Advertisement

மருத்துவ பரிசோதனைக்கு பின் ஆர்யன் ருஹானாவை பர்வீன் வீட்டில் இறக்கி விட்டான். “டாக்டர் உங்க காயம் ஆறிடுச்சின்னு சொன்னா கூட நீங்க மெத்தனமா இருக்கக்கூடாது” என ருஹானா அறிவுறுத்த, ஆர்யன் “சரி, நான் கவனமா இருக்கேன்” என மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டான்.

அதற்குள் அங்கே வாசலில் ஓடிய ஒரு பூனை ருஹானாவின் அருகே வந்து அவளை உரசியது “பமுக்! பமுக் அழகே!” என செல்லம் கொஞ்சிய ருஹானா அதை ஆர்யனுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள். “பாருங்க, இதான் பமுக்!”

பூனைக்கும் அவளுக்கும் உள்ள பிணைப்பை விசித்திரமாக பார்த்த ஆர்யன் “பமுக்கா?” என கேட்டான்.

பூனையை தடவிக் கொடுத்துக்கொண்டே அவள் “ஆமா! நாங்க இவளை தோட்டத்துல இருந்து தான் எடுத்தோம். அப்போ இவ பிறந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. பாட்டில்ல தான் பால் ஊத்தி கொடுப்பேன். எங்கப்பா மடில தான் நாள் பூரா கிடப்பா. நான் வெளியே போயிட்டு திரும்பி வரும்போது தெருமுனையில எனக்காக காத்திருப்பா. என்கூடவே நடந்து வருவா. இப்போ எவ்வளவு வளர்ந்திட்டா!” என கண்களிலும் குரலிலும் உற்சாகம் துள்ள விவரித்தாள்.

ஆர்யன் அவளை புன்னகையுடன் பார்க்க “என்னை கூட்டிவிட்டு வந்ததுக்கு நன்றி” என ருஹானா அவனுக்கு விடைகொடுக்க முயல, அவனும் அவளோடு உள்ளே வந்தான், “கனமான பொருட்கள் இருந்தா நீ எப்படி தனியா தூக்கிட்டு வருவே?” என கேட்டபடி.

இருவரையும் பார்த்த பர்வீன் இன்ப அதிர்ச்சியோடு சந்தோசமாக “நல்வரவு! நீங்க வந்ததுல எனக்கு மிக்க மகிழ்ச்சி” என வரவேற்றார். இருவரையும் உள்ளே அழைத்து உட்கார சொல்ல, யார் வீட்டுக்கும் போய் பழக்கமிராத ஆர்யன் சிறுவெட்கத்துடன் அமர்ந்தான்.

“நான் காபி போடுறேன்” என அவர் உபசரிக்க, “பர்வீன் அம்மா நான் செய்றேன்” என ருஹானா முன்வர, “இல்ல.. ஆர்யன் முதல்முறையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கார். என் கையால நான் தான் போட்டு தருவேன்” என மறுத்தவர், ஆர்யனிடம் கேட்டார்.

“ருஹானாக்கு இனிப்பு குறைவா தான் இருக்கணும். உங்களுக்கு?” அவர் கேள்விக்கு ஆர்யன் பதில் சொல்லும்முன் “அவர் இனிப்பு சேர்க்காம சாப்பிடுவார்” என ருஹானா சொல்ல, ஆர்யன் பர்வீனிடம் இருந்த பார்வையை ஆச்சரியமாக ருஹானாவிடம் திருப்பினான்.

——-

சல்மா வாசலில் காவல் காக்க, கரீமா ஆர்யனின் அலுவலக அறையில் பத்திரங்களை வேகமாக தேடிக் கொண்டிருந்தாள். அங்கே எதும் கிடைக்காமல் “சல்மா! ஒருவேளை அது ஆபீஸ் போயிருக்குமோ? நீ அங்க போய் தேடு” என சொல்லி வெளியே வந்தாள். சல்மாவும் வேகமாக கிளம்பினாள்.

——

காபி கொடுத்த பர்வீன் “தன்வீர் உங்களுக்கு அடிபட்டது பத்தி சொன்னான். இப்போ எப்படி இருக்கு?” என விசாரித்தார். “நல்லாகிடுச்சி. நன்றி” என சொன்னபடி ஆர்யன் காபி குடிக்க கப்பை எடுக்க, ருஹானா அவனை தடுத்தாள்.

“இருங்க! டாக்டர் இப்போ கொடுத்த புது மாத்திரையை போட வேண்டிய நேரம். அதை தண்ணில தான் போடணும். அப்புறம் காபி குடிங்க” ருஹானா சொல்ல எடுத்த கப்பை கீழே வைத்த ஆர்யன், ருஹானா தன் கைப்பையிலிருந்து எடுத்த தந்த மாத்திரையை போட்டு தண்ணீர் குடித்தான்.

இருவரின் செயல்களையும், அவர்கள் பார்வை பரிமாற்றத்தையும் கவனித்த பர்வீன் அவருக்குள் சிரித்துக்கொண்டார்.

அப்போது அவர் செல்பேசி அடிக்க பேசி முடித்துவிட்டு “நான் உடனே போகணும். எமர்ஜென்சி. தவிர்க்க முடியாது. ருஹானா எல்லா பொருளும் கலந்து கிடக்குது. நீ பார்த்திட்டே இரு. நான் இப்போ வந்திடுறேன். மகளே! ஃப்ரிட்ஜ்ல இனிப்பு இருக்கு. அவருக்கு சாப்பிட எடுத்து கொடு. மாவு பிசைந்து வச்சிருக்கேன். நீ ரொட்டியை எண்ணையில பொரிச்சி கொடு. ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என சொன்னார்.

ஆர்யன் “எதும் உதவி செய்யணுமா?” என கேட்க, “இல்ல, ரெண்டு மணி நேரம் உடம்பு சரியில்லாத என் தோழிக்கு துணைக்கு இருக்கணும்” என பர்வீன் சொல்லி வெளியே சென்றார்.

ருஹானா எழுந்து உள்ளே செல்ல, ஆர்யனும் அவளை பின்தொடர்ந்தான். “நீங்க உள்ள உட்காருங்க. இங்க நிக்காதீங்க” என சொல்ல, அவனோ அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் “எதுல இருந்து ஆரம்பிக்கணும்?” என கேட்டு அவளோடு களத்தில் குதித்தான்.

அவனுக்கு ஏவ ஆயிரம் ஆள் அம்பு படைகள் இருக்க, இங்கே அவளுக்காக வேலை செய்ய முன்வந்தவனை ருஹானா அதிசயமாக பார்க்க, அவன் ஒரு அட்டைப்பெட்டியை திறந்து ஒரு புகைப்பட ஆல்பத்தை கையில் எடுத்தான்.

“இந்த ஆல்பம் உன்னோடதா?” என கேட்டபடி அவன் அதை திருப்ப, தலையாட்டியபடி அவன் பக்கம் அவள் நெருங்க, முதல் படமே இரட்டை ஜடை போட்டு பள்ளி சீருடையில் சிறுமியின் படம்.

“இது நீ தானா?” என அவன் ஆவலாக கேட்க, சிரித்த ருஹானா “ஆமா. முகத்தை எப்படி உர்ருனு வச்சிருக்கேன் பாருங்க. முதல் நாள் ஸ்கூல் போனபோது எடுத்தது. என்னோட ஜடையை பாருங்களேன். நான் அசிங்கமா இருக்கேன்னு எல்லாரும் கிண்டல் செய்வாங்க” என வெட்கத்துடன் சொன்னாள்.

அவளையும் புகைப்படத்தையும் பார்த்தவன் “அவங்க தப்பா சொல்லிட்டாங்க. நீ அழகா இருக்கே” என சொன்னவன் “அது என்னனா உன் ஜடை அழகா தான் இருக்கே… அழகா இருக்கு” என்று சமாளித்தான். தன்னையறியாமல் அவளும் அறியாமல் ருஹானா சிறுமியை மென்மையாக தடவிக் கொடுத்தான்.

அவன் முகத்தை பார்க்க முடியாமல் “காலம் எத்தனை வேகமா போகுது” என்று சொல்லி வேறு பக்கம் திரும்பிய ருஹானா, மேலே இருந்த ஒரு அட்டைப்பெட்டியில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு கலைடாஸ்கோப்பை பார்த்துவிட்டாள். “எங்க சின்ன வயசு கலைடாஸ்கோப் அது” என அவனுக்கு காட்டிவிட்டு, அதை எடுப்பதற்காக ஒரு பெட்டியில் கால் வைத்து ஏறினாள்.

“இரு, நான் எடுத்து தரேன்”

“இல்ல நானே எடுக்கறேன்” என எக்கி எடுத்தவள், கால் தடுமாறி பின்னால் சாய்ந்தாள். அவளை ஏந்தி பிடிப்பதை தவிர அவனுக்கு வேறென்ன வேலை? கண்கள் கலந்த நிமிடங்கள் நொடிகளாக ஓட, அவன் வலியால் முகம் சுருக்கவும் தான் ருஹானா அவன் கரங்களில் இருந்து கீழே இறங்கினாள்.

“பார்த்து கவனமா” என அவன் சொல்ல, “உங்களுக்கு வலிக்குதா?” என அவள் கவலைப்பட்டாள். இல்லை என அவன் சொல்ல, “நீங்க என்னை பிடிச்சிருக்கக் கூடாது. இப்போ உங்க காயம் பெருசாகிடுச்சான்னு தெரியல” என அவள் பதட்டப்பட “நான் பிடிக்கலன்னா நீ கீழ விழுந்து அடிபட்டிருக்கும்” என்றான்.

தேவையானது எல்லாம் ருஹானா எடுத்துக்கொடுக்க ஆர்யன் ஒரு அட்டைப்பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தான். ஒரு புத்தகத்தை எடுக்கும்போது அதிலிருந்து ஒரு தாள் பறந்து வந்து கீழே விழ “இது என்ன?” என ஆர்யன் கேட்க, “முக்கியமா ஒன்னும் இல்ல. சின்ன வயசுல நான் எழுதின கட்டுரை” என அவள் மழுப்ப, அவள் எழுதியது என தெரிந்தபின் அவன் அதை படிக்காமல் விடுவானா?

என்னை பொறுத்தவரை எல்லா வகை காயத்தையும் குணமாக்குவது அன்பு எனும் மாய மருந்து. வெகு உயரமான ஊடுருவ முடியாத சுவரை கூட அது துளைத்துவிடும். அன்பு தனது எல்லையில்லா சக்தியால் பெரிய தடைகளையும் வென்றுவிடும். 

சென்ற கோடைகாலத்தில் காயம் அடைந்த ஒரு பூனைக்குட்டியை நான் கண்டெடுத்தேன். அதன் உள்ளக்கால் காயப்பட்டிருந்தது. அதிக வலி காரணமா யாரையும் அது தொடவிடல. ஒரு மூலைல போய் உட்கார்ந்துட்டு மியாவ் மியாவ்ன்னு கத்திட்டே இருந்தது.

நான் அது கிட்டே போனேன். அது என்னை பிறாண்டிவிடுது. ஆனாலும் அதோட புண்ணுக்கு மருந்து போட நான் அதை நெருங்கினேன். அது என்னை கீறிவிட்டுட்டே இருக்கு, என் கைலயும் கடிக்குது. சில சமயம் நான் வலி தாங்காம அழுதேன். 

கடைசியா அதுக்கு மருந்து போட்டு முழுமையா குணமாக்கினேன். அப்புறம் நாங்க நெருங்கின நண்பர்களாகிட்டோம். நான் அதை தூக்கி வச்சி விளையாடுவேன்.

அப்போ தான் எனக்கு புரிந்தது, காயம் பட்டவங்களுக்கு அன்போட சிகிச்சை செய்தா, எல்லா வலிகளையும் நாம போக்கிடலாம். ஏன்னா அன்பு வலிகளைவிட வலிமையானது’

அவன் படிக்கும்போது மாறும் முகபாவனையை பார்த்தபடி ருஹானா சங்கடமாக நிற்க, ஆர்யன் மனதில் பல்வேறு ருஹானா வந்து போனாள்.

காட்டில் அவன் காயத்துக்கு மூலிகை அரைத்து போட்டவள், கையில் துப்பாக்கி குண்டுகளை வைத்துக்கொண்டு ‘உங்க இருண்ட உலகத்தில நீங்க தொலைந்து போக நான் விட மாட்டேன்’ என பிடிவாதம் பிடித்தவள், ‘காபி இல்லாம எப்படி நீங்க உங்க நாளை ஆரம்பிப்பீங்க?’ என சிறைக்குள் கருணை காட்டியவள், என பலப்பல ருஹானா.

அவன் நினைவுகளை கலைத்த ருஹானா “அது ஏதோ சிறுமியா இருக்கறப்ப எழுதினது. இப்போ வளர்ந்த பின்னாடி எல்லாமே மாறிப்போச்சி” என்று சொல்ல, “உண்மையில நீ மாறவே இல்ல. காயங்களுக்குள்ள ஊடுருவி பார்க்கற உன்னோட சக்தி இன்னும் அப்படியே தான் இருக்கு” என அவன் பாராட்ட “போதும் எடுத்து வச்சது. நான் போய் உங்களுக்கு சாப்பிட கொண்டு வரேன்” என வெளியே சென்றுவிட்டாள்.

——-

சிறிய சமையலறையில் இருவர் மட்டுமே அமர்ந்து உண்ணும் சிறு மேசையில் ஆர்யன் அமர்ந்திருக்க, ருஹானா ரொட்டிகளை பொரித்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க சாப்பிடுங்க. நான் இதையும் பொரிச்சி எடுத்துட்டு வரேன்” அவனுக்கு தட்டில் எடுத்து வைத்துவிட்டு செல்ல, ஆர்யன் அவள் வேலை செய்யும் அழகை பார்த்துக்கொண்டே காத்திருந்தான்.

தேநீர் கொண்டுவந்து வைத்தவள் “என்ன, நீங்க சாப்பிடலயா?” என கேட்க, “நீயும் வா, நாம சேர்ந்தே சாப்பிடுவோம்” என அவன் சொல்ல, உடனே அவளும் அவன் அருகே வந்து அமர்ந்தாள்.

பொரித்த ரொட்டிக்குள் இருவரும் ஜாமையும், சீஸையும் வைக்க இருவரும் ஒரு சேர கேட்டனர்.

“நீங்களும் ஜாம்க்குள்ள சீஸ் வச்சி சாப்பிடுவீங்களா?”

“நீயும் ஜாம்க்குள்ள சீஸ் வச்சி சாப்பிடுவீயா?”

இருவருக்கும் சிரிப்பு வர, ஆர்யன் புன்னகையளவே நிறுத்திக்கொள்ள ருஹானா மலர்ந்து சிரித்தாள். திரும்பவும் இரண்டு பேரும் ஒன்றாக பேச..

“நான் நினைக்கிறேன்..”

“இது சாப்பிட்டதும்…”

“நீங்க சொல்லுங்க முதலில்”

“நீ சொல்லு”

“நான் சொல்ல வந்தது ஒன்னும் முக்கியமானது இல்ல”

“ஆனா நான் சொல்ல வந்தது, ரொம்ப முக்கியமானது”

“என்ன?”

“அங்கே எல்லாம் தீஞ்சி கருகப் போகுது” என ஆர்யன் அவள் பின்னால் இருக்கும் அடுப்பை காட்ட, “ம்ப்ச்!” என்றபடி எழுந்த ருஹானா எண்ணையில் ரொட்டியை திருப்பி போட்டாள்.

அவன் சிரிப்புடன் தேநீர் அருந்த, இருவருக்கும் பர்வீன் இல்லத்தில் தனித்து இருப்பது இனிமையான நேரமாக சென்றது.

—–

Advertisement