Advertisement

“நான் நல்லா இருக்கேன் ஜாஃபர் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க?” 

“நானும் நலம் லிட்டில் சார்” என சொன்ன ஜாஃபர் ஒரு பணப்பையை ருஹானாவிடம் நீட்டினான். “இது மிஷால் சாருடையதான்னு பாருங்க, ருஹானா மேம். வாசல்ல கிடந்ததுன்னு செக்யூரிட்டி கொடுத்தார்.”

“ஆமா இது மிஷால் பர்ஸ் தான்” என ருஹானா வாங்கிக்கொள்ள, ஜாஃபர் தலையாட்டி செல்ல, அவள் மிஷாலுக்கு போன் செய்தாள். 

“மிஷால்! உன்  பணப்பையை இங்க விட்டுட்டே”

“ஆமா ருஹானா! காலைல தான் தேடினேன். நான் அதை எடுக்க அங்க தான் வந்துட்டு இருக்கேன்”

——-

காபியை ஆர்யனுக்கு அறையில் கொண்டு போய் கொடுத்த ஜாஃபர் “உங்களுக்கு காலை உணவு இங்க கொண்டு வரவா, சார்?” என கேட்டான். “இல்ல.. கீழே உணவு மேசையிலேயே சாப்பிட வரேன்… குடும்பத்தினரோட” என்று ஆர்யன் சொன்னான்.

‘வாய்மொழி தவிர்த்து மனதின் குரலை புரிந்து கொள்வோம் கூடிய சீக்கிரம்’ என ருஹானா சொன்னது அவன் இதயத்தில் சாரலை பொழிய, அதை ரசித்துக்கொண்டே காபியை அருந்தினான்.

—– 

உணவு அறைக்கு ஆர்யன் வரும்போது உணவு மேசையில் இவான் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சுற்றிலும் பார்வையை ஓடவிட்ட ஆர்யன் “என்ன சிங்கப்பையா! தனியா சாப்பிட்டுட்டு இருக்கே?” என்றான்.

“நானே சாப்பிட கத்துக்கணும்னு சித்தி சொல்லியிருக்காங்க, சித்தப்பா”

“நல்லது தான். வேகமாக சாப்பிடாதே. மெதுவா மென்னு சாப்பிடு” என அவனுக்கு அறிவுரை வழங்கியபடி சமையலறையை எட்டி பார்த்தான். ஐயோ! பாவம்! அவன் கண்களுக்கு ருஹானா தென்படவேயில்லை.

நஸ்ரியா உள்ளே இருந்து பழசாறுடன் வர “இவான் அவனே தான் சாப்பிடணுமா?” என ஆர்யன் அவளிடம் கேட்க, பயந்து போன நஸ்ரியா “நான் ஊட்டட்டுமா, சார்?” என கேட்டாள்.

“அவனோட சித்தி எங்கே?” இவானுக்காக தான் கேட்பது போல கேட்டான்.

“மிஷால் சார் வந்திருக்கார். வெளியே அவர் கூட தோட்டத்துல நின்னு பேசிட்டு இருக்காங்க”

அவ்வளவு தான்! அவன் உற்சாகம் எல்லாம் வடிய, வேகமாக எழுந்து கொண்டான். கோபமாக வாசலை நோக்கி அவன் நடக்க, எதிரே வந்த சல்மா “குட்மார்னிங், ஆர்யன்!” என ஆர்வமாக சொல்ல, அவன் எங்கே அவளை பார்த்தான்? 

தோள்களை குலுக்கி கோப பெருமூச்சை விட்ட சல்மாவிற்கு, அவன் பார்க்க போகிற காட்சியை பற்றி தெரிந்திருந்தால் மனம் குளிர்ந்திருக்கும்.

———

“நேத்து இங்க இதை எப்படி விட்டேன்?” என்றபடி மிஷால் கைநீட்டி பணப்பையை ருஹானாவிடம் இருந்து வாங்க, அவன் கையில் பீங்கான் தட்டு கிழித்திருந்த காயத்தை அவள் பார்த்துவிட்டாள். “மிஷால்! உன் கைல என்ன காயம்?”

“பெருசா ஒன்னும் இல்ல. லேசா வெட்டிக்கிட்டேன்” 

“என்னது ஒன்னுமில்லையா? இவ்வளவு ஆழமா பட்டிருக்கு. இதுக்கு தையல் தான் போடணும். நீ போகும்போது ஹாஸ்பிடல் போயிட்டு போ” என அவன் கையை பிடித்துக்கொண்டு ருஹானா காயத்தை ஆராய, அந்த நிமிடம் வெளியே வந்த ஆர்யன் அதை பார்த்துவிட்டு வாசலிலேயே நின்றுவிட்டான்.

ருஹானா காயத்தை பார்த்து குனிந்தபடி பேச, மிஷால் ‘இழந்த சொர்க்கம் மீண்டது’ போல அவள் முகத்தை மகிழ்வோடு பார்த்து நிற்க, தூரத்தில் நின்று பார்த்த ஆர்யனுக்கு உடலெங்கும் அனல் வீசியது. கை முஷ்டிகளை இறுக்கிக்கொண்டவனுக்கு ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அந்த காட்சியை பார்க்க சகிக்காமல் வீட்டினுள்ளே வந்துவிட்டான்.

அறையில் அலையகுலைய நடந்தவன் மேசையில் வலதுகை முஷ்டியை கொண்டுவந்து இடித்தான். இன்னும் அதிகமாக புண்ணாக்கிக் கொள்ளாமல் தடுத்தான் ரஷீத் தொலைபேசி அழைப்பின் மூலம்.

“ஆர்யன்! காதர் இருக்கற இடம் தெரிஞ்சிடுச்சி. அவங்க ஆயுதங்கள் வச்சிருக்காங்க. நாங்க அங்க போறோம். அங்க போயிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்”

“இல்ல ரஷீத்! நானும் வரேன். அவனோட சாவு என் கையால தான்” என அவன் பேசுவதை கேட்டுக்கொண்டே சல்மா உள்ளே வந்தாள். ஆர்யன் துப்பாக்கியை எடுத்து சரிபார்ப்பதை பார்த்தவள் பயந்து போனாள்.

“ஆர்யன்! காதர் பிரதர்ஸ் கிடைச்சிட்டாங்களா?”

“ஆமா! இன்னைக்கு அவன்களுக்கு சமாதி கட்டிட்டு தான் மறுவேலை” என துப்பாக்கியை பின்னால் செருகிக்கொண்டு வேகமாக வெளியே போனான்.

——–

“நீ சொல்றதால தான் நான் ஹாஸ்பிடல் போறேன் ருஹானா” என மிஷால் இன்னும் பேச்சை இன்பமாக வளர்த்துக் கொண்டிருக்க, ஆர்யன் “வாங்க போகலாம்” என சத்தமாக சொல்லிக்கொண்டே காரை எடுக்க, அவன் பாதுகாவலர் அத்தனை பேரும் பரபரப்பாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கார்களில் ஓடிவந்து ஏறினர்.

கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக சீறி புறப்பட, ருஹானாவும் மிஷாலும் தங்களை சுற்றி நடப்பதை திகைப்பாக பார்த்தனர். “மிஷால்! நான் உன்கிட்டே அப்புறம் பேசுறேன்!” என்று கடகடவென்று சொல்லிவிட்டு ருஹானா குடுகுடுவென வீட்டிற்கு ஓடினாள். 

எதிரே வந்த ஜாஃபரிடம் “என்ன நடக்குது ஜாஃபர் அண்ணா? அவர் எங்கே போறார்னு தெரியுமா?” என கேட்டாள்.

“எனக்கு தெரியலயே ருஹானா மேம்!”

“கண்டிப்பா ஏதோ நடக்குது. அவர் ஆட்களோட போறார். நேத்து இவானுக்கு வந்த கெட்ட கனவை இப்போ நான் நேர்ல பார்த்துட்டு இருக்கேன். அவருக்கு ஒன்னும் ஆகாதுல, ஜாஃபர் அண்ணா?”

புன்னகை செய்த ஜாஃபர் “நேத்தே உங்களுக்கு சொன்னேன் தானே, ருஹானா மேம்! இவான் சார் கனவை பார்த்து பயந்தாலும் அவரோட சித்தப்பாவோட சக்தி மேல நம்பிக்கை வச்சிருக்கார். ஒருத்தரை பற்றி ஒரு குழந்தையின் இதயத்தை விட வேற யாரும் சரியா புரிஞ்சிக்க முடியாது. நீங்க கவலைப்படாம இருங்க” என சொன்னாலும், ருஹானாவின் மனம் அமைதி அடையவில்லை.

“கரீமா மேம் சாப்பிட வந்தாங்களா?”

“இன்னும் இல்ல. மேல அவங்க ரூம்ல இருப்பாங்க”

சரியென தலையாட்டிய ருஹானா கரீமாவை தேடி சென்றாள். படிக்கட்டின் அருகிலேயே சல்மா கரீமாவிடம் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு நின்றுவிட்டாள்.

“அக்கா! நீ பார்த்திருந்தா பயந்திருப்பே! ஆர்யன் பயங்கர கோபமா துப்பாக்கியை எடுத்துட்டு போறான். பெரிய சண்டை நடக்கப் போகுது. அழிவுநாள் தான் வந்திடுச்சோ? துப்பாக்கி சூடுல ஆர்யன் மேல குண்டுபட்டா என்ன ஆகும்? அவனை சுட்டுடுவாங்களா?”

வேகமாக சகோதரிகளை நெருங்கிய ருஹானா “சண்டையா? அவர் சண்டைக்கா போறார்?” என கேட்டாள். சல்மா முகத்தை திருப்பிக்கொள்ள கரீமா பதில் சொன்னாள்.

“ஆமா, ருஹானா டியர். இதுல ஆச்சரியப்படறதுக்கு ஒன்னும் இல்ல. இதெல்லாம் ஆர்யனுக்கு சகஜம் தான். ஆர்யனோட இந்த பக்கத்தை நீ பார்த்தது இல்ல”

“என்ன சொல்றீங்க நீங்க? இதைப் போய் சாதாரணமா சகஜம்னு சொல்றீங்க! நீங்க இதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யவே இல்லயா?

“அச்சோ! ருஹானா டியர் இத்தனை நாள்ல நீ இன்னுமா ஆர்யனை பற்றி தெரிஞ்சிக்கல? இது போல விஷயங்கள்ல நாம தலையிட முடியாது. போகப்போக நீயும் புரிஞ்சிக்குவே”

“எப்போ? உயிர் போன பின்னாடியா? முடியாது. இவானுக்காக நான் இதுல தலையிட்டே தீருவேன். இவான் இன்னொரு இழப்பை சந்திக்கவே கூடாது. அவனோட அன்புக்குரியவர்களை அவன் பிரியக்கூடாது. நான் இதை அனுமதிக்க மாட்டேன்”

“எப்படி தடுப்பே ருஹானா? அவன் போய்ட்டான். நீ என்ன செய்வே? நாம என்ன தான் செய்ய முடியும்? போய் புல்லட்டுக்கு நடுவுல குதிக்க முடியுமா?”

“இவானோட சந்தோசத்துக்காக நான் மரணத்தையும் சந்திக்க தயங்க மாட்டேன்” என்று கரீமாவிடம் சொன்னவள், சல்மாவிடம் ஆர்யன் சென்றிருக்கும் இடத்தின் பெயரை கேட்டாள். சல்மா சொல்லவும் கிளம்பிவிட்டாள் ருஹானா.

“பார்த்தியா அக்கா? ஆர்யனுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும் இவ எப்படி துடிக்கிறா? அவன் பின்னாடியே ஓடுறா? அக்கா, இவளுக்கும் அவன் மேல காதல் இருக்குமோ?”

“நான் அப்படி நினைக்கல. அவ தான் சொன்னாளே, நீயும் தானே கேட்டே? எல்லாம் இவானுக்காக தான். அவளுக்கு ஆர்யனை பற்றி ஒரு அக்கறையும் இல்ல”

“ஆர்யனுக்கோ, இவானுக்கோ.. யாருக்கா இருந்தா என்ன? நானும் அவ செஞ்சதை செஞ்சிருக்கணும். ஆர்யன் பின்னாடி போயிருக்கணும்”

“பைத்தியகாரத்தனமா பேசாதே. அந்த முட்டாளுக்கு தெரியல, அவ பெரிய தப்பு செய்றா. அவ போகட்டும். பழைய ஆர்யன் திரும்பி வந்துட்டான். அவன் அவ இருக்கவேண்டிய இடத்தை அவளுக்கு புரிய வைப்பான். கவலைப்படாதே”

கரீமா நடந்துக்கொண்டே சிந்தனை செய்ய, சிறிது நேரத்தில் அவள் முகம் புன்னகை பூக்க “என்ன யோசிக்கறே அக்கா?” என சல்மா கேட்டாள்.

“ஆர்யன் ருஹானாவை திட்டும்போது யார் வந்து அவளை காப்பாத்துவா? ருஹானா துன்பப்படும்போது எந்த இளவரசன் அவளை காப்பாத்தி குதிரைல கூட்டிட்டு போவான்?” என்று கரீமா சிரிப்போடு கேட்க, சல்மாவும் சந்தோஷ சிரிப்போடு பதில் சொன்னாள். 

“மிஷால்!”

முகம் முழுவதும் சிரிப்போடு வேகமாக தலையாட்டிய கரீமா, தனது செல்பேசியை எடுத்து அழைப்பு விடுத்தாள்.

“ஹல்லோ மிஷால்!”

———

“உங்களால இன்னும் வேகமா போக முடியாதா?” என ருஹானா, வாடகை வண்டியின் ஓட்டுனரிடம் அவசரப்படுத்த, அவள் செல்பேசியில் மிஷால் அழைத்தான். அவன் அழைப்பை இரத்து செய்த ருஹானா ஆர்யனை அழைத்தாள்.

“ப்ளீஸ்! போனை எடுங்க” என புலம்பியவள் “அல்லாஹ்! எதும் விபரீதம் நடந்திடாம நீங்க தான் காப்பாத்தணும்” என இறைவனை வேண்டினாள்.

——-

ருஹானாவின் அழைப்பை பார்த்துக்கொண்டே இருந்த ஆர்யன் அதை ஏற்கவில்லை. கார் வேகமாக ஓடிக்கொண்டிருக்க பாதுகாவலரோடு அவன் பின்னால் அமர்ந்திருந்தான். 

ரஷீத் சொல்லியிருந்த இடம் வந்ததும் ஆர்யன் இறங்க அவன் பின்னால் பாதுகாவலர்களும் பின்தொடர, மறைந்திருந்த ரஷீத்தும் அவன் ஆட்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.

அவர்கள் பெரிய படையாக அந்த கிடங்கை நோக்கி முன்னேற, காதரின் கையாட்களும் துப்பாக்கியோடு மறைவிடங்களில் பதுங்கிக்கொண்டு சண்டைக்கு தயாராக நின்றனர்.

“காதர் எங்க இருக்கான்?” என ஆர்யன் கேட்க “உள்ள தான் இருப்பான்” என ரஷீத் சொல்ல, அப்போது காதர் ஆள் ஒருவன் கிடங்கை விட்டு வெளியே வந்து அவர்கள் முன்னே நின்றான்.

“எங்க உன்னோட பாஸ்? நான் அவனோட  பேசணும். அவனை வர சொல்லு” என ஆர்யன் சொல்ல, ரஷீத் அவன் காதருகே “அவன்கிட்டே என்ன பேச போறீங்க ஆர்யன். நாம சூட்டிங்கை ஆரம்பிப்போம்” என்றான். 

“பாஸ் உன்கிட்டே பேச மாட்டார், அர்ஸ்லான். எதுனாலும் என்கிட்டே சொல்லு” காதர் ஆள் சொன்னான்.

“என்னை எதிர்த்து நிற்கறீங்களே, என்ன காரணம்? நீங்க ஷாரிக்கோட நாய்களா? இல்லனா வேற ஏதாவது காரணம் இருக்கா?” என ஆர்யன் கேட்டதும், மறைந்திருந்த காதர் வேகமாக முன்னே வந்து “நாய்னு சொல்றான். அவனை சுட்டு தள்ளுங்க. உயிரோட விடாதீங்க” என்று சொல்ல, அங்கே பயங்கர துப்பாக்கி சண்டை ஆரம்பித்தது. 

அப்போது மஞ்சள் நிற வாடகை வண்டி அங்கே வந்து நிற்க, ருஹானா ஓட்டுனருக்கு பணம் எடுத்துக் கொடுத்தாள். “கீழ இறங்காதீங்க சிஸ்டர். இது ஆபத்தான இடம். போகாதீங்க. திரும்பி வந்துடுங்க. நான் உங்களை கூட்டிட்டு போறேன்” என அவன் சொல்ல சொல்ல அவள் கீழே இறங்கி நடந்தாள்.

ருஹானா முன்பு இவானுக்காக போராடினாள். இப்போது அவளையும் அறியாமல் ஆர்யனுக்காக போராடுகிறாள்.

எதிர்புறம் காதர் ஆட்கள் சுட்டுக்கொண்டிருக்க ருஹானா மெதுவாக முன்னேற, ஒரு சுவர் அந்தப்புறம் ஆர்யனை எதிரிகளுக்கு மறைத்திருக்க, இந்தப்புறம் ருஹானாவிற்கு அவன் முழுமையாக தெளிவாக தெரிந்தான். சுவர் ஓரம் நின்று எட்டிப்பார்த்து சுட்டுவிட்டு, திரும்ப மறைந்து கொண்ட ஆர்யன் ருஹானாவிற்கு நேராக நிற்க, அவள் அவனை நோக்கி நடந்தாள்.

மூன்று முறை சுட்டுவிட்டு திரும்பும் வரை ஆர்யன் அவளை பார்க்கவில்லை. அடுத்தமுறை திரும்பும்போது ருஹானாவை பார்த்துவிட்டவனின் கண்கள் காட்டியதை அவன் மனம் நம்ப மறுத்தது. இருதயம் தொண்டைக்கு வந்து துடித்தது. ஒரு விநாடி அவனுக்கு உலகமே நின்றுவிட்டது.

ருஹானாவின் காலடியில் குண்டுகள் பட்டு தெறிக்க, இத்தனை நேரம் வீராவேசமாக நடந்து வந்துக்கொண்டிருந்தவள் பட்டாசுகள் போல குண்டுகள் சிதறவும் பயந்து நடுங்கி உடலை குறுக்க, அடுத்த விநாடி ஆர்யன் அவளை நோக்கி ஓடியிருந்தான், 

பாய்ந்துவரும் குண்டுகளை மதிக்காமல். அவள் அருகே வந்ததும் அவளை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டான். அவர்கள் இருவரையும் குண்டுமழையில் இருந்து காப்பாற்ற ரஷீத் வெளியே வந்து சுட, அவன் ஆட்களும் அவனை பின்பற்றினார்கள்.

தோழர்கள் முன்புறம் கேடயமாக நின்று மாறி மாறி குண்டுகளை பொழிய, ஆர்யனும் சுட்டுக்கொண்டே ருஹானாவின் கைப்பற்றி பக்கவாட்டு மறைவிடத்திற்கு அழைத்து சென்றான்.

அவன் முகத்தில் அச்சம், கோபம், அன்பு, அக்கறை அனைத்தும் இருந்தன. அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்த ஆர்யனுக்கு, அவள் மேல் எந்த காயமும் இல்லை என தெரிந்துக்கொண்ட பிறகே அவன் உயிர் உடலை வந்து சேர்ந்தது. 

அதன்பின்பே அவள் கண்களை சந்தித்தான். ‘எப்பேர்ப்பட்ட அபாயத்தில் வந்து தலையை கொடுத்திருக்கிறாய்!’ என அவன் பார்வையால் கடிய, ‘நீங்க எங்களை இழக்க துணிந்துட்டீங்களா?’ என அவள் பார்வை குற்றம் சாட்ட, ‘உன் துணிச்சலுக்கு ஒரு அளவு வேண்டாமா?’ என அவன் கண்கள் கேட்க, ‘உங்க உயிரை காப்பாத்த எந்த எல்லைக்கும் போவேன்’ என்று அவள் விரிந்த கண்கள் பதிலளித்தன.

அவர்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நிமிடங்களில் அவர்களின் இதயங்கள் இசைத்தபடி அடித்துக்கொண்டன.

(தொடரும்)

Advertisement