ணே?”

“நான் உங்களை மிஸ் செய்றேன். நீங்க எப்போ வருவீங்க?”

இவானோடு கரீமாவும் பின்னால் நின்று பார்த்திருக்க, திரையில் தெரிந்த ஆர்யனை கண்டு அவள் திகைத்தாள்.

“உன் சித்தி செய்ய வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. நாங்க சீக்கிரமே திரும்பி வந்துடுவோம். உனக்கு எதும் வேணுமா சொல்லு, நான் வாங்கிட்டு வரேன்” என ஆர்யன் கேட்க, இடைபுகுந்த ருஹானா “அவனுக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியுமே! இது பாரு. பொரித்த ரொட்டி. இதை உனக்கு கொண்டு வரவா?” என கேட்டாள்.

“ஆமா சித்தி! எனக்கு வேணும். கொண்டு வாங்க”

நேரத்தை வீணாக்க விரும்பாத கரீமா “சரி, பை சொல்லு. உன் சித்தியும் சித்தப்பாவும் சீக்கிரம் வந்துடுவாங்க” என முடித்தாள்.

கரீமா இவானை அறைக்குள் அனுப்பிவிட்டு திரும்ப ஆர்யன் அறையில் தேட ஆரம்பித்தாள்.

——-

நான்கு பெட்டிகளில் அடுக்கி முடித்த ருஹானா “நாம எல்லாம் எடுத்துட்டேன்னு நினைக்கிறேன். வீட்டுக்குப் போகலாம். உங்களுக்கு தான் போர் அடிச்சிருக்கும்” என்றாள்.

“நான் அப்படி சொன்னேனா?” என கேட்டபடி ஆளுக்கொரு பெட்டியை தூக்க ஒரு பழைய புகைப்படம் நழுவி விழுந்தது. அதை எடுத்து பார்த்த ருஹானாவின் கண்கள் நீரை வார்க்க “என்ன ஆச்சு?” என ஆர்யன் கேட்க, ருஹானா நீரால் சிதலமடைந்த அந்த புகைப்படத்தை காட்டி “இது தான் நான் வச்சிருக்கற எங்க அம்மாவோட ஒரே போட்டோ” என்றாள் துக்கத்துடன்.

அவளின் துக்கம் பார்த்த மாத்திரத்திலேயே தன் மனமும் துயரம் அடைவதை ஆர்யன் உணர்ந்தான். அவள் கண்களை துடைத்துக்கொண்டு பெட்டியை காரில் வைக்க சென்றாள். ஆர்யனும் ஒரு பெரிய பெட்டியை தூக்கிக்கொண்டு காரில் வைத்தவன் வலியால் முகம் சுளிக்க ருஹானா மிகுந்த கவலை அடைந்தாள்.

அவள் தூக்கி வந்த பெட்டியையும் வாங்குவதற்கு ஆர்யன் கை நீட்ட, ருஹானா அதை தர மறுத்து பின்னடைந்தாள். அப்போது ஒரு இரு சக்கர வாகனம் அவளை உரசுவது போல வர, ஆர்யன் அவள் கையை பிடித்து தன்னிடம் இழுத்தான்.

“உன் மேல படலயே?” என ஆர்யன் கேட்க, ருஹானா இல்லையென தலையாட்ட, எப்போதும் போல இருவரும் கண்ணால் இணைந்து உலகம் மறந்து நின்றனர்.

இவர்களின் பார்வை நமக்கு பழக்கமாகிவிட்டது. ஆனால் அப்போது வீடு திரும்பிய பர்வீனுக்கு அது அதிசயமாக தெரிய, தெருவில் நின்ற இரு சிலைகளையும் பார்த்து புன்னகைத்தார்.

அருகில் வந்தவர் “கிளம்பிட்டீங்களா? நான் தான் உங்களை சரியா கவனிக்கல” என பர்வீன் வருத்தப்பட “அது பரவால்லை” என ஆர்யன் சொல்ல, ருஹானா “நாங்க தான் சாப்பிட்டோமே பர்வீன் அம்மா. இவானுக்கும் ரொட்டி எடுத்துட்டு போறேன்” என காட்டினாள்.

“என் பாசமான மகள் இவள். எப்பவும் அவளோட அன்புக்குரியவங்க நலனையே நினைப்பா. அவங்கள அக்கறையா பார்த்துப்பா. அன்பு கைகள்ல தான் உங்க அண்ணன் மகன் இருக்கான். கவலைப்படாதீங்க” என பர்வீன் ஆர்யனிடம் ருஹானாவின் பெருமைகளை பேச, அவளை நன்கு அறிந்திருந்த ஆர்யன் ‘ஆமா, இத்தனை நல்லவள் என்னுடையவள்!’ என அவனும் ருஹானாவை பெருமையாக பார்த்தான்.

“எல்லாம் எடுத்துக்கிட்டியா ருஹானா?”

“ஆமா பர்வீன் அம்மா, எல்லாம் எடுத்துக்கிட்டேன். நீங்க எனக்கு பின்னிக் கொடுத்த உல்லன் பொம்மை மட்டும் தான் கிடைக்கல.”

“என்னோட பொருட்களோட சேர்ந்து இருக்கும். நான் தேடி எடுத்து வைக்கிறேன்” என்று சொன்ன பர்வீன், ருஹானாவின் கையில் இருந்த அவள் தாயின் புகைப்படத்தைப் பார்த்து வருந்தினார்.

“உன் அம்மாவோட போட்டோ இப்படி ஆகிடுச்சே. நீ அதை பொக்கிஷமா வச்சிருந்தியே. என்னை மன்னிச்சிடு மகளே.”

“இல்ல… வருத்தப்படாதீங்க. நீங்க என்ன செய்தீங்க? நல்லவேளை முழுசா கிழிஞ்சி போகாம இதாவது கிடைச்சிதே” என அவரை தேற்றியவள் “தன்வீரை நான் கேட்டதா சொல்லுங்க. இவான் தேடுவான். நாங்க கிளம்புறோம்” என்றாள்..

“சரி மகளே! இவானுக்கு என்னோட அன்பை சொல்லு!”

——-

காரில் போகும்போது ருஹானா ஆர்யனிடம் பர்வீனை பற்றி சொல்லிக்கொண்டு வந்தாள்.

“எங்க அம்மா இறந்த பின்ன ஒரு நொடி கூட அவங்களோட அரவணைப்பில இருந்து எங்களை விலக்கல, பர்வீன் அம்மா. இவங்க இல்லனா நாங்க எப்படி தவிச்சிருப்போமோ? இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்?”

“நீ அவங்களை நம்பறே தானே?”

“ஆமா!”

“கடினமான நேரத்துல உன்னோட உதவிக்கு ஓடி வருவாங்கன்னு உனக்கு தெரியும் தானே?”

“எந்த நிமிடமும் வந்திருவாங்க”

“இதே தான் நீ இவானுக்கு செய்றே. அவன் பின்னாடி நீ ஒரு மலையா நிக்கனும்னு நான் ஆசைப்படறேன். அவன் சாய்ந்து கொள்ள ஒரு தூணா நீ இருப்பே.”

“நீங்க மறுபடியும் பங்கு மாற்றத்தை பற்றி பேசாதீங்க.”

“நான் உன்னை நம்புறேன். நான் உன்னை கேட்கறது ஒன்னே ஒன்னு தான். நீயும் என்னை நம்பு. இவானுக்காக…..”

“ஒரு திருத்தம் செய்தா நான் ஒப்புக்கொள்றேன்” என ருஹானா இறங்கி வர, ஆர்யனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது.

“நீ எது சொன்னாலும் சரி.”

“இவானுக்காக இருந்தாலுமே சரி, நான் எதையுமே என் பேர்ல வாங்கிக்க மாட்டேன். நீங்க இதை இவான் பேர்ல எழுதுங்க. அவன் மேஜராகற வரைக்கும் அந்த சொத்துக்களுக்கு நான் கார்டியனா இருக்கேன்.”

“உன் விருப்பம். இப்பவே லாயர்ட்ட சொல்லி திருத்தங்கள் செய்ய சொல்றேன்” என்று சொன்ன ஆர்யன் போனை கையில் எடுத்தான்.

—–

வரவேற்பறையில் இவான் படம் வரைந்துக் கொண்டிருக்க, அவன் அருகே அமர்ந்து கரீமாவும் ருஹானா ஆர்யன் வரவை எதிர்நோக்கி இருந்தாள். அவர்கள் உள்ளே வர இவான் தனது புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஓடினான்.

“சித்தி! இங்க பாருங்க. நான் வரைந்த ஆமை எப்படி இருக்கு?”

“ரொம்ப அழகா இருக்கு கண்ணே. அதுக்கு பரிசு உனக்கு இந்த ரொட்டி. அதோட உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு” என சொல்ல, இவான் ஆவலாக பார்க்க, ருஹானா கலைடாஸ்கோப்பை எடுத்து நீட்டினாள்.

“ஆஹா! இது புதுசா சித்தி?”

“இல்ல செல்லம். ஆனா ரொம்ப முக்கியமானது. இது நானும் உன்னோட அம்மாவும் வச்சிருந்தது” என நா தழுதழுக்க சொல்ல, இவானின் சந்தோசம் இன்னும் அதிகரித்தது.

காரில் இருந்த பெட்டிகளை உள்ளே தூக்கி வந்த ஜாஃபர் “சார்! உங்களுக்காக லாயர் வந்து காத்திருக்காங்க” என்றான். “சரி, நான் போய் பார்க்கறேன். நீங்க பெட்டிகளை எல்லாம் மேல கொண்டு போய் வைங்க” என சொல்லி ஆர்யன் செல்ல, ருஹானாவும் இவானை கூட்டிக்கொண்டு படிக்கட்டில் ஏற, சோபாவில் அமர்ந்திருந்த கரீமா எல்லாவற்றையும் வெறுப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

  ——-

ருஹானா இவானை தூங்க வைக்க முயற்சி செய்ய, அவன் கலைடாஸ்கோப்பை சுழற்றி சுழற்றி பார்த்துக்கொண்டிருந்தான்.

“சித்தி, என் அம்மாவும் நான் பார்க்கற மாதிரியே பார்ப்பாங்களா?”

“ஆமா கண்ணே!”

“நான் இப்போ பார்க்கற எல்லா நிறங்களும் என் அம்மாவும் பார்த்திருப்பாங்க தானே?”

“ஆமா என்னுயிரே!” என சொன்ன ருஹானாவின் கண்களில் நீர் திரையிட்டது. ‘இத்தனை அருமையான மகனை விட்டு சென்றுவிட்டாயே, அக்கா!’ என இதயம் அழுதது.

“சரி, வா மானே! தூங்கலாம் நேரமாச்சே!” என அவள் இவானை படுக்க வைக்க, “கலைடாஸ்கோப்பையும் என் பக்கத்துல வச்சிக்கிட்டு தூங்கவா, சித்தி?” என கேட்க, அவள் சரியென தலையாட்டினாள். இவான் அதை நெஞ்சோடு அணைத்தபடி படுக்க, அவள் அவனை தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

——

தோட்டத்தில் ஆர்யன், ருஹானாவின் அறையில் விளக்கு எரிகிறதா என அண்ணாந்து பார்த்தபடி உலவிக் கொண்டிருக்க, மேன்மாடத்தில் நின்ற சல்மா அவனை கண்காணித்துக் கொண்டிருந்தாள்.

செல்பேசியில் கரீமாவிற்கு அழைத்தவள், “அக்கா, இன்னுமா ஆர்யன் அறையில தேடுறே? இப்போ தானே லாயர் போனாங்க. அவன் மேசை மேல தான் பத்திரங்கள் இருக்கும். நல்லா பாரு!” என சொல்ல, ஆர்யன் அலுவலக மேசையில் கோப்புகளில் தேடிக்கொண்டிருந்த கரீமா “தேடிட்டு தான் இருக்கேன், சல்மா. கைக்கு அகப்படல. நீ ஆர்யன் உள்ள வந்தா எனக்கு உடனே சொல்லு, அவனை கவனிச்சிட்டே இரு” என்றாள்.

இறுதியாக கரீமா கையில் ஒரு பத்திரம் கிடைத்தது. அது ருஹானா இவானோடு தங்குவதற்காக எடுத்த வீட்டின் வாடகை ஒப்பந்தம். சமூகசேவை நிறுவனத்தின் நிபந்தனையை நிறைவேற்ற, ருஹானாவிற்கு ஆர்யன் ஏற்பாடு செய்த வீட்டின் ஒப்பந்தம். யாருக்கும் தெரியக்கூடாது என மறைத்து வைத்த ஒப்பந்தம்.

——-

இவான் தூங்கியதும் தன் அறைக்கு வந்த ருஹானா கட்டில் அருகே மேசை மேல் அவளும் இவானும் இருக்கும் புகைப்படத்தின் அருகே இருந்த இன்னொரு புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ந்து நின்று விட்டாள்.

அது அவள் அன்னையின் புகைப்படம். சிதிலமடைந்த புகைப்படம் அல்ல. அதைவிட சற்று பெரிது. அதிலிருந்து கறைகளோ, ஈர அடையாளங்களோ அதில் இல்லை. அழகிய வேலைப்பாடுடைய வெள்ளி சட்டத்தின் உள்ளே ருஹானா அன்னை மாசுமறுவின்றி அழகாக சிரித்துக் கொண்டிருந்தார்.

ஆனந்த கண்ணீருடன் அதை எடுத்த ருஹானா மார்போடு அணைத்துக்கொண்டாள். “உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?” என வாய்விட்டு சொன்னாள், சிரிப்புடன்.

அப்போது ஆர்யன் ருஹானா அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே வர, அவனை மகிழ்ச்சி பொங்க பார்த்தாள். அவள் வதனத்தில் மலர்ந்த ஆனந்தம் கண்டு ஆர்யன் உலகையே வென்றுவிட்ட பெருமிதம் அடைந்தான். ருஹானாவின் இந்த மலர்ச்சியை காணத் தான் தோட்டத்தில் காத்திருந்தானா?

அவன் அருகே ஓடிவந்த ருஹானா மிக நெருங்கி வந்தும், எல்லையற்ற உவகை காரணமாக சொற்கள் வெளிவராமல் கண்கள் பனிக்க அவன் கண்களை மட்டும் பார்த்து நின்றாள்.

வில்லின்றி எய்தாள் விழி அம்பை, அது சுகமாய் துளைத்தது அவன் இதயத்தை!

(தொடரும்)

Advertisement