Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 94

“நீ வித்தியாசமானவள்” என ஆர்யன் அவள் பெயரில் தான் செய்த கம்பெனியின் பங்கு மாற்றத்திற்கான காரணத்தை சொல்ல, அத்தனை நேரம் ஓங்கிய குரலில் பேசிக்கொண்டிருந்த ருஹானா மறுமொழி கூறாமல் அவன் பேசுவதை கேட்கலானாள்.

“எல்லாரும் இவானை விட்டுடுவாங்க. ஆனா நீ விட மாட்டே. என்ன நடந்தாலும் விட மாட்டே! ஏன், என்னால கூட உன்னை இவான் கிட்டே இருந்து பிரிக்க முடியலயே! நான் எவ்வளவு செஞ்சேன்? ஆனாலும் நீ இவானுக்காக செஞ்ச போராட்டத்தை நிறுத்தலயே!” என அவள் செய்ததை அவளுக்கே எடுத்து சொன்னான்.

“நீ அப்படி பிடிவாதமா நின்னது எனக்கும் சந்தோசம் தான். ஏன்னா.. ஏன்னா இவானுக்கு நீ வேணும்” அவன் சொல்ல சொல்ல கலங்கிய கண்களோடு அவனையே பார்த்தபடி தான் இருந்தாள், ருஹானா.

“கொடுக்கறதை விட வாங்குறது பெரிய சுமை தான். எனக்கு தெரியும். ஆனா நான் உன்னை நம்புறேன். நீயும் என்னை நம்பணும்னு நினைக்கறேன்.” அவன் பேச்சில் கோபமெல்லாம் கரைந்து ருஹானா நிற்க, அந்த பத்திரத்தை இழுத்து அவள் பக்கம் திருப்பியவன் “இதை வேணாம்னு மறுக்கற முடிவை கண்ணை மூடிட்டு எடுக்காதே. கொஞ்சம் யோசி” என்றான்.

அன்புவழி மாறியவன் அளிக்கும்

செல்வத்தை மறுக்கும் பெண்மனம்!

செயலால் பகிர்வதை தயக்கமின்றி

ஏற்கவும் எதிர்ப்பார்க்கவும் முடிந்தவளோ

பணமாக பரிமாற்றம் செய்வதை மறுத்திட,

பரிவாய் மேற்கோள் பலவும் காட்டி

தவறான எண்ணம் தவறியும் வராதென

ஒப்புக்கொள்ளுமாறு மன்றாடுகிறான்!

அப்போது கதவை தட்டிக்கொண்டு லாயர் உள்ளே வர, “நான் போறேன்!” என்று சொல்லி ருஹானா வெளியே செல்ல, “வெரி ஸாரி சார். ஃபைல் தவறி கீழே விழுந்துடுச்சி. ருஹானா மேம் பார்த்துட்டாங்க” என்று பயத்துடன் சொன்ன லாயரை கடுமையாக பார்த்த ஆர்யன், “இப்போதைக்கு இந்த பங்கு மாற்றத்தை நிறுத்தி வைங்க” என்றான்.

——-

ருஹானா வெளிவரும் வரை தூணுக்கு பின் மறைந்து காத்திருந்த கரீமா அவள் வெளியே வந்ததும் அருகே ஓடி வந்தாள். “நான் உன்னை பத்தி தான் கவலைப்பட்டுட்டு இருந்தேன். என்ன நடந்தது ருஹானா டியர்? ஏதும் பிரச்சனையா?” என ஆவலோடு கேட்டாள்.

“ஒன்னும் இல்லயே!” என சொல்லிவிட்டு ருஹானா சென்றுவிட, கரீமாவும், அவள் பின்னே ஒளிந்திருந்த சல்மாவும் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர்.

——-

‘நான் பார்த்த பெண்களைப் போல நீ இல்ல’ என ஆர்யன் சொன்னதை நினைத்தபடி ருஹானா இரவில் சமையலறையில் பாலை வடிகட்டிக் கொண்டிருந்தாள். சமையலறைக்கு வந்த ஆர்யன் அவள் அருகே வர, அவன் காலடியோசையில் திடுக்கிட்டு திரும்பினாள்.

“நான் உன்னை பயமுறுத்திட்டேனா?”

“நீங்க வந்ததை நான் பார்க்கல. கெஃபிர் (தயிரை பதப்படுத்தி செய்யும் பானம்) செய்துட்டு இருந்தேன்.”

“இந்த நேரத்துலயா?”

“இப்போ செஞ்சா தான் காலைல அது தயாராகும். உங்களுக்கு குணமாக உதவி செய்யும். குளிர் காலத்துல பர்வீன் அம்மா செஞ்சி தருவாங்க. எங்களுக்கு உடம்பு சரியில்லாம போகவே போகாது. நீங்களும் சீக்கிரம் நல்லாகிடுவீங்க.”

தன் உடல்நலத்துக்காக அக்கறையுடன் மெனக்கெடும் ருஹானாவை பார்த்து கனிந்து போன ஆர்யன், அவளை இதமாக பார்க்க, அவள் வேலை செய்வது போல திரும்பிக் கொண்டாள். எதிரே இருந்த ஒரு பெரிய தட்டில் சர்க்கரை  தூவிய ஆரஞ்சு பழங்கள் துண்டுகளாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை அருகில் சென்று பார்த்தான், ஆர்யன்.

அவன் பார்வை உணர்ந்தே ருஹானா பதில் சொன்னாள். “இது இவானுக்கு. அவன் ஆரஞ்சு ஜாம் கேட்டான். அது செய்ய தான் ஆரஞ்சை சர்க்கரையில ஊற வச்சிருக்கேன்.”

“இதனால தான் நான் உன்னை நம்புறேன்!”

“இது வெறும் கெஃபிர்!”

“நான் இதை மட்டும் வச்சி சொல்லல. நீ புல்லட்டுக்கு நடுவுல வந்ததை நான் இன்னும் மறக்கல. அப்புறம் நீ இவானுக்கு செஞ்சது, செய்றது எல்லாமே ஏராளம். நானும் உனக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறேன். நீ செய்ததுக்கும் இதுக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. பங்கு மாற்றத்தை வெறும் பணமா பார்க்காதே” என ஆர்யன் சொல்ல, ருஹானா ‘எதுக்கு இதெல்லாம் இப்போது?’ என சலிப்பாக பார்த்தாள்.

“நீ இவானுக்கு செய்யும்போது எப்படி உனக்கு மனநிறைவா இருக்கோ, அதே மாதிரி இதை நீ ஏத்துக்கிட்டினா எனக்கு மன நிம்மதி கிடைக்கும்” என கிட்டத்தட்ட ஆர்யன் கெஞ்சினான்.

மற்றவர்களிடம் பேசும்போது….. முக்கியமாக வீட்டில் இருக்கும் இரண்டு தந்திர பெருச்சாளிகளிடம் மேம்போக்காக பேசும் ஆர்யன் ருஹானாவிடம் இப்போதெல்லாம் மனம் திறந்தே பேசுகிறான்.

“நீங்க ஏற்கனவே இதை விட அதிகமா செய்திருக்கீங்க. அதுல்லாம நீங்க எங்க கூட இருக்கறதே போதும்…. அதாவது….. நான் என்ன சொல்ல வரேன்னா…. நீங்க இவான் கூட இருக்கறதை விட வேற எதுவும் நீங்க செய்ய தேவை இல்ல” என சொல்லிவிட்டு அவள் குளிர்சாதன பெட்டியை நோக்கி நகர, ஆர்யன் அவள் முன்னால் வந்து நின்று வழிமறித்தான்.

“இப்போ நான் இருக்கேன், நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்? வாழ்க்கை நம்ம ரெண்டுபேருக்கும் என்ன வச்சிருக்கோ? நாளைக்கு உங்க கூட நான் இருப்பேன்ங்கறதுக்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கா?”

பயந்துப்போய் ஆர்யனை பார்த்த ருஹானா தலையாட்டி மறுத்தாள். “ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க. நான் நிறைய இழந்துட்டேன். இன்னும் யாரையும் இழக்க விரும்பல. அப்படி நினைக்க கூட என்னால முடியாது.”

அவளது பேச்சிலும், அவளின் சோக முகத்திலும் இளகிய ஆர்யன் பேசாமல் வெளியேறிவிட்டான்.

——

காலையில் முடிவிலி சின்னத்தை கையில் வைத்து ருஹானா பார்த்துக்கொண்டிருக்க அவள் தொலைபேசி அழைத்தது. பரஸ்பரம் நலன் விசாரிப்பிற்கு பின், பர்வீன் அவர்கள் வீட்டில் தண்ணீர் புகுந்த கதையை சொன்னார்.

“நம்ம வீட்டு கீழ் அறைகள்ல தண்ணீ வந்து அங்க வச்சிருந்த பொருட்கள்லாம் பாழாகிடுச்சி. நீ என்கிட்டே தந்துட்டு போனது கூட பேஸ்மென்ட் தான் வச்சிருந்தேன். எல்லாம் ஈரமாகிடுச்சி. என்னால காப்பாத்த முடிஞ்சதுலாம் எடுத்து வச்சிருக்கேன். உனக்கு இதெல்லாம் பொக்கிஷம்னு எனக்கு தெரியும், மகளே! இப்படி ஆகிடுச்சேன்னு என் மனசே தாளல”

“கவலைப்படாதீங்க. யாருக்கும் எதும் ஆகலயே! அதுவே ரொம்ப நல்லது.”

“எல்லாம் தன்வீர் எடுத்து மேலே வச்சிருக்கான். நீ வந்து உனக்கு தேவையானதை எடுத்துட்டு போ, ருஹானா!”

“இப்பவே வரேன், பர்வீன் அம்மா!”

——–

“மருத்துவ பரிசோதனைக்கு போகறதா இருந்தாலும் தனியா போக வேண்டாம், ஆர்யன்” என சொன்ன கரீமா “சல்மா! நீ கூட போயிட்டு வா” என்றாள்.

“இதோ அக்கா! என் பேக் எடுத்துட்டு வரேன்!” சல்மா சந்தோசமாக புறப்பட, “யாரும் தேவையில்ல” என ஆர்யன் சொல்லவும் இருவர் முகங்களும் சுருங்கின.

அப்போது படிகளில் இறங்கி வந்த ருஹானா வாசல் அருகே இவர்கள் புரியும் தர்க்கத்தை பார்த்துவிட்டு, “எங்க போறீங்க? இன்னும் உங்க உடம்பு சரியாகலயே!” என உரிமைப்பட்டவள் போல அதட்டினாள்.

“டாக்டர்ட்ட தான். செக்அப்க்கு” என சொன்ன ஆர்யன், ருஹானா தோளில் பையுடன் வெளியே செல்ல ஆயுத்தமாக வந்ததை பார்த்து “நீ எங்க அவசரமா போறே?” என கேட்க, “பர்வீன் அம்மாவை பார்க்க போறேன்” என ருஹானா சொன்னாள்.

“நான் டாக்டரை பார்த்துட்டு உன்னை அங்க விடறேன். அங்க அதிக நேரம் ஆகாது” என சொல்லி, மறைமுகமாக அவளையும் மருத்துவமனைக்கு அழைத்தான். கரீமா புரியாமல் விழிக்க, சல்மாவிற்கு புரிந்துவிட்டது. ‘உடன் வருகிறேன்’ என்று சொன்ன தன்னை நிராகரித்துவிட்டு வெளியே செல்லும் ருஹானாவை தன்னுடன் கூட்டி செல்கிறான்’ என தெரிந்ததும் அவள் கண்களில் கோபம் தெறித்தது.

“இல்ல.. வேணாம். உங்களுக்கு சோர்வாகிடும். நான் டாக்ஸில போயிட்டு வந்துடுவேன்” என ருஹானா மறுக்க “நீ என்கூட தான் வரே!” என முடிவாக சொல்லிவிட்டு ஆர்யன் வெளியே சென்றுவிட்டான்.

“கரீமா மேம்! சாரா அக்காட்ட இவானை பார்த்துக்க சொல்லியிருக்கேன். நான் சீக்கிரம் வந்துடுவேன். ஒருவேளை இவான் எதும் கேட்டா எனக்கு போன் செய்றீங்களா?” என ருஹானா கேட்க, “நீ கவலைப்படாம போயிட்டு வா, ருஹானா டியர். நான் பார்த்துக்கறேன்” என கரீமா சொன்னாள்.

ருஹானா வெளியே செல்லவும் “உங்களுக்கு சோர்வாகிடும். நான் டாக்ஸில போயிட்டு வந்துடுவேன்” என ருஹானா பேசியது போல நடித்துக் காட்டிய சல்மா “வேணாம் வேணாம்னு மாய்மாலம் காட்டி ஆர்யனை எப்படி கூட்டிட்டு போக வச்சா பார்த்தியா அக்கா?” என நொடித்துக் கொண்டாள்.

அவளை பார்த்து சிரித்த கரீமா “அவங்க ரெண்டு பேரும் வெளியே போயிருக்காங்க. இந்த சந்தர்ப்பத்தை நாம பயன்படுத்திக்கலாம். அவ அந்த பத்திரத்துல கையெழுத்து போட்டுட்டாளான்னு பார்க்கலாம், வா” என அவசரப்படுத்தினாள்.

——–

Advertisement